சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான படிநிலைகள்
Quick Steps to create a better Investment Portfolio
எந்தவொரு முதலீட்டு சாதனத்திலும் பணத்தை முதலீடு செய்யும் முன்னர், சொல்லக்கூடிய நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை தான் ஒரு முதலீட்டு வாய்ப்பின் சாராம்சங்களை தெளிவாக்கும்.
- தேவைகள் மற்றும் விருப்பங்கள்
- நிதி இலக்குகள்
- முதலீட்டு காலம்
- எதிர்பார்க்கும் வருமானம் அல்லது வட்டி விகிதம்
வெறுமென வங்கி டெபாசிட்டில் பணத்தை போடுவதோ அல்லது பங்குச்சந்தையில் ஆழம் தெரியாமல் காலை விடுவதோ – இரண்டும் ஒரு முதலீட்டாளரின் முதலீட்டு நலனை பாதுகாக்காது. மேலே சொன்ன நான்கு அடிப்படை விஷயங்களை சிந்தித்து விட்டு, பிறகு முதலீட்டு சாதனத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணமாக ராமு என்பவருக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ஒரு வீடு வாங்க வேண்டுமென்ற நிதி இலக்கு இருந்தால், இவற்றில் அவருடைய தேவை அல்லது விருப்பமாக புதிய வீடு வாங்குவதை சொல்லலாம். ‘வீடு வாங்குதல்’ என்பது அவரின் நிதி இலக்குக்கான வாசகமாகும். ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் அவர் வாங்க வேண்டுமெனும் போது, 5 வருடங்கள் ஒரு முதலீட்டு காலமாக எடுத்து கொள்ளப்படும். மாதாமாதம் அவர் எவ்வளவு தொகையை, எந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், அவருக்கான இலக்கை அடைய முடியும். இல்லையெனில், ஒரு முறை மட்டுமே அவர் முதலீடு செய்யும் பட்சத்தில், அவரது வீட்டின் மதிப்பை பெற, எதிர்பார்க்கும் வருவாய் எவ்வளவு என்பதனை ஆராய வேண்டும்.
முதலீட்டிற்கான காலம் குறைவாக இருக்கும் நிலையில், ஒன்று அவர் தனது மாத முதலீட்டை அதிகரித்து முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ரிஸ்க் தன்மையுடன் கூடிய அதிக வட்டி வருவாய் முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே வேளையில், முதிர்வு காலத்தில் அவரது முதலீட்டிற்கே மோசம் வந்துவிட கூடாது.
இதனை சார்ந்து தான் நமது முதலீட்டு சாதனம்(Investment Avenue) இருக்க வேண்டும். பொதுவாக குறுகிய கால இலக்குகளுக்கு ரிஸ்க் குறைவான முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்ய வேண்டும். காலங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ரிஸ்க் அதிகம் எடுத்தாலும், நீண்ட காலத்தில் முதலீட்டின் மீது நல்ல வருவாயை பெறலாம்.
நல்ல முதலீட்டு போர்ட்போலியோ(Investment Portfolio) தயார் செய்ய 6 படிநிலைகள்:
- நிதி இலக்குகள்(Financial Goals) இருப்பது அவசியம்
- நிதி இலக்குகளுக்கு தகுந்தாற் போல், முதலீட்டு சாதனத்தை(Investment Product or avenue) தேர்வு செய்ய வேண்டும்
- முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த வேண்டும்
- ஒவ்வொரு கால இடைவெளியில், செய்த முதலீட்டு சாதனத்தை மறுஆய்வு(Periodic Review) செய்வது அவசியமாகும்
- தேவைப்பட்டால், ஏற்கனவே செய்த முதலீட்டு சாதனத்தில் மாற்றத்தை(Make Changes on Existing investments) ஏற்படுத்தலாம். அதே வேளையில், உங்களது இலக்குகளை அடைவது முக்கியம்.
- முதிர்வு காலத்தின் போது அல்லது முன்னரே இலக்குக்கான தொகையை (Exit on or before Maturity) பரிமாற்றம் செய்தல்.
முதல் படிநிலையில் நாம் ஏற்கனவே சொன்னது போல நிதி இலக்கிற்கான பெயர், அடைய வேண்டிய காலம் மற்றும் எதிர்பார்க்கும் வட்டி(Expected returns %) ஆகியவை முக்கியம். இரண்டாவது படிநிலையில், நாம் எதிர்பார்க்கும் வட்டி வருவாய்க்கு தகுந்தாற் போல, முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். ஐந்து வருட கால இலக்கு மற்றும் எதிர்பார்க்கும் வட்டி வருவாய் ஆண்டுக்கு 8 சதவீதம் எனில், பங்குச்சந்தை நமக்கு தேவையா… இல்லையெனில் வங்கி டெபாசிட் அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட கடன் பத்திர பண்டுகள்(Debt Mutual Funds) போதுமா என்பதனை அலசி முடிவெடுக்க வேண்டும்.
நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது, ஒரே முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க கூடாது. முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) அவசியம். நீங்கள் மாதாமாதம் 10,000 ரூபாயை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் என்றால், பங்குகள் கொஞ்சம், கடன் பத்திரங்கள் கொஞ்சம், தங்கம் சிறிதளவு மற்றும் இதர முதலீடுகள் என பிரித்து முதலீடு செய்யலாம். பொதுவாக பங்குகள் சரியும் போது, தங்கம் ஏற்றம் பெறும். வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக காணப்படும் போது, கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் சற்று அதிகமாக கிடைக்கும்.
உங்கள் இலக்கு 15 வருடங்கள் எனில், ஒவ்வொரு வருடமும் நீங்கள் செய்துள்ள முதலீட்டு சாதனத்தை பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும். செய்யப்படும் முதலீட்டை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் நன்றாக இருக்குமா அல்லது முதலீட்டு சாதனத்தை பொறுத்து குறைத்து கொள்ளலாமா என அலசுவது அவசியமாகும்.
தேவைப்பட்டால், ஏற்கனவே செய்துள்ள முதலீட்டில் மாற்றத்தை செய்வது இலக்கை அடைவதற்கு உதவக்கூடும். எனவே, சரியான நேரத்தில் மாற்றம் செய்வதற்கும் தயாராக வேண்டும். உங்கள் இலக்குக்கான தொகை, இலக்கு காலத்திற்கு முன்பே அடைந்து விட்டால் அதனை பாதுகாப்பாக வங்கிக்கோ அல்லது பாதுகாப்பான முதலீட்டு சாதனத்தில் முழுவதுமாக மாற்றுவது அவசியம். இலக்கின் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
உதாரணமாக ராமு தனது மகனின் மேற்படிப்பு செலவிற்காக 15 வருடங்கள் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து வருகிறார் என வைத்து கொள்வோம். இலக்கிற்கான தொகை 13ம் வருடமே அடையும் பட்சத்தில், அடுத்த இரண்டு வருடங்கள் அதே முதலீட்டில் தொடர வேண்டுமென்ற அவசியமில்லை. அதனை பாதுகாப்பான வங்கி டெபாசிட்டாக மாற்றி கொள்ளலாம். மாறாக அவர் பங்கு சார்ந்த திட்டத்தில் தொடரும் நிலையில், எதிர்பாராத பங்குச்சந்தை சரிவு அல்லது பொருளாதார மந்தநிலை ஏற்படுமாயின், அவருடைய முதலீட்டின் மீதான வருவாய் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் முதலீடு நஷ்டமடைய வாய்ப்புண்டு. எனவே சரியான திட்டமிடலை கொண்டிருப்பது அவசியமாகும்.
சொல்லப்பட்ட ஆறு படிநிலைகளையும் கொண்டு உங்களுக்கான சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குங்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை