உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

Endowment Effect or Cognitive Bias – Behavioural Economics

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்பார்கள். பொருளியலில் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இன்று பணம் இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கான தேவையும், நகர்வும் பணத்தை சார்ந்து இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் ஆற்றலை அறிய, அந்நாட்டின் போர்ப்படை மற்றும் அரசியல் அதிகாரத்தை விட பணத்தின்(பொருளாதாரம்) மூலம் தான் அளவுகோலை நிர்ணயிக்கிறார்கள்.

‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என துறவறவியலில்(அதிகாரம் – அருளுடைமை, பால் – அறத்துப்பால், குறள்: 247) பொருளீட்டலின்(இன்றைய பணம்) தேவையை பற்றி விவரிக்கிறது. பணத்தின் மீது பெருத்த ஆசை வைக்காவிட்டாலும், தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்தை நிதி சார்ந்து பாதுகாக்க தேவையான பணத்தை நாம் தேடித்தான் ஆக வேண்டும்.

அதிக பணமீட்டும் ஒரு சாரார் தங்களது செலவுகளை அதிகமாக கொண்டிருந்தாலும், அதன் மூலம் வரி வருவாய் ஏற்படுத்தினால் மட்டுமே, ஒரு நாட்டின் அரசால் வறுமையில் அல்லது வருவாய் குறைந்தவர்களுக்கான நிதி திட்டமிடலை செய்ய முடியும். இல்லையெனில் பொருளாதாரம் சார்ந்து அதிக ஏற்றத் தாழ்வால் வெறுப்பும், வன்முறையும் நிகழ வாய்ப்புண்டு. இதன் காரணமாக தான் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளும், வேகமாக வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

முன்னொரு காலத்தில் நெல் உமியையும், அரிசியையும் வீணாக்கக் கூடாது என்ற வழக்கமுண்டு. பஞ்சத்தின் வெளிபாட்டையும், சிக்கனத்தை அவசியத்தையும் தான் இது போன்ற நிலைகள் கூறுகிறது. ‘பணக்காரனுக்கு என்னப்பா கவலை’ என்றும், ‘பணத்தை விட உடல்நலத்தை பேணுவதே’ என்றும், ‘நம்மிடம் பணமிருந்து என்ன பயன், நல்ல தூக்கம் இல்லையே’ என சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் பணத்திற்கான மதிப்பு தான் என்ன ?

அதனை நீங்கள் தான் அளவிட முடியும் !

நம்மிடமிருக்கும் பணத்தை நாம் அவ்வளவு அக்கறையாக பார்க்கையில், மற்றொருவரின் பணத்தை நாம் அவ்வாறாக காண்பதில்லை. இதனை தான் எண்டோவ்மென்ட் விளைவு(Endowment Effect) என்கிறோம். ‘பணத்தை தண்ணி போல செலவழிக்கிறான் பார்’ என சொல்வதுண்டு. பணத்தின் மீதான அளவீடு என்பது ஒவ்வொரு தனிநபரின் பார்வையிலும் மாறி கொண்டே இருக்கிறது.

கஷ்டப்பட்டு அப்பா சம்பாதித்த பணத்தை பற்றி பிள்ளைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அதன் அளவீடும் மாறுபடும். சாலையில் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளும், சில்லறைகளும் அதனை கண்டவரின் பார்வையில் பணத்தின் மீதான அளவீடு உள்ளது. நமது பணம் தொலைந்து விட்டால் நமக்கு வரும் பதட்டம், அதே பணத்தை மற்றவர் தொலைக்கும் போது இருப்பதில்லை. முடிந்தால் அறிவுரை சொல்ல பழக்கப்பட்டிருப்போம்.

பொதுவாக நம்மிடம் இல்லாதவற்றை விட, நமக்கு சொந்தமான பொருட்களின் மீது நாம் உயர்வான மதிப்பை கொண்டிருக்கிறோம். இதனை தான் முதலீட்டு சிந்தனையிலும் செய்து வருகிறோம். நமக்கு தெரிந்த முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது அல்லது நமது வசதிக்கு ஏற்ப இந்த திட்டம் தான் சரியானது என முதலீடு செய்வது. உண்மையில் அந்த திட்டம் வருவாயை கொடுக்காமல் இருந்திருக்கலாம். சில நேரங்களில் அத்திட்டம் அதிக ரிஸ்க் தன்மை கொண்டதாக இருந்திருக்கக் கூடும்.

இருப்பினும் நாம் அந்த திட்டத்தை மற்றவைகளை பற்றி தெரிந்து கொள்ள விருப்பில்லாமல், ஏற்கனவே சொன்ன திட்டத்தில் ஆறுதல் தேடிக் கொள்வோம். இதனை தான் உளவியலாளர் திரு. டேனியல் கானமேன் ஒரு ஆராய்ச்சியின் மூலம் விவரிக்கிறார்…

“ அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு போட்டியை நடத்தி ஆராய்ச்சி கண்டோம். சில மாணவர்களிடம் பல்கலைக்கழக சின்னம் பதிக்கப்பட்ட குவளைகளை(Mugs) வைத்திருக்க சொன்னோம். குவளைகளை கொண்டிருந்த மாணவர்களிடம் அதனை மற்ற குவளையில்லாத மாணவர்களிடம் விற்கும் படி செய்ய சொன்னோம். குவளையில்லாத மாணவர்களும், குவளை வைத்திருக்கும் மாணவர்களிடம் வாங்குவதற்கான பேரத்தை பேசினர்.

இதனை பலமுறை சோதித்து, இறுதி ஆராய்ச்சியின் முடிவில் நாங்கள் கண்டது, குவளையில்லாத மாணவர்கள் தாங்கள் கேட்ட விலையை விட இரு மடங்கு விலையில் குவளையை வைத்திருந்த மாணவர்கள் விற்பதற்கு தயாராக இருந்தனர் என்பது தான்.”

இதனை தான் நாம் அவ்வப்போது நம் வாழ்க்கையில் செய்து வருகிறோம். உதாரணத்திற்கு நம்மிடம் உள்ள பழைய நான்கு சக்கர வாகனத்தை விற்கும் போது, நாம் அதன் அருமை-பெருமைகளை சொல்லி கூடுதல் விலைக்கு விற்க முனைகிறோம். இதுவே வாங்க வருபவர், தேய்மானத்தை அடிப்படையாக கொண்டு மலிவான விலையில் கேட்பார்.

வீட்டுமனை விற்பனையிலும் நாம் இதனை காணலாம். வீட்டுமனையை வைத்திருப்பவர் எப்போதும் அதிக விலைக்கே விற்க(Endowment Effect) முனைகிறார். ஆனால் உண்மை நிலவரம் அப்படியில்லை, இடம் மற்றும் காலத்திற்கு தகுந்தாற் போல தான் அந்த மனையின் விலை விற்கப்படும். எனினும் நம் மனம் நமது சொந்த பொருட்களின் மீதான மதிப்பை அதிகரித்தே சொல்லக் கூடும்.

கைக்கடிகாரம் கூட யார் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கிணங்க அதன் மதிப்பை பெறுகிறது என்பார்கள்.

எனவே நம் பணத்தின் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பை, மற்றவர்களின் பணத்திற்கும்(மனிதத் தன்மைக்கும்) கொடுப்பது நலம். இதன் மூலம் அதீத ஏற்ற-தாழ்வை பொருளாதார நிலையை குறைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.