Five color circles

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

Don’t invest without doing these Five Commitments – Financial Planning

‘ நீங்கள் பங்குச்சந்தையில் நித்தமும் பணம் சம்பாதிக்கலாம், வாருங்கள் ‘ 

‘ பங்குச்சந்தையின் மூலம் ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாறலாம் ‘

‘ எங்களிடம் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மாதாமாதம் வட்டி தருகிறோம்,உங்கள் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது ‘

‘ பங்குச்சந்தையில் பகுதி நேரமாக வர்த்தகம் செய்து சம்பாதியுங்கள் ‘

‘ பிட்காயின் முதலீடு, உங்களை கோடீஸ்வரராக்கும் பொன்னான முதலீடு ‘

  • இவ்வாறான வாசகங்கள் உங்களுக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறதா ?

நான் எப்போதும் சொல்வது தான், பொருளாதார உலகில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதற்கும், செல்வ வளத்தை குவிப்பதற்கும் ஒரு குறுக்கு வழி கிடைக்கப்பெற்றால், அதனை முதலில் அடைய போவது நீங்கள் அல்ல. இவ்வுலகின் முதல் 100 பணக்காரர்கள் தான். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டை கொண்டு சில மாதங்களில் கோடிகளை அள்ளலாம் என்றால் ஏன் அமேசான் நிறுவனரும், அம்பானியும் தொழில் செய்ய வேண்டும் ? ஏன் பல கிளைகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் ?  பல தலைமுறை கோடீஸ்வரர்களுக்கும் இங்கே குறுக்கு வழி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக முதலீடு செய்யும் காலமும், முதலீட்டு சாதனமும் தான் அவர்களை அந்த நிலையில் வைத்துள்ளது. ஒரு முதலீட்டு சாதனத்தை பற்றிய முறையான கல்வி வேண்டும், இல்லையெனில் கற்றவரை நாம் வேலைக்கு வைத்திருக்க வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் மட்டுமே, எந்தவொரு பண முதலீடும் உங்களுக்காக உழைக்கும்.

பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், பிட் காயின் சார்ந்த புத்தகங்கள் சந்தையில் ஏராளம். ஆனால், எந்த புத்தகத்திலும் உங்களுக்கு குறுக்கு வழியை பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை. மாறாக அடிப்படை கற்றலை தான் உங்களுக்கு அந்த புத்தகத்தின்  ஆசிரியர் சொல்ல வருகிறார். பணம் சம்பாதிக்க, அந்த அடிப்படை கற்றலை கொண்டு நீங்கள் தான் சிந்திக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் மற்றும் செல்வத்தை ஏற்படுத்த காத்திருக்க வேண்டும்.

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் ஐந்து:

  • ஆயுள் காப்பீடு (Term Insurance)
  • மருத்துவ காப்பீடு
  • அவசர கால நிதி திட்டமிடல்
  • கடன்களை குறைத்தல்
  • ஓய்வுக்கால நிதி திட்டமிடல்

மேலே சொன்னவற்றை நீங்கள் செய்து விட்டு தான், உங்கள் முதலீட்டை தொடங்க வேண்டும். ஐந்து முன்னெடுப்புகளும் உங்களை பாதுகாக்கும் நிதி காப்பு ஆகும். உங்களுடைய நிதி ஆலோசகர் இதனை பற்றி உங்களிடம் சொல்லவில்லை என்றால் அவர் உங்கள் நிதி நலனில் அக்கறை கொள்பவரா என்பது சந்தேகமே. நிதி ஆலோசகர்(Personal Financial Advisor) என்பவர் பங்கு தரகர் அல்ல. இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவரும் முழுமையான நிதி ஆலோசகர் அல்ல. உங்களிடம் பரஸ்பர நிதிகளை மட்டும் விற்கும் விநியோகஸ்தரா, அவரும் நிதி ஆலோசகர் என்ற முழு நிலைக்கு வர மாட்டார்.

நிதி ஆலோசகர் என்பவர் உங்களது குடும்ப மருத்துவர் போன்று. மேலே சொன்ன ஐந்தையும் உங்களுக்காக அவர் திட்டமிட வேண்டும். உங்கள் குடும்ப நிதி நிலைமைகளை சரியாக புரிந்து கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் குடும்ப உறவுகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை நபர்களுக்கும் நிதி திட்டமிடலை செய்பவராக இருக்க வேண்டும். உயில், நாமினியை நியமிப்பது, உங்களுக்கான சொத்துக்களை வாரிசு தாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது போன்றவற்றிலும் அவருடைய உண்மையான அக்கறை இருக்க வேண்டும்.

ஆம், அவர் உங்களிடம் ஒரு கணிசமான கட்டணத்தை பெறுபவராக இருக்க வேண்டும். இலவசமாக அவர் செய்திட முடியாது. ஒருவர் உங்களிடம் நிதி சார்ந்த ஒரு பொருளை அல்லது சேவையை விற்கும் போது இலவசமாக (பொருளுக்கான விலை தவிர்த்து) விற்பவராக இருந்தால், அவர் உங்களிடம் தவறான பொருளை அல்லது உங்களுக்கு தேவையில்லாத ஒரு சேவையை விற்று விட்டு செல்கிறார் என அர்த்தம். இது தான் காப்பீடுகளில் பெரும்பாலும் நடைபெறுகிறது. நீங்கள் தவறான சேவையை தேர்ந்தெடுத்து, அதற்காக ஒரு ஏஜென்ட் கமிஷன் பெறுவதற்கு பதிலாக, அவரிடம் சேவை சார்ந்த ஆலோசனை கேளுங்கள். வெளிப்படைத்தன்மையை அறியுங்கள். பின்பு நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்கு அவருக்கு ஒரு கட்டணத்தையும் அளியுங்கள்.

நீண்ட காலத்திற்கான நிதி ஆலோசகரை கொண்டிருங்கள். அவரது ஆலோசனைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால், பலமுறை கேட்பதற்கு தயங்காதீர்கள். ஆலோசனை பலனளிக்கவில்லை என்றால், வேறு ஒரு ஆலோசகரை பெறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதே வேளையில் அடிக்கடி குடும்ப நிதி ஆலோசகரை மாற்றுவதும் ஆரோக்கியமாக இருக்காது.

உங்கள் குடும்ப நிதி நிலையை பாதுகாக்க டேர்ம் பாலிசி(Term Plan) மற்றும் மருத்துவ காப்பீடு(Health Insurance) பெறுவது அவசியம். இன்றைய காலத்தில் எதிர்பாராது நிகழும் பாதிப்புகளால் தான் நமது சேமிப்பு குறைகிறது. சில சமயங்களில் அது நம்மை கடனாளியாக்கி விடும். அதனால் நமது வருவாய்க்கு தகுந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு மேலே சொன்ன காப்பீடுகளை பெற வேண்டும்.

அவசர கால நிதியை(Emergency Fund) திட்டமிடுவது உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பஞ்ச காலங்களில் நமது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கோயில் கோபுரங்களில் கலசங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். கலசத்தில் சில உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அதனை போல தான் நமது அவசர கால நிதியும் இருக்க வேண்டும்.

கடனை அதிகமாக வைத்து கொண்டு, பங்குச்சந்தையில் சம்பாதித்து கடனை அடைத்து விடுவேன் என ஆர்வமாக செயல்பட கூடாது. பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க் கொண்ட, அதே வேளையில் செல்வ வளத்தை ஏற்படுத்தும் ஒரு முதலீட்டு சாதனமாகும். கடன் வாங்கி பங்குகளை வாங்குவது, கடனை குறைக்க பங்குகளில் முதலீடு செய்வதால் நமக்கு சுமையே அதிகம்.

‘ உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு கல்வியை விட, உங்களது ஓய்வுக்காலம் மிக முக்கியம் ‘ என நிதி திட்டமிடலில் சொல்வது உண்டு. குழந்தைகளுக்கான வாழும் காலமும், அவர்கள் கற்க வேண்டிய கல்வியும் எப்போதும் இங்கு உள்ளது. ஆனால் உங்கள் ஓய்வுக்காலத்திற்கு அவர்களை நம்பி நீங்கள் இருத்தல் சரி வராது. அந்த ரிஸ்க்கை தான் நம்மில் பெரும்பாலோர் எடுத்து வருகின்றனர். உங்களது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பை(Retirement Savings) நீங்கள் தான் உருவாக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு கைமாறாக அவர்கள் உங்களை பார்க்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களுக்கான நிதி இலக்கை நீங்கள் தான் திட்டமிட வேண்டும். வயதான காலத்தில் அவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது உறவுகளாக(அன்பு) மட்டுமே இருக்க வேண்டும், நிதி அல்ல. உங்கள் குழந்தைகளுக்கான இலக்கு அடுத்த தலைமுறையில் தான் உள்ளது, நீங்கள் மட்டுமே அல்ல.

மேலே சொன்ன ஐந்து முன்னெடுப்புகளை திறம்பட செய்து விட்டு, பின்னர் பங்குச்சந்தைக்கு வாருங்கள்… உங்களுக்காக காத்திருக்கிறது செல்வ வளம்.

குறிப்பு:

என்னிடம், எனது ஆண்டு வருவாயினை போல 50-80 மடங்கு பணம் ரொக்கமாக உள்ளது என சொல்பவரா நீங்கள் ? உங்களுக்கு இந்த ஐந்து வேலைகளும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamdurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s