இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் என்னென்ன ?
PSU(Public Sector) Companies in the Indian Stock Market
பங்குச்சந்தை முதலீடு என சொன்னவுடன் பலருக்கு பணப்பாதுகாப்பை பற்றிய கேள்வி இருக்கும். நாம் நித்தமும் நாளிதழ்களில்(வணிக பக்கத்தில்) காணும் செய்தி மூன்று – பங்குச்சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மற்றும் தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கம். அனைத்து செய்தி ஊடகங்களிலும் இந்த மூன்றை பற்றிய தகவல் வராத நாட்கள் இல்லை எனலாம்.
இந்திய பங்குச்சந்தையின் வரலாறு சுமார் 150 வருடங்களுக்கு மேல். அப்படியிருந்தும், பங்குச்சந்தையின் மீதான பயத்தின் காரணம் என்ன ? சரியான விழிப்புணர்வும், தேவையான தகவலும் பகிரப்படாதது தான். நாம் இன்று நாள்தோறும் காணும் எந்தவொரு பொருளோ அல்லது சேவையோ, பங்குச்சந்தையில் உள்ள நிறுவனத்தை சார்ந்ததாக தான் இருந்திருக்கும். காலை பல் துவக்குவது முதல் இரவு தூக்கம் வரை, உங்கள் வாழ்வில் நுகரும் அத்தனை சேவையும் சந்தையை கடந்து தான் போக வேண்டும்.
உண்மையில் பங்குச்சந்தையில் பணப்பாதுகாப்பு இல்லையா ?
உங்களிடம் அப்படி யார் சொன்னது ? அரசாங்கம் சொன்னதா அல்லது நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சொல்லியதா ?
பங்குச்சந்தை என்பது தொழில் சார்ந்த களம். தொழில் செய்யும் நிறுவனங்கள் பல தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை ஈர்க்க பங்குச்சந்தைக்கு வரும். அங்கே யார் வேண்டுமானாலும், அவர்களுக்கு பிடித்த நிறுவன பங்குகளை வாங்கலாம். எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால் பணத்திற்கான பாதுகாப்பு ?
ஆம், பாதுகாப்பு இல்லையென்றால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் அங்கே இருக்க கூடாது அல்லவா ! உங்கள் அரசாங்கமும், உங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறதே !
பங்குச்சந்தை என்பது ஒரு முதலீட்டு சாதனம். முதலீடு என்றாலே ரிஸ்க் தன்மை கொண்டது தான். ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் தொழில் புரிவது போல. தங்கத்தின் ஏற்ற-இறக்கத்தை பற்றி நீங்கள் நித்தமும் கவலை கொள்வீர்களா ? அப்புறம் ஏன், பங்குச்சந்தையில் மட்டும் உங்களிடம் ஒரு வினோத போக்கு காணப்படுகிறது. தக்காளி விலை இறங்கினால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே, விவசாயிக்கு தான் சற்று பொருளாதார இழப்பு இருக்கும். உங்களுக்கு விலை குறைவாக கிடைத்தால் லாபம் தானே, நல்ல தக்காளியை வாங்க பழக வேண்டும். அவ்வளவு தான் பங்குச்சந்தையில்.
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பாதுகாப்பானது தானா ? உண்மையில் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான். தீர்வு என்னவென்றால், ரிஸ்க் தன்மை கொண்டது தான் முதலீடு, அதனால் மட்டுமே உங்களால் நீண்டகாலத்தில் செல்வவளத்தை பெருக்க முடிகிறது – தங்கத்தில், வீட்டுமனையில், தொழிலில் மற்றும் பங்குச்சந்தையிலும். ஆனால் நாம் பங்குச்சந்தையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால் ஒரு ரியல் எஸ்டேட் அதிபரை போல, நகைக்கடை உரிமையாளரை போல, ரம்மி விளையாடுவது போல. அது உங்கள் வேலையல்ல… நீங்கள் ஏற்கனவே பார்க்கும் வேலையை பார்த்து கொண்டு அல்லது தொழிலை செய்து கொண்டு, உங்களிடம் உள்ள உபரி தொகையை(Surplus cash to wealth) சிறுக சிறுக முதலீடு செய்து நீண்டகாலத்தில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவதே. ஆனால் நாம் பங்குச்சந்தையில் நுழைந்தவுடன் ஒரு அனுபவம் கொண்ட மருத்துவரை போல செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அடிப்படை கற்றலை நாம் மேற்கொள்வதில்லை.
