நாட்டில் குறைந்து வரும் பணவீக்க விகிதம் – என்ன சொல்கிறது ?
Declining Inflation rates in India – What does it say ?
நாட்டின் பணவீக்க விகிதங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(CPI Inflation) 3.15 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம்(WPI Inflation) 1.08 சதவீதமாகவும் உள்ளது. சில்லரை விலை பணவீக்கம் கடந்த 2018ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 3.69 சதவீதமாகவும், நடப்பு வருட ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இது போல மொத்த விலை பணவீக்கம் கடந்த 2018ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 5.54 சதவீதமாக இருந்துள்ளது. தற்போது சொல்லப்பட்ட மொத்த விலை பணவீக்கம் கடந்த இரண்டு வருடங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.
மொத்த விலை பணவீக்கத்தில்(Wholesale Price Index) உற்பத்தி துறைக்கான பணவீக்கம் 64 சதவீத இடத்தை பெற்றுள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட தொய்வு நிலையே, கடந்த ஜூலை மாத பணவீக்க குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. நடுத்தர காலத்தில் நாட்டின் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் இருப்பதை பாரத ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டுள்ளது.
சில்லரை விலை பணவீக்க (Consumer Price Index) அடிப்படையில் காய்கறிகள் 2.82 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் பொருட்களின் விலை 9.05 சதவீதமும் ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் 6.82 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு 0.91 சதவீதமும், பால் பொருட்கள் 0.98 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பழங்கள், இனிப்பு மற்றும் மிட்டாய் வகைகள் விலை குறைந்துள்ளன.
கிராமப்புற பணவீக்கம்(Rural Inflation) 2.19 சதவீதம் மற்றும் நகர்புறத்தில் 4.22 சதவீதம் என்ற அளவில் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) உள்ளது. மொத்த விலை பணவீக்க அடிப்படையில் ஜவுளி, ரசாயனம் மற்றும் மர பொருட்களின் விலை குறைந்து காணப்படுகிறது. ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் இதர உலோக பொருட்களின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது.
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த 50 வருடங்களில் சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. 1974ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 34.68 சதவீத பணவீக்கமும், 1976ம் ஆண்டு மே மாதத்தில் குறைந்தபட்சமாக (-11.31) சதவீதம் என்ற பணவாட்டமும் நிகழ்ந்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை