கார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் !
True story not to inspire, Immediate steps you need to take – During this Emergency
க. கார்த்திக் குமார் – எனது அருமை கல்லூரிக்கால நண்பன். நடப்பு 2021ம் வருடத்தின் மே மாதம் இரண்டாம் வாரத்தில் கொரோனா பெருந்தொற்று துயரத்தில் மறைந்தான். கல்லூரி காலத்தில் மட்டை பந்து(Cricket) விளையாட்டில் எங்கள் வகுப்பின் சார்பாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவான் கார்த்திக். பல ஊர்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவனை பரிந்துரைப்பவர்கள் ஏராளம்.
கல்லூரிக்காலம் முடிந்த பின்னர் எங்களது துறைக்கு சம்மந்தமில்லாத காப்பீட்டு துறையில் வேலைக்கு சென்றிருந்தாலும், நீண்டகாலத்தில் ஒரே துறையில் பணி அனுபவம் கொண்டவனாக கார்த்தி இருந்தான். தனது இறுதி நாட்களின் போது, அவன் பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக பிரிவில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கு மனைவி மற்றும் இரு மகன்கள். கல்லூரி காலத்தில் தனது தந்தையை இழந்து, நிதி சார்ந்து சிரமப்பட்ட காரணத்தினால் தனது அடுத்த சந்ததியினர் அவற்றில் சிக்கி விடக்கூடாது என காப்பீட்டு விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் இருப்பான்.
மனைவி, பிள்ளைகள் என வாழ்க்கை நன்றாக தான் ஓடி கொண்டிருந்தது. கூடவே கடனும்… பொதுவாக தனிநபர் ஒருவரின் வருவாயை கொண்டிருக்கும் குடும்பத்தில் கடன் என்பது அவரது பெரும்பாலான வாழ்நாட்களை ஆதிக்கம் செலுத்தும். நமக்கு பிடித்தவரை நாம் திருமணம் செய்து கொண்டு அரை நூற்றாண்டு வாழ்ந்தாலும், ஒருவருடைய பிரிவுக்கு பின்பு ஏற்படும் நிதி சிக்கலே பெரும்பாலான உறவுகளை அச்சப்படவும், கடந்த கால வாழ்க்கையை வெறுக்கவும் செய்யும்.
கணவன் தனது குடும்பத்தை நன்றாக பார்த்து கொண்டிருந்தாலும், தனது மறைவுக்கு பிறகு, குடும்பத்தினர் படும் நிதி சார்ந்த இன்னல்களை தவிர்க்க சில முன்னெடுப்புகளை எடுத்து தான் ஆக வேண்டும். கணவனின் வங்கி கணக்கு தகவல்கள், கடன் அட்டையின்(Debit & Credit Cards) நிலவரம், கடவுச்சொல்(Password), நிதி மற்றும் நிலம் சார்ந்த சொத்துக்களின் ஆவணங்கள், யாரிடமெல்லாம் கடன் வாங்கியிருக்கிறோம், யாருக்கெல்லாம் நாம் பணம் கொடுத்துள்ளோம், வங்கி டெபாசிட், நகை அடமானம், காப்பீடு, பங்குகள், பத்திரங்கள், நாமினேசன், இணைய வாலட்(Wallet), வேலை பார்த்த நிறுவனத்தில் உள்ள நிதி நிலவரம் – அப்பப்பா, இவ்வளவு விஷயங்களையும் தனது துணைவி கவனிக்க வேண்டுமா.
“இருபது வயதினிலே தனக்கு பிடித்த ஒருவரை மணந்து, பிள்ளைகளையும் பெற்று, ஏதோவொரு தருணத்தில் தனது மன்னவனை இழந்து, பின்னர் அவன் சார்ந்த(மேலே சொன்ன அத்தனையும்) நிதி ஆதாரங்களை அவள் பெறுவதற்குள், ஏன் இந்த மனிதருடன் வாழ்ந்தோம், எதற்கு இவ்வளவு நிதிச்சிக்கல் என இளைப்பாறாமல் அலைக்கழிக்கப்பட்டால் ! அவள் தனது கடந்த கால மகிழ்வை இப்போது நினைவு கூறுவாளா ? “
மனைவிக்கு பிடிக்கவில்லை, புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், வருங்காலத்திற்காக பங்குகளிலும், காப்பீட்டிலும் தான் ஈட்டிய வருவாயை கொட்டி விட்டு, தான் மறைந்த பின்பு, தன் மனைவிக்கு புரிந்து விடுமா என்ன ? ‘நான் அப்போதே சொன்னேன், இந்த பங்குச்சந்தையெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று’ நடுத்தர வருவாய் கொண்ட கணவனிடம் கரிசனம் கொட்டி கொள்வாள் அவளது மனைவி. அதனால் தான் ஏனோ பணக்காரர்கள் ஏன் இன்னும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று ! “
பொதுவெளியில் நிதி சார்ந்த தன்மைகளை(Personal Finance) நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அதனை கற்றுக்கொள்ள துளியளவும் நாம் விரும்பவில்லை, ஆனால் பணத்தின் மீது தான் நமது அத்தனை ஆசையும். பக்கத்து வீட்டுக்காரர்களை போன்று வட்டமிட வேண்டும். ஆனால் இதற்காக நாம் வாங்கிய கடனை கட்ட வேண்டுமே. சேமித்தல், முதலீடு, கடன் வாங்கியது, கொடுத்தது – முடிந்தவரை அனைத்தையும் உங்களது துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் துணைவுக்கு பிடிக்காமல் இருந்தாலும். ஏனெனில் நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவலே, பின்னாளில் உங்களது மறைவுக்கு பின்பு அவர்களது நிதி ஆதாரத்தை பாதுகாக்கும். மேலும் அவர்களது மிச்சமிருக்கும் வாழ்வை பயனுள்ளதாக மாற்றும் !
நானும், கார்த்தியும் கடந்த 2014ம் ஆண்டு முதல் பங்குச்சந்தை சார்ந்த தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் பேசுவது வழக்கம். எங்களது பங்குச்சந்தை சார்ந்த உரையாடலுக்கு முன்னர், நாள் வணிகத்தில்(Intraday Trading) ஈடுபட்டு சில லட்சங்களை தான் இழந்ததாக கார்த்தி என்னிடம் சொல்லியிருந்தான். நான் அது சார்ந்த எச்சரிக்கையையும் அவனின் மனதில் செலுத்தினேன். முடிந்தவரை நீண்டகாலத்தில் முதலீடு செய்து பயன்பெறும்படி கூறி வந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட பங்குச்சந்தை இழப்பு, அவனது இழப்பை கடந்து இன்று அவனது குடும்பத்தினரிடம் கடனாக ! ஆம், கடனை அடைக்க மற்றொரு கடன் என்று சொல்வார்களே, அது தான்.
சில பங்குகளை அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) முறையில் ஆராய்ந்து எனது வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைப்பது என்னுடைய வழக்கம். இதனை எனது நண்பன் என்ற முறையில் கார்த்திக்கும் பகிர்வேன். முதலீடு செய்தானா, இல்லையா என்பது இதுவரையிலும் தெரியாது. சில நாட்களுக்கு முன்பு, எனது மற்றுமொரு கல்லூரி நண்பர் திரு. சுப்பிரமணி மூலம் கார்த்தியின் பங்குச்சந்தை சார்ந்த கணக்குகள் பற்றி ஓரளவு தெரிய வந்தது. சுப்பிரமணி, கார்த்தியின் குடும்ப நண்பர் என்றே சொல்லலாம். கார்த்தியின் மறைவுக்கு பின்னர், அவனது குடும்பத்திற்கு சுப்ரமணியின் உதவி அளப்பரியது. கார்த்தியின் பள்ளிக்கால நண்பர்களும், எங்களது கல்லூரி நண்பர்களும் அவனது குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த உதவிகளை செய்ய முயற்சித்துள்ளோம்.
கார்த்தியின் பங்குச்சந்தை கணக்கு மூலம் தெரிய வந்தது, அவனது பங்கு முதலீட்டை காட்டிலும் பங்கு அடமானமும், அதனை சார்ந்த வட்டி அபராதமும் தான் அதிகம் இருந்தது. நீண்டகாலத்தில் அவன் முதலீடு செய்யாதது பெருத்த ஏமாற்றமே. இதனை தான் நம்மில் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறோம். நல்ல வேலை மற்றும் சம்பளம் இருக்கையில், பங்குச்சந்தையில் பகுதி நேரமாக சம்பாதிக்கிறேன், ஈட்டும் வருவாயை காட்டிலும் பல மடங்கு பங்குச்சந்தையில் சில மாதங்களில் ஈட்டி விடுவேன் என்று இருக்கும் காசை இழப்பவர்கள் இங்கு ஏராளம். நாள் வர்த்தகத்தில்(Intraday Trading) மட்டுமே பணமீட்ட முடியும் என்ற மாயையில் பலர் மாட்டி கொள்கின்றனர். அரசு சார்பில் எவ்வளவு விழிப்புணர்வு அளிக்கப்பட்டாலும், நாமாக கற்று கொள்ளாமல் எதுவும் சிறந்ததாகி விடாது.
வங்கி டெபாசிட் வட்டி விகிதத்தை காட்டிலும் ஓரிரெண்டு சதவீதம் அதிகம் கிடைத்தால் போதும் என பண பெருமுதலைகள் இருக்கும் நிலையில், நடுத்தர வருவாய் கொண்டவர்கள் பேராசை கொண்டு பணத்தையும், நிம்மதியையும் இழக்கின்றனர். தனிநபர் நிதி திட்டமிடலில் பணப்பாதுகாப்பும், பணவீக்கத்தை தாண்டிய வருவாயும் தேவையே தவிர கொள்ளை லாபமல்ல. இது தான் கார்த்தியின் நிதி வாழ்விலும் ஏற்பட்டுள்ளது.
வருத்தப்படக்கூடிய நிலை என்னவென்றால், தனது இரு குழந்தைகளுக்காக எந்தவொரு நிதி இலக்கும் நிர்ணயிக்காமல் இருப்பதும், முதலீடு செய்யாமல் இருப்பதும் தான். காப்பீடு துறையில் வேலை பார்த்ததால், எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் திட்டங்களில் சிறிதளவு பணத்தை போட்டு வைத்துள்ளான். தனக்கும், தனது மனைவிக்குமான ஓய்வுகால திட்டமிடல் எதுவுமில்லை. அவசர தேவைக்கு பெரும்பாலும் நகை அடமானம், நண்பர்களிடம் வாங்குவது மற்றும் தனிநபர் கடனை(Personal Loan) சார்ந்திருப்பது.
இதனை நாம் ஒரு குறையாக சொல்ல முடியாது. மாறாக, அடுத்த தலைமுறைக்கான கற்றலாக தான் எடுத்து கொள்ள வேண்டும். நேர்மறையான விஷயம் என்னவென்றால் டேர்ம் காப்பீட்டை எடுத்திருந்தது தான். இப்போது அவனது சில லட்சங்களில் உள்ள கடனை அடைப்பதும், அவர்களது குடும்பத்திற்கான எதிர்கால பாதுகாப்பாகவும் வலம் வருவது இந்த டேர்ம் காப்பீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய தொகை தான். இருப்பினும் அவற்றில் நிலத்தை வாங்குகிறேன், ஆடம்பர பொருட்களை வாங்குகிறேன் அல்லது தவறான ஆலோசனையை யாரிடமும் கேட்காமல், பொறுமையாக திட்டமிடுவது சிறந்தது.
தேவையெனில் தகுந்த நிதி ஆலோசகரை நியமித்து கொள்வது நன்று. சரியான திட்டமிடல் மூலம் இரு குழந்தைகளின் எதிர்கால தேவைகளையும், துணைவியின் ஓய்வு கால கார்பஸ் தொகையையும் ஏற்படுத்தி கொள்ளலாம். இங்கே கார்த்தியின் தாயாரை பற்றியும் பேச வேண்டும். ஓய்வூதியதாரராக இருக்கும் கார்த்தியின் தாயார், இவர்களது குடும்பத்தில் அரவணைக்கும் போது அனைவரது நிதி நலனும் பாதுகாக்கப்படும். இது அந்த குடும்பத்தின் தனிநபர் நலனை பொறுத்து உள்ளது.
இங்கே ஒரு நிதி ஆலோசகராக(Financial Consultant) நான் சொல்ல வேண்டிய பகிர்வு – உடனடி முன்னெடுப்புகள்:
உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா ?
- பிறரது பொருளாதார வாழ்க்கையோடு ஒப்பிட்டு குறைபட்டு கொள்ளாதீர்கள். உங்களது வாழ்வை எப்போதும் மனநிறைவாக வைத்திருக்க வேண்டிய விஷயங்களை கற்று கொள்ளுங்கள்.
- பணத்தின் மீது ஆசைப்படுங்கள், கூடுமானவரை அவற்றை நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள்.
- வரவுக்குள் செலவு என்பதனை விட, வரவுக்குள் சேமிப்பை ஏற்படுத்தி விட்டு பின்னர் செலவு செய்யுங்கள். சேமிக்க முடியவில்லை என உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம். மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழக்க மட்டும் பணமிருக்கும் போது, உங்களுக்காக மற்றும் உங்களது குடும்பத்தினரின் நலனுக்காக நேர்மையாக சேமிக்கலாமே.
- நிதி சார்ந்த தகவல்களை எப்போதும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால், அதனை புரியவைக்கும் முயற்சியை எடுங்கள். இல்லையெனில், அவர்களுக்கான கருப்பு பெட்டி(Plane’s Black Box) எங்குள்ளது என்பதனையாவது சொல்லி வையுங்கள்.
- நீங்கள் நம்பும் மற்றும் நெருங்கிய உறவுகளிடம் உங்களது நிதி சார்ந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள தயாராகுங்கள். அவசர காலத்தில், உங்கள் குடும்பத்தினருக்கு அவர்கள் உதவக்கூடும். நெருங்கிய உறவுகள் ரத்த சொந்தங்கள், உங்கள் பெற்றோரால் அறிமுகமானவர்கள், நண்பர், உடன் வேலை பார்ப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உங்கள் நம்பகத்தன்மை அவசியம் !
- உயில்(Will) எழுத பழகுங்கள்; வயதான காலத்தில் தான் உயில் எழுத வேண்டுமென்ற அவசியமில்லை. 18 வயது நிரம்பிய யாவரும் எழுதலாம் உயில்.
- நாமினேஷன், சொத்துக்களை பகிர்தல், கூட்டு கணக்கு(Joint holding), நிதி சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் மற்றவருக்கு அதிகாரம் அளிப்பது(Power of Attorney), பெயர் மாற்றம் ஆகியவற்றை சரியாக திட்டமிடுங்கள். ஆவணங்களை பராமரிப்பதும் அவசியம்.
- மின்னணு சார்ந்த அட்டைகள்(Credit, Debit Cards, UPI Payment app, Wallets), அறிக்கைகள் போன்றவற்றிற்கான கடவுச்சொல்லை(Passwords, Pattern & PIN) உங்கள் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக சொல்லி வையுங்கள். பொதுவெளியில் அனைவருக்கும் தெரியும் படி எழுத அல்லது தெரியப்படுத்த வேண்டாம் என்று தான் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூறுகிறது. உங்கள் துணையிடம் பகிருங்கள்.
- கைபேசி, மின்னஞ்சல், கணினியில் உள்ள ஆவணங்களை(Documents on Mobile, Email, Computer) குடும்பத்தினர் படிப்பதற்கான ரகசிய குறியீடுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
- போதுமான டேர்ம் காப்பீட்டு(Term Insurance) தொகையை எடுங்கள். பிரீமியம் தொகையில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களுக்கு பிறகான தொகை தான் இங்கே அவசியம். உங்களது குடும்பத்தினரை பாதுகாக்க அது மட்டுமே அப்போது உதவும். உயிரோடு இருந்தால் எனக்கு பணம் ஏதும் வராதே என கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் பாலிசி காலம் முடியும் வரையில் உயிரோடு இருந்தால் அதனை விட வேறென்ன மகிழ்ச்சி !
- தேவையான அளவு மருத்துவ காப்பீடு, அவசர கால நிதி(Emergency Fund), விபத்து காப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துங்கள். குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல், ஓய்வுகால திட்டமிடல் ஆகியவற்றுக்கு தேவையான கார்பஸ் தொகையை சரியாக கணக்கிடுங்கள்.
- எதிர்கால தேவைக்கு இன்சூரன்ஸ் திட்டத்தில் சேமித்து வருகிறேன் என தவறான கணக்கினை செய்து கொள்ள வேண்டாம். உங்களது வாழ்நாள் எதிரி – பணவீக்கம்(Inflation) உள்ளது. மறக்காதீர்கள், இதனை கருத்தில் கொண்டு சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
- மேலே சொன்னவற்றுக்கு பணம் நிறைய வேண்டுமே, என் சம்பளத்தில் இதனை செய்ய முடியாது, இவ்வளவு தேவையற்ற செலவா என அலுத்து கொள்ளாதீர்கள். காப்பீடு, பங்குகள், பரஸ்பர நிதிகள், பத்திரங்கள், வங்கிகள் எல்லாம் கார்ப்பரேட் சதி, இல்லுமினாட்டி என சொல்லி கொண்டே உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம்.
- நீங்கள் பயன்படுத்தும் கைபேசி, நெட் பிளிக்ஸ், விவசாய உரம், இயற்கை வாழ்வு, துரித உணவு(Fast food), முகநூல், வாட்சப், யூடியூப், என்னுடைய தளம் உட்பட எல்லாம் கார்ப்பரேட் சதி தான். இதற்கு செலவு செய்யும் நாம், நேசிக்கும் குடும்பத்தை பாதுகாக்க, இந்த இல்லுமினாட்டி பயல்களிடம் இருந்து பாதுகாக்க உங்கள் இறப்பிற்கு பிறகான பாதுகாப்பை எடுத்து தான் ஆக வேண்டும். எனவே நிதி பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, அப்புறம் கார்ப்பரேட் சதியை முறியடிப்போம்.
- உங்களுக்கு தெரியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம். முடிந்தால் கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் விலகியிருங்கள். தவறான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டாம்.
- வரக்கூடிய காலம் மெய்நிகர் நாணயம்(Virtual or Digital Currency), செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence), தகவல் தளம்(Data) மற்றும் தானியங்கி சேவையை அதிகமாக கொண்டிருக்கும். எனவே அதனை பற்றிய அறிவை உங்களது குடும்ப உறுப்பினர்களிடம் சிறிய வகையில் பகிருங்கள். மின்னணு முறையிலான பரிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்கு சொல்லி கொடுங்கள். இணைய வழியிலான திருட்டுகளிடம் இருந்து எப்படி நமது பணத்தை மற்றும் தகவலை பாதுகாப்பது என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.
- உடல்நலம் பேணுங்கள். நிகழ்காலத்தில் இருக்க கூடிய மிகப்பெரிய சொத்து அது தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் !
- மோட்டிவேஷன் ஸ்டோரீஸ் அதிகம் வேண்டாம். சிரிக்க பழகுங்கள்; நல்ல நட்பு வட்டத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்; நல்ல உணவுகளை பகிருங்கள், குடும்பத்தின் அவசியம் உணருங்கள்; குழந்தைகளுக்கு நிதி சார்ந்த விளையாட்டுகளை கற்று கொடுங்கள், இயல்பாக இருங்கள். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் உங்கள் வாழ்வை மெருகேற்றும்.
எங்கும் எனது கண்டுபிடிப்பையும், சேவையையும் கொண்டு சேர்ப்பேன் என்றிருந்த நாடு, இன்று வல்லரசாக. எல்லாம் கிடைக்கப்பெற்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுக்காமல் மறைந்த உண்மைகள் பல, மற்றொரு நாட்டில்.
குடும்பத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள் – குறைந்தபட்சம் நிதி சார்ந்து !
நாம் இந்த பூவுலகில் நிரந்தரமாக இருக்க போவதில்லை. இருப்பினும், வரும் முன் காப்பதே நலம் என நம் முன்னோர்கள் செய்து விட்டு சென்ற காரியங்கள் பல. நாமும் அதை தொடர்வோம், பின்வரும் சந்ததிகள் வருத்தப்படாமல் இருக்க…
#RIPKarthik
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை