இன்போசிஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,197 கோடி
Infosys net profit of Rs.5,197 Crore – Q3FY21
இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டுள்ளது. மூன்றாம் காலண்டான டிசம்பர் 2020 காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 25,927 கோடி ரூபாயாகவும், செலவினம் 18,512 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம் 29 சதவீதமாக உள்ளது. இந்நிறுவனத்தின் சராசரி காலாண்டு இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) 25 சதவீதத்திற்கு மேலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதர வருமானமாக 610 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,197 கோடியாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாத முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.63,415 கோடியாகவும், நிகர லாபம் 13,588 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதுவரை பங்கு ஒன்றுக்கு 12 ரூபாய் ஈவுத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இன்போசிஸ்(Infosys) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.84 லட்சம் கோடி. 1981ம் ஆண்டு 250 டாலர்களை கொண்டு, ஏழு பொறியியலார்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பில்லியன் டாலர் பன்னாட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இதன் கிளைகள் பல நாடுகளிலும், நூறுக்கு மேற்பட்ட துணை நிறுவனங்களும், சுமார் 2.43 லட்சம் பணியாளர்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடையாளமாக உள்ளது.
நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.07 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 134 மடங்கிலும் உள்ளது. கடந்த பத்து வருடங்களில் விற்பனை வருவாய் 15 சதவீதமாகவும், லாபம் 10 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் இந்த பங்கின் விலை 80 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 69,492 கோடி ரூபாயாகவும், பணவரத்து(Cash flow) ஒவ்வொரு நிதியாண்டிலும் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை