எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள்
Esvin Group of Companies and its Shares – Listed Domestic Stock Valuation
ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் எஸ்வின் குழுமம். 1960ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலத்தில் சேஷசாயி பேப்பர்(Seshasayee Paper & Boards) மற்றும் அதனை சார்ந்த பலகைகள் தயாரிக்கும் தொழிலை கொண்டிருந்தது. நிறுவனத்தின் நிறுவனரான திரு. எஸ். விஸ்வநாதன் அவர்கள் எஸ்வின் குழுமத்தை பல நிறுவனங்கள் கொண்ட ஒரு அங்கமாக உருவாக்கினார்.
செராமிக்(Ceramic), பேட்டரிகள், உயிரி தொழில்நுட்பவியல், சர்க்கரை மற்றும் ரசாயனம் போன்ற தொழில்களில் குழும நிறுவனங்கள் செயல்பட்டன. 1984ம் ஆண்டு துவங்கப்பட்ட பொன்னி சுகர்ஸ்(Ponni Sugars) நிறுவனம் சர்க்கரை மற்றும் அதனை சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 3000 டி.சி.டி. கொள்ளளவு கொண்ட கலனை ஈரோட்டில் நிறுவியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு தேவையான உற்பத்தி பொருட்கள் கரும்பு சக்கையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
பேட்டரி தயாரிக்கும் தொழிலில் உள்ள எச்.இ.பி.(High Energy Batteries) நிறுவனம், திறன்மிக்க துத்தநாகம் மற்றும் நிக்கல் காட்மியம் வகை பேட்டரிகளை தயாரித்து வருகிறது. உற்பத்தியாகும் பொருட்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆகவே, இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.
காகித அச்சடிப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனமான டி.என்.பி.எல்.(Tamilnadu Newsprint and Papers Limited) வெற்றிகரமாக செயல்படுவதற்கு சேஷசாயி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியத்துவமானது. உலகின் முதல் கரும்பு சக்கையிலான செய்தித்தாள் பிரிவும் இது தான்.
உயிரி தொழில்நுட்பவியலில்(Bio Technology) செயல்படும் நிறுவனம் எஸ்வின் அட்வான்ஸடு டெக்னாலஜிஸ். இந்த துறையில் உயிர் கழிவு மற்றும் எரிபொருளின் வாயுவாக்க வேலைகளை செய்து வருகிறது இந்நிறுவனம். எஸ்வின் குழுமத்தின் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
சேஷசாயி நிறுவனம் பேப்பர் தயாரிப்புக்கென இரு பிரிவுகளை கொண்டுள்ளது. ஈரோடு(Erode) மற்றும் திருநெல்வேலியில் இயங்கும் ஆலைகளில் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் பேப்பர்களை உற்பத்தி செய்யலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 780 கோடி. கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.
கடந்த ஒரு வருடமாக இந்த பங்கின் விலை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த பத்து வருட காலத்தில் நன்றாகவே இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பும், பணவரத்தும் சாதகமாக உள்ளது.
மற்றொரு நிறுவனமான பொன்னி சுகர்ஸ் நாளொன்றுக்கு 3500 டன் கரும்புகளை(Sugarcane) நசுக்கி 19 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 கோடி ரூபாய். கடன் எதுவும் பெரிதாக இல்லை. அது போல அடமான பங்குகளும் நிறுவனர் சார்பில் இல்லை. விற்பனை மற்றும் லாப வளர்ச்சி பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது இந்த துறையும்(Sugar Segment), அதனை சார்ந்த அரசு கொள்கைகளும் தான்.
இருப்பினும் நிறுவனம், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை ஓரளவு பூர்த்தி செய்கிறது பேட்டரி தயாரிப்பில் இருக்கும் நிறுவனம் ஹை எனர்ஜி பேட்டரிஸ்(HEB). இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 35 கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் ஒன்றுக்கு மேலாக உள்ளது. எனவே இந்த பங்கு பொதுவாக பரிசீலிக்கக்கூடியதாக இல்லை. இதன் வாடிக்கையாளர்கள் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை என இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தான் இந்நிறுவனம் லாபத்தை ஈட்டி வருகிறது எனலாம்.
பங்குச்சந்தையில் ஈடுபடும் நீண்டகால முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள், பிரபல பிராண்டுகள் மற்றும் பெயர் அதிகம் தெரியாத மற்ற மாநிலங்களின் நிறுவன பங்குகளை வாங்குவதை விட, நமது ஊரில் உள்ள ஒரு நிறுவனத்தின் தொழிலை கண்டறிந்து முதலீடு செய்வது நமக்கும், நமது மாநிலத்தின் நலனுக்கும் சாதகமாக அமையும்.
மதுரை மாவட்ட தியாகராஜர் மில்ஸ் (Virudhunagar Textile Mills – VTM Ltd), டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜபாளையம் ராம்கோ குழும நிறுவனங்கள், முருகப்பா குழும நிறுவனங்கள், கோவை சாந்தி கியர்ஸ், சென்னையை தலைமையிடமாக கொண்ட வாகனத்துறை தயாரிப்பு மற்றும் உபகரணங்களில் உள்ள தமிழக நிறுவனங்களை அலசலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை