பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)
National Aluminium Company(NALCO) – Fundamental Analysis
ஒடிசா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் நால்கோ (NALCO). மத்திய அரசின் நவரத்னா நிறுவனமாக பார்க்கப்படும் நால்கோ, அலுமினிய உற்பத்தி சேவையை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தொழிலாக கொண்டுள்ளது.
அலுமினிய துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், துறை சார்ந்த பொருட்களை மிக குறைந்த விலையில் வழங்கும் உலகின் முக்கிய நிறுவனமாகவும் நால்கோ சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்து உள்ளது கவனிக்கத்தக்கது.
தேசிய அலுமினிய நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 5,960 கோடி. அதன் புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், தற்போதைய பங்கு விலை 32 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. டிவிடெண்ட் தொகைக்கு(Dividend yield) பெயர் போன இந்நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோவின் கடன்-பங்கு விகிதம் 0.01 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 100 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறுவனர்களின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களாக சொல்லப்படும் மத்திய அரசு பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை. இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை புத்தக மதிப்பு அடிப்படையின் படி மலிவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. எனினும், இந்த துறை உலக பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளன.
தேசிய அலுமினிய நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 8.50 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி விகிதம் ஐந்து வருடங்களில் 24 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 3 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரு காலாண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நான்காம் காலாண்டு முடிவுகள்(Q4FY20) இன்னும் வெளிவரவில்லை. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 42 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அதே வேளையில் பங்கு மீதான வருவாய் கடந்த 12 மாதங்களில் 16.50 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,499 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 1,734 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பு மற்றும் பணவரத்து நன்றாக உள்ளது. அதிக ரிஸ்க் கொண்ட இந்த துறை அவ்வப்போது உலகளவில் ஏற்படும் பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்து விளங்கும் நிறுவனமாகவும் நால்கோ உள்ளது. பங்கு விலை பெரிய அளவில் ஏற்றம் பெறாவிட்டாலும், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் போது, இந்த பங்கினை சிறிய அளவில் வாங்கி கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டில் டிவிடெண்ட் தொகையை ஈர்க்க உதவும் இது போன்ற பங்குகளை சேர்த்து கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை