All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா ?

கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா ? 

Should you Invest in Gold ETF & Gold Funds ?

 

நாம் கடந்த சில காலங்களாக வர்த்தக மதுரை தளத்தில் சில காரணிகளை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வருகிறோம். அவை அமெரிக்க – சீன வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை, எல்லை பதற்றம் மற்றும் வாகனத்துறை வளர்ச்சி குறைவு. இதன் வெளிப்பாடு உலக பொருளாதார மந்த நிலையாக ஏற்பட்டுள்ளது.

 

வாகனத்துறை வளர்ச்சி பொதுவாக சுழற்சி முறையில் செயல்பட கூடியவை. சில வருடங்கள் விரைவாக வளர்ச்சியை நோக்கி செல்வதும், மற்றொரு காலங்களில் மந்தமடைவதும் இயல்பு. ஆனால் தற்போது மற்ற சிக்கல்களும் சேர்ந்துள்ளதால், நடப்பில் காணப்படும் பொருளாதார மந்த நிலை எப்போது சரி செய்யப்படலாம் என்பது சொல்லப்படாதது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு காலத்தில் பங்குச்சந்தை அடுத்தடுத்த சரிவை நோக்கி காத்திருக்கின்றன. இது தற்காலிகமானது தான் எனினும் முதலீட்டு நோக்கில் காணும் போது, மற்ற முதலீட்டு சாதனங்களின் ஏற்றத்தை நாம் பரவலாக(Diversification & Asset Allocation) ஏற்படுத்தலாம். அவ்வாறு காணும் போது பங்குச்சந்தை வீழ்ச்சி சமயத்தில் தங்கத்தின் விலை ஏறுவதும், வங்கிகள் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond) விலை அதிகரிப்பதும் இயல்பு.

 

நமது வாசகர்கள் சிலர் தற்போது தங்கத்தை அடிப்படையாக கொண்ட கோல்டு இ.டி.எப். அல்லது கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யலாமா என கேட்டிருந்தனர். அதே போல இரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர். தங்கத்தை ஆபரணங்களாக வாங்க விரும்பாதவர்கள் மற்றும் இதனை ஒரு முதலீடாக கருதுபவர்கள் கோல்டு இ.டி.எப்., கோல்டு பண்டு அல்லது அரசு வழங்கும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இது போன்ற முதலீடுகளில் ஆபரணங்களை போல திருட்டு பயம் என்பது இல்லை. முதலில் கோல்டு இ.டி.எப். என்பதனை பற்றி பார்ப்போம்.

 

Gold ETF என்பது பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Fund Scheme) ஒரு அங்கமாகும். தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யப்படும் இந்த பரஸ்பர நிதி திட்டம், பங்குச்சந்தையில் பட்டியிலடப்பட்டு(Exchange Traded fund) வர்த்தகமாகும். கோல்டு இ.டி.எப். பொதுவாக தங்கத்தின் விலையை பிரதிபலிக்கும். பரஸ்பர நிதி திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்களின் முதலீடு யூனிட்களாக வழங்கப்படும். அதாவது ஒரு கிராம் என்பது ஒரு யூனிட்(Unit) என கொள்ளப்படும்.

 

இந்த திட்டத்தில் உள்ள சாதகமான அம்சமே, நாம் இணையதளத்தின் வாயிலாக கோல்டு இ.டி.எப். யூனிட்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம். இதற்கு டீமேட் கணக்கு(Demat Account) வைத்திருப்பது அவசியம். தங்கத்தின் விலை மதிப்பு ஒவ்வொரு நாள் வர்த்தகத்திலும் பிரதிபலிக்கும். இவற்றில் முதலீடு செய்வதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்:

 

  • ஒரு கிராம் (யூனிட்) முதல் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் (வர்த்தக அளவை பொறுத்து)

 

  • நாம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் விற்கலாம் (பொதுவாக வர்த்தகம் நடைபெறும் நேரங்களில்)

 

  • 99.5 சதவீத சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு.

 

  • செய்கூலி மற்றும் சேதார செலவுகள் எதுவுமில்லை. குறைந்த தரகு கட்டணம்(Brokerage).

 

  • பாதுகாப்பான முதலீடு மற்றும் வரி சலுகைகள்(Tax Benefits) உண்டு.

 

  •  யூனிட்களை அடமானம் வைக்கலாம் மற்றும் பின்னாளில் யூனிட்களை தங்கமாக வாங்கி கொள்ளலாம்.