அம்பானி, அதானியை போல மாற வேண்டுமென்று வெறும் ஆறு மாதங்களில் அல்லது சில வாரங்களில் அடைய முயற்சிக்கிறோம். அவர்கள் பங்குச்சந்தையில் கிடைக்கப்பெறும் முதலீட்டை கொண்டு தொழில் தான் செய்து வருகின்றனர். நீங்கள் உங்களது கடினமான உழைப்பால் கிடைத்த ஊதியத்தை கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது நல்லதல்ல. இன்னும் சிலரோ பங்குச்சந்தையை பகுதி நேர வேலையாகவும்(Day Trading), அதன் மூலம் வருவாய் நிறைய கிடைக்கப்பெறும் எனவும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக பங்குச்சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை விட, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், அதன் செயல்பாடுகளும் அதிகம். பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தேவையான டிவிடெண்ட் தொகையை அளித்து வரும் நிலையில், ஈவுத்தொகையை(Dividend) மட்டுமே கருத்தில் கொள்வோர், தங்களது போர்ட்போலியோ பிரிவில் சிறிய அளவில் இது போன்ற பங்குகளை வைத்து கொள்ளலாம். ஆனால் அவை பெரும்பாலான சமயங்களில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் தான் முதலீடு செய்ய வேண்டுமென எண்ணினால், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குச்சந்தையில் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் மகாரத்னா, நவரத்னா, மினிரத்னா என பிரிக்கப்பட்டுள்ளன.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் 45 மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், 12 பொதுத்துறை வங்கிகளும், மாநில அளவில் ஒரு நிறுவனமும் மற்றும் பிற பிரிவின் கீழ் ஒரு நிறுவனமும் உள்ளது. வங்கிகள் பிரிவில் எஸ்.பி.ஐ., கனரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல், யூனியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் பங்குச்சந்தையில் உள்ளன.
இந்திய ரயில்வே சார்பில் ரைட்ஸ் லிமிடெட், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்(RVNL), இர்கான்(IRCON), ஐ.ஆர்.சி.டி.சி., கன்கார்(Concor), ஐ.ஆர்.எப்.சி. போன்ற நிறுவனங்கள் உள்ளன. நடப்பு வருடத்தில் ரயில்வேயின் ரயில் டெல் நிறுவனமும் இணைய உள்ளது.
எண்ணெய் நிறுவனத்தில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம்(HPCL), சென்னை பெட்ரோலியம், மங்களூரு பெட்ரோ கெமிக்கல், ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி., கெயில், பால்மர் லாரி(Balmer Lawrie), என்ஜினீயர்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் பொதுத்துறை பிரிவில் உள்ளன.
எரிசக்தி துறையில் எஸ்.ஜே.வி.என்.(SJVN), பவர் கிரிட், தேசிய வெப்ப மின் நிறுவனம்(NTPC), என்.எல்.சி.(NLC), என்.எச்.பி.சி.(NHPC), ரூரல் எலக்ட்ரிக்(REC) ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
உலோகம் மற்றும் சுரங்க தொழிலில் கோல் இந்தியா, இந்துஸ்தான் காப்பர், எம்.எம்.டி.சி., மாயில்(MOIL), என்.எம்.டி.சி.(NMDC), செயில்(Steel Authority of India), குஜராத் மினரல், மிதானி, தேசிய அலுமினிய நிறுவனம் போன்ற நிறுவனங்களும், கனரக பொறியியல் துறையில் பெம்மல்(BEML), பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பெல்(BHEL), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஐ.டி.ஐ. நிறுவனமும் உள்ளது.
கப்பல் போக்குவரத்து துறையில் சில பொதுத்துறை நிறுவனங்களும் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 250க்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் நிலையில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக அரசு துறையில் உள்ள நிறுவனங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கையும் மத்திய அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நட்டத்தில் இயங்கும் நிறுவன பங்குகளை அரசு குறைத்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை