மணப்புரம் பைனான்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 399 கோடி
Manappuram Finance Ltd reported a Net Profit of Rs. 399 Crore in Q3FY20 results
கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1949ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிதி சேவை நிறுவனம் தான் மணப்புரம் பைனான்ஸ்(Manappuram Finance). தற்போது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனமாக செயல்படும் மணப்புரம் நாடு முழுவதும் 4000க்கும் மேற்பட்ட கிளைகளையும், 17,000 க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டிருக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இணைய வழியிலான தங்க நகைக்கடன், கிளைகளில் அளிக்கப்படும் நகைக்கடன், வாகன கடன், அந்நிய நாட்டின் பண மாற்றம்(Forex) மற்றும் பண பரிவர்த்தனை ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது இந்நிறுவனம். மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 15,900 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 60 ரூபாய் விலையிலும், தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் மூன்று மடங்கில் வர்த்தகமாகிறது.
நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், வருவாய் ரூ. 1400 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. செலவினம் ரூ. 382 கோடியாகவும், இதர வருவாய் 15 கோடி ரூபாயாகவும் உள்ளது. மூன்றாம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 399 கோடியாக உள்ளது.
இது கடந்த 2018-19ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வருவாய் ரூ. 1,081 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 245 கோடியாகவும் இருந்துள்ளது. தற்போதைய லாபம் கடந்த வருட காலாண்டை காட்டிலும் 63 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
ஒட்டு மொத்த வாராக்கடன் விகிதமும் இம்முறை சற்று குறைந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 110 சதவீதம் உயர்ந்துள்ளது. 5 வருட காலத்தில் காணும் போது, மணப்புரம் பைனான்ஸ் பங்கின் விலை 43 சதவீதமும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமும் விலை உயர்ந்து காணப்படுகிறது. வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 15 சதவீதமாக உள்ளது.
இது போல லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 33 சதவீதமும், பத்து வருடங்கள் எனும் போது 41 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,887 கோடி. பங்கின் மீதான வருவாய் 22 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை