நீங்க நல்லவரா, கெட்டவரா – கடன் ?
Debt – is it good or bad ?
“கடன் ” – இந்த வார்த்தையை கேட்டாலே சிலருக்கு அலர்ஜியாக (ஒவ்வாமை) இருக்கும். சிலர் சாமர்த்தியமாக கையாளுவர். (Debt /Loan)
‘ கடன் அன்பை முறிக்கும் ‘ – அன்பு இருக்குமோ இல்லையோ, நமது தினசரி வாழ்க்கையை கடன் பாதிக்காமல் இருந்தால் நல்லது. கடனில்லாமல் வாழ்வது ஒரு மோட்சம் தான்; ஆனால் ஏனோ எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. காரணம், கடனை பற்றிய நமது புரிதலை சரி செய்யாதது தான். பலர் கடனை வாங்கி விட்டு தங்கள் அற்புதமான வாழ்க்கையை மூழ்கடித்து விடுகின்றனர். சிலரோ வாங்கிய கடனை வாழ்நாள் முழுவதும் கட்டி விட்டு, ஏன் கடன் வாங்கினோம் என பெருமூச்சு விடுகின்றனர். வெகு சிலர் தான் அதனை சாமர்த்தியமாக பயன்படுத்துகின்றனர் (அ) கடனில்லாமல் வாழ பழகுகின்றனர். நாம் ஒவ்வொருவரும் நமது நிதி வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் கடன் வாங்கி விட்டு தான் செல்கிறோம்.
கடன்கள் எத்தனை (Loans ?
- தனி நபர் கடன்
- வாகன கடன்
- வீட்டுக்கடன்
- கல்வி கடன்
- நகை கடன்
- தொழில் கடன்
- கடன் அட்டை கடன் (Credit Card )
பெரும்பாலும் நம்மில் பலர் மேலே உள்ள ஏதேனும் ஒரு கடனை (அ) அனைத்து கடனையும் வாங்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களை விட்டு விட்டு தவணை காலத்தின் பாதியில் தான் அதனை புரிந்து கொள்ள முயல்கிறோம். நிறுவனங்கள் கடன் வாங்கி கட்ட முடியாமல் திவாலாகி தத்தளிப்பதை விட தனிநபர்களின் கடன்கள் சில சமயங்களில் வாழ்க்கையை பணயம் வைக்கின்றன. கடன் தற்கொலைகளும் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.
நமக்கு ஒரு வீடு தேவையெனும் போது, அதற்கான வீட்டுக்கடனை நாம் வங்கியிடமோ (அ) நிதி நிறுவனங்களிடமோ பெறுகிறோம். நமது வருமானத்தில் பாதிக்கும் மேலாக கடன் தொகை ஆக்கிரமித்து உள்ளன. உண்மையில் நமது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கு இடையில் தான் கடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்று தனிநபர் கடனும், EMI (Equated Monthly Installment) மூலம் நுகர்வோர் கடனும் வாங்குவது எளிதாகவும், சர்வ சாதாரணமாகவும் ஆகி விட்டது. இவற்றில் தான் பெரும்பாலோர் தங்கள் வருமானத்தை செலவிடுகின்றனர்.
Zero Interest EMI / No cost EMI என்னும் மாயை:
வீட்டு சாதனம், ஆடம்பர பொருட்களை நமது விருப்பப்படி வாங்கும் போது, நாம் முன்னரே சேமித்து வாங்க பழகுவதில்லை. மாறாக EMI எனும் மாத தவணைகளை தான் தேர்ந்தெடுக்கிறோம். இது நகை வாங்குவதிலும் சரி. நம்மில் பலர், ‘ நான் வட்டியில்லா தவணையில் பொருட்களை வாங்கினேன்; அதனால் எனக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை ‘ என்று எண்ணுகிறோம். உண்மையென்ன ?
நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்து எந்த லாபமும் இல்லாமல் மாத தவணையில் உங்கள் விற்பனையை தொடங்குவீர்களா ? எந்த நிதி நிறுவனம் உங்களுக்கு லாப நோக்கமில்லாமல் EMI கொடுக்க முன்வருகிறது. தவணை முடிவில் நாம் சரியாக பார்த்தால் Terms and Conditions apply – நிபந்தனைக்கு உட்பட்டது தான் வேலை செய்யும். Zero Interest EMI, ஆனால் பரிவர்த்தனை கட்டணம், பொருட்களின் விலையில் மறைமுகமாக சற்று அதிகம். எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 🙂 முடிவில் நம்மை கடன் வாங்க தூண்டுவது, நமது Impulsive Buying எனும் ஆராய்வில்லாத விருப்பம் தான் !
கடன் வாங்க கூடாதா ?
அப்படியில்லை; நமது தேவைகளுக்கு நாம் கடன் வாங்கலாம், ஆனால் விருப்பங்களையும் சற்று தள்ளி வைத்து விட்டு பார்க்கவும். நமக்கு ஒரு சொந்த வீடு இல்லை எனும் போது முடிந்தவரை முன் பணத்தை சேமித்து / முதலீடு செய்து பழகி வீடு கட்டலாம் (அ) வாங்கலாம். நமக்கான சேமிக்கும் காலம் போதவில்லை என்றால் மட்டுமே நாம் வீட்டுக்கடனை எதிர்பார்க்கலாம். நமது மற்றுமொரு (இரண்டாவது வீடு) வீட்டுக்கு கடன் வாங்குவதை பற்றி சற்று யோசிக்க வேண்டும். அது உங்கள் சொத்தாக கருதினால், அதனால் வருமான வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கணக்கிட வேண்டும்.
உதாரணத்திற்கு, உங்களிடம் 25 லட்சம் பணம் ரொக்கமாக உள்ளது (அ) அதன் மதிப்புள்ள வீடு(இரண்டாவது வீடு) வாங்க வீட்டுக்கடனை எதிர்பார்க்கிறீர்கள் என வைத்து கொள்வோம். 25 லட்சம் மதிப்பிற்கு நீங்கள் வீடு வாங்கினால் அதன் முதலீட்டின் மீது நீங்கள் மாதாமாதம் எவ்வளவு வருமானம் பார்க்க முடியும் என்று கணக்கிட வேண்டும். அது போதிய வருமானம் தராத போது, அந்த ரொக்க தொகையை நீங்கள் ஒரு வங்கியில் டெபாசிட் செய்து விட்டு வாடகையை விட சற்று அதிகமாக வட்டி வருமானம் பெறலாம். அதற்காக கடன் வாங்கி டெபாசிட் செய்வது நல்லதல்ல. எல்லாம் கணக்கு தான் – வருமானத்திற்கும், கடனுக்கும் ! சிலர் அவசியமில்லாமல் வாகன கடன் வாங்குகிறேன் என்ற பெயரில் வீட்டில் 4 (அ) 5 வாகனங்களை முடக்கி விடுகின்றனர். வாகன கடன் போக, அந்த வாகனத்திற்கு தேய்மான செலவு மற்றும் காப்பீடு செலவு உள்ளது என்பதை மறவாதீர்கள். இன்னும் சிலரோ EMI மூலம் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக தனி நபர் கடன், கடன் அட்டை கடன் என கடன் பட்டியல் நீள்கிறது.
கடனை தவிர்க்க, கடனில்லாமல் இருக்க…(Debt Free)
- வீட்டுக்கடன் வாங்கும் முன், வீடு கட்ட (அ) வாங்க தேவையான தொகையை முன்கூட்டியே சேமிக்க முயலுங்கள்; வீட்டுக்கனவையும் முன்னரே திட்டமிடுங்கள், முடிந்தால் தள்ளி போட முயற்சியுங்கள். அவசர முடிவில் கடன் வாங்க வேண்டாம்.
- வாகன கடன் வாங்குவதற்கு பதில், முன்னரே திட்டமிட்டு வாகனம் வாங்க தேவையான பணத்தை ஒரு அஞ்சலக / வாங்கி RD ல் சேமித்து முதிர்வு தொகை மூலம் வாங்குங்கள். வாகனத்தை தேவையான இடத்திலும், அவசர உதவிக்கும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் உங்களுக்காக Call Taxi யும், பொது போக்குவரத்தும் உள்ளன.
- கடன் அட்டை (Credit Card) மூலம் பெறும் கடனை முடிந்தவரை தவிருங்கள் (அ) புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். கடன் அட்டைக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை மறந்திருக்க வேண்டாம்.
- கல்வி கடன் கிடைக்கிறது, வரிசலுகையும் உண்டு என்பதற்காக வாங்க வேண்டாம். உங்கள் குழந்தையின் எதிர்கால கல்விக்கு இப்போதே நிதிதிட்டமிடல் செய்யுங்கள் (Financial Planning for Education).
- சுற்றுலா செல்வதை திட்டமிடுங்கள், அதற்காக உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க பழகுங்கள்.
- அவசர கால நிதியை எப்போதும் தயார் செய்யுங்கள்.
- உங்களுக்கு கடன் இல்லாவிட்டாலும் தேவையான Term Insurance – ஆயுள் காப்பீடை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் உங்கள் வருமானத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
- நீங்கள் வாங்கும் கடன் எதிர்காலத்தில் வருமானம் ஏதேனும் தர வாய்ப்புள்ளதா, இருக்கும் செலவுகளை குறைக்குமா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள்.
உங்கள் கடன் (Debt to income Ratio) தன்மை விகிதத்தை கணக்கிட…
Total Debt / Total Income (or) Asset
* கிடைக்கும் மதிப்பை 1 க்கு கீழ் வைத்திருங்கள்.
கடனை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளுங்கள்; அது உங்களை கடனில்லாமல் பாதுகாக்கும்.
வாழ்க வளமுடன், வர்த்தக மதுரை