மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு – முனைப்பில் பாரத ரிசர்வ் வங்கி
Repo rate cut may again – RBI Monetary Policy
தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி பாரத ரிசர்வ் வங்கி(RBI) 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7 சதவீதமாக குறைத்தது. வாகன துறை வீழ்ச்சி, நுகர்வு தேவை குறைந்து வருவது (Weak Consumption Demand) மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் இப்போது வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை போன்றவை மொத்த உள்நாட்டு வளர்ச்சி மதிப்பீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இருப்பினும், மத்திய அரசு சார்பில் 5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கும், அதனை சார்ந்து பொதுத்துறை பங்கு விலக்கல்(Disinvestment), வங்கிகள் மற்றும் நிதி சேவையில் உள்ள சிக்கல்களை களையவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் Ernst & Young India(EY) குழு சார்பில் சொல்லப்பட்ட மதிப்பீடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வருடத்திலும் 9 சதவீத வளர்ச்சியை கொண்டிருந்தால் மட்டுமே 5 டிரில்லியன் பொருளாதார இலக்கு சாத்தியம் என சொல்லப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு செயல்பாடுகள் சென்று கொண்டிருந்தாலும், மத்திய ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மத்திய நிதி கொள்கை குழு கூட்டம்(Monetary Policy Committee) கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தின் கடைசி நாளான இன்று, ரெப்போ வட்டி(Repo Rate) விகிதத்தில் மாற்றம் இருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படலாம். பணவீக்க விகிதத்தை 4 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையிலும் ரிசர்வ் வங்கி முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation CPI) 3.18 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 4.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாகவும் இருக்கிறது. இன்று ரெப்போ விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 3.25 % – 3.50 % என்ற அளவில் உள்ளது. ரொக்க கையிருப்பு விகிதம்(CRR) 4 சதவீதமாகும். நடப்பு வருட மழைப்பொழிவு பரவலாக இல்லை என்பதும், உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை ஆகியவை இந்திய சந்தைக்கு சாதகமாக இல்லை. அமெரிக்க-சீன வர்த்தக போரும் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்காக வட்டி குறைப்பை அறிவிக்கலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை