All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

RBI keeps REPO Rate Unchanged – Monetary Policy Committee(MPC)

பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் நடப்பு நிதியாண்டின் ஆறாவது நிதிக்கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. நேற்று(06-02-2020) வெளியிடப்பட்ட இந்த கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறை இருந்த 5.15 சதவீதமே இம்முறையும் தொடரும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo) 4.90 சதவீதமாகவும், வங்கி விகிதம் 5.40 சதவீதமாகவும் உள்ளது. இந்த முடிவு குறுகிய கால பணவீக்க இலக்கை சார்ந்து தான் நிர்ணயிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. குறுகிய கால சில்லரை பணவீக்க அடிப்படை இலக்கு 4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அடிப்படை இலக்கிலிருந்து 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது 2 % குறைவாகவோ இருக்கலாம்.

சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 3.25 % – 3.50 % என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கான வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 6.10 % – 6.40 % என சொல்லப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக இடவசதி நிலைப்பாட்டை பாரத ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. இதன் காரணமாகவே தற்போதைய ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பணவீக்க விகிதம்(CPI Inflation) 6.5 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 5.1 – 4.7சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டிருந்தது. 2020-21ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) 6 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 7.35 சதவீதமாக இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது. இது போன்ற சூழ்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் அது பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகப்படுத்தும்.

ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருந்தால், அது வங்கி வட்டி விகிதத்தில் எதிர்மறையான நிலையை கொண்டிருக்கலாம். இருப்பினும், வருங்காலத்தில் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய வங்கி வட்டி விகித நிலை கடன் பெறும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் பயன்பட கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthamadurai.com

இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டுகள் – வரி சேமிப்பு – கவனிக்க வேண்டியவை

இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டுகள் – வரி சேமிப்பு – கவனிக்க வேண்டியவை 

Things to know about ELSS Mutual Funds – Tax Saving Avenues

சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்ஜெட் தாக்கல் 2020ல் பெரும்பாலானோரின் குழப்பம் வருமான வரி வரம்பு முறையில் தான். இரு வகையான வரி முறை உள்ளதே, நான் எந்த முறையை தேர்ந்தெடுக்க வேண்டும், இந்த முறையை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு பலன் என பல செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உண்மையில் நடப்பு பட்ஜெட் தாக்கலில் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தான். மாறாக, வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது – 115 BAC. இந்த புதிய பிரிவின் படி தனிநபர் மற்றும் இந்து கூட்டு குடும்பம் ஆகியோர் தங்கள் வரியை செலுத்தும் நிலையில் இரு வகையான தேர்வு அளிக்கப்பட உள்ளது. இந்த தேர்வில் முதலாவதாக நடப்பில் இருக்கும் வருமான வரி வரம்பு மற்றும் அதற்கான அடிப்படை கழிவுகள், வரி சலுகைகள் அமையும். இரண்டாவதாக வருமான வரி குறைந்த விகிதத்தில்(New Tax Regime) வசூலிக்கப்படும். ஆனால் இந்த தேர்வுக்கு நீங்கள் அடிப்படை கழிவு(Standard Deduction) மற்றும் சொல்லப்பட்ட 70 வகையான வரி சலுகைகளை விட்டு கொடுக்க வேண்டும். அதாவது வரி தாக்கல் செய்யும் போது அதனை வரி விலக்காக பயன்படுத்த இயலாது – அவ்வளவே.

பிரிவு 115BACன் படி இரண்டாம் முறையில் நீங்கள் பயன்படுத்த முடியாத சில முக்கிய வரி சலுகைகள் – பி.எப்., பி.பி.எப்., செல்வ மகள், வரி சேமிப்பு மியூச்சுவல் பண்டுகள், வீட்டு வாடகை படி, குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை, வீட்டு கடனுக்கான அசல் மற்றும் வட்டி, ஓய்வூதிய தொகையில் ஒரு பகுதி, மருத்துவ காப்பீடு, அஞ்சலக வரி சேமிப்பு திட்டங்கள், வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு, தேசிய பென்ஷன் திட்டம், ஆயுள் காப்பீடு, மாற்று திறனாளிகளுக்கான சலுகை, நன்கொடை ஆகியவை.

முக்கியமாக இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமான படை – இவற்றில் ஏதேனும் ஒன்றில் பணிபுரிந்தவர் தனது பணிக்காலத்தில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டும், முழுமையான பணிக்காலத்தை நிறைவு செய்திருந்தால் அவருக்கு கிடைக்கப்பெறும் ஓய்வூதியத்தில் வரி சலுகை உண்டு. தற்போது சொல்லப்பட்ட இரண்டாம் வரி வரம்பில், இதற்கான சலுகையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக 80C வரிசை, 80D வரிசை, 80E வரிசை, 80G வரிசைகளில் இனி இரண்டாம் வரி வரம்பின் படி, வரி சலுகை கிடைக்கப்பெறாது.

இருப்பினும் 2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலில் வரி சேமிப்பை அதிகமாக கொண்டிருப்போர் முதலாவது வரி முறையை (பழைய  முறை) தேர்ந்தெடுப்பது சாதகமாக இருக்கும். குறைவான வருமான வரி வரம்பில் உள்ளோருக்கும் முதல் பிரிவு நன்மையாக அமையும். ஏனெனில் அங்கு அடிப்படை கழிவு மற்றும் பி.எப்.(PF), என்.பி.எஸ்.(NPS) வரி சலுகைகள் உண்டு.

நம்மில் பெரும்பாலோர் காப்பீடை மட்டுமே வரி சலுகையாக கொண்டிருந்தாலும், இ.எல்.எஸ்.எஸ். எனப்படும் பரஸ்பர நிதிகளின் வரி சலுகை முதலீடுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இனி இந்த பண்டின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

ELSS (Equity Linked Saving Scheme) – Tax Saving Mutual Funds:

ELSS Funds என்பது பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் வரி சலுகை திட்டமாகும். வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80Cன் கீழ் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி சலுகை உண்டு. அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். இந்த பிரிவில் தான் பி.எப்., தேசிய பென்ஷன் திட்டம், ஆயுள் காப்பீடு, வீட்டுக்கடனுக்கான  அசல் தொகை ஆகியவற்றுக்கு வரி சலுகை கிடைக்கப்பெறும். எனவே மற்ற வரி சேமிப்புகளையும் கணக்கில் கொண்டு, இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பொதுவாக வரி சலுகை பெறும் அனைத்து திட்டங்களுக்கும் லாக்-இன்(Lock-in Period) காலம் உண்டு. அதாவது திட்டத்தில் சொல்லப்பட்ட காலம் வரை அந்த முதலீட்டை வெளியே எடுக்க முடியாது. ELSS பண்டு திட்டத்தில் அதிகபட்சமாக மூன்று ஆண்டு காலம் மட்டுமே. வேறு எந்த வரி சலுகை திட்டத்திலும் இல்லாத குறைந்த கால லாக்-இன் வசதி இந்த பண்டில் மட்டுமே உள்ளது சாதகமான விஷயமாகும்.

இ.எல்.எஸ்.எஸ். பண்டுகளில் பெறப்படும் முதலீடு பெருவாரியாக பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும். சிறிய அளவிலான தொகை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படலாம். நீண்டகாலத்தில் இந்த பண்டுகள் மற்ற வரி சலுகை திட்டங்களை காட்டிலும் (PPF, Insurance, Postal Savings, Tax Saving Bonds) அதிக வருவாயை கொடுக்க கூடியவை. அதே வேளையில் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் தன்மை கொண்டவை.

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு தொகை என எதுவும் கிடையாது. முதலீட்டின் முடிவில் கிடைக்கக்கூடிய தொகை மூலதன ஆதாயம்(Capital Gains) எனப்படும். எனவே இவற்றில் முதிர்வு தொகை என எதுவும் கிடையாது. நாம் எப்போது இந்த திட்டத்தில் இருந்து பணத்தை வெளியே பெறுகிறோமோ, அப்போது அந்த தொகை மூலதன ஆதாயம் எனப்படும்.

லாக்-இன் ரகசியங்கள்:
  • ELSS பண்டுகளில் குறைந்தபட்ச லாக்-இன் காலமாக மூன்று வருடங்களை சொல்லியிருந்தோம். இங்கே கவனிக்க வேண்டியவை, இந்த வசதி மற்ற வரி சலுகை திட்டங்களின் லாக்-இன் வசதியை போல அல்ல.
  • அதாவது, நீங்கள் ஒரு முறை மட்டுமே இந்த பண்டில் முதலீடு செய்திருந்தால், முதலீடு செய்த தேதியிலிருந்து மூன்று வருட காலம் கணக்கிடப்படும். மூன்று வருட காலம் முடிந்தவுடன் நீங்கள் முதலீட்டு தொகையை பெறலாம் அல்லது முதலீட்டை உங்கள் இலக்கு காலம் வரை தொடரலாம்.
  • இதுவே, மாதாமாதம் எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்திருந்தால், ஒவ்வொரு மாத முதலீடும் மூன்று வருட கால லாக்-இன் வசதியை பூர்த்தி செய்ய வேண்டும். எனவே இந்த ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது நலம்.
  • மற்ற மியூச்சுவல் பண்டுகளில் வெளியேறும் கட்டணம் இருந்தாலும், இந்த வரி சேமிப்பு பண்டுகளில் அவ்வாறான கட்டாயம் எதுவுமில்லை. எதிர்பாராத விதமாக முதலீடு செய்துள்ள நபர் இறக்க நேரிடுகையில், லாக்-இன் காலத்திற்கு முன்னரே, நாமினி பணத்தை பெற்று கொள்ளலாம். பெறக்கூடிய தொகை, அன்றைய நாளின் NAV மதிப்பை பொறுத்தது.
ELSS Funds வரி விகிதங்கள்:
  • மியூச்சுவல் பண்டுகளை பொறுத்தவரை திறந்த வெளி பண்டுகளுக்கு முதிர்வு தொகை எனவும் எதுவுமில்லை. பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நாம் வெளியேற முடிவெடுக்கும் போது, அன்றைய நாளில் உள்ள மதிப்பு அதன் லாப – நட்டத்தை நிர்ணயிக்கும்.
  • நமது முதலீடு லாபமாக இருந்தால், அதனை வெளியே எடுக்கும் போது மூலதன ஆதாயம் என கூறப்படும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் லாபத்தை, உங்களது வங்கி கணக்கில் பெற்றால் மட்டுமே, அது மூலதன ஆதாயமாக கணக்கிடப்படும். நட்டமாக இருந்தால் அது மூலதன இழப்பாக(Capital Loss) எடுத்து கொள்ளப்படும்.
  • உங்கள் முதலீடு லாபமாக இருந்து, அதனை முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் வெளியேற்றினால் குறுகிய கால மூலதன ஆதாயமாக(Short term capital gains -STCG) எடுத்து கொள்ளப்பட்டு அதற்கான வரி விகிதம் 15 சதவீதமாக உள்ளது.
  • ஒரு வருடத்திற்கு மேலாக எடுக்கப்படும் தொகை, நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்படும். நீண்ட கால மூலதன ஆதாய(Long term capital gains -LTCG) தொகை ஒரு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்திற்கு மேலாக இருந்தால், அந்த தொகைக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். எனவே ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை.
  • டிவிடெண்ட் தொகைக்கு(Dividend Plan), நடப்பில் 10 சதவீத வரி செலுத்தி விட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும். எனவே முதலீட்டாளர்கள் இதற்கு வரி செலுத்த தேவையில்லை. அதே வேளையில், ஒரு நிதியாண்டில் பெறப்படும் டிவிடெண்ட் தொகை ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் போது, முதலீட்டாளர் 10 சதவீத வரியை செலுத்த வேண்டும்.
  • சொல்லப்பட்ட டிவிடெண்ட் நடைமுறையில், நடப்பு பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 10 சதவீத வரியை செலுத்த தேவையில்லை எனவும், முதலீட்டாளர்கள் தாங்கள் பெறக்கூடிய டிவிடெண்ட் தொகைக்கு, தங்களது வருமான வரி வரம்பின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. புதிய நடைமுறை 2020-21ம் நிதியாண்டுக்கானது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி

மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி

Bharti Airtel reported a Net loss of Rs. 1,035 Crore in Q3FY20 – Quarterly Results

இந்திய தொலைத்தொடர்பு துறையில் சமீபத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நிறுவனங்களுக்கான போட்டி வெகுவாக குறைந்துள்ளது. முன்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பரவலாக இருந்த நிலையில், இன்று பல நிறுவனங்கள் காணாமல் போயின. ரிலையன்ஸ் ஜியோ(Jio) மற்றும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனங்கள் மட்டுமே பெரு நிறுவனங்களாக உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனம் தனக்கான வாடிக்கையாளர்கள் சந்தையை கொண்டிருந்தாலும், நிறுவனம் கடந்த பத்து காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு கடனாக ரூ. 99,660 கோடி உள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 50,922 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

ஏர்டெல் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 21,947 கோடி எனவும், செலவினம் ரூ. 12,701 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம் இம்முறை ரூ. 1,035 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது.

கடந்த 14 வருடங்களில் முதன்முறையாக 2019-20ம் நிதியாண்டின் மூன்று காலாண்டுகளிலும் ஏர்டெல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத்தொகையை(AGR) செலுத்துமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக ஏர்டெல் நிறுவனம் சொல்லப்பட்ட நிலுவை தொகையை ஒதுக்கியதன் மூலம் காலாண்டு முடிவில் நஷ்டத்தை சமர்ப்பித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை 40 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்திருந்தது. 2018ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் உயர்ந்திருந்தாலும், நிகர வருமானத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.83 லட்சம் கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 1.84 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதமும் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. பொதுவாக தொலைத்தொடர்பு சேவையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையார்களிடம் இருந்து பெறப்படும் சந்தா கட்டணத்தை(Subscription Fee – Recharge) கொண்டு தான் தொழிலை நிர்வகித்து வருகிறது.

ஏர்டெல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.28 லட்சம் கோடி உள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 4 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 80,780 கோடியாகவும், நிகர லாபம் ரூ.410 கோடியாகவும் இருந்தது. ஆனால் இம்முறை நடப்பு நிதியாண்டில் மூன்று காலாண்டுகளில் நஷ்டம் ஏற்பட்டதால், ஆண்டு முடிவில் பெரும்பாலும் நிகர நஷ்டமாகவே சொல்லப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள் 

Foreign Institutional Investors(FII) Trading activity for the month – January 2020

 

சீனாவின் கொரோனா வைரஸ்(Corona Virus) தாக்குதலால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று சீன பங்குச்சந்தை ஒரே நாளில் 7 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 அமெரிக்க டாலருக்கு குறைவாக வர்த்தகமாகி இருந்த நிலையில், இன்று சிறிது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நாட்டின் பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் நீண்டகாலத்திற்கான இலக்குகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு சொல்லப்பட்டிருந்தது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், நீண்ட கால மூலதன ஆதாய வரியில்(LTCG) மாற்றம் எதுவும் இல்லாதது மற்றும் தனிநபர் வருமான வரி வரம்பில்(Personal Income Tax) சில சிக்கலான நடைமுறை சொல்லப்பட்டிருந்தது சந்தைக்கு சாதகமாக இல்லை. இதனால் அன்றைய நாளில் இந்திய பங்குச்சந்தை 2 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டிருந்தது. 

 

முக்கியமாக பட்ஜெட் தாக்கல் நாளன்று அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 2000 கோடி அளவிற்கு பங்குகளை விற்றும், இந்திய உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 37 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும் இருந்தனர். எதிர்பாராத விதமாக நேற்றைய(03-02-2020) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்திற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களே காரணமாக இருந்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1,286 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 1200 கோடிக்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

 

கடந்த 7 வர்த்தக தினங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FII) இந்திய பங்குச்சந்தையில் ரூ. 10,350 கோடி அளவிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முழுவதுமாக பார்க்கையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1073 கோடிக்கு பங்குகளை வாங்கியும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 5,360 கோடிக்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

FII DII trading activity january 2020

 

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற வர்த்தக தினங்களின் எண்ணிக்கை 23 நாட்கள். இவற்றில் 8 நாட்கள் மட்டுமே அந்நிய முதலீட்டாளர்கள் நிகர கொள்முதல் செய்துள்ளனர். மற்ற வர்த்தக நாட்களில் பங்குகளை விற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பட்ஜெட் தினத்துக்கு(Budget India 2020) முந்தைய நாளான டிசம்பர் 31ம் தேதி ரூ. 4,179 கோடி அளவிலான பங்குகளை விற்று உள்ளனர். 

 

அதே வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மாதம் 11 நாட்கள் நிகர கொள்முதலும், 12 நாட்கள் நிகர விற்பனையும் மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 31ம் தேதியன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 3,816 கோடி அளவிலான பங்குகளை வாங்கியுள்ளனர். தற்போதைய அளவில் இந்திய சந்தைக்கு சாதகமாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு இருப்பது கவனிக்கத்தக்கது. வரவிருக்கும் நாட்களில் மூன்றாம் காலாண்டு முடிவுகள் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் சந்தையை நகர்த்தும். உலகளவில் காணப்படும் பொருளாதார காரணிகளும் இன்னும் ஓயவில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com






எச்சரிக்கை: புதிய வருமான வரி விகிதங்கள் – விளக்கங்களுடன்

எச்சரிக்கை: புதிய வருமான வரி விகிதங்கள் – விளக்கங்களுடன் 

Be cautious with Choosing the Personal Income Tax Options – New Tax Slab

நேற்று மத்திய அரசு சார்பில் 2020-2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமான அவகாசத்தை எடுத்த நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி நிலைமை பற்றியும், மற்ற துறைகளில் செய்யப்படும் நிதி ஒதுக்கீடு பற்றியும் பேசினார். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை தெளிவாக கூறினார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனிநபர் வருமான விகிதத்தில்(Individual Income Tax) மாற்றங்களும் இந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டது. எளிமையான வரி விதிப்பு என சொல்லப்பட்டாலும், சிக்கலான சில விஷயங்களும் இருக்க தான் செய்கின்றன. இம்முறை தனிநபர் வரி விகிதங்களில் இரு முறை பின்பற்றப்பட உள்ளது. ஒன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தனிநபர் வரி விதிப்பு, மற்றொன்று பட்ஜெட் தாக்கலில்(Budget 2020) சொல்லப்பட்டது (As per New Section 115 BAC).

இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இந்த இரு முறை கையாளுதல் வரும் 2020-21ம் நிதியாண்டுக்கானது. இரு முறைகளையும் சில எளிமையான விளக்கங்களுடன் நாம் காணலாம்.

ரவியின் ஆண்டு வருமானம் (FY 2020-21) ரூ. 7,25,000 /-. வருமான வரி சட்டம் 80சி(Income Tax Act u/s 80C) பிரிவின் கீழ் ரூ. 1.50 லட்சம் வரை (பி.எப், ஆயுள் காப்பீடு, வரி சேமிப்பு முதலீடுகள்) சேமித்து வருகிறார். தனது குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடாக ரூ. 25,000 க்கு பிரீமியம் (80டி பிரிவு) எடுத்துள்ளார். இப்போது இவருக்கான வருமான வரி விதிப்பை பார்க்கலாம்.

ஆண்டு வருமானம் (2020-21)  – ரூ. 7.25 லட்சம்

அடிப்படை கழிவு (Standard Deduction)  – ரூ. 50,000

80சி பிரிவின் கீழ் வரி சலுகை – ரூ. 1,50,000

80D (Mediclaim) பிரிவின் கீழ் வரி சலுகை – ரூ.  25,000

மேற்சொன்ன அடிப்படை கழிவு மற்றும் வரி சலுகையை கழித்த பின்னர், இவரது நிகர வருமானம் ரூ. 5,00,000 ஆக இருக்கும். இந்த வருவாய்க்கு 5 சதவீத வரி வசூலிக்கப்படும். ரவியின் சம்பளத்தில் நிறுவனம் இந்த 5 சதவீத வரியை (ரூ. 12,500) டி.டி.எஸ். பிடித்தம் செய்யும். அதே வேளையில் இந்த தொகையை வருமான வரி தாக்கல் செய்து, பணத்தை திரும்ப பெறலாம்.

Income Tax slab 2020-21

( நினைவில் கொள்ளுங்கள்: ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி அமலில் உள்ளது. இவற்றில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே, பிரிவு 87ஏ ன் கீழ் பணத்தை திரும்ப பெறலாம். இல்லையெனில், அவை உங்களுக்கு கிடைக்கப்பெறாது. )

மேலே சொன்ன முறை, நடப்பில் உள்ளவை. புதிய முறையில் வருமான வரி விதிப்பை காண்போம்.

ரவியின் ஆண்டு வருமானம் (2020-21) – ரூ. 7.25 லட்சம்

புதிய முறைப்படி, நீங்கள் வரி சலுகை மற்றும் அடிப்படை கழிவுகளை பெற இயலாது. வீட்டு வாடகை படி, காப்பீடு, வீட்டுக்கடன் தவணையில் சலுகை, மருத்துவ காப்பீடு, கல்வி தொகை, பயண சலுகை, நன்கொடை அளித்தல் ஆகியவற்றின் கீழ் நீங்கள் வரி சலுகை பெற முடியாது.

சலுகையில்லா இந்த முறையில், ரவியின் ரூ. 7.25 லட்சம் வருமானத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, அவரது வரியாக ரூ. 36,400 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் அல்லது செலுத்த வேண்டும்.

ரூ. 2.5 லட்சம் வரை – வரி இல்லை

ரூ. 2,50,001 – ரூ. 5 லட்சம் வரி – 5 % – ரூ. 12,500/-

ரூ. 5,00,001 – ரூ. 7.25 லட்சம் வரை – 10 % – ரூ. 22500/-

மொத்த வரி – ரூ. 35,000 /-

கல்வி மற்றும் சுகாதார வரி – 4 %  X ரூ. 35,000 = ரூ. 36,400/-

பழைய மற்றும் புதிய முறை(New Income Tax Optional) இரண்டையும் ஒப்பிட்டால், சில மாற்றங்களை காணலாம். பழைய முறையில் நீங்கள் எந்த வரி சேமிப்பையும் செய்யாவிட்டால் ரூ. 7.25 லட்சம் வருமானத்தில் 50,000 ரூபாய் அடிப்படை கழிவு போக மீதம் உள்ள ரூ. 6.75 லட்சம் வருவாய்க்கு 20 சதவீத வரியாக ரூ. 49,400 செலுத்த வேண்டும்.

நீங்கள் வரி சலுகையை முழுமையாக பயன்படுத்தும் போது, நடைமுறையில் உள்ள பழைய முறை தான் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில், வரி சலுகையுடன் நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கான ரூ. 7.25 லட்சம் சம்பளத்திற்கு வரி எதுவும் இருக்காது (u/s 87a Tax Rebate பிரிவில் பணத்தை திரும்ப பெற்றதுடன்). ஆனால் புதிய முறையில் சொல்லப்பட்ட வருமானத்திற்கு 10 சதவீத வரி என்று சொல்லப்பட்டாலும், நீங்கள் வரி சலுகைகளை அனுபவிக்க முடியாது.

சுருக்கமாக சொன்னால், வரி சேமிப்பை பயன்படுத்துவோர் பழைய நடைமுறையை பின்பற்றுவது தான் சிறந்தது. நான் இதுவரை வரி சலுகையின் கீழ் சேமிக்கவில்லை அல்லது சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் புதிய முறையை தேர்ந்தெடுக்கலாம். குறைவான வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் (ரூ. 10 லட்சத்திற்கு கீழ்) பழைய நடைமுறையை பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது. ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சம் என்ற அளவில் உள்ளோர் புதிய முறையை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் அதிகபட்ச வருமான வரி வரம்பில் உள்ளோருக்கு வரி சலுகைகள் அவ்வளவாக உதவாது.

இரண்டு முறையில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்ற நிலை பலருக்கு சிக்கலாக இருக்கலாம். அதனால் கவனமாக கணக்கிட்டு முடிவெடுங்கள் அல்லது தகுந்த ஆலோசகரின் உதவியை பெறுங்கள். நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்வோர் ஒருபுறம் இருந்தாலும், அரசுக்கு சம்பளத்தில் வரியை கட்டியவர்கள் அதனை எப்படி வரி சலுகை மூலம் சேமித்து, திரும்ப பெறுவது என்பதனை அறியாமல் பெரும்பாலான பணத்தை இழக்கின்றனர்.

புதிய முறை அதிகபட்ச வரம்பில் உள்ளவர்களுக்கு உதவக்கூடும், சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், வீட்டுக்கடனில் வரி சலுகை பெறாதவர்களுக்கும் பயன்படும். அதே வேளையில், புதிய முறையால் பலர் சேமிக்கும் பழக்கத்தை கைவிடும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலோர் சேமிப்பதே, வரி சலுகைக்காக தான் என்றிருக்கும் போது அதனை அரசு புதிய முறையிலும் கொண்டு வந்திருக்கலாம்.

பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஏற்படுவது தான் அவசியம். ஆனால் அதனை விடுத்து பணப்புழக்கத்தை ஏற்படுத்துகிறேன் என சேமிக்கும் பழக்க நெறியை புறக்கணிக்க கூடாது. புதிய வரி முறையால், வரவிருக்கும் காலங்களில் காப்பீடு மற்றும் இதர வரி சலுகை முதலீடுகளில் வரவு நிலை ஆட்டம் காணும். ஆனால் அதே வேளையில் இனி யாரும் வரி சலுகை காப்பீடு என தவறான அணுகுமுறையில் காப்பீட்டை விற்க முடியாது. வெறும் வரிசலுகைக்காக மட்டுமே சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்பவர்களின் மனநிலையும் மாறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்று பட்ஜெட் T20 தாக்கல் : பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது ?

இன்று பட்ஜெட் T20 தாக்கல் : பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது ?

Budget India T20: Highlights of Economic Survey 2020

2019-20ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் அவர்களால் தயாரிக்கப்பட்டது. இதனை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நேற்று சமர்ப்பித்தார். பொதுவாக பட்ஜெட் தாக்கல் தேதிக்கு முன்பாக நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார ஆய்வறிக்கை(Economic Survey) என்பது நடந்து முடிந்த விவரங்களையும், அதனை சார்ந்து வரவிருக்கும் நாட்களுக்கான மதிப்பீடுகளையும் தெரிவிக்கும். இருப்பினும் இதனை சார்ந்து தான் பொருளாதார வளர்ச்சி வளரக்கூடும் என நாம் சொல்ல முடியாது. 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ளது.

முதன்முறையாக சனிக்கிழமையான இன்று(01-02-2020) நாட்டின் பட்ஜெட் தாக்கலும், பங்குச்சந்தையும் ஒரு சேர விடுமுறை நாளில் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது. நேற்றைய ஆய்வறிக்கையில் நடப்பு 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் எனவும், 2020-21ம் நிதியாண்டில் இது 6 – 6.5 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முறையான வேலைவாய்ப்பு பிரிவுகளில் 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை புதிய 2.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு நிலையான வளர்ச்சியை வழங்கக்கூடிய வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், காலநிலை மாற்றத்தை நோக்கிய ஒரு அணுகுமுறையும் பின்பற்றப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தொழிற்துறை வளர்ச்சி 2.9 சதவீதமாக இருக்கும் எனவும், வேளாண்மை வளர்ச்சி 2.8 சதவீதத்தில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற பகுதிகள் திறந்த வெளி மலம் கழிப்பில்லா இடமாக மாற்றமடைந்துள்ளதாகவும், கழிவு பதப்படுத்துதலின்(Waste Processing) அளவு 40 சதவீதத்திற்கு அதிகமாக வளர்ந்துள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டில் தொழில் செய்வதற்கான எளிமை, வரி முறைகள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களில் நேர்மறையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சீன மாதிரியை பிரதிபலிக்க வேண்டுமென ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

உட்கட்டமைப்பை மேம்படுத்த மற்றும் அதற்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க, உணவுக்கான மானியங்களை குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் தொழிலாளர் சந்தையில் சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் வணிக செலவுகளை குறைக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமே ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு ($5 Trillion Economy) சாத்தியம் எனவும், இதன் காரணமாக அதற்கான நிதியை பெற வருங்காலங்களில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இன்று நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கல் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரயில்வே துறை, மற்ற உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், பொது-தனியார் பங்களிப்பு, வருமான வரி விகிதங்கள் ஆகியவற்றில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும் நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் வர்த்தக பற்றாக்குறை காரணங்களால், வரி விகிதத்தில் அரசு கவனத்துடன் செயல்படக்கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

10 நாட்கள் தடை செய்யப்பட்ட சீன பங்குச்சந்தை வர்த்தகம் – கொரோனா வைரஸ்

10 நாட்கள் தடை செய்யப்பட்ட சீன பங்குச்சந்தை வர்த்தகம் – கொரோனா வைரஸ் 

China Stock Exchange Shuts down till February 3 – Novel Coronavirus 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை சீனாவில் மட்டும் 213 பேர் இறந்துள்ளனர். 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்நிலையில் சூழலியல் ஆர்வலர்கள் சீனாவில் உள்ள வனவிலங்கு சந்தையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். பல்லுயிர் மீது பாதிப்பை ஏற்படுத்துவது மற்றும் கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக செயல்பட்டதன் மூலமே கொரோனா வைரஸ் வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதார அமைப்பும் அவசர நிலையை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

சீனாவில் கடந்த 24ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வசந்தகால விழா விடுமுறையாகும். அங்கு இயங்கும் அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இருக்கும். அதே வேளையில் சீன பங்குச்சந்தைக்கு ஜனவரி 24,27, 28,29,30 தேதிகளுக்கு மட்டுமே விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன பங்குச்சந்தை வர்த்தகம் பத்து நாட்களுக்கு மூடும் சூழ்நிலையை மேற்கொண்டது. சீனாவின் ஷாங்காய் காம்போசிட்(SSE – Shanghai Stock Exchange) குறியீடு கடந்த 23ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. அன்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.75 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஷாங்காய் குறியீடு.

அதன் பின்னர் சீன பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கப்படவில்லை. மேலும் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை சீன பங்குச்சந்தைகள் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது. இது உலகளவில் ஒரு அசாதாரண சூழலை சந்தை அளவில் உருவாக்கியுள்ளது. சீனாவில் நடைபெறும் எதிர்மறையான நிகழ்வு மற்ற சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தாலும், இது நீண்டகாலம் நீடிப்பதற்கான விஷயமாக இல்லை.

சீன பங்குச்சந்தை இறங்கும் மற்றும் அதன் பொருளாதாரம் வலுவிழக்கும் என்ற காரணத்தால், அது அமெரிக்க சந்தைகளுக்கு சாதகமாக உள்ளது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையில், மற்றொரு வீழ்ச்சியை பற்றி பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக முன்னெச்சரிகைக்கு தயாராகி வருகிறது.

நடப்பு 2020ம் ஆண்டில் அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் அதன் பொருளாதாரம் வீழ்ச்சி பெற 26 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க்(Bloomberg) கூறியுள்ளது. அதே வேளையில் இம்முறை பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் அது ஆசியாவிலிருந்து நிகழக்கூடும் என மேற்கோள் காட்டப்படுகிறது. சீன பங்குச்சந்தை வரவிருக்கும் 4ம் தேதி சந்தை துவங்கும் நிலையில் அதன் தாக்கம் தெரியும். இந்திய பங்குச்சந்தை கடந்த ஒன்பது வர்த்தக தினங்களில் 1400 புள்ளிகள் வரை (சென்செக்ஸ்) இறக்கம் கண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கல்(Budget India T20) மட்டுமே, குறுகிய காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு ஊக்குவிப்பதாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

நாட்டின் வங்கி வட்டி விகிதம் – ஒரு சிறு பார்வை

நாட்டின் வங்கி வட்டி விகிதம் – ஒரு சிறு பார்வை 

Bank Interest Rate in India – A Short look

கடந்த டிசம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம்(Retail Inflation) 7.35 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது போல கடந்த 2019 செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 4.5 சதவீதமாக இருந்தது. டிசம்பர் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.60 சதவீதமாக உள்ளது. பொதுவாக நாட்டின் பணவீக்கம் உயர்ந்தும், பொருளாதார வளர்ச்சி மந்த நிலை காண்பதும் மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பது – இந்த மூன்று நிலையும் ஒரு சேர நிகழ்வதை தேக்கநிலை(Stagflation) என்பர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிலை தொடர்ந்து நிகழ்ந்து வந்தால், அது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே அதனை மீட்டெடுப்பதே ஒரு நாட்டின் அரசுக்கான கடமையாக சொல்லப்படுகிறது. பொருளாதார மந்த நிலையில், ஒரு நாட்டின் வட்டி விகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது. வட்டி விகித மாற்றங்கள் பொருளாதார கதையில் முக்கிய கதாபாத்திரமாக அமையும் என்பதில் மாற்றமில்லை.

மத்திய ரிசர்வ் வங்கியின் நடப்பு ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாகவும், வங்கி விகிதம் 5.40 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 3.25 – 3.50 % என்ற அளவில் உள்ளது. இது முன்னர் 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடத்திற்கான டெபாசிட் விகிதம் 6.10 – 6.40 சதவீதம் என்ற அளவில் பாரத ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்டுள்ளது. கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் 8.45 – 9.40 சதவீத அளவில் காணப்படுகிறது. மேலே சொன்னவை மத்திய ரிசர்வ் வங்கியால் கடந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தகவல். ஆனால் வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தும்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய ரிசர்வ் வங்கி(RBI), நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

நாட்டின் பொருளாதாரத்தை பொறுத்தவரை வங்கி வட்டி விகிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லியிருந்தோம். உதாரணமாக பொருளாதார மந்த நிலையில், ஒரு நிறுவனத்திற்கு கடன் அதிகமாக இருக்கும் போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனை களைய அரசு மற்றும் மத்திய வங்கியின் சார்பில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். வங்கியின் வட்டி விகிதம் குறைவாக இருந்தால், நிறுவனங்களும் குறைவாக வட்டியை கட்டி விட்டு, உற்பத்தியை மேம்படுத்தலாம். இதன் மூலம் விற்பனை மற்றும் தொழிலாளர்களின் வருவாயில் மாற்றம் ஏற்படலாம். இது அரசுக்கான வரி வருவாயை பெறக்கூடும்.

மாறாக, பணவீக்கம் அதிகரித்து அதன் மூலம் வங்கி வட்டி விகிதங்கள் கூட்டப்பட்டால், நிறுவனத்தின் நிதி அறிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தனிநபர் வருவாய் மற்றும் கடன் நிலையிலும் பாதகமாக அமையும். எனவே மத்திய ரிசர்வ் வங்கி கவனமாக பணவீக்கம் மற்றும் வட்டி விகித நிலையை கையாளும். அரசை பொறுத்தவரை மக்களிடையே பணப்புழக்கத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை ஊக்குவிப்பதே முதல் கடமையாகும். இதன் காரணமாக அரசின் வரி வருவாய் அதிகரிக்கும். வரி வருவாய் நாட்டின் மானிய தேவைக்கு உதவக்கூடும்.

பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் போது, வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இது வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். அதே வேளையில் கடன் பெறுபவர்களுக்கு பாதகமாக செல்லும். நாட்டின் வட்டி விகிதம்(Interest Rate) கடந்த 20 வருடங்களில் சராசரியாக 7 சதவீத அளவில் காணப்படுகிறது. அதிகபட்சமாக 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 14.50 சதவீதமும், குறைந்த அளவாக கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மணப்புரம் பைனான்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 399 கோடி

மணப்புரம் பைனான்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 399 கோடி

Manappuram Finance Ltd reported a Net Profit of Rs. 399 Crore in Q3FY20 results

கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1949ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிதி சேவை நிறுவனம் தான் மணப்புரம் பைனான்ஸ்(Manappuram Finance). தற்போது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனமாக செயல்படும் மணப்புரம் நாடு முழுவதும் 4000க்கும் மேற்பட்ட கிளைகளையும், 17,000 க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இணைய வழியிலான தங்க நகைக்கடன், கிளைகளில் அளிக்கப்படும் நகைக்கடன், வாகன கடன், அந்நிய நாட்டின் பண மாற்றம்(Forex) மற்றும் பண பரிவர்த்தனை ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது இந்நிறுவனம். மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 15,900 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 60 ரூபாய் விலையிலும், தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் மூன்று மடங்கில் வர்த்தகமாகிறது.

நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், வருவாய் ரூ. 1400 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. செலவினம் ரூ. 382 கோடியாகவும், இதர வருவாய் 15 கோடி ரூபாயாகவும் உள்ளது. மூன்றாம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 399 கோடியாக உள்ளது.

இது கடந்த 2018-19ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வருவாய் ரூ. 1,081 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 245 கோடியாகவும் இருந்துள்ளது. தற்போதைய லாபம் கடந்த வருட காலாண்டை காட்டிலும் 63 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

ஒட்டு மொத்த வாராக்கடன் விகிதமும் இம்முறை சற்று குறைந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 110 சதவீதம் உயர்ந்துள்ளது. 5 வருட காலத்தில் காணும் போது, மணப்புரம் பைனான்ஸ் பங்கின் விலை 43 சதவீதமும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமும் விலை உயர்ந்து காணப்படுகிறது. வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 15 சதவீதமாக உள்ளது.

இது போல லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 33 சதவீதமும், பத்து வருடங்கள் எனும் போது 41 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,887 கோடி. பங்கின் மீதான வருவாய் 22 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மோடி குழுமத்தின் நிறுவனங்கள் மற்றும் அனைத்து சொத்துக்கள் விற்பனைக்கு

மோடி குழுமத்தின் நிறுவனங்கள் மற்றும் அனைத்து சொத்துக்கள் விற்பனைக்கு 

Modi Group of Companies and All Assets for Sale

இந்திய நுகர்வோர் சந்தையில் நேரடி விற்பனை(Direct Sales) என்ற சேவையில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நிறுவனம், ‘மோடி கேர்’ (Modicare). 15-20 வருடங்களுக்கு முன்பு மோடி கேர் மற்றும் ஆம்வே என்ற இரு நிறுவனங்களும் மட்டுமே நேரடி விற்பனை சேவையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த நிறுவனத்தின் உத்தியை நகலெடுத்து பல போலி நிறுவனங்கள் அப்போதைய காலத்தில் வந்து, பின்பு காணாமல் போயின. எம்.எல்.எம்.(MLM) என்று சொல்லிக்கொண்டு பலர் மோசடி பேர்வழிகளிடம் ஏமாந்தனர். இன்றளவிலும் இந்த கதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நேர்மையான பிராண்டுகள் எப்போதும் சந்தையில் நிலைத்து நிற்கின்றன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1933ம் ஆண்டு துவங்கப்பட்ட தனியார் நிறுவனம் தான் மோடி எண்டர்பிரைசஸ்(Modi Enterprises). இந்த நிறுவனம் ஆரம்ப காலத்தில் சர்க்கரை, ரப்பர் மற்றும் வனஸ்பதி ஆகிய பொருட்களில் தனது சேவையை புரிந்து வந்தாலும், பின்னாளில் நாட்டின் மிகப்பெரிய தனியார் குழும நிறுவனமாக மாறியது. இந்நிறுவனத்தின் பிராண்டுகளும் மக்களிடம் பிரபலமானவை.

தற்போது இந்த நிறுவனத்தில் 28,000 க்கு மேற்பட்ட பணியாளர்களும், 80 வருடங்களுக்கு மேல் சேவை புரிந்து வரும் இந்திய குழும நிறுவனமாகவும் உள்ளது. இதன் முக்கிய பிராண்டுகள் Godfrey Phillips, Modicare, Fashion TV, Indofil Industries, Beacon Travels, Ego italian, Ego thai, Shanghai tang, Tea City, Colorbar USA, KK Modi Group, Modi Globe, Synapse India, Maple Bear ஆகியவை. மோடி குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்நிறுவனத்தின் நிறுவனர் திரு. குஜர்மால் மோடி துவங்கிய மோடி நகர் என்ற இடமும் பிரசித்தி பெற்றவை. நிறுவனத்தின் தலைவராக இருந்த இவரது மகன் கே.கே. மோடி (கிருஷ்ணகுமார்) கடந்த நவம்பர் மாதம் காலமானார். இதனை தொடர்ந்து குழுமத்தின் பல சொத்துக்களும், நிறுவனங்களும் விற்பனைக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.கே.மோடியின் மகன் தான் ஐ.பி.எல். பிரபலம் லலித் மோடி. இவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது மற்றொரு கதை. கே.கே. மோடியின் மற்றொரு மகனான சமீர் மோடி(Samri Modi) தான் மோடி கேர் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். ஆம்வே(Amway) என்ற நேரடி விற்பனை சேவை நிறுவனம் அமெரிக்க நாட்டை சேர்ந்த நிறுவனமாக இருந்த நிலையில், இந்த துறையில் துவங்கப்பட்ட முதல் இந்திய நிறுவனமாக மோடி கேர் இருந்தது. தனிநபர் பராமரிப்பு, அழகு சாதனப்பொருட்கள், தோல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, சலவை, விவசாயம் மற்றும் வாகன பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வந்தது.

புகையிலை நிறுவனமான காட்பிரே பிலிப்ஸில்(Godfrey Phillips) 47 சதவீத பங்குகளை வைத்துள்ளது மோடி குழுமம். இந்நிறுவனத்தின் தலைவராக பினா மோடி உள்ளார். Modi Guard என்ற பிராண்டும் கண்ணாடி சார்ந்த சேவையில் மோடி குழுமத்தின் சார்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கே.கே. மோடி இறப்புக்கு பின், லலித் மோடியின் சார்பில் உள்ள நிறுவனங்கள், நிலங்கள் மற்றும் இதர சொத்துக்கள் விற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சூழ்நிலையில் மற்ற குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் விற்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com