Tag Archives: top stock exchanges

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

World’s Top Stock Exchanges and Countries by Market Capitalization

உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக ஹாங்காங் நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தையை நாம் முந்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் மதிப்பு 4.37 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் சுமார் 363 லட்சம் கோடி ரூபாய்).

பங்குச்சந்தை உலகின் ராஜாவாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 49.65 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 4,127 லட்சம் கோடி ரூபாய்). இரண்டாமிடத்தில் 10.89 டிரில்லியன் டாலர்களுடன் சீனாவும், மூன்றாவது இடத்தில் 5.47 டிரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் நாடும் உள்ளது.

அமெரிக்காவின் மேலே சொல்லப்பட்ட சந்தை மதிப்பு அந்நாட்டின் பொருளாதார(GDP) மதிப்பில் 194.5 சதவீதமாகும். ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தை 3.96 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாம் மற்றும் ஏழாம் இடம் முறையே பிரான்சு மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள்(2.82 டிரில்லியன் டாலர்கள்) உள்ளன.

எட்டாவது இடத்தில் கனடா 2.64 லட்சம் கோடி டாலர்களுடனும், ஒன்பதாவது இடத்தில் சவுதி அரேபியா 2.42 லட்சம் கோடி டாலர்களுடனும் மற்றும் பத்தாவது இடத்தில் ஜெர்மனி 2.28 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும் உள்ளது. சொல்லப்பட்ட தரவுகள் 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுகளுக்குள் கணக்கிடப்பட்டது.

கடந்த 1975ம் ஆண்டில் உலக பங்குச்சந்தையின் மதிப்பு 11.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தநிலையில் 2020ம் ஆண்டின் முடிவில் 93.68 லட்சம் கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது உலக பொருளாதார மதிப்பில் வெறும் 27 சதவீதமாக இருந்த பங்குச்சந்தை பங்களிப்பு இன்று 135 சதவீதத்திற்கும் மேலாக காணப்படுகிறது.

நடப்பில் மிகப்பெரிய பங்குச்சந்தை உள்ள நாடுகளில் குறிப்பிட்ட பங்குச்சந்தை(Stock Exchange) அடிப்படையில் காணுகையில், அமெரிக்காவின் நியூயார்க் சந்தை(NYSE) 26.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த சந்தை கடந்த 1792ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் அமெரிக்காவின் நாஷ்டாக்(NASDAQ) சந்தை உள்ளது. கடந்த 1866ம் வருடம் துவங்கப்பட்ட சீனச் சந்தையின் ஷாங்காய்(SSE) 6.87 டிரில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் ஐரோப்பாவின் யூரோ நெக்ஸ்ட்(EuroNext) சந்தையும், ஐந்தாவது இடத்தில் ஹாங்காங் சந்தையின் HKEXம் உள்ளன. இந்தியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை பத்தாவது இடத்தில் 3.59 டிரில்லியன் டாலர்களுடன் உள்ளது. இச்சந்தை கடந்த 1875ம் வருடம் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனத்தின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் சவுதி அரம்கோ நிறுவனமும் உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே கூகுள்-ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆறாவது இடத்தில் என்விடியா(Nvidia) மற்றும் ஏழாம் இடத்தில் மெட்டா(Meta) நிறுவனமும் உள்ளது.

திருவாளர் வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனம் எட்டாம் இடத்திலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. எலி லில்லி நிறுவனம் 597 பில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,வர்த்தக மதுரை

www.varthagamadurai.com