 

கோல்டு இ.டி.எப். திட்டத்தில் எளிதாக முதலீடு செய்யமுடிந்தாலும், பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால் இதற்கு டீமேட் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். இதனை களையவே கோல்டு பண்டுகள் உள்ளன. கோல்டு இ.டி.எப். ஐ போலவே இந்த பண்டுகளும், ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது இல்லை. இதனால் இங்கும் எளிமையாக முதலீடு செய்யலாம்.

 

கோல்டு இ.டி.எப். திட்டத்திற்கும், கோல்டு பண்டுக்கும் வேறுபாடு பெரிதாக எதுவுமில்லை. இ.டி.எப். திட்டம் பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால், தரகு கட்டணம் வசூலிக்கப்படும். கோல்டு பண்டுகளில் தரகு கட்டணத்திற்கு பதிலாக நிர்வாக செலவு கட்டணங்கள்(Expenses) வசூலிக்கப்படும். அதே வேளையில் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது செலுத்தப்படும் செய்கூலி மற்றும் சேதாரத்தை விட மிக குறைவான செலவுகள் தான் இங்கு காணப்படுகிறது.

 

தற்போது பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் கோல்டு பண்டு திட்டங்களை(Gold BeEs) அளித்து வருகின்றன. ஒரு கிராம் ஒரு யூனிட்களாக கணக்கிடப்பட்டாலும், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் 10ல் ஒரு பங்காக யூனிட் அளவை கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு யூனிட் (1 கிராம்) ரூ. 3200/- என்று ஒரு நிறுவனம் கொண்டிருக்கும் போது, மற்றொரு நிறுவனம் ஒரு யூனிட் 320 ரூபாய்க்கு (10ல் ஒரு பங்கு) வழங்கி வருகிறது.

 

நடப்பில் பங்குச்சந்தை சரிவடையும் நேரத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இருப்பினும் தங்கத்தில் மட்டுமே அதிகமாக முதலீடு செய்யாமல், சிறுக சிறுக முதலீட்டை மேற்கொள்ளலாம். தங்கம் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீத வருவாயை தந்துள்ளது. நீண்ட காலத்தில் பங்குச்சந்தையை காட்டிலும் குறைந்த வருமானத்தை கொண்டிருந்தாலும், குறைந்த ரிஸ்க் திறன்(Low risk) கொண்ட முதலீடாக கருதப்படுகிறது. கோல்டு திட்டத்தில் மாதாமாதம் சிறிய அளவில் முதலீடு செய்வது சிறந்தது. தங்கத்தில் முதலீடு செய்வதை முதலீட்டு பரவலாக்கலாக(Asset Allocation) அமைக்க வேண்டும்.

 

பங்குச்சந்தையில் 50 சதவீத முதலீடு மேற்கொண்டால், 20-30 சதவீதத்தை தங்கத்திலும், மீதமுள்ளதை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். இது ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க இ.டி.எப். திட்டம் அல்லது கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யும் அதே வேளையில், தற்போதைய பங்குச்சந்தை சரிவில் நல்ல நிறுவன பங்குகள்(Value based Stocks) விலை குறைந்து காணப்படுவதும் கவனிக்கத்தக்கது.

 

கோல்டு இ.டி.எப். மற்றும் கோல்டு பண்டுகளில் செய்யப்படும் முதலீடு தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கத்தை அடிப்படையாக கொண்டது. பின்னாளில் இது போன்ற முதலீட்டை தங்கமாக பெற்று கொள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் சேவையை அளிக்கின்றன. இருப்பினும் சில நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க கிராம் அளவை கொண்டிருந்தால் மட்டுமே தங்கமாக மாற்றி வழங்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

நாட்டில் குறைந்து வரும் பணவீக்க விகிதம் – என்ன சொல்கிறது ?

நாட்டில் குறைந்து வரும் பணவீக்க விகிதம் – என்ன சொல்கிறது ?

Declining Inflation rates in India – What does it say ?

 

நாட்டின் பணவீக்க விகிதங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(CPI Inflation) 3.15 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம்(WPI Inflation) 1.08 சதவீதமாகவும் உள்ளது. சில்லரை விலை பணவீக்கம் கடந்த 2018ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 3.69 சதவீதமாகவும், நடப்பு வருட ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இது போல மொத்த விலை பணவீக்கம் கடந்த 2018ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 5.54 சதவீதமாக இருந்துள்ளது. தற்போது சொல்லப்பட்ட மொத்த விலை பணவீக்கம் கடந்த இரண்டு வருடங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.

 

மொத்த விலை பணவீக்கத்தில்(Wholesale Price Index) உற்பத்தி துறைக்கான பணவீக்கம் 64 சதவீத இடத்தை பெற்றுள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட தொய்வு நிலையே, கடந்த ஜூலை மாத பணவீக்க குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. நடுத்தர காலத்தில் நாட்டின் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் இருப்பதை பாரத ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டுள்ளது.

 

சில்லரை விலை பணவீக்க (Consumer Price Index) அடிப்படையில் காய்கறிகள் 2.82 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் பொருட்களின் விலை 9.05 சதவீதமும் ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் 6.82 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு 0.91 சதவீதமும், பால் பொருட்கள் 0.98 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பழங்கள், இனிப்பு மற்றும் மிட்டாய் வகைகள் விலை குறைந்துள்ளன.

 

கிராமப்புற பணவீக்கம்(Rural Inflation) 2.19 சதவீதம் மற்றும் நகர்புறத்தில் 4.22 சதவீதம் என்ற அளவில் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) உள்ளது. மொத்த விலை பணவீக்க அடிப்படையில் ஜவுளி, ரசாயனம் மற்றும் மர பொருட்களின் விலை குறைந்து காணப்படுகிறது. ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் இதர உலோக பொருட்களின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது.

 

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த 50 வருடங்களில் சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. 1974ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 34.68 சதவீத பணவீக்கமும், 1976ம் ஆண்டு மே மாதத்தில் குறைந்தபட்சமாக (-11.31) சதவீதம் என்ற பணவாட்டமும் நிகழ்ந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

எழுச்சி கண்ட சன் பார்மா காலாண்டு முடிவுகள் – ரூ. 1,387 கோடி நிகர லாபம்

எழுச்சி கண்ட சன் பார்மா காலாண்டு முடிவுகள்  – ரூ. 1,387 கோடி நிகர லாபம் 

Sun Pharma’s Quarterly results – Q1FY20 – Net Profit of Rs. 1,387 Crore

இந்திய மருந்து துறையில் சந்தை தலைமையாக இருக்கும் சன் பார்மா நிறுவனம் நேற்று (13-08-2019) 2019-20ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. ரான்பாக்ஸி(Ranbaxy) நிறுவனத்தை கையகப்படுத்திய பின்பு, சன் பார்மா நிறுவனம் பல சர்ச்சை செய்திகளுக்கு உட்பட்டிருந்தது.

 

கடந்த செப்டம்பர் 2018ம் காலாண்டில் நிறுவனம் ஒரு முறை நிகர நஷ்டமாக 160 கோடி ரூபாயை சொல்லியிருந்தது. கடந்த மார்ச் 2019ம் காலாண்டிலும் நிறுவனத்தின் வருவாயும், லாபமும் குறைந்திருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நேற்று வெளிவந்த காலாண்டு முடிவுகளில் நிறுவன வருவாய் ரூ. 8,374 கோடியாகவும், செலவினங்கள் ரூ. 6,379 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம்(Profit Before Tax) ரூ. 1,647 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 1,387 கோடியாக உள்ளது.

 

ஜூன் மாத காலாண்டில் இயக்க லாப வளர்ச்சி(OPM) 24 சதவீதமாக உள்ளது. தற்போது வெளிவந்த முடிவுகள் கடந்த 10 காலாண்டுகளில் காணப்பட்ட சிறந்த காலாண்டு முடிவுகளாக இருக்கிறது. 2018-19ம் நிதியாண்டில் ஒட்டு மொத்த காலத்திற்கு நிறுவனம் ரூ. 2,665 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

 

கடந்த பத்து ஆண்டுகளில் சன் பார்மா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales growth) 21 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 7 சதவீதமாகவும் உள்ளது. பங்கு முதலீடு மீதான வருவாய்(ROE) ஐந்து ஆண்டுகளில் 14 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 16.70 சதவீதமாகவும் இருந்துள்ளது.

 

அதே வேளையில், நிறுவனத்தின் கூட்டு லாப வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 10 சதவீத இழப்பையும், ஐந்து வருட காலத்தில் 6 சதவீத இழப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) மார்ச் 2019 முடிவில் ரூ. 41,169 கோடியாக உள்ளது. 

 

நிறுவனர்களின் பங்கு 54 சதவீதமாகவும், அவர்களின் பங்கு அடமானம் 11 சதவீதமாகவும்(Promoters Pledging) உள்ளது. நடப்பு கடன்கள் ரூ. 9,338 கோடி மற்றும் நடப்பு சொத்துக்கள் ரூ. 30,559 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு கடனாக 10,514 கோடி ரூபாய் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

அள்ளிக்கொடுத்த ஜியோ – ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டம்

அள்ளிக்கொடுத்த ஜியோ – ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டம் 

Reliance Industries Unveils Jio Offers – 42nd Annual General Meeting

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42வது வருட ஆண்டு பொதுக்கூட்டம்(AGM) நேற்று நடைபெற்றது. இந்திய பங்குச்சந்தை மதிப்பில் சுமார் 7.36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜூன் காலாண்டு முடிவில் விற்பனை அளவாக ரூ. 1,56,976 கோடியும், நிகர லாபமாக ரூ. 10,104 கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது.

 

நிறுவனத்தின் இயக்க லாப வளர்ச்சி(OPM) ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 15 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜியோ பைபர்(Jio Fiber) தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ பைபர் வசதியை பெறும் வாடிக்கையாளர்கள் அதிக வேக இணைய வசதியை பெறலாம் எனவும், அறிமுக சலுகையில் ஒரு வருட திட்டத்திற்கு சந்தாதாரராக பதிவு செய்பவர்களுக்கு HD அல்லது 4K LED TV மற்றும் செட்டப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

ஜியோ பைபர் சேவையில் மாதம் ரூ.700 முதல் 10,000 ரூபாய் வரையிலான திட்டங்கள் உள்ளன. இலவசமாக அளிக்கப்படும் டி.வி. மற்றும் செட்டப் பாக்ஸ் போன்றவற்றிற்கு பாதுகாப்பு வைப்பு தொகை(Security Deposit) பெறப்படுமா என்பதனை பற்றி சொல்லப்படவில்லை. இது சார்ந்த முழு விவரங்கள் வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் தெரிய வரும்.

 

ஜியோவின் அதிவேக இணைய வசதியின் மூலம் 100Mbps முதல் 1Gbps வரையிலான இணைய வேகத்தை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. 34 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும், ரிலையன்ஸ் சில்லறை(Reliance Retail Business) வியாபாரத்தில் நான்கு வினாடிகளுக்கு ஒரு டி.வியும், இரண்டு வினாடிகளுக்கு ஒரு முறை ஒரு கைபேசியும் விற்பனையாவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக தனது எண்ணெய் சேவை பங்களிப்பை(Oil Stake) குறைத்து வருவது கவனிக்கத்தக்கது. எண்ணெய் நிறுவனங்களில் உலகின் மிகப்பெரிய நிறுவனமான சவுதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திடம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது 20 சதவீத பங்குகளை விற்க உள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

 

நிறுவனத்தின் தற்போதைய கடன் ரூ. 3.07 லட்சம் கோடியாக உள்ளது. நடப்பு கடன் பொறுப்புகள்(Current Liabilities) ரூ. 3.03 லட்சம் கோடியாகவும், நடப்பு சொத்து மதிப்பு(Current Assets) ரூ. 1.81 லட்சம் கோடியாகவும் உள்ளது. கடனை குறைக்கும் பொருட்டு இந்த பங்கு விற்பனை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 18 மாதங்களில் நிறுவனம் தனது கடன் மதிப்பை வெகுவாக குறைக்கும் முனைப்பில் உள்ளது. கடனில்லா நிறுவனமாக(Zero Net Debt) ரிலையன்ஸ் நிறுவனம் வலம் வரும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

 

ஜியோவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியை பெற, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் பங்காற்றும். சிறு தொழில்களுக்கான தொழில்நுட்ப சேவையை அளிக்க உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே தொலைத்தொடர்பு துறை ஜியோவின் வருகைக்கு பின்னர் பல மாற்றங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு போட்டியாக மற்ற நிறுவனங்களின் சேவை என்ன என்பதை வரவிருக்கும் நாட்களில் காணலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

மீண்டும் பங்குகளை வாங்கி குவிப்பார்களா அந்நிய முதலீட்டாளர்கள் ?

மீண்டும் பங்குகளை வாங்கி குவிப்பார்களா அந்நிய முதலீட்டாளர்கள் ?

Whether Foreign Institutional Investors(FII) will buy now ?

 

கடந்த மாதம் பட்ஜெட் தாக்கலுக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை சுமார் 200 பில்லியன் டாலர் அளவில் சரிவை கண்டது. 2019ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்(FII) 92,246 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 1,09,116 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றும் உள்ளனர். இவர்களது நிகர விற்பனையாக(Net Sales) 16,870 கோடி ரூபாய் இருந்துள்ளது. இது நடப்பு வருடத்தில் காணப்பட்ட பெரும் சரிவாகும்.

 

அதே வேளையில் ஜூலை மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Institutional Investors) சுமார் 20,395 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நிகர கொள்முதலாக வாங்கியுள்ளனர். உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் சந்தையில் அமைந்திருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு வெளியேற்றம் இந்திய பங்குச்சந்தையை பாதித்துள்ளது எனலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்க-சீன வர்த்தக போர், கச்சா எண்ணெய் மற்றும் டாலர் மதிப்பில் மாற்றம் ஆகியவை உலக பொருளாதாரத்தை பாதித்து வருகின்றன. இது போக உள்நாட்டில், பட்ஜெட் தாக்கலில் சொல்லப்பட்ட அந்நிய முதலீட்டாளர்களுக்கான வரி விதிப்பு, நிறுவனர்களின் நிறுவன பங்களிப்பு விகிதத்தை குறைத்தல், வாகனத்துறையை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் சரிவர சொல்லப்படாதது என பல காரணங்களால் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது.

 

பங்குச்சந்தை இறக்கம், தங்கத்தின் விலை மதிப்பு ஏற்றத்தில் உணரப்பட்டது. தங்கத்தின் விலையும் (24 காரட் – 10 கிராம்) 38,000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் மீதான வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், நகை வியாபாரிகள் கழிக்கப்பட்ட பழைய நகைகளை(Scrap Gold) புதுப்பித்து வருகின்றனர். உண்மையில் தங்கத்தின் தேவை தற்போது குறைந்திருந்தாலும், கோல்டு இ.டி.எப்.(Gold ETF) திட்டங்கள் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீத வருமானத்தை தந்துள்ளன.

 

பங்குச்சந்தை வெகுவாக உயரும் பட்சத்தில், தங்கத்தின் மதிப்பு குறையும் என்பது கவனிக்கத்தக்கது. அதே வேளையில் சந்தை வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் பங்களிப்பு தங்கத்தின் மீது அதிகரிக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலை கூடும்.

 

நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள், முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை (09-08-2019) அன்று 204 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இந்திய சந்தையில் நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். மாதத்தின் முதல் நான்கு நாட்களில் இவர்களது நிகர விற்பனை ரூ.8,000 கோடி ரூபாய். அதாவது தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களில், ஒவ்வொரு வர்த்தகத்திலும் 2,000 கோடி ரூபாய்க்கும் மேலான பங்குகளை விற்றுள்ளனர்.

 

கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் பங்குகளை வாங்கியதற்கான காரணமும் சொல்லப்படுகிறது. அந்நிய முதலீட்டாளர்களின் வரி விதிப்பில்(FPI Taxation) மாற்றம் செய்யப்படும் என்ற செய்தி வெளிவந்தவுடன், இந்திய சந்தையும் ஏற்றம் கண்டது. மேலும் நீண்ட கால மூலதன ஆதாய வரியிலும்(LTCG Tax) மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

 

கடந்த வாரத்தில் வாகனத்துறை சார்பாக நிதி அமைச்சருடன் நடைபெற்ற கூட்டத்தில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. வாகனத்துறையை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பில் மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்றது. இருப்பினும் வரவிருக்கும் நாட்களில் இதற்கான கொள்கைகள் சரியாக சொல்லப்பட்டால் மட்டுமே, அந்நிய முதலீட்டாளர்களின் வரவு அதிகமாகும்.

 

இந்திய பங்குச்சந்தைக்கு மேலே சொன்ன விஷயங்கள் ஒரு தற்காலிகமான ஏற்றத்தை கொண்டு வரலாம். ஆனால், உலக பொருளாதார காரணிகள் இன்னும் சரி செய்யப்படவில்லை என்பது மட்டுமே உண்மை. சந்தை தற்போது கரடியா அல்லது காளையா என்பது வரவிருக்கும் மாதங்களில் தெரிய வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு 

REPO rate cut to 5.40 Percent – RBI

 

நேற்று (07-08-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைந்துள்ளது.

 

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், வங்கி விகிதம் மற்றும் விளிம்பு நிலை(MCLR) விகிதம் 5.65 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. ரொக்க கையிருப்பு 4 சதவீதம் என்ற நிலையிலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாகவும் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார மந்த நிலை காரணமாகவும், அதே சூழ்நிலையில் பணவீக்க விகிதத்தை கவனத்தில் கொண்டும், இந்த வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டதாக பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) சார்பில் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர், அமெரிக்காவில் தொழில் முதலீடு பலவீனமாக இருப்பது, பிரிட்டனின் பிரெக்ஸிட்(Brexit) நிகழ்வால் உற்பத்தி துறைக்கு சாதகம் இல்லாமை போன்றவை உலகளாவிய பாதிக்கும் காரணிகளாக சொல்லப்பட்டுள்ளன.

 

ஜப்பானின் தொழில்துறை புள்ளி விவரங்கள், வரும் இரண்டாம் காலாண்டிலும் பொருளாதாரம் மந்தமடைய கூடும் என்ற செய்தியை தெரிவிக்கிறது. வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமாக இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உற்பத்தி துறை மற்றும் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை அடுத்த காலாண்டிலும் நீடிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. வாகன துறையில்(Automotive Sector) ஏற்பட்டுள்ள சுணக்கம் சரி செய்யப்பட்டால் தான் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்.

 

பணப்புழக்கத்துக்கான உபரி தொகை(Liquidity Surplus) போதுமான அளவு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஜூன் மாத முடிவில் இது 51,710 கோடி ரூபாயாகவும், ஜூலையில் ரூ. 1,30,931 கோடியாகவும் இருந்துள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை உள்ள உபரி தொகை, ரூ. 2,04,921 கோடி.

 

உள்நாட்டில் மழைப்பொழிவு, உற்பத்தி துறை மற்றும் வீட்டு மனை துறை தொய்வு நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் முதலீடும் தேவையான அளவு வரவில்லை.  நடப்பு நிதி வருடத்தில் நாட்டின் பணவீக்க விகிதம்(Inflation) 4 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது போல நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் எனவும், தற்போது குறைக்கப்பட்ட வட்டி விகிதம் கடந்த ஒன்பது வருடங்களில் இல்லாத அளவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு – முனைப்பில் பாரத ரிசர்வ் வங்கி

மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு – முனைப்பில் பாரத ரிசர்வ் வங்கி 

Repo rate cut may again – RBI Monetary Policy

 

தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி பாரத ரிசர்வ் வங்கி(RBI) 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7 சதவீதமாக குறைத்தது. வாகன துறை வீழ்ச்சி, நுகர்வு தேவை குறைந்து வருவது (Weak Consumption Demand) மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் இப்போது வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை போன்றவை மொத்த உள்நாட்டு வளர்ச்சி மதிப்பீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், மத்திய அரசு சார்பில் 5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கும், அதனை சார்ந்து பொதுத்துறை பங்கு விலக்கல்(Disinvestment), வங்கிகள் மற்றும் நிதி சேவையில் உள்ள சிக்கல்களை களையவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் Ernst & Young India(EY) குழு சார்பில் சொல்லப்பட்ட மதிப்பீடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வருடத்திலும் 9 சதவீத வளர்ச்சியை கொண்டிருந்தால் மட்டுமே 5 டிரில்லியன் பொருளாதார இலக்கு சாத்தியம் என சொல்லப்பட்டுள்ளது.

 

பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு செயல்பாடுகள் சென்று கொண்டிருந்தாலும், மத்திய ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மத்திய நிதி கொள்கை குழு கூட்டம்(Monetary Policy Committee) கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

 

கூட்டத்தின் கடைசி நாளான இன்று, ரெப்போ வட்டி(Repo Rate) விகிதத்தில் மாற்றம் இருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படலாம். பணவீக்க விகிதத்தை 4 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையிலும் ரிசர்வ் வங்கி முக்கியத்துவம் பெறுகிறது. 

 

கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation CPI) 3.18 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 4.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாகவும் இருக்கிறது. இன்று ரெப்போ விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 3.25 % – 3.50 % என்ற அளவில் உள்ளது. ரொக்க கையிருப்பு விகிதம்(CRR) 4 சதவீதமாகும். நடப்பு வருட மழைப்பொழிவு பரவலாக இல்லை என்பதும், உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை ஆகியவை இந்திய சந்தைக்கு சாதகமாக இல்லை. அமெரிக்க-சீன வர்த்தக போரும் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்காக வட்டி குறைப்பை அறிவிக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

பணவீக்க மதிப்பை வெளியிட முடியாத நாடாக ஜிம்பாப்வே

பணவீக்க மதிப்பை வெளியிட முடியாத நாடாக ஜிம்பாப்வே 

The country withholding Inflation data – Zimbabwe

 

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு தான் ஜிம்பாப்வே. காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பெயர் போன இந்நாடு, கடந்த சில வருடங்களாக பொருளாதார உலகில் தனது பெயரை பதித்து வருகிறது.

 

பட்ஜெட் பற்றாக்குறையால் திண்டாடும் ஜிம்பாப்வே, முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்காவின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடாக விளங்கியது. தவறான நிதி நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் இந்நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளது. நாட்டின் வருவாய் நிக்கல்(Nickel), பிளாட்டினம், வைரம் மற்றும் புகையிலை ஏற்றுமதி மூலம் பெறப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நூறு ட்ரில்லியன் டாலர் நோட்டை(100 Trillion Dollar Currency Note) அடித்த பெருமை, ஜிம்பாப்வே நாட்டையே சேரும். தவறான பணமதிப்பிழப்பு கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்தது. இன்று அந்நாட்டில் நீர் ஆதாரம் மற்றும் பொருளாதரம் சார்ந்த விஷயங்கள் மோசமாக உள்ளன.

 

கடந்த 2018ம் வருடம் ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(சில்லரை விலை – CPI) 4.29 சதவீதமாக இருந்தது. அந்நாட்டில் விலைவாசி கிடு கிடுவென ஏறி, இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டின் பணவீக்க மதிப்பு 175.66 சதவீதமாக உள்ளது. 2009ம் ஆண்டில் இந்த நாட்டின் பணவீக்கம் (-7.50) சதவீதமாக இருந்துள்ளது. இதனை பணவாட்டம்(Deflation) என்று சொல்லலாம்.

 

உணவு பொருட்களின் அதிகபட்ச விலை உயர்வால் தான் நாட்டின் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் உணவு பொருட்களின் பணவீக்கம் 252 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் தவிர வீட்டு மனை, போக்குவரத்து மற்றும் இதர சேவைகளில் விலைவாசி அதிகரித்துள்ளது.

 

ஜிம்பாப்வே நாடு 2009ம் ஆண்டில் அமெரிக்க டாலரை தனது நாட்டின் மதிப்பாக ஏற்று கொண்டது. இதனை அடுத்து கடந்த 2015ம் வருடம் பணமதிப்பிழப்பு(Demonetization) நிகழ்வும் ஜிம்பாப்வே நாட்டில் ஏற்பட்டது. இந்த இரண்டு கொள்கைகளும் இந்நாட்டிற்கு சாதகமாக அமையவில்லை எனலாம்.

 

ஏறி கொண்டிருக்கும் விலைவாசியால், இந்நாடு தனது பணவீக்க மதிப்பு வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணவீக்க விவரங்கள் வெளியிடப்படாது எனவும், பொருளாதாரம் சார்ந்த சில தகவல்களை அரசு சேகரிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஐ.டி.சி. நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 3,174 கோடி

ஐ.டி.சி. நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 3,174 கோடி 

ITC Quarterly Net profit to Rs. 3,174 Crore – Q1FY20

 

பல்துறையில் தொழில் செய்து வரும் ஐ.டி.சி. நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாத காலாண்டில் நிறுவன வருவாய் 11,503 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 6,937 கோடியாகவும் இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் இயக்க லாபம்(Operating profit) ரூ. 4,566 கோடி. கடந்த வருட ஜூன் காலாண்டில் ரூ. 4,202 கோடியாக இருந்தது. இதர வருமானமாக 620 கோடி ரூபாய் காணப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 4,812 கோடியாகவும், முதலாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net profit) ரூ. 3,174 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

புகையிலை, உணவு மற்றும் தனிநபர் பராமரிப்பு(Personal Care) பொருட்களில் 6 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது. ஹோட்டல் துறையில் நிறுவன வருவாய் 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயம் சார்ந்த பொருட்களில் 15 சதவீத வளர்ச்சியும், காகிதம்(Paper Segment) சார்ந்த தொழிலில் நிறுவனத்தின் வருவாய் 13 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

ஏற்கனவே ஐ.டி.சி. நிறுவனம் புகையிலையை குறைத்து உணவு மற்றும் இதர நுகர்வோர்  சார்ந்த பொருட்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து அதன் வருவாயும் மாறுபட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி சராசரியாக 6 சதவீதம் உள்ளது. பத்து வருட காலத்தில் இது 11 சதவீதமாக காணப்படுகிறது.

 

ஐ.டி.சி. நிறுவன லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருடங்களில் 14 சதவீதமாக உள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருட காலத்தில் 24.75 சதவீதமும், பத்து வருடங்களில் 27.50 சதவீதமும் வருவாயை கொடுத்துள்ளது.

 

கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,819 கோடியாக இருந்த நிலையில், தற்போதைய லாபம் 13 சதவீத வளர்ச்சியாகும். ஐ.டி.சி. நிறுவனத்திற்கு கடன்கள்(Debt Free) என்று பெரிதாக எதுவுமில்லை. இதன் சந்தை மதிப்பு 3.5 லட்சம் கோடி ரூபாய். மார்ச் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 56,724 கோடி ரூபாயாக கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை 

The Indian Stock Market lost $ 200 Billion in 20 days – Economic Slowdown

 

தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிப்டி(Nifty50) கடந்த ஜூன் மாதத்தில் தனது வாழ்நாள் உச்சமாக 12,100 புள்ளிகளை அடைந்தது. நேற்று (01-08-2019) நிப்டி50 குறியீடு 138 புள்ளிகள் குறைந்து 10,980 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்து கொண்டது. இதே போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) குறியீடு, ஜூன் மாதத்தில் வாழ்நாள் உச்சமாக 40,310 புள்ளிகள் வரை சென்றது. நேற்று சென்செக்ஸ் குறியீடு 37,018 புள்ளிகள் என்ற அளவில் முடிந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த நான்கு வாரங்களில் நிப்டி50 சுமார் 1220 புள்ளிகளும், மும்பை சந்தையின் சென்செக்ஸ் 3,300 புள்ளிகளும் இறக்கத்தை கண்டுள்ளன. அதாவது வர்த்தகமான கடந்த 20 நாட்களில் இந்திய பங்குச்சந்தை சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிலான மதிப்பை இழந்துள்ளது எனலாம். இந்திய மதிப்பில் சுமார் 13.85 லட்சம் கோடி ரூபாய்.

 

நாட்டின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறாத நிலையில், அதனை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையும் இறக்கம் கண்டது. ஜூலை மாதத்தில் பெரும்பாலான பங்குகள் 20 சதவீதத்திற்கும் மேல் இறக்கத்தில் முடிந்தது கவனிக்கத்தக்கது.

 

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை(Economy Slowdown), நாட்டில் உள்ள தொழில், வேலை வாய்ப்பு மற்றும் வாகன துறைக்கு தேவையான மத்திய அரசின் முடிவுகள் எட்டப்படாதது ஆகியவை சந்தையை பாதித்துள்ளன. அரசு சார்பில் மின்சார வாகனத்திற்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே சந்தையில் இருக்கும் வாகனங்களுக்கு வரி சலுகை குறைப்பு ஏற்படாத நிலையில் இந்த துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

 

வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தொடர்ச்சியாக வருவாய் குறைந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணமாக மத்திய அரசு சரியான கொள்கைகளை வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. அதே வேளையில், அடுத்த ஓரிரு வருடங்களில் இந்த நிலை சரிசெய்யப்பட்டு, வாகன துறை மற்றும் நாட்டில் உள்ள மற்ற தொழில்கள் மேம்படும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பு சாதகமாக இல்லை. இதன் காரணமாக கடந்த மாதத்தில் சுமார் 16,870 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இருப்பினும் ஜூலை மாதத்தில் உள்நாட்டு முதலீடு 20,400 கோடி ரூபாய் சந்தைக்குள் வந்துள்ளது.

 

கடந்த ஒரு மாதத்தில் தேசிய பங்குச்சந்தை நிப்டி 7.5 சதவீதமும், சென்செக்ஸ் 6.7 சதவீதமும் இறக்கத்தை கண்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் சந்தை இறங்கும் பட்சத்தில், நிப்டி(Nifty) 10,600 மற்றும் 10,480 புள்ளிகளை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சந்தையில் தற்போது குறுகிய காலத்தில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து 10-20 சதவீத இறக்கத்தில் சிறுக சிறுக முதலீடு செய்து வரலாம். வாகன துறை கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதமும், ஒரு வருட காலத்தில் 38 சதவீதமும் இறக்கத்தில் உள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com