Tag Archives: foreign institutional investors

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

Trading activity of Foreign Institutional Investors(FII) in the Indian Equity Market 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி(Nifty50) குறியீடு 52 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நடப்பு வருடத்தில் சொல்லப்பட்ட இரண்டு குறியீடுகளும் இதுவரை 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றமடைந்துள்ளது. சமீபத்தில் இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான நிப்டி மற்றும் சென்செக்ஸ் தனது வாழ்நாள் உச்சபட்ச விலையில் வர்த்தகமானது.

தற்போது உச்சநிலையிலிருந்து, இந்த இரண்டு குறியீடுகளும் 5 சதவீதம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. எனினும் இதனை மிகப்பெரிய இறக்கம் என நாம் சொல்லிவிட முடியாது. நடப்பு அக்டோபர் மாதம் 29ம் தேதியுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 59,307 புள்ளிகளுடனும், நிப்டி 17,672 புள்ளிகளுடனும் உள்ளது.

கடந்தாண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு(Covid-19) பிறகான காலத்தில் பங்குச்சந்தை முதலீடும், டீமேட் கணக்கு துவங்கும் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் காணப்பட்ட உலக பொருளாதார மந்தநிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர், போர் பதற்றம், காலநிலை மாற்றங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகளில் காணப்படும் வட்டி விகித குறைவு, பணவீக்க விகிதம் மற்றும் வீட்டுமனை துறையில் உள்ள சுணக்க நிலை ஆகியவற்றால் பங்குச்சந்தை மற்றும் மெய்நிகர் நாணய(அரசு அங்கீகரிக்கப்படாத – Unregulated) முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், இது போன்ற முதலீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை இறக்கம் காணும் போது தங்கம் போன்ற முதலீடுகளின் வருவாய் அதிகரிக்க கூடும்.

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை பெரும்பாலும் அன்னிய முதலீட்டாளர்களின் கை ஓங்கி தான் இருக்கும். பங்குச்சந்தைக்கும், கடன் பத்திரங்களுக்கும் அன்னிய முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு கணிசமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடத்தில் காணப்பட்ட பங்குச்சந்தை ஏற்றத்தால், தற்போது அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை(அக்டோபர் மாத முடிவில்) ரூ.68,500 கோடி என்ற அளவில் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக உள்நாட்டு முதலீடு(Domestic Institutional Investors) 56,179 கோடி ரூபாய் சந்தைக்கு வந்துள்ளது. சமீபத்தில் மதிப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் சில, இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய மதிப்பு ஏற்றக்கொள்ளக்கூடியாத இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FII & DII Trading Activity

அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த ஏழு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 11.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், ரூ.12.43 லட்சம் கோடி மதிப்பில் பங்குகளை விற்றும் உள்ளனர். நிகர விற்பனையாக 68,500 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 8.62 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 8.06 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். இதன் காரணமாக அவர்களது நிகர கொள்முதல்(Net Purchase) ரூ.56,179 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 25,572 கோடி ரூபாயை நிகர விற்பனையாக கொண்டுள்ளனர். இதே மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 4,470 கோடி ரூபாயை நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். சந்தையில் உள்ள பல நிறுவன பங்குகளின் விலை, அதன் வருவாயுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) நிறைவு செய்யும் நல்ல நிறுவன பங்குகள் மலிவான விலையில் கிடைக்கப்பெறுவதும் தற்சமயம் உள்ளது.

சந்தை புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், தரமான நிறுவனங்களை தள்ளுபடி விலையில்(Discounted Value) வாங்கவில்லையென்றால், முதலீட்டில் அதிகப்படியான சரிவை சந்திக்கும் காலமாக தற்போது நிலவுகிறது. சந்தையில் புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்கள் தங்களுக்கான முதலீட்டை விரைவாக பெற வேண்டிய நிலையில், புதிய முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காத்து, பங்குகளை ஆராய்ந்து நீண்டகால முதலீட்டிற்கு தயாராக வேண்டியது அவசியம். முதலீட்டை எப்போதும் பரவலாக்கம்(Asset Allocation & Diversification) செய்வதன் காரணமாக, நட்டத்தை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள் 

Foreign Institutional Investors(FII) Trading activity for the month – January 2020

 

சீனாவின் கொரோனா வைரஸ்(Corona Virus) தாக்குதலால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று சீன பங்குச்சந்தை ஒரே நாளில் 7 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 அமெரிக்க டாலருக்கு குறைவாக வர்த்தகமாகி இருந்த நிலையில், இன்று சிறிது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நாட்டின் பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் நீண்டகாலத்திற்கான இலக்குகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு சொல்லப்பட்டிருந்தது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், நீண்ட கால மூலதன ஆதாய வரியில்(LTCG) மாற்றம் எதுவும் இல்லாதது மற்றும் தனிநபர் வருமான வரி வரம்பில்(Personal Income Tax) சில சிக்கலான நடைமுறை சொல்லப்பட்டிருந்தது சந்தைக்கு சாதகமாக இல்லை. இதனால் அன்றைய நாளில் இந்திய பங்குச்சந்தை 2 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டிருந்தது. 

 

முக்கியமாக பட்ஜெட் தாக்கல் நாளன்று அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 2000 கோடி அளவிற்கு பங்குகளை விற்றும், இந்திய உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 37 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும் இருந்தனர். எதிர்பாராத விதமாக நேற்றைய(03-02-2020) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்திற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களே காரணமாக இருந்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1,286 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 1200 கோடிக்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

 

கடந்த 7 வர்த்தக தினங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FII) இந்திய பங்குச்சந்தையில் ரூ. 10,350 கோடி அளவிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முழுவதுமாக பார்க்கையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1073 கோடிக்கு பங்குகளை வாங்கியும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 5,360 கோடிக்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

FII DII trading activity january 2020

 

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற வர்த்தக தினங்களின் எண்ணிக்கை 23 நாட்கள். இவற்றில் 8 நாட்கள் மட்டுமே அந்நிய முதலீட்டாளர்கள் நிகர கொள்முதல் செய்துள்ளனர். மற்ற வர்த்தக நாட்களில் பங்குகளை விற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பட்ஜெட் தினத்துக்கு(Budget India 2020) முந்தைய நாளான டிசம்பர் 31ம் தேதி ரூ. 4,179 கோடி அளவிலான பங்குகளை விற்று உள்ளனர். 

 

அதே வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மாதம் 11 நாட்கள் நிகர கொள்முதலும், 12 நாட்கள் நிகர விற்பனையும் மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 31ம் தேதியன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 3,816 கோடி அளவிலான பங்குகளை வாங்கியுள்ளனர். தற்போதைய அளவில் இந்திய சந்தைக்கு சாதகமாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு இருப்பது கவனிக்கத்தக்கது. வரவிருக்கும் நாட்களில் மூன்றாம் காலாண்டு முடிவுகள் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் சந்தையை நகர்த்தும். உலகளவில் காணப்படும் பொருளாதார காரணிகளும் இன்னும் ஓயவில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com






மீண்டும் பங்குகளை வாங்கி குவிப்பார்களா அந்நிய முதலீட்டாளர்கள் ?

மீண்டும் பங்குகளை வாங்கி குவிப்பார்களா அந்நிய முதலீட்டாளர்கள் ?

Whether Foreign Institutional Investors(FII) will buy now ?

 

கடந்த மாதம் பட்ஜெட் தாக்கலுக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை சுமார் 200 பில்லியன் டாலர் அளவில் சரிவை கண்டது. 2019ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்(FII) 92,246 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 1,09,116 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றும் உள்ளனர். இவர்களது நிகர விற்பனையாக(Net Sales) 16,870 கோடி ரூபாய் இருந்துள்ளது. இது நடப்பு வருடத்தில் காணப்பட்ட பெரும் சரிவாகும்.

 

அதே வேளையில் ஜூலை மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Institutional Investors) சுமார் 20,395 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நிகர கொள்முதலாக வாங்கியுள்ளனர். உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் சந்தையில் அமைந்திருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு வெளியேற்றம் இந்திய பங்குச்சந்தையை பாதித்துள்ளது எனலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்க-சீன வர்த்தக போர், கச்சா எண்ணெய் மற்றும் டாலர் மதிப்பில் மாற்றம் ஆகியவை உலக பொருளாதாரத்தை பாதித்து வருகின்றன. இது போக உள்நாட்டில், பட்ஜெட் தாக்கலில் சொல்லப்பட்ட அந்நிய முதலீட்டாளர்களுக்கான வரி விதிப்பு, நிறுவனர்களின் நிறுவன பங்களிப்பு விகிதத்தை குறைத்தல், வாகனத்துறையை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் சரிவர சொல்லப்படாதது என பல காரணங்களால் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது.

 

பங்குச்சந்தை இறக்கம், தங்கத்தின் விலை மதிப்பு ஏற்றத்தில் உணரப்பட்டது. தங்கத்தின் விலையும் (24 காரட் – 10 கிராம்) 38,000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் மீதான வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், நகை வியாபாரிகள் கழிக்கப்பட்ட பழைய நகைகளை(Scrap Gold) புதுப்பித்து வருகின்றனர். உண்மையில் தங்கத்தின் தேவை தற்போது குறைந்திருந்தாலும், கோல்டு இ.டி.எப்.(Gold ETF) திட்டங்கள் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீத வருமானத்தை தந்துள்ளன.

 

பங்குச்சந்தை வெகுவாக உயரும் பட்சத்தில், தங்கத்தின் மதிப்பு குறையும் என்பது கவனிக்கத்தக்கது. அதே வேளையில் சந்தை வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் பங்களிப்பு தங்கத்தின் மீது அதிகரிக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலை கூடும்.

 

நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள், முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை (09-08-2019) அன்று 204 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இந்திய சந்தையில் நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். மாதத்தின் முதல் நான்கு நாட்களில் இவர்களது நிகர விற்பனை ரூ.8,000 கோடி ரூபாய். அதாவது தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களில், ஒவ்வொரு வர்த்தகத்திலும் 2,000 கோடி ரூபாய்க்கும் மேலான பங்குகளை விற்றுள்ளனர்.

 

கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் பங்குகளை வாங்கியதற்கான காரணமும் சொல்லப்படுகிறது. அந்நிய முதலீட்டாளர்களின் வரி விதிப்பில்(FPI Taxation) மாற்றம் செய்யப்படும் என்ற செய்தி வெளிவந்தவுடன், இந்திய சந்தையும் ஏற்றம் கண்டது. மேலும் நீண்ட கால மூலதன ஆதாய வரியிலும்(LTCG Tax) மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

 

கடந்த வாரத்தில் வாகனத்துறை சார்பாக நிதி அமைச்சருடன் நடைபெற்ற கூட்டத்தில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. வாகனத்துறையை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பில் மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்றது. இருப்பினும் வரவிருக்கும் நாட்களில் இதற்கான கொள்கைகள் சரியாக சொல்லப்பட்டால் மட்டுமே, அந்நிய முதலீட்டாளர்களின் வரவு அதிகமாகும்.

 

இந்திய பங்குச்சந்தைக்கு மேலே சொன்ன விஷயங்கள் ஒரு தற்காலிகமான ஏற்றத்தை கொண்டு வரலாம். ஆனால், உலக பொருளாதார காரணிகள் இன்னும் சரி செய்யப்படவில்லை என்பது மட்டுமே உண்மை. சந்தை தற்போது கரடியா அல்லது காளையா என்பது வரவிருக்கும் மாதங்களில் தெரிய வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com