இன்று பட்ஜெட் T20 தாக்கல் : பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது ?
Budget India T20: Highlights of Economic Survey 2020
2019-20ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் அவர்களால் தயாரிக்கப்பட்டது. இதனை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நேற்று சமர்ப்பித்தார். பொதுவாக பட்ஜெட் தாக்கல் தேதிக்கு முன்பாக நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொருளாதார ஆய்வறிக்கை(Economic Survey) என்பது நடந்து முடிந்த விவரங்களையும், அதனை சார்ந்து வரவிருக்கும் நாட்களுக்கான மதிப்பீடுகளையும் தெரிவிக்கும். இருப்பினும் இதனை சார்ந்து தான் பொருளாதார வளர்ச்சி வளரக்கூடும் என நாம் சொல்ல முடியாது. 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ளது.
முதன்முறையாக சனிக்கிழமையான இன்று(01-02-2020) நாட்டின் பட்ஜெட் தாக்கலும், பங்குச்சந்தையும் ஒரு சேர விடுமுறை நாளில் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது. நேற்றைய ஆய்வறிக்கையில் நடப்பு 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் எனவும், 2020-21ம் நிதியாண்டில் இது 6 – 6.5 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
முறையான வேலைவாய்ப்பு பிரிவுகளில் 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை புதிய 2.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு நிலையான வளர்ச்சியை வழங்கக்கூடிய வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், காலநிலை மாற்றத்தை நோக்கிய ஒரு அணுகுமுறையும் பின்பற்றப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தொழிற்துறை வளர்ச்சி 2.9 சதவீதமாக இருக்கும் எனவும், வேளாண்மை வளர்ச்சி 2.8 சதவீதத்தில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற பகுதிகள் திறந்த வெளி மலம் கழிப்பில்லா இடமாக மாற்றமடைந்துள்ளதாகவும், கழிவு பதப்படுத்துதலின்(Waste Processing) அளவு 40 சதவீதத்திற்கு அதிகமாக வளர்ந்துள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
நாட்டில் தொழில் செய்வதற்கான எளிமை, வரி முறைகள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களில் நேர்மறையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சீன மாதிரியை பிரதிபலிக்க வேண்டுமென ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
உட்கட்டமைப்பை மேம்படுத்த மற்றும் அதற்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க, உணவுக்கான மானியங்களை குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் தொழிலாளர் சந்தையில் சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் வணிக செலவுகளை குறைக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமே ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு ($5 Trillion Economy) சாத்தியம் எனவும், இதன் காரணமாக அதற்கான நிதியை பெற வருங்காலங்களில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இன்று நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கல் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரயில்வே துறை, மற்ற உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், பொது-தனியார் பங்களிப்பு, வருமான வரி விகிதங்கள் ஆகியவற்றில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும் நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் வர்த்தக பற்றாக்குறை காரணங்களால், வரி விகிதத்தில் அரசு கவனத்துடன் செயல்படக்கூடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை