Category Archives: Investopedia

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள்

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள் 

Esvin Group of Companies and its Shares – Listed Domestic Stock Valuation

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் எஸ்வின் குழுமம். 1960ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலத்தில் சேஷசாயி பேப்பர்(Seshasayee Paper & Boards) மற்றும் அதனை சார்ந்த பலகைகள் தயாரிக்கும் தொழிலை கொண்டிருந்தது. நிறுவனத்தின் நிறுவனரான திரு. எஸ். விஸ்வநாதன் அவர்கள் எஸ்வின் குழுமத்தை பல நிறுவனங்கள் கொண்ட ஒரு அங்கமாக உருவாக்கினார்.

செராமிக்(Ceramic), பேட்டரிகள், உயிரி தொழில்நுட்பவியல், சர்க்கரை மற்றும் ரசாயனம் போன்ற தொழில்களில் குழும நிறுவனங்கள் செயல்பட்டன. 1984ம் ஆண்டு துவங்கப்பட்ட பொன்னி சுகர்ஸ்(Ponni Sugars) நிறுவனம் சர்க்கரை மற்றும் அதனை சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 3000 டி.சி.டி. கொள்ளளவு கொண்ட கலனை ஈரோட்டில் நிறுவியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு தேவையான உற்பத்தி பொருட்கள் கரும்பு  சக்கையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

பேட்டரி தயாரிக்கும் தொழிலில் உள்ள எச்.இ.பி.(High Energy Batteries) நிறுவனம், திறன்மிக்க துத்தநாகம் மற்றும் நிக்கல் காட்மியம் வகை பேட்டரிகளை தயாரித்து வருகிறது. உற்பத்தியாகும் பொருட்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆகவே, இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

காகித அச்சடிப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனமான டி.என்.பி.எல்.(Tamilnadu Newsprint and Papers Limited) வெற்றிகரமாக செயல்படுவதற்கு சேஷசாயி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியத்துவமானது. உலகின் முதல் கரும்பு சக்கையிலான செய்தித்தாள் பிரிவும் இது தான்.

உயிரி தொழில்நுட்பவியலில்(Bio Technology) செயல்படும் நிறுவனம் எஸ்வின் அட்வான்ஸடு டெக்னாலஜிஸ். இந்த துறையில் உயிர் கழிவு மற்றும் எரிபொருளின் வாயுவாக்க வேலைகளை செய்து வருகிறது இந்நிறுவனம். எஸ்வின் குழுமத்தின் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சேஷசாயி நிறுவனம் பேப்பர் தயாரிப்புக்கென இரு பிரிவுகளை கொண்டுள்ளது. ஈரோடு(Erode) மற்றும் திருநெல்வேலியில் இயங்கும் ஆலைகளில் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் பேப்பர்களை உற்பத்தி செய்யலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 780 கோடி. கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

கடந்த ஒரு வருடமாக இந்த பங்கின் விலை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த பத்து வருட காலத்தில் நன்றாகவே இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பும், பணவரத்தும் சாதகமாக உள்ளது.

மற்றொரு நிறுவனமான பொன்னி சுகர்ஸ் நாளொன்றுக்கு 3500 டன் கரும்புகளை(Sugarcane) நசுக்கி 19 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 கோடி ரூபாய். கடன் எதுவும் பெரிதாக இல்லை. அது போல அடமான பங்குகளும் நிறுவனர் சார்பில் இல்லை. விற்பனை மற்றும் லாப வளர்ச்சி பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது இந்த துறையும்(Sugar Segment), அதனை சார்ந்த அரசு கொள்கைகளும் தான்.

இருப்பினும் நிறுவனம், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை ஓரளவு பூர்த்தி செய்கிறது பேட்டரி தயாரிப்பில் இருக்கும் நிறுவனம் ஹை எனர்ஜி பேட்டரிஸ்(HEB). இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 35 கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் ஒன்றுக்கு மேலாக உள்ளது. எனவே இந்த பங்கு பொதுவாக பரிசீலிக்கக்கூடியதாக இல்லை. இதன் வாடிக்கையாளர்கள் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை என இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தான் இந்நிறுவனம் லாபத்தை ஈட்டி வருகிறது எனலாம்.

பங்குச்சந்தையில் ஈடுபடும் நீண்டகால முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள், பிரபல பிராண்டுகள் மற்றும் பெயர் அதிகம் தெரியாத மற்ற மாநிலங்களின் நிறுவன பங்குகளை வாங்குவதை விட, நமது ஊரில் உள்ள ஒரு நிறுவனத்தின் தொழிலை கண்டறிந்து முதலீடு செய்வது நமக்கும், நமது மாநிலத்தின் நலனுக்கும் சாதகமாக அமையும்.

மதுரை மாவட்ட தியாகராஜர் மில்ஸ் (Virudhunagar Textile Mills – VTM Ltd), டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜபாளையம் ராம்கோ குழும நிறுவனங்கள், முருகப்பா குழும நிறுவனங்கள், கோவை சாந்தி கியர்ஸ், சென்னையை தலைமையிடமாக கொண்ட வாகனத்துறை தயாரிப்பு மற்றும் உபகரணங்களில் உள்ள தமிழக நிறுவனங்களை அலசலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கதை சொல்லி – பாகம் 2 – பங்குகளும், அதன் மதிப்பீடுகளும்

கதை சொல்லி – பாகம் 2 – பங்குகளும், அதன் மதிப்பீடுகளும் 

Story Teller 2 – Stocks & Valuation – Webinar Meet

பங்குச்சந்தையின் வரலாற்றை படிப்பதை விட, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் கதையை ஒரு மணிநேரம் படித்தாலே போதும், நாம் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கும் சூட்சுமத்தை அறிந்து கொள்ளலாம். பங்குகள் வெறும் எண்கள் அல்ல, அவை தொழிலின் மூலதனம்.

நம்மை சுற்றி, நாம் தினம் தினம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவையினை அளிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை. மக்களின் மூலதனம் மற்றும் நுகர்வு தன்மையால் அந்த நிறுவனங்கள் லாபம் காண்கின்றன. அதே வேளையில் நுகர்வோராக மட்டுமே இருப்பதில் நமக்கு என்ன பலன் பெரிதாக இருக்க போகிறது ?

இந்த வார ஞாயிற்றுக்கிழமை(31-05-2020) அன்று பங்குகளின் கதைகளை பற்றி பேச உள்ளோம். வாருங்கள், பங்குகளின் தரத்தை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், பங்குகளில் சூதாட நினைத்தால் அதன் விளைவு என்ன, பங்குச்சந்தையில் அடிப்படை கற்றலை பெறுவது எப்படி, நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை பற்றி விவாதிக்க உள்ளோம்.

Story Teller II Online Meet

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி எந்தவிதமான சாதகம் மற்றும் பாதகங்களை ஏற்படுத்தும், பங்குச்சந்தை எண்களின் அடுத்த இரண்டு வருட முன்னெடுப்பு என்ன ஆகியவற்றை பற்றியும் பேச உள்ளோம்.

பண முதலீட்டை கொண்டு பணம் பண்ணும் கலை எவ்வாறு வெற்றி பெறுகிறது, புதிய பங்கு தொகுப்புகள்(Stock Portfolio) சார்ந்த செய்தியும் வெளியிடப்பட உள்ளது. நிகழ்ச்சி நிரலுக்கான பதிவுக்கு…

Registration – Stocks & Valuation (Story Teller II)  

பதிவுக்கு பின்பு, நிகழ்ச்சி நிரலுக்கான இணைப்பு உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

Don’t invest without doing these Five Commitments – Financial Planning

‘ நீங்கள் பங்குச்சந்தையில் நித்தமும் பணம் சம்பாதிக்கலாம், வாருங்கள் ‘ 

‘ பங்குச்சந்தையின் மூலம் ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாறலாம் ‘

‘ எங்களிடம் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மாதாமாதம் வட்டி தருகிறோம்,உங்கள் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது ‘

‘ பங்குச்சந்தையில் பகுதி நேரமாக வர்த்தகம் செய்து சம்பாதியுங்கள் ‘

‘ பிட்காயின் முதலீடு, உங்களை கோடீஸ்வரராக்கும் பொன்னான முதலீடு ‘

  • இவ்வாறான வாசகங்கள் உங்களுக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறதா ?

நான் எப்போதும் சொல்வது தான், பொருளாதார உலகில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதற்கும், செல்வ வளத்தை குவிப்பதற்கும் ஒரு குறுக்கு வழி கிடைக்கப்பெற்றால், அதனை முதலில் அடைய போவது நீங்கள் அல்ல. இவ்வுலகின் முதல் 100 பணக்காரர்கள் தான். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டை கொண்டு சில மாதங்களில் கோடிகளை அள்ளலாம் என்றால் ஏன் அமேசான் நிறுவனரும், அம்பானியும் தொழில் செய்ய வேண்டும் ? ஏன் பல கிளைகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் ?  பல தலைமுறை கோடீஸ்வரர்களுக்கும் இங்கே குறுக்கு வழி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக முதலீடு செய்யும் காலமும், முதலீட்டு சாதனமும் தான் அவர்களை அந்த நிலையில் வைத்துள்ளது. ஒரு முதலீட்டு சாதனத்தை பற்றிய முறையான கல்வி வேண்டும், இல்லையெனில் கற்றவரை நாம் வேலைக்கு வைத்திருக்க வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் மட்டுமே, எந்தவொரு பண முதலீடும் உங்களுக்காக உழைக்கும்.

பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், பிட் காயின் சார்ந்த புத்தகங்கள் சந்தையில் ஏராளம். ஆனால், எந்த புத்தகத்திலும் உங்களுக்கு குறுக்கு வழியை பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை. மாறாக அடிப்படை கற்றலை தான் உங்களுக்கு அந்த புத்தகத்தின்  ஆசிரியர் சொல்ல வருகிறார். பணம் சம்பாதிக்க, அந்த அடிப்படை கற்றலை கொண்டு நீங்கள் தான் சிந்திக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் மற்றும் செல்வத்தை ஏற்படுத்த காத்திருக்க வேண்டும்.

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் ஐந்து:

  • ஆயுள் காப்பீடு (Term Insurance)
  • மருத்துவ காப்பீடு
  • அவசர கால நிதி திட்டமிடல்
  • கடன்களை குறைத்தல்
  • ஓய்வுக்கால நிதி திட்டமிடல்

மேலே சொன்னவற்றை நீங்கள் செய்து விட்டு தான், உங்கள் முதலீட்டை தொடங்க வேண்டும். ஐந்து முன்னெடுப்புகளும் உங்களை பாதுகாக்கும் நிதி காப்பு ஆகும். உங்களுடைய நிதி ஆலோசகர் இதனை பற்றி உங்களிடம் சொல்லவில்லை என்றால் அவர் உங்கள் நிதி நலனில் அக்கறை கொள்பவரா என்பது சந்தேகமே. நிதி ஆலோசகர்(Personal Financial Advisor) என்பவர் பங்கு தரகர் அல்ல. இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவரும் முழுமையான நிதி ஆலோசகர் அல்ல. உங்களிடம் பரஸ்பர நிதிகளை மட்டும் விற்கும் விநியோகஸ்தரா, அவரும் நிதி ஆலோசகர் என்ற முழு நிலைக்கு வர மாட்டார்.

நிதி ஆலோசகர் என்பவர் உங்களது குடும்ப மருத்துவர் போன்று. மேலே சொன்ன ஐந்தையும் உங்களுக்காக அவர் திட்டமிட வேண்டும். உங்கள் குடும்ப நிதி நிலைமைகளை சரியாக புரிந்து கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் குடும்ப உறவுகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை நபர்களுக்கும் நிதி திட்டமிடலை செய்பவராக இருக்க வேண்டும். உயில், நாமினியை நியமிப்பது, உங்களுக்கான சொத்துக்களை வாரிசு தாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது போன்றவற்றிலும் அவருடைய உண்மையான அக்கறை இருக்க வேண்டும்.

ஆம், அவர் உங்களிடம் ஒரு கணிசமான கட்டணத்தை பெறுபவராக இருக்க வேண்டும். இலவசமாக அவர் செய்திட முடியாது. ஒருவர் உங்களிடம் நிதி சார்ந்த ஒரு பொருளை அல்லது சேவையை விற்கும் போது இலவசமாக (பொருளுக்கான விலை தவிர்த்து) விற்பவராக இருந்தால், அவர் உங்களிடம் தவறான பொருளை அல்லது உங்களுக்கு தேவையில்லாத ஒரு சேவையை விற்று விட்டு செல்கிறார் என அர்த்தம். இது தான் காப்பீடுகளில் பெரும்பாலும் நடைபெறுகிறது. நீங்கள் தவறான சேவையை தேர்ந்தெடுத்து, அதற்காக ஒரு ஏஜென்ட் கமிஷன் பெறுவதற்கு பதிலாக, அவரிடம் சேவை சார்ந்த ஆலோசனை கேளுங்கள். வெளிப்படைத்தன்மையை அறியுங்கள். பின்பு நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்கு அவருக்கு ஒரு கட்டணத்தையும் அளியுங்கள்.

நீண்ட காலத்திற்கான நிதி ஆலோசகரை கொண்டிருங்கள். அவரது ஆலோசனைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால், பலமுறை கேட்பதற்கு தயங்காதீர்கள். ஆலோசனை பலனளிக்கவில்லை என்றால், வேறு ஒரு ஆலோசகரை பெறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதே வேளையில் அடிக்கடி குடும்ப நிதி ஆலோசகரை மாற்றுவதும் ஆரோக்கியமாக இருக்காது.

உங்கள் குடும்ப நிதி நிலையை பாதுகாக்க டேர்ம் பாலிசி(Term Plan) மற்றும் மருத்துவ காப்பீடு(Health Insurance) பெறுவது அவசியம். இன்றைய காலத்தில் எதிர்பாராது நிகழும் பாதிப்புகளால் தான் நமது சேமிப்பு குறைகிறது. சில சமயங்களில் அது நம்மை கடனாளியாக்கி விடும். அதனால் நமது வருவாய்க்கு தகுந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு மேலே சொன்ன காப்பீடுகளை பெற வேண்டும்.

அவசர கால நிதியை(Emergency Fund) திட்டமிடுவது உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பஞ்ச காலங்களில் நமது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கோயில் கோபுரங்களில் கலசங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். கலசத்தில் சில உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அதனை போல தான் நமது அவசர கால நிதியும் இருக்க வேண்டும்.

கடனை அதிகமாக வைத்து கொண்டு, பங்குச்சந்தையில் சம்பாதித்து கடனை அடைத்து விடுவேன் என ஆர்வமாக செயல்பட கூடாது. பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க் கொண்ட, அதே வேளையில் செல்வ வளத்தை ஏற்படுத்தும் ஒரு முதலீட்டு சாதனமாகும். கடன் வாங்கி பங்குகளை வாங்குவது, கடனை குறைக்க பங்குகளில் முதலீடு செய்வதால் நமக்கு சுமையே அதிகம்.

‘ உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு கல்வியை விட, உங்களது ஓய்வுக்காலம் மிக முக்கியம் ‘ என நிதி திட்டமிடலில் சொல்வது உண்டு. குழந்தைகளுக்கான வாழும் காலமும், அவர்கள் கற்க வேண்டிய கல்வியும் எப்போதும் இங்கு உள்ளது. ஆனால் உங்கள் ஓய்வுக்காலத்திற்கு அவர்களை நம்பி நீங்கள் இருத்தல் சரி வராது. அந்த ரிஸ்க்கை தான் நம்மில் பெரும்பாலோர் எடுத்து வருகின்றனர். உங்களது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பை(Retirement Savings) நீங்கள் தான் உருவாக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு கைமாறாக அவர்கள் உங்களை பார்க்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களுக்கான நிதி இலக்கை நீங்கள் தான் திட்டமிட வேண்டும். வயதான காலத்தில் அவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது உறவுகளாக(அன்பு) மட்டுமே இருக்க வேண்டும், நிதி அல்ல. உங்கள் குழந்தைகளுக்கான இலக்கு அடுத்த தலைமுறையில் தான் உள்ளது, நீங்கள் மட்டுமே அல்ல.

மேலே சொன்ன ஐந்து முன்னெடுப்புகளை திறம்பட செய்து விட்டு, பின்னர் பங்குச்சந்தைக்கு வாருங்கள்… உங்களுக்காக காத்திருக்கிறது செல்வ வளம்.

குறிப்பு:

என்னிடம், எனது ஆண்டு வருவாயினை போல 50-80 மடங்கு பணம் ரொக்கமாக உள்ளது என சொல்பவரா நீங்கள் ? உங்களுக்கு இந்த ஐந்து வேலைகளும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamdurai.com

சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான படிநிலைகள்

சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான படிநிலைகள்

Quick Steps to create a better Investment Portfolio

எந்தவொரு முதலீட்டு சாதனத்திலும் பணத்தை முதலீடு செய்யும் முன்னர், சொல்லக்கூடிய நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை தான் ஒரு முதலீட்டு வாய்ப்பின் சாராம்சங்களை தெளிவாக்கும்.

  • தேவைகள் மற்றும் விருப்பங்கள்
  • நிதி இலக்குகள்
  • முதலீட்டு காலம்
  • எதிர்பார்க்கும் வருமானம் அல்லது வட்டி விகிதம்

வெறுமென வங்கி டெபாசிட்டில் பணத்தை போடுவதோ அல்லது பங்குச்சந்தையில் ஆழம் தெரியாமல் காலை விடுவதோ – இரண்டும் ஒரு முதலீட்டாளரின் முதலீட்டு நலனை பாதுகாக்காது. மேலே சொன்ன நான்கு அடிப்படை விஷயங்களை சிந்தித்து விட்டு, பிறகு முதலீட்டு சாதனத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக ராமு என்பவருக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ஒரு வீடு வாங்க வேண்டுமென்ற நிதி இலக்கு இருந்தால், இவற்றில் அவருடைய தேவை அல்லது விருப்பமாக புதிய வீடு வாங்குவதை சொல்லலாம். ‘வீடு வாங்குதல்’ என்பது அவரின் நிதி இலக்குக்கான வாசகமாகும். ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் அவர் வாங்க வேண்டுமெனும் போது, 5 வருடங்கள் ஒரு முதலீட்டு காலமாக எடுத்து கொள்ளப்படும். மாதாமாதம் அவர் எவ்வளவு தொகையை, எந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், அவருக்கான இலக்கை அடைய முடியும். இல்லையெனில், ஒரு முறை மட்டுமே அவர் முதலீடு செய்யும் பட்சத்தில், அவரது வீட்டின் மதிப்பை பெற, எதிர்பார்க்கும் வருவாய் எவ்வளவு என்பதனை ஆராய வேண்டும்.

முதலீட்டிற்கான காலம் குறைவாக இருக்கும் நிலையில், ஒன்று அவர் தனது மாத முதலீட்டை அதிகரித்து முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ரிஸ்க் தன்மையுடன் கூடிய அதிக வட்டி வருவாய் முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே வேளையில், முதிர்வு காலத்தில் அவரது முதலீட்டிற்கே மோசம் வந்துவிட கூடாது.

இதனை சார்ந்து தான் நமது முதலீட்டு சாதனம்(Investment Avenue) இருக்க வேண்டும். பொதுவாக குறுகிய கால இலக்குகளுக்கு ரிஸ்க் குறைவான முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்ய வேண்டும். காலங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ரிஸ்க் அதிகம் எடுத்தாலும், நீண்ட காலத்தில் முதலீட்டின் மீது நல்ல வருவாயை பெறலாம்.

நல்ல முதலீட்டு போர்ட்போலியோ(Investment Portfolio) தயார் செய்ய 6 படிநிலைகள்:

  • நிதி இலக்குகள்(Financial Goals) இருப்பது அவசியம்
  • நிதி இலக்குகளுக்கு தகுந்தாற் போல், முதலீட்டு சாதனத்தை(Investment Product or avenue) தேர்வு செய்ய வேண்டும்
  • முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த வேண்டும்
  • ஒவ்வொரு கால இடைவெளியில், செய்த முதலீட்டு சாதனத்தை மறுஆய்வு(Periodic Review) செய்வது அவசியமாகும்
  • தேவைப்பட்டால், ஏற்கனவே செய்த முதலீட்டு சாதனத்தில் மாற்றத்தை(Make Changes on Existing investments) ஏற்படுத்தலாம். அதே வேளையில், உங்களது இலக்குகளை அடைவது முக்கியம்.
  • முதிர்வு காலத்தின் போது அல்லது முன்னரே இலக்குக்கான தொகையை (Exit on or before Maturity) பரிமாற்றம் செய்தல்.

முதல் படிநிலையில் நாம் ஏற்கனவே சொன்னது போல நிதி இலக்கிற்கான பெயர், அடைய வேண்டிய காலம் மற்றும் எதிர்பார்க்கும் வட்டி(Expected returns %) ஆகியவை முக்கியம். இரண்டாவது படிநிலையில், நாம் எதிர்பார்க்கும் வட்டி வருவாய்க்கு தகுந்தாற் போல, முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். ஐந்து வருட கால இலக்கு மற்றும் எதிர்பார்க்கும் வட்டி வருவாய் ஆண்டுக்கு 8 சதவீதம் எனில், பங்குச்சந்தை நமக்கு தேவையா… இல்லையெனில் வங்கி டெபாசிட் அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட கடன் பத்திர பண்டுகள்(Debt Mutual Funds) போதுமா என்பதனை அலசி முடிவெடுக்க வேண்டும்.

நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது, ஒரே முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க கூடாது. முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) அவசியம். நீங்கள் மாதாமாதம் 10,000 ரூபாயை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் என்றால், பங்குகள் கொஞ்சம், கடன் பத்திரங்கள் கொஞ்சம், தங்கம் சிறிதளவு மற்றும் இதர முதலீடுகள் என பிரித்து முதலீடு செய்யலாம். பொதுவாக பங்குகள் சரியும் போது, தங்கம் ஏற்றம் பெறும். வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக காணப்படும் போது, கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் சற்று அதிகமாக கிடைக்கும்.

உங்கள் இலக்கு 15 வருடங்கள் எனில், ஒவ்வொரு வருடமும் நீங்கள் செய்துள்ள முதலீட்டு சாதனத்தை பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும். செய்யப்படும் முதலீட்டை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் நன்றாக இருக்குமா அல்லது முதலீட்டு சாதனத்தை பொறுத்து குறைத்து கொள்ளலாமா என அலசுவது அவசியமாகும்.

தேவைப்பட்டால், ஏற்கனவே செய்துள்ள முதலீட்டில் மாற்றத்தை செய்வது இலக்கை அடைவதற்கு உதவக்கூடும். எனவே, சரியான நேரத்தில் மாற்றம் செய்வதற்கும் தயாராக வேண்டும். உங்கள் இலக்குக்கான தொகை, இலக்கு காலத்திற்கு முன்பே அடைந்து விட்டால் அதனை பாதுகாப்பாக வங்கிக்கோ அல்லது பாதுகாப்பான முதலீட்டு சாதனத்தில் முழுவதுமாக மாற்றுவது அவசியம். இலக்கின் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக ராமு தனது மகனின் மேற்படிப்பு செலவிற்காக 15 வருடங்கள் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து வருகிறார் என வைத்து கொள்வோம். இலக்கிற்கான தொகை 13ம் வருடமே அடையும் பட்சத்தில், அடுத்த இரண்டு வருடங்கள் அதே முதலீட்டில் தொடர வேண்டுமென்ற அவசியமில்லை. அதனை பாதுகாப்பான வங்கி டெபாசிட்டாக மாற்றி கொள்ளலாம். மாறாக அவர் பங்கு சார்ந்த திட்டத்தில் தொடரும் நிலையில், எதிர்பாராத பங்குச்சந்தை சரிவு அல்லது பொருளாதார மந்தநிலை ஏற்படுமாயின், அவருடைய முதலீட்டின் மீதான வருவாய் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் முதலீடு நஷ்டமடைய வாய்ப்புண்டு. எனவே சரியான திட்டமிடலை கொண்டிருப்பது அவசியமாகும்.

சொல்லப்பட்ட ஆறு படிநிலைகளையும் கொண்டு உங்களுக்கான சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்களுக்கான சரியான பங்கு அல்லது முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவது எப்படி ? இந்த வார நிகழ்ச்சி நிரல்

உங்களுக்கான சரியான பங்கு அல்லது முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவது எப்படி ? இந்த வார நிகழ்ச்சி நிரல் 

How to design a Stock / Investment Portfolio ? Webinar

நீங்கள் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும், முதலீட்டு பரவலாக்கம் மற்றும் அதனை பல்வகைப்படுத்துதல் அவசியம். உதாரணமாக பங்குச்சந்தையில் உள்ள ரிஸ்க் தன்மையை தவிர்க்க, ஒரே துறையில் முதலீடு செய்வதை காட்டிலும் பல துறைகளில் நமது முதலீட்டை பல்வகைப்படுத்துதல் செய்யலாம்.

இது போல முதலீட்டிலும் பரவலாக்கம் அவசியம். பங்குச்சந்தை என மட்டுமில்லாமல் சிறிதளவு வீட்டுமனை முதலீடு, அதனை சார்ந்த வாடகை வருவாய், தங்கம் மற்றும் பிற முதலீட்டு வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதற்காக புரியாத முதலீட்டு சாதனத்தை எடுத்து கொண்டு முதலுக்கே மோசம் செய்து விட கூடாது.

உங்களது முதலீடு பங்குச்சந்தையானாலும், தங்கம் மற்றும் வீட்டு மனையாக இருப்பினும், இல்லையெனில் வங்கி டெபாசிட்கள் மற்றும் அஞ்சலக சேமிப்பாக இருந்தாலும் சரி, வாருங்கள் முதலீட்டு பரவலாக்கம் செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பணம் பண்ணுவது எப்படி என்பதனை நாங்கள் சொல்லி தருகிறோம்.

முதலீட்டை பொறுத்தவரை, லாபத்தை பெற நம்முடைய நஷ்டத்தினை குறைக்கும் திறன் தான் முக்கியம். அதனை பற்றிய ஒரு மணிநேர பயிற்சி தான் இந்த வார ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நிரல். சரியான பங்குகளை தேர்வு செய்வது எப்படி, சந்தையில் நல்ல வருவாய் ஈட்டும் குறிப்பிட்ட 5 பங்குகளின் அடிப்படை அலசல் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

டேர்ம் பாலிசி மற்றும் மருத்துவ காப்பீடு – தற்போதைய காலத்தில் அதன் அவசியம் ஆகியவற்றையும் பேச உள்ளோம். மேலும், உங்களுக்கான பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான மின்னணு புத்தகத்தை வழங்க உள்ளோம்.

Designing Investment Portfolio

நிகழ்ச்சி நிரலுக்கு பதிவு செய்ய…

https://imjo.in/8fAZWM

பதிவுக்கு பின்னர், உங்களுக்கான நிரலின் இணைப்பு, கைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாருங்கள், முதலீட்டு சூத்திரத்தை கற்று கொண்டு பயன் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் – 5.84 சதவீதம்

நாட்டின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் – 5.84 சதவீதம் 

India’s Retail – CPI Inflation revised to 5.84 Percent in March 2020

நாட்டின் பணவீக்கம் இரு முறைகளில் பின்பற்றப்பட்டு கணக்கிடப்படுகிறது. சில்லரை விலை பணவீக்கம்(CPI) மற்றும் மொத்த விலை பணவீக்கம்(WPI) என இருவகைகளாக பணவீக்கம் வெளியிடப்படுகிறது. மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் 5.84 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தற்போது குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இருப்பினும், ஊரடங்கு நாட்களின் போது மற்றும் அதற்கு பின்பான பணவீக்க விகிதங்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை எதிர்பார்த்த 5.91 சதவீதம் என்ற விகிதத்தை காட்டிலும் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் கட்டுக்குள் இருந்துள்ளது.

மத்திய புள்ளியியல் அமைச்சகம் இதுவரை கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், பணவீக்க விகிதங்களுக்காக எடுத்து வந்த தரவுகள் கடந்த மார்ச் 19 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு உத்தரவு தான். ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்கம் வெளியிடப்படவில்லை. மாறாக மார்ச் மாத திருத்தப்பட்ட பணவீக்கமாக இது கருதப்படுகிறது.

பிரதமரின் சமீபத்திய உரையில் நான்காவது முறையாக ஊரடங்கு(Lock down 4.0) இருக்கலாம் எனவும், அதே வேளையில் சில கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் இயங்கக்கூடும் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் அறிவிப்புகள் நாளை(13-05-2020) வெளியிடப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

சொல்லப்பட்ட மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகிறது. மார்ச் மாத தொழிற்துறை உற்பத்தி(Industrial Production) குறியீடு 16.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி துறை மட்டும் சுமார் 21 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த முறை இது 3.1 சதவீதமாக இருந்தது. இது போல மின் உற்பத்தி 6.8 சதவீதம் குறைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)

New Mutual Fund Mobile App – Introduction on Varthaga Madurai Platform

இன்று வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை போல, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்பட்டு வருவதும் பரவலாக உள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கப்பெறும் சாதனங்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வருபவை, எனவே அவை ஒரு முதலீட்டு சாதனமாக கருதப்படாது. அத்தியாவசிய தேவை மற்றும் அவசர பண பரிமாற்றத்திற்கு வங்கி சேமிப்பு கணக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

வங்கிகளில் கிடைக்கக்கூடிய வைப்பு தொகை (Fixed Deposit) ஒரு சிறந்த முதலீடாக இருக்க முடியாது. ஏனெனில், பொதுவாக அவை பணவீக்கம் மற்றும் வரிகளை கடந்து குறைவான வட்டி வருவாயை கொண்டிருக்கும். எனவே, நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானமாக பயன் தராது.

நாட்டில் தற்போது 45க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்(Asset Management Companies) உள்ளன. பொதுவாக இவை வங்கிகளாக தான் தனது முதன்மை தொழிலை கொண்டிருக்கின்றன. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் அனுபவம் சிறப்பானதொரு முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்திய மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 27 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்(March 2020). வங்கி சேமிப்பு கணக்குகளை போல லிக்விட் பண்டுகள்(Liquid Funds) எனும் மிக குறைந்த ரிஸ்க் கொண்ட நிதி திட்டங்கள் உள்ளன.

வங்கி டெபாசிட் தொகைக்கு மாற்றாக, கடன் பத்திர திட்டங்கள்(Debt Funds) பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்க பெறுகிறது. ஓரளவு ரிஸ்க் குறைவான பண்டுகளாக இருந்தாலும், வரி விதிப்புகளில் வங்கி டி.டி.எஸ்.(TDS) பிடித்ததை விட குறைவான வரிகள் தான் விதிக்கப்படுகின்றன. பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட், குறிப்பிட்ட துறை சார்ந்த முதலீடுகள், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் ஏற்படுத்தப்படும் முதலீடுகள் என பல வகைகள் உள்ளன.

முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த சந்தையில் ஒரு எளிய முதலீட்டு சாதனம் உள்ளது என்றால், அது மியூச்சுவல் பண்ட் எனும் பரஸ்பர நிதி முதலீடுகள் தான். அனைத்து வகையான பண்டுகள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வர்த்தக மதுரை சார்பாக புதிய கைபேசி செயலி (Mutual Fund Investment Application) ஒன்று கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

செயலியின் சிறப்பம்சங்கள்:
  • புதிய கணக்கை தொடங்குவதற்கு, கே.ஒய்.சி.(KYC) நடைமுறை என்ற கட்டுப்பாடு அனைத்து வகை நிதி சாதனங்களுக்கும் உண்டு. இது வங்கி, பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு பொருந்தும். கே.ஐ.சி. பதிவு செய்ய தனியாக படிவம் ஒன்றை நிரப்பி மியூச்சுவல் பண்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். இந்த சிக்கலை குறைத்து, வர்த்தக மதுரை செயலியில் இணைய வழியாக இரண்டு நிமிடங்களில் கே.ஒய்.சி. பதிவை நிறைவு செய்யலாம். இந்த முறை செபியின் விதிமுறைக்கு உட்பட்டது.
  • முன்னர், மியூச்சுவல் பண்டு முதலீட்டை துவங்க ஒரு வார காலம் ஆகும். ஆனால், தற்போது இந்த செயலியின் வாயிலாக அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
  • வெவ்வேறு வகையான நிறுவனங்கள் மற்றும் பண்டுகளில் முதலீடு செய்தாலும் ஒரே செயலியில் உங்களது முதலீட்டு நிலவரங்களை எப்போது வேண்டுமானாலும்(Single Account for Multiple Funds) காணலாம்.
  • வங்கியில் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், வர்த்தக மதுரை செயலி மூலம் லிக்விட் பண்டுகளில் உங்கள் தேவைக்கேற்றாற் போல் பணத்தை பரிமாற்றம் செய்து கணிசமான வட்டி வருவாயை பெறலாம். முதலீடு செய்வதும், உங்கள் முதலீட்டில் உள்ள பணத்தை எடுப்பதும் மிகவும் எளிமையான ஒன்று.
  • நிதி சம்மந்தமான 10க்கும் மேற்பட்ட கணிப்பான்கள் இந்த செயலியில் உள்ளன. (Dream Home Planning, Dream Car Plan, Future Expenses, Children Education, Retirement Savings, Marriage Fund, Family Protection, Tour / Vacation Plan, Crorepati, SIP and EMI Calculator)
  •  உங்கள் முதலீடு சார்ந்த மின்னணு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இ-லாக்கர்(E-Locker) வசதி உண்டு. நீங்கள் முதலீடு செய்திருக்கும் தற்போதைய மதிப்பை உடனடியாக அறிந்து கொண்டு, பி.டி.எப்.(Download Investment Holding Reports) முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • சந்தையில் உள்ள புதிய தகவல்கள் மற்றும் செய்திகளை(Mutual Fund related Information) வர்த்தக மதுரை செயலியின் மூலமே படித்து தெரிந்து கொள்ளலாம். மியூச்சுவல் பண்டுகளில் கவனிக்க கூடிய முக்கிய திட்டங்களும் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள்:
  • கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கப்பெறும் வர்த்தக மதுரை ( VARTHAGA MADURAI – MY DREAM PORTFOLIO ) செயலி பாதுகாப்பான நிதி செயலியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் செய்யப்படும் அனைத்து பரிமாற்றங்களும் செபியின் (SEBI – AMFI) அனுமதியுடன் இயங்கப்பட்டு வருகிறது.
  • மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கும், பயனாளர்களின் தேவைக்குமான பாலமாக இந்த செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகளில் கிடைக்க கூடிய செயலிகள் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மாறுபடும். உதாரணமாக நீங்கள் ஐந்து வெவ்வேறு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், ஐந்து செயலிகள் தேவைப்படும். ஆனால், இங்கே வர்த்தக மதுரை செயலி மூலம் நீங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு திட்டங்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களின் முதலீட்டு நிலவரங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி உண்டு.
  • உள்ளீடு செய்யப்படும் ஒவ்வொரு தரவுகளிலும்(Filled Information) கவனமாக பதிவு செய்வது அவசியம். உங்கள் பான்(PAN) எண்ணை கொண்டு தான் ஒவ்வொரு தகவலும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. நாமினியை பதிவு செய்வது, வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். இருப்பினும் தவறு ஏதேனும் ஏற்பட்டால், இதனை பின்னாளில் திருத்துவதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய கணக்கை துவங்குவதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வருபவர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

Varthaga Madurai Mutual Funds App – How to use Guide

நினைவில் கொள்ளுங்கள்: 

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் முன்னர், உங்களுக்கான நிதி இலக்குகளை திட்டமிட்டு பின்பு முதலீடு செய்வது சிறந்தது. மியூச்சுவல் பண்டுகளில் குறைந்த ரிஸ்க் முதல் அதிக ரிஸ்க் வரை உள்ள திட்டங்கள் ஏராளம். எனவே சரியான புரிதலை ஏற்படுத்தி கொண்டு முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.

செயலி மற்றும் மியூச்சுவல் பண்ட் சார்ந்த உங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால், பதிவு செய்ய…

https://varthagamadurai.com/contact/

அல்லது

+91 9500 438 549 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டுக்கு பிறகான புதிய முதலீட்டு வாய்ப்புகளும், சவால்களும் – நிகழ்ச்சி நிரல்

2020ம் ஆண்டுக்கு பிறகான புதிய முதலீட்டு வாய்ப்புகளும், சவால்களும் – நிகழ்ச்சி நிரல் 

EV – Road for Automation – Challenges & Opportunities on Stocks

வரக்கூடிய காலகட்டங்கள் தொழில் ரீதியாகவும், வேலைகளிலும் புதிய சவால்களை எதிர்நோக்கும் வகையில் அமைய உள்ளது. நடப்பில் வெறும் கோவிட்-19(Coronavirus) தாக்கமாக மட்டுமில்லாமல், உலகளவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகும் நிலையில் உள்ளது.

மின்சார வாகனங்கள், தானியங்கி புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய தொழில் கொள்கைகள் மற்றும் மனிதர்கள் என மாற்றம் நடைபெற உள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் குப்பைகளை எந்த நாடுகள் ஏற்று கொள்ளப்போகிறது, எவையெல்லாம் தொழில்நுட்ப அதிகாரத்தை ஆரோக்கியமாக பயன்படுத்த உள்ளது.

முதலீடுகள் மற்றும் அதனை சார்ந்த புதிய வாய்ப்புகளை கண்டறிதல், உண்மையான தொழிலில் முதலீடு செய்வதன் அனுகூலம் என பல விஷயங்களை விவாதிக்க உள்ளோம். மின்சார வாகனங்களுக்கான மின்கலன்களை(Batteries) அமைக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குச்சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றை பற்றியும் நாம் காண இருக்கிறோம்.

EV - Webinar Varthaga Madurai

பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளை எளிய முறையில் புரிந்து கொள்ளலாம். மேலும் அவற்றில் உள்ள சாதக – பாதகங்களும் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட உள்ளது. பணத்தை இரட்டிப்பாக்கும் எளிய பணவளக்கலைகள் உங்களுக்காக காத்திருக்கிறது.

வாருங்கள், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று – இணைய வழியாக தொடர்பு கொள்வோம். பதிவு கட்டணம் – ரூ. 100 மட்டும். உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ள..

https://imjo.in/9XSM9R

பதிவை உறுதி செய்தவுடன், உங்களுக்கான நிகழ்ச்சி நிரலின் இணைப்பு மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார மந்தநிலை 2020 – அதன் வடிவங்கள் எப்படி இருக்கும் ?

பொருளாதார மந்தநிலை 2020 – அதன் வடிவங்கள் எப்படி இருக்கும் ?

Pandemic and Economic Recession 2020 – Shapes of Recession

நாம் தற்போது கோவிட்-19 மற்றும் உலக பொருளாதார மந்தநிலையில் இருந்து வருகிறோம். இதன் தாக்கம் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என யாராலும் உறுதியிட்டு சொல்ல முடியாது. இருப்பினும் சில பொருளாதார கணிப்புகள் இருக்கலாம். அடுத்த ஒரு வருடம் என சொல்லலாம், இரண்டு வருடங்கள் பிடிக்கலாம் அல்லது அடுத்த 18 மாதங்கள் என கணிக்கலாம்.

பொருளாதார மந்தநிலை(Economic Recession) என்பது வணிக ரீதியாக ஏற்படும் ஒரு சுழற்சி தான். இது ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறக்கூடியதாக அமையும். அதே வேளையில், இந்த காலத்தில் தான் நடைபெறும் என ஒரு குறிப்பிட்ட வருடத்தை முன்னரே எடுத்து கொள்ள முடியாது. இந்த சுழற்சிக்கான காரணம் பலவாக இருக்கும். இருப்பினும், பொதுவாக தேவைக்கும், உற்பத்திக்குமான(Demand & Supply) இடைவெளி தான் இதனை தீர்மானிக்கிறது.

அதிகப்படியான உற்பத்தி ஏற்பட்டு, தேவை இல்லாவிடில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இது போல தேவையை பூர்த்தி செய்யாத உற்பத்தியும் பொருளாதார மந்தநிலை தான். “ஆசைப்படாமல் இருக்க வேண்டாம். ஆனால் அந்த ஆசைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம். கட்டற்ற ஆசைகளும், அதன் நிர்வாக கோளாறுகளும் தான் நம்மை சிரமப்பட செய்கிறது. இது தான் பொருளாதாரத்திலும் “.

பொருளாதார மந்தநிலை அல்லது பொருளாதார வீழ்ச்சி என்பது சில மாதங்களிலிருந்து பல வருடங்கள் வரை ஏற்படலாம் என சொல்லிவிட்டோம். வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீண்டு வந்தடைய வேண்டுமல்லவா ? எந்தவொரு இறக்கத்தை சந்தித்த பொருளாதாரம் ஏற்றமடைந்து தான் ஆக வேண்டும். பொருளாதாரம் மந்தநிலை ஏற்பட்ட காலம் முதல் அது மீண்டது வரை உள்ள காலத்தை, பொருளாதார வல்லுநர்கள் ஒரு வடிவமாக(Shapes) மாற்றுகின்றனர்.

இதற்கான சரியான பொருளாதார கல்வி என்று எதனையும் அவர்கள் குறிப்பிடவில்லை. ஆனால் பொருளாதார மந்தநிலை காலங்களை நான்கு வடிவங்களாக பிரித்துள்ளனர். பொருளாதார வீழ்ச்சி வரலாற்றில் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 1930ம் ஆண்டு, ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom) மற்றும் அமெரிக்காவில் 2000ம் வருடம், கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சி என சில நினைவுகளை சொல்லலாம். வல்லரசு நாடுகளில் இது பொதுவாக ஏற்படுவதுண்டு. பின்பு உலக தாராளமயமாக்கலின் துணை கொண்டு, மற்ற நாடுகளிலும் இந்த பொருளாதார மந்தநிலை பரவி இருக்கும்.

பொருளாதார மந்தநிலை காலங்களில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகமாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல் செல்வது, நிறுவனங்கள் திவால் நிலைக்கு செல்வது என சில விளைவுகள் தென்படும்.

வடிவங்கள் என்ன ?

பொருளாதார மந்தநிலை வடிவங்கள் நான்கு.

  • V – Shaped
  • U – Shaped
  • W – Shaped
  • L – Shaped

முதல் வடிவில் (V-Shaped) பொருளாதார மந்தநிலை குறுகிய காலத்தில் மட்டுமே இருக்கும். வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு அல்லது வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இது போன்ற மந்தநிலை ஏற்படும். இதனை அரசு பொருளாதார ஊக்குவிப்பு மூலம் உடனடியாக சரிசெய்யும் நிலையில், பொருளாதாரம் விரைவாக ஏற்றம் பெறும். இதற்கான காலம் பொதுவாக சில மாதங்களாக இருக்கலாம்.

வேகமாக இறங்கிய பொருளாதாரம், அதே வேகத்தில் மேலே எழும்பும் – (V-Shaped)

இரண்டாம் வடிவில் (U-Shaped) பொருளாதார மந்தநிலை முதல்நிலை வடிவத்தை விட சற்று கூடுதல் காலங்கள் பிடிக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக சில காலாண்டுகள் மந்தநிலை செல்வதும், அதனை தொடர்ந்து ஏற்படும் வேலைவாய்ப்பின்மை, வட்டி விகிதம் மற்றும் பணவீக்க மாற்றங்கள் பல மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கலாம்.

Economic Stagnation என்று சொல்லக்கூடிய நீண்டகால பொருளாதார மந்தநிலை தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது எனலாம். கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் தான் உள்ளது. ஆம், தொடர்ச்சியாக ஏழு காலாண்டுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) சரிவு. மீண்டெழுவதற்கான காலமும் இதன் அளவாக கருதப்படலாம். எனவே தான் இரண்டாம் வடிவம் U-Shaped ஆக குறிக்கப்பட்டுள்ளது.

ஒரு குளியலறைக்குள் சென்று விட்டு நீண்ட நேரம் வராவிட்டால் எப்படி இருக்கும் ? இந்த வடிவத்திற்கு பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடும் வரிகள் இவை. சோம்பலாக நீண்ட நேரம் பொருளாதாரம் படுத்து கொள்ளும். பின்பு, விழித்தெழுந்து அதே வேகத்தில் மெதுவாக மீண்டு வரும்.

Recession shapes

W-Shaped வடிவம்:

இந்த வடிவத்தை இரட்டை மந்தநிலை என கூறுவதுண்டு. அமெரிக்காவில் 1980ம் கால கட்டங்களில் இது போன்ற நிலை இருந்துள்ளது. அதாவது முதல்நிலை வடிவத்தை போல பொருளாதாரம் விரைவாக ஏற்றம் பெற்றாலும், மறுபடியும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும். பிறகு, அதனிலிருந்து மீண்டு எழும். இந்த வடிவம் அதிக ஏற்ற-இறக்கத்தை கொண்டிருக்கும் காலமாக கணக்கிடப்படுகிறது. பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற-இறக்கத்தை போல.

ஆனால், அடிக்கடி நிகழும் ஒரு முறையாக இந்த வடிவம் வரலாற்றில் சொல்லப்படவில்லை. விரைவாக விழுந்து மீண்டு எழுதல் மற்றும் மறுமுறையும் விழுந்து எழுதல் என்பது துணிச்சலான பொருளாதாரத்தை கொண்டிருக்கும்.

L – Shaped வடிவம்:

சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை வடிவங்களில் மோசமான வடிவம் இது தான். ஒரு பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து, பின்பு மீண்டு வராமல் பல வருடங்கள் தட்டையான வளர்ச்சியை மட்டுமே கொண்டிருப்பது. ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் இது போன்று அமைந்துள்ளது. கடந்த 1950ம் வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சுமார் 30 வருடங்கள் எந்தவித பெரிய வளர்ச்சியையும் பெறாமல், தட்டை வடிவத்தில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் இது போன்ற ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது. அதாவது Dot com குமிழி 2000ம் ஆண்டு வாக்கில் உடைந்த பிறகு, 2013ம் ஆண்டு வரை அதன் பொருளாதாரம் பெரிய அளவில் ஏற்றம் பெறவில்லை. இந்த காலத்திற்கு இடையில் 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. கடுமையான மந்தநிலையை கொண்டிருக்கும் இந்த வடிவம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பெருத்த பயத்தை ஏற்படுத்தும்.

மேலே சொன்ன நான்கு வடிவங்கள் போக சந்தையில் சில வடிவங்கள் சொல்லப்பட்டாலும், அவை இந்த நான்கு வடிவங்களை ஒத்து தான் இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் உலக பொருளாதார மந்தநிலை எந்த வடிவத்தை பெறுகிறது என சொல்லுங்கள் ?

கவனிக்க:

  • V-Shaped வடிவ மந்தநிலை 8-10 மாதங்கள் இருந்துள்ளது.
  • U-Shaped மந்தநிலை 18-24 மாதங்கள் எடுத்து கொண்டுள்ளது.
  • W-Shaped ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை வரலாற்றில் பதிந்துள்ளது.
  • L – Shaped – மூன்று வருடங்கள் முதல் பல வருடங்கள் நீடிக்கும் கடுமையான பொருளாதார மந்தநிலை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

National Aluminium Company(NALCO) – Fundamental Analysis

ஒடிசா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் நால்கோ (NALCO). மத்திய அரசின் நவரத்னா நிறுவனமாக பார்க்கப்படும் நால்கோ, அலுமினிய உற்பத்தி சேவையை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தொழிலாக கொண்டுள்ளது.

அலுமினிய துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், துறை சார்ந்த பொருட்களை மிக குறைந்த விலையில் வழங்கும் உலகின் முக்கிய நிறுவனமாகவும் நால்கோ சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்து உள்ளது  கவனிக்கத்தக்கது.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 5,960 கோடி. அதன் புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், தற்போதைய பங்கு விலை 32 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. டிவிடெண்ட் தொகைக்கு(Dividend yield) பெயர் போன இந்நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோவின் கடன்-பங்கு விகிதம் 0.01 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 100 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NALCO DCF

நிறுவனர்களின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களாக சொல்லப்படும் மத்திய அரசு பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை. இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை புத்தக மதிப்பு அடிப்படையின் படி மலிவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. எனினும், இந்த துறை உலக பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளன.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 8.50 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி விகிதம் ஐந்து வருடங்களில் 24 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 3 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரு காலாண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நான்காம் காலாண்டு முடிவுகள்(Q4FY20) இன்னும் வெளிவரவில்லை. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 42 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அதே வேளையில் பங்கு மீதான வருவாய் கடந்த 12 மாதங்களில் 16.50 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,499 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 1,734 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பு மற்றும் பணவரத்து நன்றாக உள்ளது. அதிக ரிஸ்க் கொண்ட இந்த துறை அவ்வப்போது உலகளவில் ஏற்படும் பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்து விளங்கும் நிறுவனமாகவும் நால்கோ உள்ளது. பங்கு விலை பெரிய அளவில் ஏற்றம் பெறாவிட்டாலும், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் போது, இந்த பங்கினை சிறிய அளவில் வாங்கி கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டில் டிவிடெண்ட் தொகையை ஈர்க்க உதவும் இது போன்ற பங்குகளை சேர்த்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com