கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன் சிக்கல் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
Bad loans issue not seen in last 20 years – RBI Financial Stability Report 2021
கடந்த வெள்ளிக்கிழமை(08-01-2021) அன்று பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் போது நிதி சந்தையில் அனுமதிக்கப்பட்ட பணப்புழக்கத்தை திரும்ப பெற போவதாக பாரத ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பணப்புழக்க மேலாண்மை கட்டமைப்பின்(Revised Liquidity Management Framework) கீழ் ஜனவரி 29,2021 அன்று வங்கிகளிடம் இருந்து ரூ.2,00,000 கோடியை ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மத்திய வங்கி வாங்க உள்ளது.
இதன் காரணமாக சந்தையில் உள்ள பணப்புழக்கம் சற்று குறையும். மேலும் கொரோனாவுக்கு முன்னர் இருந்த சாதாரண பணப்புழக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் என்பது நாட்டில் உள்ள வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பணம் பெறுவது அல்லது கடன் பெறும் நடவடிக்கையாகும்.
சொல்லப்பட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று(11-01-2021) வெளியிடப்பட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில்(Financial Stability Report) சில பொருளாதார விஷயங்கள் அலசப்பட்டன. பெருந்தொற்று காலத்தில், மத்திய வங்கியின் கொள்கை செயல்பாடுகள் பொருளாதார சரிவை குறைத்ததாகவும், தொழில் மற்றும் தனிநபர் வருவாயில் ஏற்பட்ட சிக்கலை மீட்டெடுப்பதற்கும் உதவியதாக ரிசர்வ் வங்கி சொல்லியுள்ளது.
தடுப்பூசி வளர்ச்சி நேர்மறையான செய்தியாக இருந்தாலும், இரண்டாம் அலை அதிகப்படும் நிலையில் அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கலாம். வங்கிகளின் கடன் வளர்ச்சி அடக்கமாக உள்ளதாகவும், ஒழுங்குமுறை விநியோகங்களின் உதவியுடன் வங்கிகளின் செயல்திறன் மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
அதே வேளையில் செப்டம்பர் 2020 முடிவின் படி, நாட்டில் உள்ள வணிக வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் விகிதம்(GNPA) 7.5 சதவீதமாக இருந்துள்ளது. இது வரும் செப்டம்பர் 2021க்குள் 13.5 சதவீதமாக உயரக்கூடும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரக்கூடிய காலங்களில் உலக பொருளாதாரம் கடும் மந்தநிலையை அடையும் நிலையில், இந்த வாராக்கடன் விகிதம் 14.8 சதவீதம் வரை செல்லக்கூடும் எனவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
கடந்தாண்டின் செப்டம்பர் காலத்தின் படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 9.7 சதவீதமாக உள்ளது. அடிப்படை நிலையில்(Base Scenario) இந்த விகிதம் 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 16.2 சதவீதம் வரை செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. இது தனியார் வங்கிகளில் 4.6 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாகவும், அன்னிய வங்கிகளில் 2.5 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக செல்லும் என கூறப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார மந்தநிலையில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 17.6 சதவீதம், தனியார் வங்கிகளில் 8.8 சதவீதம் மற்றும் அன்னிய வங்கிகளில் 6.5 சதவீதமாக இருக்கலாம் என பாரத ரிசர்வ் தெரிவித்துள்ளது.
இது போன்ற நிலை கடந்த 20 வருடங்களில் காணப்படாத வாராக்கடன் விகிதமாக இருக்கலாம். கடந்த சில வருடங்களாக மத்திய வங்கி சார்பில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளிலும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிலும் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்காக மூலதன உட்செலுத்தல்(Capital Infusion) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை