
சுமாராக இருந்த பட்ஜெட், சூப்பராக மாறுமா ? – பட்ஜெட் தாக்கல் அறிக்கை 2021
Budget India 2021 – Highlights & Insights
2021-22ம் நிதியாண்டுக்கான நாட்டின் பட்ஜெட் திங்கட்கிழமை அன்று(01-02-2021) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் முதல் காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டாக இது சொல்லப்பட்டது. ஒரு ரூபாய் பட்ஜெட்டாக இதனை கணக்கில் கொள்ளும் போது, மத்திய அரசின் வரவு-செலவினை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
அரசின் வருவாய் பெரும்பாலும் வரி சார்ந்த வருவாயாக தான் இருக்கும். ஒரு ரூபாய் பட்ஜெட்(One Rupee Budget) வருவாயில் 15 பைசா சரக்கு மற்றும் சேவை வரியாகவும்(GST), வருமான வரி மூலம் 14 பைசாவும், நிறுவனங்களுக்கான வரி மூலம் 13 பைசாவும் வருமானமாக ஈட்டப்படுகிறது. கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள் மூலம் 36 பைசா மற்றும் தொழில் சார்ந்த கலால் வரி மூலம் 8 பைசாவும் பெறப்படுகிறது. சுங்க வரி மூலமான வருவாய் 3 பைசாவும், வரி அல்லாத வருவாய் 6 பைசாவாகவும், கடன் அல்லாத மூலதன ரசீதுகள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் 5 பைசாவாகவும் உள்ளது.
செலவுகள் பிரிவில் காணும் போது அரசின் பெரும்பாலான செலவு வட்டி செலுத்துவதிலும், வரிகளை பகிர்ந்தளித்தல் மற்றும் மத்திய துறை சார்ந்த திட்டங்களுக்கு தான். வட்டி செலவுகள் 20 பைசாவாகவும், மாநிலங்களுக்கு வரிகளை பகிர்ந்தளிப்பதில் 16 பைசாவும் மற்றும் மத்திய அரசின் துறை சார்ந்த திட்டங்களுக்கு 14 பைசாவும் செலவிடப்படுகிறது. நிதி ஆணையம் மற்றும் பிற பரிமாற்றங்களுக்கு 10 பைசாவும், மானியங்களுக்கு 8 பைசாவும் சொல்லப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கு 5 பைசாவும், பாதுகாப்பு துறைக்கு 8 பைசாவும் மற்றும் இதர செலவுகளுக்கு 10 பைசாவாக உள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு 4.72 லட்சம் கோடி ரூபாய் சொல்லப்பட்ட நிலையில் இம்முறை கூடுதலாக 1.5 சதவீதம் என்ற அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டுக்கான மூலதன செலவு 19 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் விவசாய நலனுக்காக சுமார் 6 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்காக முறையே ரூ. 1.18 லட்சம் கோடி மற்றும் ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கு 4.78 லட்சம் கோடி ரூபாயும், உள்நாட்டு விவகாரங்களுக்கு ரூ. 1.66 லட்சம் கோடி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.1.33 லட்சம் கோடி என சொல்லப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக்கு 93,224 கோடி ரூபாயும், சுகாதார துறைக்கு 73,932 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்காக 54,580 கோடி ரூபாய் மற்றும் நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோக தேவைகளுக்கு 2.56 லட்சம் கோடி ரூபாயும் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவம் சார்ந்த திட்டங்களுக்கு கணிசமான தொகை சொல்லப்பட்டிருந்தாலும், வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் நம் நாட்டின் பங்கு மிகவும் குறைவான அளவில் தான் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்களிப்பு வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.
நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் அடுத்த இரு மாதங்களுக்கான செலவுகளுக்காக அரசு சுமார் 80,000 கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடியை கடனாக பெற உள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். 2021-22ம் நிதியாண்டின் மொத்த செலவுகள் 34.83 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அன்னிய முதலீட்டை காப்பீடு துறையில் அதிகரிப்பது, சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கான ஒதுக்கீடு, வங்கிகளில் மறு மூலதனமாக்கல், வங்கிகளில் காணப்படும் வாராக்கடனுக்கான தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் பங்கு விலக்கல் நடவடிக்கை ஆகியவை அரசுக்கான நிதி சுமையை குறைக்கலாம்.
நேரடி வரி(Direct Tax) சார்ந்த நடவடிக்கைகளில் பெரிதான மாற்றம் எதுவும் சொல்லப்படவில்லை. 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி தாக்கலில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி தாக்கல் செய்ய தேவையில்லை. அதே வேளையில் வருமான வரி சட்டத்தின் 194பி என்ற பிரிவின் படி ஓய்வூதியதாரர்களுக்கான வரி பிடித்தம் மற்றும் வட்டி வருவாய்க்கான டி.டி.எஸ். பிடித்ததை வங்கிகள் மேற்கொள்ளுமாறு சொல்லப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உள்நாட்டிற்கு திரும்பும் போது, அவர்களின் வெளிநாட்டு ஓய்வூதிய கணக்குகளில் அவர்கள் சம்பாதித்த வருமானம் தொடர்பான சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக அவர்கள் இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாக நேரிடுவதுண்டு. இந்த சிக்கல்களை நீக்குவதற்கான திட்டம் உள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
இனி மேல் வருமான வரி தாக்கல் செய்யும் போது, வங்கிகளின் டி.டி.எஸ். பிடித்தம் மற்றும் படிவம் 16ன் கீழ் உள்ள விவரங்கள் தானியங்கியாக சொல்லப்படுவது போல, பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் டிவிடெண்ட் வருவாய் போன்ற மூலதன ஆதாயம் சார்ந்த விவரங்கள் முன்னரே நிரப்பப்பட்டிருக்கும். இதனை பற்றி நாம் ஏற்கனவே(பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக) மற்றொரு பதிவில் சொல்லியிருந்தோம்.
2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசு நிர்ணயித்த பங்கு விலக்கல் நடவடிக்கை மூலமான இலக்கு ரூ.2.1 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 15,000 கோடி ரூபாய் அளவில் மட்டுமே ஈர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2021-22ம் நிதியாண்டில் பங்கு விலக்கல் இலக்கு தொகை ரூ.1.75 லட்சம் கோடியாக சொல்லப்பட்டுள்ளது.
விவசாய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ்(AIDC) என்ற வரி விதிப்பு எரிபொருட்களுக்கு(Petrol & Diesel) சொல்லப்பட்டுள்ளது. காப்பர் கழிவுகளுக்கான(Copper Scrap) வரி குறைக்கப்பட்டிருந்தாலும், சோலார் இன்வெர்ட்டர்கள் மற்றும் சூரிய விளக்குகளுக்கான வரி மூன்று முதல் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிப்பு இன்று(02-02-2021) முதல் அமலுக்கு வருகிறது.
மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் பெரிதான தொகை எதுவும் சொல்லப்படவில்லை. அவை பெரும்பாலும் ஒரு குழுவின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது எனலாம். பொதுவாக ஒவ்வொரு துறையின் கீழ் சொல்லப்படும் பட்ஜெட் ஒதுக்கீட்டு தொகை அந்தந்த நிதியாண்டில் பெறப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினால் அது சந்தேகமே.
அரசுக்கான வருவாய் சரியான நிலையில் வந்தடைந்து, செலவுகள் சொல்லப்பட்ட அளவில் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே அனைத்து துறைக்கான ஊக்கமும் சாத்தியமாகும். நாம் வீட்டில் போடும் பட்ஜெட் போலத்தான் நாட்டின் பட்ஜெட் தாக்கலும். பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்க போவதில்லை. அதே நேரத்தில், கடன் தன்மை அதிகரிப்பதை எச்சரிக்கையாக கையாள வேண்டும்.
அரசு மீண்டும் அதிகப்படியான கடனை பெற போவது, உட்கட்டமைப்புக்கான நிலங்களை கையகப்படுத்துவது, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல், வங்கிகளின் வாராக்கடனுக்கான புதிய திட்டம், தனியார் மயம் மற்றும் தனியார் முதலீடு ஆகியவை வரக்கூடிய காலங்களில் சவாலான விஷயமாக அமையக்கூடும்.
பட்ஜெட் தாக்கலின் போது இந்திய பங்குச்சந்தையில் காணப்பட்ட ஏற்றத்திற்கு அன்றைய உலக சந்தை குறியீடுகளும் முக்கிய காரணமாக அமைந்திருந்தன. ஹாங்காங், தைவான், தென் கொரியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளின் பங்குச்சந்தை குறியீடுகள் இரண்டு சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மதிய வேளையில் வர்த்தகமாகிய புட்சீ(FTSE) குறியீடும் ஏற்றத்தில் தான் துவங்கின. சுமாரான பட்ஜெட், வரும் நாட்களில் சூப்பரான பட்ஜெட்டாக மாறுமா ? இல்லையெனில், நடுத்தர மக்களிடையே பணவீக்கத்தை அதிகரித்து மீண்டும் ஒரு மந்தநிலையை ஏற்படுத்துமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை