பொருளாதார மந்தநிலை 2020 – அதன் வடிவங்கள் எப்படி இருக்கும் ?
Pandemic and Economic Recession 2020 – Shapes of Recession
நாம் தற்போது கோவிட்-19 மற்றும் உலக பொருளாதார மந்தநிலையில் இருந்து வருகிறோம். இதன் தாக்கம் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என யாராலும் உறுதியிட்டு சொல்ல முடியாது. இருப்பினும் சில பொருளாதார கணிப்புகள் இருக்கலாம். அடுத்த ஒரு வருடம் என சொல்லலாம், இரண்டு வருடங்கள் பிடிக்கலாம் அல்லது அடுத்த 18 மாதங்கள் என கணிக்கலாம்.
பொருளாதார மந்தநிலை(Economic Recession) என்பது வணிக ரீதியாக ஏற்படும் ஒரு சுழற்சி தான். இது ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறக்கூடியதாக அமையும். அதே வேளையில், இந்த காலத்தில் தான் நடைபெறும் என ஒரு குறிப்பிட்ட வருடத்தை முன்னரே எடுத்து கொள்ள முடியாது. இந்த சுழற்சிக்கான காரணம் பலவாக இருக்கும். இருப்பினும், பொதுவாக தேவைக்கும், உற்பத்திக்குமான(Demand & Supply) இடைவெளி தான் இதனை தீர்மானிக்கிறது.
அதிகப்படியான உற்பத்தி ஏற்பட்டு, தேவை இல்லாவிடில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இது போல தேவையை பூர்த்தி செய்யாத உற்பத்தியும் பொருளாதார மந்தநிலை தான். “ஆசைப்படாமல் இருக்க வேண்டாம். ஆனால் அந்த ஆசைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம். கட்டற்ற ஆசைகளும், அதன் நிர்வாக கோளாறுகளும் தான் நம்மை சிரமப்பட செய்கிறது. இது தான் பொருளாதாரத்திலும் “.
பொருளாதார மந்தநிலை அல்லது பொருளாதார வீழ்ச்சி என்பது சில மாதங்களிலிருந்து பல வருடங்கள் வரை ஏற்படலாம் என சொல்லிவிட்டோம். வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீண்டு வந்தடைய வேண்டுமல்லவா ? எந்தவொரு இறக்கத்தை சந்தித்த பொருளாதாரம் ஏற்றமடைந்து தான் ஆக வேண்டும். பொருளாதாரம் மந்தநிலை ஏற்பட்ட காலம் முதல் அது மீண்டது வரை உள்ள காலத்தை, பொருளாதார வல்லுநர்கள் ஒரு வடிவமாக(Shapes) மாற்றுகின்றனர்.
இதற்கான சரியான பொருளாதார கல்வி என்று எதனையும் அவர்கள் குறிப்பிடவில்லை. ஆனால் பொருளாதார மந்தநிலை காலங்களை நான்கு வடிவங்களாக பிரித்துள்ளனர். பொருளாதார வீழ்ச்சி வரலாற்றில் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 1930ம் ஆண்டு, ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom) மற்றும் அமெரிக்காவில் 2000ம் வருடம், கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சி என சில நினைவுகளை சொல்லலாம். வல்லரசு நாடுகளில் இது பொதுவாக ஏற்படுவதுண்டு. பின்பு உலக தாராளமயமாக்கலின் துணை கொண்டு, மற்ற நாடுகளிலும் இந்த பொருளாதார மந்தநிலை பரவி இருக்கும்.
பொருளாதார மந்தநிலை காலங்களில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகமாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல் செல்வது, நிறுவனங்கள் திவால் நிலைக்கு செல்வது என சில விளைவுகள் தென்படும்.
வடிவங்கள் என்ன ?
பொருளாதார மந்தநிலை வடிவங்கள் நான்கு.
-
V – Shaped
-
U – Shaped
-
W – Shaped
-
L – Shaped
முதல் வடிவில் (V-Shaped) பொருளாதார மந்தநிலை குறுகிய காலத்தில் மட்டுமே இருக்கும். வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு அல்லது வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இது போன்ற மந்தநிலை ஏற்படும். இதனை அரசு பொருளாதார ஊக்குவிப்பு மூலம் உடனடியாக சரிசெய்யும் நிலையில், பொருளாதாரம் விரைவாக ஏற்றம் பெறும். இதற்கான காலம் பொதுவாக சில மாதங்களாக இருக்கலாம்.
வேகமாக இறங்கிய பொருளாதாரம், அதே வேகத்தில் மேலே எழும்பும் – (V-Shaped)
இரண்டாம் வடிவில் (U-Shaped) பொருளாதார மந்தநிலை முதல்நிலை வடிவத்தை விட சற்று கூடுதல் காலங்கள் பிடிக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக சில காலாண்டுகள் மந்தநிலை செல்வதும், அதனை தொடர்ந்து ஏற்படும் வேலைவாய்ப்பின்மை, வட்டி விகிதம் மற்றும் பணவீக்க மாற்றங்கள் பல மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கலாம்.
Economic Stagnation என்று சொல்லக்கூடிய நீண்டகால பொருளாதார மந்தநிலை தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது எனலாம். கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் தான் உள்ளது. ஆம், தொடர்ச்சியாக ஏழு காலாண்டுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) சரிவு. மீண்டெழுவதற்கான காலமும் இதன் அளவாக கருதப்படலாம். எனவே தான் இரண்டாம் வடிவம் U-Shaped ஆக குறிக்கப்பட்டுள்ளது.
ஒரு குளியலறைக்குள் சென்று விட்டு நீண்ட நேரம் வராவிட்டால் எப்படி இருக்கும் ? இந்த வடிவத்திற்கு பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடும் வரிகள் இவை. சோம்பலாக நீண்ட நேரம் பொருளாதாரம் படுத்து கொள்ளும். பின்பு, விழித்தெழுந்து அதே வேகத்தில் மெதுவாக மீண்டு வரும்.
W-Shaped வடிவம்:
இந்த வடிவத்தை இரட்டை மந்தநிலை என கூறுவதுண்டு. அமெரிக்காவில் 1980ம் கால கட்டங்களில் இது போன்ற நிலை இருந்துள்ளது. அதாவது முதல்நிலை வடிவத்தை போல பொருளாதாரம் விரைவாக ஏற்றம் பெற்றாலும், மறுபடியும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும். பிறகு, அதனிலிருந்து மீண்டு எழும். இந்த வடிவம் அதிக ஏற்ற-இறக்கத்தை கொண்டிருக்கும் காலமாக கணக்கிடப்படுகிறது. பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற-இறக்கத்தை போல.
ஆனால், அடிக்கடி நிகழும் ஒரு முறையாக இந்த வடிவம் வரலாற்றில் சொல்லப்படவில்லை. விரைவாக விழுந்து மீண்டு எழுதல் மற்றும் மறுமுறையும் விழுந்து எழுதல் என்பது துணிச்சலான பொருளாதாரத்தை கொண்டிருக்கும்.
L – Shaped வடிவம்:
சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை வடிவங்களில் மோசமான வடிவம் இது தான். ஒரு பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து, பின்பு மீண்டு வராமல் பல வருடங்கள் தட்டையான வளர்ச்சியை மட்டுமே கொண்டிருப்பது. ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் இது போன்று அமைந்துள்ளது. கடந்த 1950ம் வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சுமார் 30 வருடங்கள் எந்தவித பெரிய வளர்ச்சியையும் பெறாமல், தட்டை வடிவத்தில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலும் இது போன்ற ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது. அதாவது Dot com குமிழி 2000ம் ஆண்டு வாக்கில் உடைந்த பிறகு, 2013ம் ஆண்டு வரை அதன் பொருளாதாரம் பெரிய அளவில் ஏற்றம் பெறவில்லை. இந்த காலத்திற்கு இடையில் 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. கடுமையான மந்தநிலையை கொண்டிருக்கும் இந்த வடிவம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பெருத்த பயத்தை ஏற்படுத்தும்.
மேலே சொன்ன நான்கு வடிவங்கள் போக சந்தையில் சில வடிவங்கள் சொல்லப்பட்டாலும், அவை இந்த நான்கு வடிவங்களை ஒத்து தான் இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் உலக பொருளாதார மந்தநிலை எந்த வடிவத்தை பெறுகிறது என சொல்லுங்கள் ?
கவனிக்க:
- V-Shaped வடிவ மந்தநிலை 8-10 மாதங்கள் இருந்துள்ளது.
- U-Shaped மந்தநிலை 18-24 மாதங்கள் எடுத்து கொண்டுள்ளது.
- W-Shaped ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை வரலாற்றில் பதிந்துள்ளது.
- L – Shaped – மூன்று வருடங்கள் முதல் பல வருடங்கள் நீடிக்கும் கடுமையான பொருளாதார மந்தநிலை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை