Coins currency lock

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள் 

6 Things to Learn on Personal Finance – Escape from the Economic Crisis

தனிநபர் நிதி சார்ந்த கற்றல் என்பது நம் நாட்டை பொறுத்தவரை தற்போதைய நிலையில் குறைவு தான். அதே வேளையில் சேமிப்பு என்ற ஒற்றை வார்த்தை நமக்கு பல காலமாக நம்முடைய குடும்பத்தில் இருந்துள்ளது. நுகர்வோர் சந்தையில் வெறுமென சம்பாதித்த பணத்தை செலவழிப்பது, எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவது, தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி குவிப்பது, எதிர்காலத்தில் இது தேவைப்படும் என உபயோகமில்லாத விஷயங்களை செய்வது என நாம் பொதுவாக நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி வருகிறோம்.

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் – உணவு, உடை மற்றும் உறைவிடம். நவீன யுகத்தில் அடிப்படை கல்வியும், பொருளாதாரம் சார்ந்த சில நிதி பாதுகாப்புகளும் மட்டுமே கூடுதல் தேவையாக இருக்கும். ஆனால் நாம் நிதி பாதுகாப்புகளை செய்வதை விட்டு விட்டு எண்ணிலடங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி குவித்து வருகிறோம். என் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்த சாமான்கள் இன்றும் என் வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ளது என சொல்வதை கேட்டிருப்போம்.

நம்மை சுற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றும் கண்காட்சி பொருட்கள் அல்ல. அது பெருமையாக பேசக்கூடிய விஷயமும் அல்ல. தனிநபர் ஒருவர் தனக்கு தேவையில்லாத ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது , தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் செய்கிறது அல்லது அதன் விலை அதிகமாக கூடும்.

எனவே தேவையறிந்து, வாங்க கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயன்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும். அப்படி சொல்லும் போது, தனிநபர் நிதி விஷயத்தில் ஆறு விஷயங்களை அடிப்படை நிகழ்வாக கற்று கொள்ளலாம்.

  • சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் இடையேயான புரிதல் 
  • பணவீக்கம்
  • நிதி இலக்குகளை திட்டமிடுதல்
  • காத்திருக்கும் ரகசியம்
  • கூட்டு வட்டியின் மகிமை – பள்ளிக்கால பணக்கார பாடம்
  • எந்தவொரு முதலீட்டையும் தொழில் போல அணுக கற்று கொள்ளுங்கள் 

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுவர். எல்.ஐ.சி. நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தை வாங்கி கொண்டு நான் சேமிக்கிறேன் அல்லது முதலீடு செய்கிறேன் என நினைத்து கொள்வர். சேமிப்பு என்பது பெரிதாக வளரும் வாய்ப்பு இல்லாதது. அது பணவீக்கத்தை விட குறைவான வட்டி வருவாயை தான் கொண்டிருக்கும். உதாரணமாக, அஞ்சலகம், வங்கி, சீட்டு, தங்கம், ரொக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அஞ்சலகத்தில் கிடைப்பதை சிறு சேமிப்பு திட்டம் என்று தான் சொல்வர். அதனை முதலீடு என சொல்லப்படவில்லை.

முதலீடு(Investing) என்பது இரண்டு விஷயங்களை நிறைவு செய்பவை. ஒன்று தொடர் வருமானத்தை(Regular income or Cash Flow) ஏற்படுத்துவது, மற்றொன்று நீண்டகாலத்தில் அதனை வைத்து கொண்டு பின்னர் ஒரு நல்ல விலைக்கு விற்பதன் மூலம் லாபம்(Capital Appreciation) ஏற்படுத்துவது. ரியல் எஸ்டேட், பங்குகள், தொழில்கள் ஆகியவை முதலீடு என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அவை இரு வகையான வருமானங்களை தர கூடியவை. வெறுமென வீட்டு மனைகளை மட்டும் விற்காமல், வீட்டு வாடகை, வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க பெறும் தொடர் வருமானம், பங்குகளில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை, தொழில்களில் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றை சொல்லலாம். எதிர்காலத்தில் இந்த மூன்றையும் விற்றால் அதற்கும் லாபம் கிடைக்கும். எனவே சேமிப்பும், முதலீடும் ஒன்று அல்ல.

நினைவில் கொள்ளுங்கள், தங்கம் என்பது பணவீக்கத்தை ஒட்டியும், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சி காலங்களில் மட்டுமே அதன் செயல்பாடுகள். அது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு என சொல்லமுடியாது. நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்கள் வாழ்நாளில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படும். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு அது அடிக்கடி பயன்படக்கூடியது என நீங்கள் நினைத்தால், உண்மையில் உங்கள் நிதி நலனில் சில பிரச்சனைகள் உள்ளது என அர்த்தம்.

தங்கத்தின் மூலம் தொடர் வருமானத்தை ஏற்படுத்த முடியாது என்பதனால் தான் அது சேமிப்பு பிரிவில் உள்ளது. தங்கம் கடந்த 20 வருடங்களில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி வருவாயை ஒட்டி தான் உள்ளது. டாலர் மதிப்பில் அது வர்த்தகமாவதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பது போல தோன்றுகிறது. நாணயம் என்ற தொட்டுணரக்கூடிய விஷயம் இல்லையென்றால், தங்கத்திற்கும் மதிப்பு கிடையாது. இது தான் கடந்த வரலாற்றில் அலுமினியத்தில் நடந்தது.

மாத முதலீட்டிற்கும், மாத தவணைக்கும்(SIP vs EMI) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். மாதாமாதம் சேமித்து அல்லது முதலீடு செய்து, முதிர்வில் ஒரு பொருளை வாங்க வேண்டுமா அல்லது இ.எம்.ஐ.(EMI) என கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா ? நீங்கள் கடன் மூலம் ஒரு பொருளை உடனே வாங்கி விட்டாலும், அந்த கடனை அடைக்கும் வரை அதற்கு நீங்கள் உரிமையாளர் கிடையாது. இது கடன் மூலம் பெற்ற வீடு, வாகனம், கைபேசி, குளிர்சாதனம் என அனைத்துக்கும் பொருந்தும். சேமித்த பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு முழு உரிமையாளர் நீங்களே.

கிரெடிட் கார்டுகளில் கவனம் தேவை. உண்மையில் தொழில் செய்பவர்களுக்காக  அறிமுகப்படுத்தபட்ட கடன் அட்டைகள் தான் அவை. ஆனால் இன்று தொழில் புரிபவர்கள் அதனை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள் கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது, கடனில்லா வாழ்வும் ஒரு சுகமே. வல்லரசான அமெரிக்காவில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் அட்டையிலும், கடனிலும் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதத்திற்கு மேல். அமெரிக்காவில் தனிநபர் ஒருவரின் கடன் மட்டும் சராசரியாக 90,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாய்) !

பணவீக்கத்தை பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை. தேவையில்லாத பதுக்கல், எதிர்பாராத கூடுதல் தேவைகள் தான் ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை நிர்ணயிக்கின்றன. அதிகமான உற்பத்தி இருக்கும் நிலையில், தேவை குறைவாக இருப்பின் அதன் விலை அதிகமாக இருக்காது. நீண்டகாலத்தில் பணவீக்கம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடிய ஒன்று.

நிதி இலக்குகளை திட்டமிடுதலின்(Financial Goals) அவசியம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அவை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளாக இருக்கலாம். குடும்பத்திற்கான தேவையான அளவு காப்பீடு, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு, அவசரகால நிதி போன்றவற்றை ஏற்படுத்தி விட்டு தான் நிதி இலக்குகளை திட்டமிட வேண்டும்.

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலை காத்திருத்தல்(Delayed Gratification) மூலமே கிடைக்கும். உலகின் பெரும்பாலான பணக்காரர்கள் எளிமையான வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் தான். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, நீண்டகாலத்தில் முதலீடு செய்து அதனை அறுவடை செய்வது தான் அவர்களின் வேலை. நீண்டகால முதலீட்டிற்கு மட்டுமே அரசு சார்பில் வரி சலுகையும் கிடைக்கப்பெறுகிறது, குறுகிய கால லாபத்திற்கு அல்ல.

கூட்டு வட்டியின் மகிமை நமது பள்ளிக்கால பாடத்தில் இருந்த ஒரு பக்கம் தான். ஆனால், உண்மையில் நாம் கல்வியை முடித்து விட்டு வேலைக்கு சென்றவுடன் அதனை மறந்து விட்டோம். அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஒருவரை உயர்த்தி விடாது. கடனில்லாமல், அளவாக சம்பாதித்தாலும் நல்ல ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டு எளிமையாக வாழ பழகினால் அதுவே உயர்வாகும். இதனை தான் பெரும் பணக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இளமை காலம் முதல் செய்யப்படும் தொடர் முதலீடு தான் ஒருவரின் செல்வத்தை உயர்த்துகிறது.

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

முதலீட்டை மேற்கொள்ளும் முன்னர், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் அதற்கான முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். வெறுமென போன்சி  (மோசடி திட்டம் – வட்டிக்கு பெரும் வட்டி) பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு எனக்கு மாதாமாதம் பணம் வருகிறது என சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். உண்மையில் நம் முதலீட்டை கொண்டு ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிவது அவசியமாகும். உங்கள் பணத்தை கொண்டு ஒருவர் நேர்மையாக தொழில் செய்தால் மட்டும் தான், உங்களுக்கான வருவாய் நிச்சயம். இல்லையென்றால், அது திவால் தான்.

சொல்லப்பட்ட கற்றலின் மூலம் நமது நிதி சிந்தனை மேம்படும். அளவான வாழ்க்கையை வாழ இயலும், அளவில்லா மகிழ்ச்சியை பெற முடியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s