Tag Archives: bse

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

Market Trading hours of the Major Stock exchanges around the World

இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டு சுமார் 148 வருடங்கள் முடிந்தாகி விட்டது. கடந்த 1875ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை இன்று 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் சுமார் 366 லட்சம் கோடி – ஜனவரி 2024 தரவு) கொண்ட சந்தை மதிப்பாக உருவாகியுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

1992ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின்(NSE) இன்றைய மதிப்பு 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 335 லட்சம் கோடி – டிசம்பர் 2023 தரவு). இச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2,190. 

அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையை மதிப்பிடும் போது, ஒவ்வொரு 25 ஆண்டுகளில் இந்திய சந்தை நான்கு முறை கரடிப் பிடியில்(Bear Market) சிக்குவதாகவும், அமெரிக்க சந்தை போலவே இந்திய சந்தையிலும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கரடிச் சந்தையை முதலீட்டாளர்கள் சந்திப்பதாகவும் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிப்டி50 குறியீடு கடந்த 25 வருடங்களில் எட்டு முறை 20 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

2022-23ம் நிதியாண்டு தரவுப்படி உலகளவில் பங்குச்சந்தை பங்களிப்பு விகிதத்தை காணுகையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு(Trading & Delivery) செய்கின்றனர். இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(UK) 33 சதவீதமாகவும், சீனாவில் 13 சதவீதமாகவும், பிரேசிலில் 2 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் இது 3 சதவீத பங்களிப்பாக உள்ளது. அதே வேளையில் இந்தியாவில் குடும்பங்கள் வாரியாக காணும் போது, இது 17 சதவீதமாக இருந்துள்ளது. 

இந்தியாவில் பங்குச்சந்தையில் ஈடுபடும் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக மற்றும் பரவலாக சொல்லப்படும் காரணி அதன் சந்தை வர்த்தக நேரம் தான். காலை ஒன்பது மணி முதல் மதியம் 03:30 மணி வரை. இந்த வேளையில் பெரும்பாலானோர் தங்களது நிறுவன வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இதுவே சந்தை பங்களிப்பு குறைவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், நம்ம நாட்டு பக்கத்துல இருக்கிற சீனாவின் பங்களிப்பு எப்படி அதிகரித்தது, அதன் வர்த்தக நேரம் தான் என்ன ?

(See Table below)

Market Trading Hours - Global Equity Markets

பொதுவாக அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்களின்(Institutional Investors) பங்களிப்பு, பங்குச்சந்தையில் அதிகமாக இருக்கும். வல்லரசாக மட்டுமில்லாமல் வளர்ந்த பங்குச்சந்தையாகவும் அமெரிக்க சந்தை உள்ளது. இதன் காரணமாகவே நேரடி முதலீட்டாளர்களின் பங்களிப்பும், PMS, Hedge Fund மற்றும் Index Fund வாயிலாக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், அதன் மதிப்பும் அதிகம். இதுவே நம் நாட்டில் PMS மற்றும் Index Fund என்பது இன்னும் புது வரவாகவே இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தான் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு(மியூச்சுவல் பண்டு மூலமாக) அதிகரித்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரை அந்நாட்டின் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிதாக இணைப்பு இல்லை. சீனச் சந்தை, இந்திய சந்தையை காட்டிலும் அதிக மதிப்பை கொண்டிருந்தாலும் அங்கு பெரும்பாலும் அரசு கட்டுப்பாட்டில் தான் அவை இயங்கும். சந்தையும் உள்ளூர் முதலீட்டாளர்களை தான் அதிகமாக கொண்டிருக்கிறது. இது போல ஹாங்காங் சந்தையிலும் தொழில் வணிகர்கள் குறிப்பிடத்தக்க முதலீடு செய்திருந்தாலும் சீனச் சந்தை அமைப்பின் கீழ் தான் இயங்கி வருகிறது. 

சீன பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்குச்சந்தை பங்களிப்பு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே இந்தியாவில் பொருளாதாரத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது. சீனச் சந்தையில் பெரும்பாலும் அதன் அரசு கொள்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும். இதுவே இந்தியாவில் சந்தை ஒதுக்கீடு பொறிமுறையில்(Market allocation mechanism) இயங்கும்.

பெரும்பான்மையான நாடுகளில் ஈர்க்கப்படும் முதலீடுகள் ETF(Exchange Traded Fund) அல்லது மியூச்சுவல் பண்டு வாயிலாக தான் வருகின்றன. ஆசியாவின் மிகப்பழமையான சந்தையாக இந்தியாவின் மும்பை பங்குச்சந்தை இருந்திருந்தாலும், இங்குள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, வேகமாக வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே.   

இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பொதுவான காரணங்களாக நிதி சார்ந்த கல்வியறிவின்மை, பணப்பற்றாக்குறை, பாரம்பரிய முதலீடுகளை அதிகமாக சார்ந்திருப்பது(தங்கம், நிலம், வங்கி டெபாசிட்), பங்குச்சந்தையில் பொறுமையின்மை மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்ட எண்ணம், பாதுகாப்பான அணுகுமுறையை விரும்புதல் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த கடந்த கால அச்சம் ஆகியவை உள்ளது.

மேலே காணப்பட்ட வர்த்தக நேரப் பட்டியலின் முடிவில், உலகின் பெரும்பாலான சந்தைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகலில் மட்டுமே இயங்குகிறது. ‘வாரம் இருமுறை சந்தைக்கு விடுமுறை’ என்பதனை பெரும்பாலான சந்தைகள் அமெரிக்காவின் நகலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com