Tag Archives: emi vs sip

கடனில்லா வாழ்வு பேரின்பமே…

கடனில்லா வாழ்வு பேரின்பமே

 Debt Free Life is a Bliss

 

கடன் அன்பை முறிக்கும்; இல்லையில்லை, கடன் அனைத்தையும் முறிக்கும். கைபேசி வாங்குவதற்கான EMI முதல் ‘Entrepreneurship’ என்னும் தொழில்முனைவு வரை இன்று கடன் பெறுவது என்பது சுலபமானதாக உள்ளது. தேவையிருந்தால்  கடன் வாங்கலாம். ஆனால் கடன் வாங்குவதை மட்டுமே நமது தேவையாக வைத்திருத்தல் நல்லதல்ல. ஏழைக்கும், நடுத்தர மக்களுக்கும் தான் இந்த கடன் ஒரு பிரச்சனை என்றால், பணக்காரர்கள் என்று சொல்பவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் கடன் ஒரு தொல்லையே.

 

இன்று பலருக்கு மரணக்குழிக்கான பாதையை காட்டுவது இந்த கடன்(Debt) தான். நம்மில் பலர் கடன் வாங்கியாவது மற்றவர்களிடம் ஆடம்பரத்தை வெளிப்படுத்த வேண்டும் என முனைகின்றனர். நான்கு சக்கர வாகனம் தேவைப்படாவிட்டாலும், தவணை முறையில் வாங்கி வைத்து விட்டு, சில காலத்திற்கு பின்பு அதனை சுமக்க முடியாமல் விற்பது அல்லது எக்ஸ்சேஞ் மேளாவிற்கு(Exchange Mela) செல்வது நடைபெற தான் செய்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இவ்வுலகில் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய விஷயம் இன்று, கடன் பெறுவது தான். கடினமான வாழ்க்கை எனில், அது எளிமையாக(Frugality) வாழ்வது தான். கடனில்லாமல் நம்மால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு காலகட்டத்தில் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பரவாயில்லை, கடனை அடைக்க பழகலாம். ஆனால் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன், மேலும் ஒரு கடன் என வாங்க முயலாதீர்கள். இங்கு தான் பெரும்பாலானவர்கள் கடன் வலையில் விழுவதற்கான வாய்ப்பு அதிகம். கந்து வட்டி கதையும் இங்கு தான்.

 

கடனில்லா வாழ்வின் சுகங்கள்:

 

 • நிதி சார்ந்த விஷயத்தில், உங்களிடம் சுய கட்டுப்பாடு(Self Control) இருக்கும். எந்தவொரு பொருளையும் யோசித்து தான் வாங்குவீர்கள்.

 

 • நீங்கள் விரும்பிய தொழிலை, பிடித்த வேலையையோ செய்யலாம்.

 

 • நிதி சுதந்திரம்(Financial Freedom) பெறுவதற்கான முதல் படி கடனில்லாமல் இருப்பது அல்லது கடனை குறைப்பது தான்.

 

 • வரவுக்குள் உங்கள் செலவுகள் உள்ளதை இங்கே உறுதி செய்து கொள்ளலாம்.

 

 • அமைதியான குடும்பம், மன அழுத்தமில்லா வாழ்க்கை(Stress free Life).

 

 • யாரிடமும் நீங்கள் பயமின்றி (பொருளாதார ரீதியாக) பேசலாம்.

 

 • உண்மையில் நீங்கள் தான் பணக்காரர் (வரவுக்குள் செலவு). உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் ஏராளம்.

 

 • தேவை மற்றும் விருப்பத்திற்கான(Need & Wants) தேர்வை பிரித்துணர முடியும்.

 

 • எப்படிப்பட்ட நிதிச்சிக்கலையும் உங்களால் சமாளிக்க முடியும்.

 

 • குறைவில்லா நிதி வாழ்க்கையை பெற முடியும்.

 

கடனில்லாமல் வாழ்வதற்கான எளிய உத்திகள்

 

 • உங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குங்கள்.

 

 • மற்றவர்களிடம் உள்ளது என பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.

 

 • கடன் வாங்கும் முன், அது நமக்கு தேவையா என பல முறை யோசியுங்கள். கடன் வாங்க முயலும் போது, குறைந்த வட்டிக்கான வாய்ப்புகளை கண்டறியுங்கள்.

 

 • நிதி சார்ந்த விஷயங்களில் பேரம் பேச தயங்காதீர்கள். அதற்காக இலவசமாக எதையும் பெற வேண்டாம்.

 

 • எப்போதும் பட்ஜெட் திட்டமிடலை(Budget Planning) செயலாற்றுங்கள்.

 

 • கடன் – முதலீடு என வரும் போது, கடனை அடைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் கடனை அடைக்கும் நிலையில், உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் அமையும்.

 

 • கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை பெறுங்கள்.

 

 • எந்தவொரு பொருளை வாங்கும் முன், அதற்கான சேமிப்பை அல்லது முதலீட்டை முன்னரே துவக்கி, முதிர்வு தொகையை கொண்டு உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குங்கள்.

 

 • EMI vs SIP – இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.

 

 • வரி சலுகையை திறமையாக பயன்படுத்துங்கள். டேர்ம் பாலிசி(Term Policy) மற்றும் உடல்நல காப்பீட்டுக்கு(Health Insurance) முக்கியத்துவம் கொடுங்கள்.
 • தாமதமான மனநிறைவை கொள்ளுதல் (Delayed Gratification) – இது பணக்காரர் ஆவதற்கான சூத்திரம். நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் போது, கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்கலாம். இது பிற்காலத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க உதவும்.

 

 

நீங்கள் இப்போதே பணக்காரரா, ஏழையா என்பதனை அடையாளம் காண:

 

Rich Worth Value (பணக்கார மதிப்பு) =   மொத்த சொத்துக்கள் / மொத்த கடன்கள்

 

உங்களின் பணக்கார மதிப்பு ஒன்றுக்கு(1) மேற்பட்டு இருந்தால் சந்தோசப்பட்டு கொள்ளுங்கள். இன்னும் உயர்த்த தயாராகுங்கள்.

 

சமமாக ஒன்று(1) அல்லது ஒன்றுக்கு குறைவாக இருந்தால், நிதி விஷயத்தில் கவனம் தேவை. இதனை திருத்தி கொள்ளுங்கள் (கடனை குறையுங்கள்).

 

நண்பர் ஒருவர், ‘ எனக்கு இணைய விளையாட்டில் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் சந்தோஷப்படுவேன் ‘ என்று சொன்னார். ‘ நீங்கள் அந்த ஒரு கோடி ரூபாயை வைத்து என்ன செய்வீர்கள் ‘ என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கையில், ‘ நான் அதனை எனக்கு பிடித்த விதத்தில் செலவு செய்வேன் ‘ என்கிறார். இங்கு தான் நிதித்திட்டமிடல் முக்கியத்துவம் பெறுகிறது. உங்களிடம் நிறைய பணம் இருந்தால் நன்று. மாறாக, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே இருக்கையில், அதனை சாமர்த்தியமாக முதலீடு செய்து, பின்பு அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் செலவு செய்ய தொடங்கினால் – கடனில்லா வாழ்வு பேரின்பமே !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

நீங்க நல்லவரா, கெட்டவரா – கடன் ?

 

நீங்க நல்லவரா, கெட்டவரா  – கடன் ?

Debt – is it good or bad ?

கடன் ” –  இந்த வார்த்தையை கேட்டாலே சிலருக்கு  அலர்ஜியாக (ஒவ்வாமை) இருக்கும். சிலர் சாமர்த்தியமாக கையாளுவர். (Debt /Loan)

 

கடன் அன்பை முறிக்கும் ‘ – அன்பு இருக்குமோ இல்லையோ, நமது தினசரி வாழ்க்கையை  கடன் பாதிக்காமல் இருந்தால் நல்லது. கடனில்லாமல் வாழ்வது ஒரு மோட்சம் தான்; ஆனால் ஏனோ எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. காரணம், கடனை பற்றிய நமது புரிதலை சரி செய்யாதது தான். பலர் கடனை வாங்கி விட்டு தங்கள் அற்புதமான வாழ்க்கையை மூழ்கடித்து விடுகின்றனர். சிலரோ வாங்கிய கடனை வாழ்நாள் முழுவதும் கட்டி விட்டு, ஏன் கடன் வாங்கினோம் என பெருமூச்சு விடுகின்றனர். வெகு சிலர் தான் அதனை சாமர்த்தியமாக பயன்படுத்துகின்றனர் (அ) கடனில்லாமல் வாழ பழகுகின்றனர். நாம் ஒவ்வொருவரும் நமது நிதி வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் கடன் வாங்கி விட்டு தான் செல்கிறோம்.

 

கடன்கள் எத்தனை (Loans ?

 

 • தனி நபர் கடன்
 • வாகன கடன்
 • வீட்டுக்கடன்
 • கல்வி கடன்
 • நகை கடன்
 • தொழில் கடன்
 • கடன் அட்டை கடன் (Credit Card )

 

பெரும்பாலும் நம்மில் பலர் மேலே உள்ள ஏதேனும் ஒரு கடனை (அ) அனைத்து கடனையும் வாங்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களை விட்டு விட்டு தவணை காலத்தின் பாதியில் தான் அதனை புரிந்து கொள்ள முயல்கிறோம். நிறுவனங்கள் கடன் வாங்கி கட்ட முடியாமல் திவாலாகி தத்தளிப்பதை விட தனிநபர்களின் கடன்கள் சில சமயங்களில் வாழ்க்கையை பணயம் வைக்கின்றன. கடன் தற்கொலைகளும் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

 

நமக்கு ஒரு வீடு தேவையெனும் போது, அதற்கான வீட்டுக்கடனை நாம் வங்கியிடமோ (அ) நிதி நிறுவனங்களிடமோ பெறுகிறோம். நமது வருமானத்தில் பாதிக்கும் மேலாக கடன் தொகை ஆக்கிரமித்து உள்ளன. உண்மையில் நமது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கு இடையில் தான் கடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்று தனிநபர் கடனும், EMI (Equated Monthly Installment)  மூலம் நுகர்வோர் கடனும் வாங்குவது எளிதாகவும், சர்வ சாதாரணமாகவும் ஆகி விட்டது. இவற்றில் தான் பெரும்பாலோர் தங்கள் வருமானத்தை செலவிடுகின்றனர்.

 

Zero Interest EMI / No cost EMI என்னும் மாயை:

 

வீட்டு சாதனம், ஆடம்பர பொருட்களை நமது விருப்பப்படி வாங்கும் போது, நாம் முன்னரே சேமித்து வாங்க பழகுவதில்லை. மாறாக EMI எனும் மாத தவணைகளை தான் தேர்ந்தெடுக்கிறோம். இது நகை வாங்குவதிலும் சரி. நம்மில் பலர், ‘ நான் வட்டியில்லா தவணையில் பொருட்களை வாங்கினேன்; அதனால் எனக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை ‘ என்று எண்ணுகிறோம். உண்மையென்ன ?  

 

நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்து எந்த லாபமும் இல்லாமல் மாத தவணையில் உங்கள் விற்பனையை தொடங்குவீர்களா ? எந்த நிதி நிறுவனம் உங்களுக்கு லாப நோக்கமில்லாமல் EMI கொடுக்க முன்வருகிறது. தவணை முடிவில் நாம் சரியாக பார்த்தால் Terms and Conditions apply – நிபந்தனைக்கு உட்பட்டது தான் வேலை செய்யும். Zero Interest EMI, ஆனால் பரிவர்த்தனை கட்டணம், பொருட்களின் விலையில் மறைமுகமாக சற்று அதிகம். எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 🙂  முடிவில் நம்மை கடன் வாங்க தூண்டுவது, நமது Impulsive Buying எனும் ஆராய்வில்லாத விருப்பம் தான் !

 

கடன் வாங்க கூடாதா ?

 

அப்படியில்லை; நமது தேவைகளுக்கு நாம் கடன் வாங்கலாம், ஆனால் விருப்பங்களையும் சற்று தள்ளி வைத்து விட்டு பார்க்கவும். நமக்கு ஒரு சொந்த வீடு இல்லை எனும் போது முடிந்தவரை முன் பணத்தை சேமித்து / முதலீடு செய்து பழகி வீடு கட்டலாம் (அ) வாங்கலாம். நமக்கான சேமிக்கும் காலம் போதவில்லை என்றால் மட்டுமே நாம் வீட்டுக்கடனை எதிர்பார்க்கலாம். நமது மற்றுமொரு (இரண்டாவது வீடு) வீட்டுக்கு கடன் வாங்குவதை பற்றி சற்று யோசிக்க வேண்டும். அது உங்கள் சொத்தாக கருதினால், அதனால் வருமான வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கணக்கிட வேண்டும்.

 

உதாரணத்திற்கு, உங்களிடம் 25 லட்சம் பணம் ரொக்கமாக உள்ளது (அ) அதன் மதிப்புள்ள வீடு(இரண்டாவது வீடு)  வாங்க வீட்டுக்கடனை எதிர்பார்க்கிறீர்கள் என வைத்து கொள்வோம். 25 லட்சம் மதிப்பிற்கு நீங்கள் வீடு வாங்கினால் அதன் முதலீட்டின் மீது நீங்கள் மாதாமாதம் எவ்வளவு வருமானம் பார்க்க முடியும் என்று கணக்கிட வேண்டும். அது போதிய வருமானம் தராத போது, அந்த  ரொக்க தொகையை நீங்கள் ஒரு வங்கியில் டெபாசிட் செய்து விட்டு வாடகையை விட சற்று அதிகமாக வட்டி வருமானம் பெறலாம். அதற்காக கடன் வாங்கி டெபாசிட் செய்வது நல்லதல்ல. எல்லாம் கணக்கு தான் – வருமானத்திற்கும், கடனுக்கும் ! சிலர் அவசியமில்லாமல் வாகன கடன் வாங்குகிறேன் என்ற பெயரில் வீட்டில் 4 (அ) 5 வாகனங்களை முடக்கி விடுகின்றனர். வாகன கடன் போக, அந்த வாகனத்திற்கு தேய்மான செலவு மற்றும் காப்பீடு செலவு உள்ளது என்பதை மறவாதீர்கள். இன்னும் சிலரோ EMI மூலம் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக தனி நபர் கடன், கடன் அட்டை கடன் என கடன் பட்டியல் நீள்கிறது.

 

கடனை தவிர்க்க, கடனில்லாமல் இருக்க…(Debt Free)

 

 • வீட்டுக்கடன் வாங்கும் முன், வீடு கட்ட (அ) வாங்க தேவையான தொகையை முன்கூட்டியே சேமிக்க முயலுங்கள்; வீட்டுக்கனவையும் முன்னரே திட்டமிடுங்கள், முடிந்தால் தள்ளி போட முயற்சியுங்கள். அவசர முடிவில் கடன் வாங்க வேண்டாம்.
 • வாகன கடன் வாங்குவதற்கு பதில், முன்னரே திட்டமிட்டு வாகனம் வாங்க தேவையான பணத்தை ஒரு அஞ்சலக / வாங்கி RD ல் சேமித்து முதிர்வு தொகை மூலம் வாங்குங்கள். வாகனத்தை தேவையான இடத்திலும், அவசர உதவிக்கும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் உங்களுக்காக Call Taxi யும், பொது போக்குவரத்தும் உள்ளன.
 • கடன் அட்டை (Credit Card) மூலம் பெறும் கடனை முடிந்தவரை தவிருங்கள் (அ) புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். கடன் அட்டைக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை மறந்திருக்க வேண்டாம்.
 • கல்வி கடன் கிடைக்கிறது, வரிசலுகையும் உண்டு என்பதற்காக வாங்க வேண்டாம். உங்கள் குழந்தையின் எதிர்கால கல்விக்கு இப்போதே நிதிதிட்டமிடல் செய்யுங்கள் (Financial Planning for Education).
 • சுற்றுலா செல்வதை திட்டமிடுங்கள், அதற்காக உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க பழகுங்கள்.
 • அவசர கால நிதியை எப்போதும் தயார் செய்யுங்கள்.
 • உங்களுக்கு கடன் இல்லாவிட்டாலும் தேவையான Term Insurance – ஆயுள் காப்பீடை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் உங்கள் வருமானத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
 • நீங்கள் வாங்கும் கடன் எதிர்காலத்தில் வருமானம் ஏதேனும் தர வாய்ப்புள்ளதா, இருக்கும் செலவுகளை குறைக்குமா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள்.

உங்கள் கடன் (Debt to income Ratio) தன்மை விகிதத்தை கணக்கிட…

Total Debt / Total Income (or) Asset

* கிடைக்கும் மதிப்பை 1 க்கு கீழ் வைத்திருங்கள்.

 

கடனை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளுங்கள்; அது உங்களை கடனில்லாமல் பாதுகாக்கும்.

வாழ்க வளமுடன்,  வர்த்தக மதுரை

வாடகையா, ஒத்தியா (குத்தகை) ?

 

வாடகையா, ஒத்தியா (குத்தகை)   ?

SIP(Systematic Investment Planning)  vs Lumpsum Investment

 

இன்று நாம் அனைவரும் நம் வருமானத்தில் சேமிக்கிறோமோ இல்லையோ, ஆனால் நமக்கான கவுரவுமாக சில செலவுகளை கொண்டிருக்கிறோம். நாம் சம்பாதிப்பதை ஒரு கவுரவமாக நினைக்கிறமோ இல்லையோ, ஆனால் சில விஷயங்களை மதிப்புடன் வைத்துள்ளோம். நமது கவுரமாக (ஆடம்பரத்துடன்) கார் வாங்குவது, வீடு கட்டுவது (அ) வாங்குவது, அழகுக்கு, தொழில்நுட்ப சாதனங்களை வாங்கி சேர்ப்பது… இவற்றில் ஏழை – பணக்கார பாகுபாடின்றி எல்லாரும் மதிப்புடன் விரும்புவது ஒரு சொந்த வீடு வைத்திருப்பது தான். ஏனெனில் நமது நாட்டில் சொந்த வீடுகள் அதிகமாக இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் தனக்காக சொந்த வீடு இருப்பதையே கவுரவ செலவாக கொண்டுள்ளோம் (அதனாலே சிலருக்கு தங்குவதற்கு கூட வீடும் இல்லை). நாம் வாடகை வீட்டில் இருப்பதாய் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கு நமது காரணங்களாக,

‘வாடகை வீடு சௌகரியமாக இல்லை, வீட்டுக்காரரின் கெடுபிடிகள்’ போன்றவை. சரி வாடகை வீடு தான் என்றாலும், அதிலும் மற்றொரு விவாதம் – வாடகைக்கு இருப்பதா, ஒத்திக்கு இருப்பதா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வாடகை என்றால் மாதா மாதம் நமது வருமானத்திலிருந்து ஒரு தொகையை இதற்காக செலவு செய்ய வேண்டும். ஒத்தி வீடு எனில், வீட்டு சொந்தக்காரருக்கு ஒரு முழுத்தொகையை கொடுத்து விட்டு, வீட்டை காலி செய்யும் பொது அந்த தொகையை பெற்று கொள்வது;  அதாவது வீட்டுக்காரரிடம் ஒரு தொகையை டெபாசிட் செய்து விட்டு சில வருடங்களுக்கு பிறகு அதே தொகையை எந்த வட்டியும் பெறாமல் பெற்று கொள்வது; வேண்டுமானால் வீட்டுக்காரர் தான் பெற்ற தொகையை அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்திருக்கலாம் (அ) தனது பிற செலவுகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம். இந்த இரண்டிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதி. சில மாதங்களுக்கு மட்டும் ஒரு பகுதியில் குடியிருக்க நினைப்போர் வாடகை கொடுத்து விட்டு போவோம், அது தான் நமக்கு வசதி என்பார்கள். சிலர், நாம் தான் இந்த பகுதியில் அடுத்த சில வருடங்களுக்கு இருந்தாக வேண்டுமே, அதனால் எதற்கு இந்த வாடகை செலவு, ஒத்திக்கு இருந்து விட்டு முடிவில் நமது முதல் தொகையை பெற்று செல்வோம் என்பார்கள். வாடகையா, ஓத்தியா ? இது ஒரு விவாதமாகவே எப்போதும் இருக்கிறது.

 

இது போல தான் முதலீட்டிலும், நான் மாதா மாதம் (Recurring Deposit -RD) சேமிப்பதா, (அ) ஒரு முறை மட்டும்(Fixed Deposit -FD) முதலீடு செய்து விட்டு செல்வதா… எது சிறந்தது என கேட்பதுண்டு.

 

மாதாந்திர முதலீடு (Systematic Investment Planninng -SIP)  vs  ஒரு முறை மட்டும் மொத்த முதலீடு (Lumpsum):

 

 

சுருக்கமாக நம் வீட்டில் இந்த நிகழ்வு எப்போதும் நடப்பதுண்டு; என் பெற்றோரை நான் எப்போதும் கவனித்து கொண்டிருக்கிறேன்; ஆனால் என் அண்ணன் எப்போதாவது என் பெற்றோருக்கு உதவி செய்து விட்டு நல்ல பெயர் வாங்கி செல்கிறான், இது என்ன நியாயம் என பலர் சொல்வதுண்டு. விநாயக – முருகப்பெருமான் பழக்கதை தான் 🙂 இந்த முதலீடு விஷயம் அவ்வாறு மட்டுமல்ல…

 

உதாரணத்திற்கு:

 

ராம்குமார் என்பவர் ஒரு தொழில் முனைவோர், தனது வங்கி வைப்பு கணக்கில் இன்று ஒரு முறை மட்டும் மொத்த முதலீடாக ரூ. 1,00,000 /- ஐ (வருடங்கள் – 5, ஆண்டு வட்டி விகிதம் – 7 %) வைத்துள்ளார். நமது ராம்குமாரின் அருமை தம்பி கோபி அவர்கள் தன் அண்ணனை போல தொழில் செய்யா விட்டாலும் மாத சம்பளக்காரராக உள்ளதால் அவர் தனது மாத சம்பளத்திலிருந்து சேமித்து மாதம் ரூ. 1667 /- (அதாவது வருடத்திற்கு ரூ. 20,000 /-) அஞ்சலக RD ல் போட்டு வருகிறார்(இவருக்கும் வருடங்கள் – 5, ஆண்டு வட்டி – 7 %) ஆக மொத்தம் இவரும் 5 வருடத்திற்கு மொத்தமாக ரூ. 1 லட்சம்.

 

5 வருட முடிவில் இருவர் பெறும் முதிர்வுத்தொகை:

                      

 • ராம் குமார் –    ரூ. 1,40,300 /-
 • கோபி           –    ரூ. 1,19,300 /-

 

என்னடா இருவரும் ஒரே தொகையை, ஒரே காலத்திற்கு தான் முதலீடு செய்தார்கள்; ஆனால் தம்பி கோபியை விட ராம்குமார் அப்படி என்ன செய்து விட்டார் ? இது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல; அது தான் கூட்டு வட்டியின் ரகசியம். இதனை புரிந்து கொள்ள நம் பள்ளியில் 6 ம் வகுப்பு கணக்கே போதும். எளிதாக புரிய வேண்டுமானால் ராம்குமாரின் ஒரு முறை முதலீடான ரூ. 1 லட்சம், 5 வருடத்திற்கு கூட்டு வட்டியில் தான் அந்த ரூ. 1,40,300 முதிர்வு தொகையை கொடுத்தது. அதாவது தான் முதலீடு செய்த முதல் நாளிலிருந்து ஐந்தாம் வருட முடிவு நாள் வரையில் முழுத்தொகைக்கும் கூட்டு வட்டி வேலை செய்தது. ஆனால் கோபி விஷயத்தில் அப்படியல்ல. கோபியின் முதல் மாத முதலீடாக ரூ. 1667 /- மட்டுமே கூட்டு வட்டி 5 வருடமாக வேலை செய்தது. முதலீட்டு மாதங்கள் அதிகமாக கூட்டு அதற்கான கூட்டு வட்டி காலமும் குறைந்தது. அது தான் கூட்டு வட்டியின் ரகசியம், நீண்ட காலத்தில் பிரமாதமாக செயல்படும்.

 

நமது பள்ளி வகுப்பின் கூட்டு வட்டி (Compound Interest) Formula:

 

                         FV = PV  X  (1+r) ^n   

 

 • FV = Future Value (எதிர்கால மதிப்பு /தொகை)
 • PV = Present Value (தற்போதைய மதிப்பு /தொகை)
 •  r  = Annual interest rate (ஆண்டு வட்டி விகிதம்)
 •  n = Number of periods (காலங்கள் / வருடங்கள் )

அப்படியெனில் ராம்குமார் செய்வது தான் சிறந்தது என முடிவுக்கு வருவதா ? அது தான் இல்லை. ஒரு நல்ல முதலீடு என்பது காலத்தை சார்ந்தே உள்ளது. அது வெறும் பணத்தை கொண்டு மட்டுமல்ல. சிறு துளி பெருவெள்ளம் போல… நீங்கள் எத்தனை துளிகள் சேர்வதற்காக காத்து கொண்டிருக்கிறீர்களோ, அது தான் பெருவெள்ளமாகும். காலத்தினூடே பொறுமையும் அவசியம் (Power of Compounding).

 

உதாரணமாக ராம்குமாரால் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யும்படியும், கோபியால் அடுத்த 10 வருடங்களுக்கு மாத முதலீடு செய்ய முடியுமானால்…  

 

 • 10 வருடங்களுக்கு பிறகு, ராம்குமார் பெறுவது – ரூ. 1,96,700 /-
 • 10 வருடங்களுக்கு பிறகு, கோபி பெறுவது – ரூ. 2,86,750 /-

 

இப்போது புரிகிறதா !

சமீபத்தில் நானும் என் நண்பர் ஒருவரும் பிரபல வார இதழின் (நிதி சார்ந்த) முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது ஒரு பரஸ்பர நிதியின் மேலாளர் அவர்கள் ஒரு வரைபடத்தை காண்பித்தார், ‘ நீங்கள் 2002 ல் ஒரு பிரபல கம்பெனியின் வாகனத்தை (Car) வாங்கியிருந்தால் அதன் மதிப்பு அன்று ரூ. 5 லட்சம் என்றும் அதன் இப்போதைய மதிப்பு குறைந்திருப்பதுடன், வாகனத்தின் தேய்மான செலவு, காப்பீடு செலவும் தான் அதிகமாயிருக்கும். ஆனால் அதே 2002 ல் நீங்கள் ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தில் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் இன்று 2017 ல் அதே காரையும், உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு செலவு மற்றும் ஒரு ஆடம்பர திருமணத்தையும் செய்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் 2002 ல் செய்த ரூ. 5 லட்ச முதலீடு இப்போது (June, 2017) ரூ. 2.60 கோடியாக (பரஸ்பர நிதியில்) இருந்திருக்கும் ‘ என்றார். மற்றொரு படத்தில் நீங்கள் இளமையில் (25 வயது) முதலீடு செய்தால் உங்கள் ஓய்வு காலத்தில் (60 வயது) இவ்வளவு தொகை பெறுவீர்கள், அதனால் இளமையில் முதலீடு செய்யுங்கள் என காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த என் நண்பர் என்னிடம், ‘ நல்லா படத்தை காண்பித்து ஏமாற்றுகிறார்கள், ஏன் 35 வயதில் சேர்த்தாலும் 70 வயதில் இவ்வளவு கிடைக்கும் என சொல்லலாமே. எல்லாம் 35 வருட கணக்கு தானே ‘ என்றார். ஆனால் நாம் முதலீடு சார்ந்த விஷயத்தில் சற்று நடைமுறைகளுடன் சிந்திக்க பழக வேண்டும்.

25 வயதில் உங்களால் முதலீடு செய்து 60 வயதில் ஓய்வு பெறலாம். அதை தான் அரசாங்கமும் விரும்புகிறது. உங்களை அவர்கள் 70, 80 வயதில் வேலை செய்வதை விரும்பவில்லை. 35 வயதில் உங்களால் முதலீடு செய்ய முடியும், ஆனால் உங்களால் 70 வயது வரை தொடர முடியுமா ? அதற்கான வருமான வாய்ப்பு எளிதா ?

 

தற்போதெல்லாம் எல்லோரும்,  ‘இளமையில் ஓய்வு பெற போகிறேன் ‘ என்ற  சிந்தனை கொண்டவர்கள். நீங்கள் 70, 80 வயதுகளில் எப்படி நன்றாக சம்பாதித்து இருக்க முடியும். அந்த வயதில் நமது உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம் (பணத்தை விட). ஆதலால் நாம் நடைமுறைக்கு ஒத்து வரும் நம்மால் இயன்ற முதலீடை மேற்கொள்ளலாம். தேவை இருப்பின் முதலீட்டினை அதிகரித்தும் பயன் பெறலாம்.

 

வாடகையும், ஒத்தியும் நமக்கு அவ்வப்போது தேவை தான். குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு தகுந்தாற் போல் நாம் வாடகையையும் (SIP), ஒத்தியையும் (Lumpsum Investing) தேர்ந்தெடுக்கலாம். சொந்த வீடு தேவையுள்ளவர்கள் இப்போது தான் கடன் வாங்கி வீடு கட்ட வேண்டுமென்ற அவசியமில்லை; EMI கட்டுவதற்கு பதில் மாதாந்திர SIP ஐ தொடங்கியும் பிற்காலத்தில் ஒரு நல்ல வீட்டை வாங்கலாம் (அ) கட்டலாம்.

 

கடனில்லாமல் வாழ்வதும் ஒரு பெரும்பேறு தான் !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

http://www.varthagamadurai.com

(Slide Image Source: dreamstime.com)

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

EMI – EQUATED MONTHLY INSTALLMENT

SIP – SYSTEMATIC INVESTMENT PLAN

 

 

உங்களுக்கு ஒரு ஆசை… ஒரு அழகான மற்றும் நல்ல சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் (Mobile) வாங்க வேண்டுமென்று; சந்தையில் அதன் விலை ரூ. 15,000 /- மட்டுமே என வைத்து கொள்வோம். நல்ல Features உள்ள செல்போன் தான்; ஆனால் கையில் தான் பணம் சற்று குறைவாக உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் இருப்போ மிகவும் குறைவு. Minimum Balance ஐ பராமரிப்பது கூட, சில சமயம் சிரமமாக உள்ளது; யாரிடமாவது கைமாத்து வாங்கலாமா ? அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டுமென்றாலும், அடுத்த மாத சம்பளம் தானே இருக்கு ! என்ன பண்ணலாம் ???

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நினைத்து கொண்டிருந்த அந்த நேரத்தில், உங்களுக்காக ஒரு அதிர்ஷ்ட விளம்பரம் அழைக்கிறது; ஆம், அதிர்ஷ்ட விளம்பரமே தான் !!!  நீங்கள் வாங்க நினைக்கும் மொபைல் போனின் விளம்பரத்துடன்…

என்ன ஒரு ஆச்சர்யம் ! நீங்கள் வாங்க நினைக்கும் மொபைல் போனுக்கு, நீங்கள் எந்த முன்பணமும் செலுத்தாமல் வீட்டிற்கு எடுத்து செல்லலாம்; நீங்கள் பதிவு செய்த அன்றைய தினமே ரூ.15,000 /- மதிப்புள்ள பொருள் உங்களுக்கு சொந்தம் 🙂

ஆமாங்க, அந்த அதிர்ஷ்ட  EMI (EQUATED MONTHLY INSTALLMENT)  🙂

பிளான் இது தான்; செலக்ட் பண்ணுங்க என்று அந்த விளம்பரம் சொல்கிறது. முன்பணம் எதுவும் இல்லை !

 

EMI(Equated Monthly Installment):

 

நீங்கள் வாங்க நினைக்கும் ஒரு பொருளுக்கு, எந்த முன்பணமும் செலுத்தாமல் (அ) சிறு தொகை ஏதேனும் செலுத்தி விட்டு, மீதத்தொகையை மாத தவணைகளில் வட்டியுடன்  செலுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது.

Loan  EMI:  For Rs. 15,000 /-                     Rate of Interest:   12 %
6 Months 12 Months 24 Months
2588/- Monthly 1333/- Monthly 706/- Monthly

 

சாதகங்கள்:

 • நாம் விருப்பப்பட்ட பொருளை உடனடியாக, நாம் நினைத்த நேரத்தில் வாங்கலாம்; முழுத்தொகையையும் செலுத்தாமல் !
 • குறுகிய கால (அ) அவசர கால தேவைகளுக்கு ஏற்றது(Short term/Immediate Needs)

 

பாதகங்கள்:

 • பொருளின் அசல் சந்தை (Actual Price) மதிப்பை விட நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள்; அதாவது நீங்கள் செலுத்தும் வட்டி % (Paying more than the Actual market price )
 • ஒரு பொருளை நீங்கள் உடனடியாக பெற்றாலும், அதற்கு நீங்கள் முழு உரிமை பெற முடியாது (உங்கள் தவணை காலம் முடியும் வரை)
 • செலவழிக்கும் பழக்கம் அதிகரிக்கும்; எதையும் உடனே வாங்க வேண்டுமென்ற எண்ணம் (Impulsive Buying) ஏற்படலாம்; நீங்கள் எதிர்காலத்தில் கடன்காரராக மாறலாம்.

 

SIP(Systematic Investment Plan / Recurring):

 

இலக்குகளுக்காக (அ) எதிர்கால தேவைகளுக்காக, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் (Monthly, Quarterly, Yearly – Frequency) உங்கள் பணத்தினை முதலீடு செய்வது / சேமிப்பது; முதலீட்டின் முதிர்வில், உங்கள் இலக்குகளில் (அ) தேவைகளை நிறைவேற்றுவது.

 

SIP என்றாலே, பரஸ்பர நிதி திட்டம்(Mutual Funds) தான் என்று நாம் முடிவு செய்து விட கூடாது. நீங்கள் சேமிக்கும் அஞ்சலக சேமிப்பு(Postal Savings), வங்கி RD, PF ம் SIP ஆகும்.

 

உங்கள் இலக்கு, ரூ. 15,000 /- மொபைல் போன் என்றால்,

SIP Goal:     Rs. 15,000 /-  (Mobile Phone)    Expected Return:   10 %
6 Months 12 Months 24 Months
2430 /- Monthly 1200 /- Monthly 565 /- Monthly

 

சாதகங்கள்:

 • சேமித்து வாங்கும் பழக்கம் ஏற்படுவதினால், நீங்கள் அவ்வளவு சீக்கிரமாக எந்த பொருளையும், பணத்தையும் விரயம் செய்யமாட்டீர்கள்.
 • நீங்கள் வாங்க நினைக்கும் பொருளுக்கு, முழு தொகையை செலுத்தி சொந்தம் கொண்டாடலாம்.
 • வாங்க நினைக்கும் பொருளின் மதிப்பை விட,  உங்கள் முதலீடு கொஞ்சம் வட்டி வருமானம் அதிகமாகவும் கொடுத்திருக்கலாம்.
 • நீண்ட கால இலக்குகளுக்கு நல்லது (Education, Marriage, Retirement).

 

பாதகங்கள்:

 • அவசர தேவைகளுக்கு(Medical Emergency, Unusal Happenings)  நீங்கள் இலக்குகளை நிர்ணயிக்க முடியாது (அ) காத்திருக்க முடியாது; எனவே முன் கூட்டிய இலக்குகள்/ சேமிப்பு வேண்டும்.

 

 

Climax:  தீர்வு

 

உணர்ச்சிவயப்பட்டு செலவழிக்க வேண்டுமா (அ) இலக்குகளை அடைய சேமிக்க / முதலீடு செய்ய வேண்டுமா என நீங்கள் உங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுங்கள்;

அவசரத்திற்கு தவணை உதவலாம்;

வருமுன் காப்பது நல்லதா ?

வந்தபின் வருந்துவதா ?       மூளையை யோசிக்க விடுங்கள் 🙂

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

www.varthagamadurai.com

(Image Courtesy:  fpindia.in )