நாட்டின் டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 4.59 சதவீதம்
India’s Retail Inflation to 4.59 Percent – December 2020
நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer price index) என சொல்லப்படும் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சந்தை எதிர்பார்த்ததை விட குறைவான அளவில் முடிந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற நிலையை கொண்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக சில்லரை பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல், மத்திய வங்கியின் இலக்கினை தாண்டி தான் வந்துள்ளது. வங்கி வட்டி குறைந்து வரும் நிலையில், நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் எதிர்பாராமல், 4.59 சதவீதம் என்ற அளவில் முடிந்துள்ளது. 2020ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இது 6.93 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 2020 மாத பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் காணப்படாத குறைவான விகிதமாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது உணவுப்பொருட்களில் காணப்பட்ட விலை குறைவு தான். முன்னர் 9.50 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் தற்போது 3.41 சதவீதமாக(டிசம்பர் 2020) இருந்துள்ளது.
புகையிலை பொருட்களின் பணவீக்கம் மட்டும் சற்று உயர்ந்து 10.74 சதவீதத்தில் நிறைவு பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தில் 3.19 சதவீதமாக இருந்த வீட்டுமனை துறை, டிசம்பர் மாதத்தில் 3.21 சதவீதமாக இருந்துள்ளது. இது போல ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) பணவீக்கம் 1.90 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
விழா காலங்களில் காணப்பட்ட தேவையால், துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலைவாசியும் சற்று உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதன்முறையாக தற்போது தான் மத்திய வங்கியின் பணவீக்க இலக்கிற்குள் சில்லரை விலை பணவீக்க விகிதம் வந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கு சந்தை எதிர்பார்த்த 5.28 சதவீதத்தை விட குறைவாகவும் பணவீக்க விகிதம்(CPI Retail Inflation) இருந்துள்ளது. அடுத்து வரும் காலக்கட்டங்களில் விலைவாசி குறையும் நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
பொதுவாக பணவீக்கம் குறைவாக இருக்கும் போது, வங்கி வட்டி விகிதமும் குறைவாக தான் காணப்படும். இது பங்குச்சந்தைக்கு சாதகமான நிலையாக மாறும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை