Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

தனியார் மற்றும் அன்னிய முதலீட்டை வேகப்படுத்தும் மேக் இன் இந்தியா

தனியார் மற்றும் அன்னிய முதலீட்டை வேகப்படுத்தும் மேக் இன் இந்தியா 

Speeds up on Private and Foreign Investments – Stimulus for Make in India

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை கடந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கியுள்ளது, 33,000 க்கு மேற்பட்டோர் குணமடைந்தவர்கள். நடப்பில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார வீழ்ச்சியில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் அதிகரித்துள்ளது. இது நம்முடைய நாட்டில் மட்டுமில்லாமல், வல்லரசான அமெரிக்காவிலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அதற்கான பொருளாதார ஊக்குவிப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அறிவிப்பாக கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தொழில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த அறிவிப்புகள் இரு தினங்களாக அறிவிக்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்குவதில் சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில்(16-05-2020) நிலக்கரி, தாதுக்கள், விமான சேவை, மின் துறை, விண்வெளி மற்றும் அணுசக்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது. சொல்லப்பட்ட துறையில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டமும் மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி துறையில் ரூ. 50,000 கோடி செலவிடப்படும் எனவும், பாதுகாப்பு துறையில் முன்னர் இருந்த 49 சதவீத அன்னிய முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. விமானத்துறையில் அரசு-தனியார் பங்களிப்பை துரிதப்படுத்தவும் அரசு முனைந்துள்ளது. புதிய விமான நிலையங்களை தொடங்குவது சார்பாகவும் பேசப்பட்டது.

விமான சேவையில் நேரத்தை குறைக்க புதிய வழித்தடங்கள், விண்வெளி ஆராய்ச்சியில் அரசுடன் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து செயல்படுதல் மற்றும் அணுசக்தியில் அரசு-தனியார் ஒப்பந்தம் ஆகியவற்றை பற்றியும் நிதி அமைச்சர் கூறினார்.

நடப்பில் பேசப்பட்டு வரும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஒரு நடுத்தர பட்ஜெட் தாக்கல்(Interim Budget) போன்று நடைபெற்று வருகிறது. பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் 2024-25ம் ஆண்டுக்கான இலக்கிற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உடனடி தீர்வு சொல்லப்படவில்லை. மேலும் விமானத்துறை ஏற்கனவே நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இதற்கான நேரடி உதவி விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதும் ஒரு குறையாக உள்ளது.

தற்போது சொல்லப்பட்டுள்ள அறிவிப்புகள் பெரும்பாலும் அரசின் கடன்களாகவும், தனியார் மற்றும் அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்துள்ளது. தனியார் பங்களிப்பு ஒவ்வொரு தொழிலுக்கும் முக்கியம் தான் எனினும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கியமான துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது சாதகமாக அமையாது.

மேக் இன் இந்தியா(Make in India) என நாம் சொல்லிக்கொண்டாலும் நமது நுகர்வு தேவை பெரும்பாலும் இறக்குமதியின் மூலம் தான் கிடைக்கப்பெறுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள், மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும், அதே வேளையில் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதும் தான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். மாறாக அன்னிய நிறுவனங்கள் உள்நாட்டில் முதலீடு செய்து விட்டு, தங்களது உற்பத்தியை மக்களிடம் விற்பதால் அது மேக் இன் இந்தியா வாசகத்திற்கு பொருந்தாது. மேலும் இதனால் வர்த்தக பற்றாக்குறையில் நமக்கு சாதகமாக எதுவும் நிகழப்போவதில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஹேவல்ஸ் இந்தியா – நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 178 கோடி

ஹேவல்ஸ் இந்தியா – நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 178 கோடி 

Net Profit of Rs. 178 Crore in the Q4FY20 for Havells India – Quarterly results

மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் தான் ஹேவல்ஸ் இந்தியா. உத்தரப்பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் கடந்த 1958ம் ஆண்டு துவங்கப்பட்டது. வீட்டு மற்றும் சமையல் சார்ந்த மின் உபகரணங்கள், மின் விளக்குகள், சுவிட்சுகள், சிறிய வகையிலான மோட்டார்கள் மற்றும் கேபிள் வயர்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

தொழிற்துறை சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்வதில் இந்த நிறுவனம் முன்னோடியாக உள்ளது. ஹேவல்ஸ் இந்தியா நிறுவனத்தின் கிளைகள் மற்றும் அதன் வியாபாரம் சுமார் 50 நாடுகளில் பரவி கிடைக்கின்றன. ஹேவல்ஸ், கிராப்ட்ரீ(Crabtree), லாயிட்(Lloyd), ப்ராம்ப் டெக் மற்றும் ஸ்டாண்டர்ட் எலக்ட்ரிக் ஆகியவை இதன் பிரபலமான பிராண்டுகள்.

குளியலறை ஹீட்டர்கள், குடிநீர் சுத்திகரிப்பு, காற்றை சுத்தப்படுத்துதல், மின் விசிறிகள், தண்ணீர் பம்புகள் ஆகியவற்றிலும் இதன் விற்பனை உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 32,000 கோடி. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் ஹேவல்ஸ் வட்டி பாதுகாப்பு விகிதத்தையும்(Interest coverage ratio) 47 மடங்காக கொண்டுள்ளது கூடுதல் பலம்.

நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,217 கோடியாகவும், செலவினம் ரூ. 1,973 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 21 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 198 கோடி மற்றும் நான்காம் காலாண்டின் நிகர லாபம் 178 கோடி ரூபாய். கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. மார்ச் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,755 கோடியாகவும், நிகர லாபம் 199 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

2020ம் ஆண்டின் மார்ச் இறுதியில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,249 கோடியாகும். விற்பனை கடந்த பத்து வருட காலத்தில் 7 சதவீதமும், லாப வளர்ச்சி 69 சதவீதமும் (10 வருடங்களில்) ஏற்றம் பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 30 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

What’s going on Reliance JIO ? – RIL – The Next Generation Change

நாட்டின் மிகப்பெரிய குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய். எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலை முதன்மையாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் பல தொழில் முகங்களை கடந்து, இன்று ரிலையன்ஸ் ஜியோ என்ற மாபெரும் ஆயுதத்தை கொண்டு சந்தையை ஆக்கிரமித்து விட்டது. திருபாய் அம்பானியை போலவே சிந்திப்பதாக கூறப்படும் நிறுவனர் முகேஷ் அம்பானி, புதிய தொழில்முனைவுகளை சிந்திப்பதும், துணிந்து சில தொழில் முயற்சிகளை செயல்படுத்துவதும் அவருடைய இயல்பாக உள்ளது.

நிறுவனத்தின் கடன் மட்டும் சுமார் 2.90 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் விற்பனை ரூ. 1.36 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் ரூ. 6,348 கோடியாகவும் சொல்லப்பட்டிருந்தது. கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 14 சதவீதமும், லாபம் 10 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves in Balance sheet) ரூ. 4.47 லட்சம் கோடியாக இருந்தாலும், சமீப காலங்களில் அதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் பெரியளவில் வருவாயை ஈட்டவில்லை. அதிகமாக கடன் தொகையை கொண்டிருக்கும் நிலையில், வங்கியில் கடனை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. இதன் காரணமாக நிறுவனர், தனது நிறுவனத்தின் கடனை குறைக்கும் விதமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் உள்ள துணை நிறுவனங்களின் பங்குகளை விற்க முன்வந்தார். இது பொது சந்தையில் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.

ஆரம்ப நிலையில், சவுதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திற்கு தனது எண்ணெய் தொழிலின் சில பங்குகளை விற்கும் பொருட்டு ஒப்பந்தம் செய்திருந்தார். ஆரம்கோ நிறுவனமும் இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலம் முதலீட்டை துவங்க முடிவெடுத்தது. ஆனால் சமீப காலங்களில் அந்த நிறுவனத்திற்கு எண்ணெய் ரீதியான சில சிக்கல்கள் வந்தவுடன், முதலீட்டை துவங்குவதற்கான காலத்தை தள்ளி போட்டது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார தேக்கம் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான நிறுவனங்களை பாதித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய ஆயுதமாக பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஒரு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பாக கண்டார் முகேஷ் அம்பானி. உள்நாட்டு தொலைத்தொடர்பு துறையில் இருந்த நிறுவனங்கள் யாரும் பெரியளவில் முயற்சிக்காத, தகவல் மூலம் வாய்ஸ் கால்களை ஏற்படுத்துவதற்கான வேலையை மும்முரமாக செய்தார்.

ஏன், சந்தை தலைமையாக சொல்லப்பட்ட ஏர்டெல் நிறுவனம் கூட, பெரிதாக அதனை கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் இது போன்ற தொழில்நுட்பங்கள் வர சில நாட்கள் ஆகலாம் என பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நினைத்து கொண்டன. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனைக்கு பிறகான புரட்சியாக ரிலையன்ஸ் ஜியோ பார்க்கப்பட்டது. புதிய தொழில் கொள்கையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்து கொள்ள சிரமப்பட்டது. முடிவில், சில நிறுவனங்கள் காணாமல் போயின, பெரு நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன மற்றும் சில திவால் நிலைக்கு சென்றன.

இன்று ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என்ற மூன்று நிறுவனங்கள் மட்டும் தான் தொலைத்தொடர்பு துறையில்(Telecom) உள்ளது. பொதுத்துறை மினிரத்னா நிறுவனமான பி.எஸ்.என்.எல். அரசின் தவறான கொள்கையால் தனது பலத்தை இழந்து விட்டது. முன்னர், நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், 60 சதவீதத்திற்கு மேலான சந்தை பங்களிப்பை கொண்டிருந்த பி.எஸ்.என்.எல்.(BSNL) இன்று நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் நிறுவனமாக மாறியது.

வோடபோன் ஐடியா(Vodafone Idea) சந்தையில் தனக்கான கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டிருந்தாலும் கடந்த நான்கு வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கடன் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய். இன்று நாட்டின் மிகப்பெரிய சந்தாதாரர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ வந்து விட்டது. ஜியோவின் வருகைக்கு பின்னர், உள்நாட்டில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து விட்டது எனலாம்.

2015ம் ஆண்டுக்கு முன்னர், பெரியளவில் ஏற்றம் காணாத ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பின்னர் மளமளவென ஏறியது. 2017ம் ஆண்டில் பங்குதாரர்களுக்கு 1:1 போனஸ் பங்குகளும்(Bonus Issue) வழங்கப்பட்டது. நிறுவனத்தின் அதிகமான கடன் தொகையால், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இதன் பங்கு விலையை குறைத்து பரிந்துரைத்தது. கடன் தொகையை விரைவாக குறைக்கும் முடிவை எடுத்தார் முகேஷ். ஆரம்கோ ஒப்பந்தம் முடிவதற்கு முன்னர், தனது துணை நிறுவனமான ஜியோவின் ஆயுதத்தை பயன்படுத்தினார்.

நடப்பாண்டில் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்(Facebook) நிறுவனத்தை, ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய அழைத்தார் முகேஷ் அம்பானி. தொழில்நுட்பத்தை சாதகமாக கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்ய ஒரு அருமையான வாய்ப்பு என ஜியோவின் 10 சதவீத பங்குகளை வாங்கியது. இதற்கடுத்தாற் போல், அமெரிக்காவை சேர்ந்த சில்வர் லேக்(Silver Lake) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் சுமார் 5,600 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு நிறுவனமான விஸ்டா ஈக்விட்டி(Vista Equity Partners), ஜியோவின் 2.3 சதவீத பங்குகளை வாங்க சம்மதம் தெரிவித்தது. தற்போது ஜெனரல் அட்லாண்டிக்(General Atlantic) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 2 சதவீத பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. இது போக மற்றொரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலும் கசிகிறது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் முதலீடு செய்ய உள்ள மதிப்பு ரூ. 10,000 கோடி. இதுவும் ஒரு அமெரிக்க நிறுவனமாக முன்னெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்னர், ஆரம்கோ மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவங்களிடம் தனது 20 சதவீத பங்குகளை விற்று, கடனை குறைக்க முயற்சி எடுத்தது. ஆனால், தற்போது ரிலையன்ஸ் ஜியோ மூலம் 15 சதவீதத்திற்கு மேலான பங்குகளை கொடுத்துள்ளது. சமீபத்தில் சவுதி நிறுவனம் ஒன்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பை உயர்த்தி கூறியுள்ளனர். சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சரிவை தடுக்க சரியாக காய்களை நகர்த்தினார் நிறுவனர். பங்குதாரர்களுக்கு உரிமை பங்கு அறிவிப்பும் வெளிவந்தது.

தொழில் புரட்சியை ஏற்படுத்தும் திருபாய் அம்பானி போல, முகேஷ் அம்பானி செயல்படுகிறார் என சொல்லப்பட்டாலும், உண்மையில் கடனை குறைத்து கடனில்லா நிறுவனமாக இருப்பது தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நோக்கம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நுகர்வு சந்தையில் கிடைக்கப்போகும் லாபங்களை எதிர்பார்த்து, தற்போது ஜியோ முதலீட்டை ஒரு வாய்ப்பாக கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய நுகர்வு சந்தையில், இன்று பெரும்பாலான பெரு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக தான் உள்ளன. மேக் இன் இந்தியா, இந்திய நிறுவனங்களே முன்னெடுப்பு என விளம்பரங்கள் காணப்பட்டாலும் பங்குச்சந்தையிலும் அன்னிய முதலீடுகள் தான் அதிகரித்துள்ளது. இது நம்மை போன்ற வேகமாக வளரும் நாட்டிற்கு பின்னாளில், எப்படிப்பட்ட சவாலாக இருக்கும் என்பதனை அறிவதற்கில்லை.

இன்றையளவில், நாட்டில் உள்ள பிரபலமான பிராண்டுகளில்(Flipkart, Zomato, Swiggy, Paytm, Ola) சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தான் முதலீடு செய்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியாக சொல்லப்படும் சில தனியார் வங்கிகளிலும் அன்னிய முதலீட்டாளர்கள் தான் பெரும்பான்மையான பங்குகளை கொண்டிருக்கின்றனர். உண்மையில் இன்று அமெரிக்க – சீன வர்த்தக போர் என ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருந்தாலும், சீனாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் முதலீடு பெருமளவில் உள்ளது. சீனா இன்று மிகப்பெரிய பொருளாதார நாடாக வலம் வருவதற்கு அமெரிக்கா தான் காரணமாக இருந்துள்ளது. பின்னர், அதுவே இன்றைய சிக்கலாக மாறி விட்டது. இது நம் நாட்டிற்கும் பொருந்தும்.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்று செய்தியாக வந்தாலும் சரி, முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது என கூறினாலும் சரி, வரவிருக்கும் காலங்களில் அதற்கான மாற்றம் தெரிய வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)

New Mutual Fund Mobile App – Introduction on Varthaga Madurai Platform

இன்று வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை போல, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்பட்டு வருவதும் பரவலாக உள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கப்பெறும் சாதனங்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வருபவை, எனவே அவை ஒரு முதலீட்டு சாதனமாக கருதப்படாது. அத்தியாவசிய தேவை மற்றும் அவசர பண பரிமாற்றத்திற்கு வங்கி சேமிப்பு கணக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

வங்கிகளில் கிடைக்கக்கூடிய வைப்பு தொகை (Fixed Deposit) ஒரு சிறந்த முதலீடாக இருக்க முடியாது. ஏனெனில், பொதுவாக அவை பணவீக்கம் மற்றும் வரிகளை கடந்து குறைவான வட்டி வருவாயை கொண்டிருக்கும். எனவே, நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானமாக பயன் தராது.

நாட்டில் தற்போது 45க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்(Asset Management Companies) உள்ளன. பொதுவாக இவை வங்கிகளாக தான் தனது முதன்மை தொழிலை கொண்டிருக்கின்றன. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் அனுபவம் சிறப்பானதொரு முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்திய மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 27 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்(March 2020). வங்கி சேமிப்பு கணக்குகளை போல லிக்விட் பண்டுகள்(Liquid Funds) எனும் மிக குறைந்த ரிஸ்க் கொண்ட நிதி திட்டங்கள் உள்ளன.

வங்கி டெபாசிட் தொகைக்கு மாற்றாக, கடன் பத்திர திட்டங்கள்(Debt Funds) பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்க பெறுகிறது. ஓரளவு ரிஸ்க் குறைவான பண்டுகளாக இருந்தாலும், வரி விதிப்புகளில் வங்கி டி.டி.எஸ்.(TDS) பிடித்ததை விட குறைவான வரிகள் தான் விதிக்கப்படுகின்றன. பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட், குறிப்பிட்ட துறை சார்ந்த முதலீடுகள், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் ஏற்படுத்தப்படும் முதலீடுகள் என பல வகைகள் உள்ளன.

முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த சந்தையில் ஒரு எளிய முதலீட்டு சாதனம் உள்ளது என்றால், அது மியூச்சுவல் பண்ட் எனும் பரஸ்பர நிதி முதலீடுகள் தான். அனைத்து வகையான பண்டுகள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வர்த்தக மதுரை சார்பாக புதிய கைபேசி செயலி (Mutual Fund Investment Application) ஒன்று கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

செயலியின் சிறப்பம்சங்கள்:
  • புதிய கணக்கை தொடங்குவதற்கு, கே.ஒய்.சி.(KYC) நடைமுறை என்ற கட்டுப்பாடு அனைத்து வகை நிதி சாதனங்களுக்கும் உண்டு. இது வங்கி, பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு பொருந்தும். கே.ஐ.சி. பதிவு செய்ய தனியாக படிவம் ஒன்றை நிரப்பி மியூச்சுவல் பண்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். இந்த சிக்கலை குறைத்து, வர்த்தக மதுரை செயலியில் இணைய வழியாக இரண்டு நிமிடங்களில் கே.ஒய்.சி. பதிவை நிறைவு செய்யலாம். இந்த முறை செபியின் விதிமுறைக்கு உட்பட்டது.
  • முன்னர், மியூச்சுவல் பண்டு முதலீட்டை துவங்க ஒரு வார காலம் ஆகும். ஆனால், தற்போது இந்த செயலியின் வாயிலாக அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
  • வெவ்வேறு வகையான நிறுவனங்கள் மற்றும் பண்டுகளில் முதலீடு செய்தாலும் ஒரே செயலியில் உங்களது முதலீட்டு நிலவரங்களை எப்போது வேண்டுமானாலும்(Single Account for Multiple Funds) காணலாம்.
  • வங்கியில் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், வர்த்தக மதுரை செயலி மூலம் லிக்விட் பண்டுகளில் உங்கள் தேவைக்கேற்றாற் போல் பணத்தை பரிமாற்றம் செய்து கணிசமான வட்டி வருவாயை பெறலாம். முதலீடு செய்வதும், உங்கள் முதலீட்டில் உள்ள பணத்தை எடுப்பதும் மிகவும் எளிமையான ஒன்று.
  • நிதி சம்மந்தமான 10க்கும் மேற்பட்ட கணிப்பான்கள் இந்த செயலியில் உள்ளன. (Dream Home Planning, Dream Car Plan, Future Expenses, Children Education, Retirement Savings, Marriage Fund, Family Protection, Tour / Vacation Plan, Crorepati, SIP and EMI Calculator)
  •  உங்கள் முதலீடு சார்ந்த மின்னணு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இ-லாக்கர்(E-Locker) வசதி உண்டு. நீங்கள் முதலீடு செய்திருக்கும் தற்போதைய மதிப்பை உடனடியாக அறிந்து கொண்டு, பி.டி.எப்.(Download Investment Holding Reports) முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • சந்தையில் உள்ள புதிய தகவல்கள் மற்றும் செய்திகளை(Mutual Fund related Information) வர்த்தக மதுரை செயலியின் மூலமே படித்து தெரிந்து கொள்ளலாம். மியூச்சுவல் பண்டுகளில் கவனிக்க கூடிய முக்கிய திட்டங்களும் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள்:
  • கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கப்பெறும் வர்த்தக மதுரை ( VARTHAGA MADURAI – MY DREAM PORTFOLIO ) செயலி பாதுகாப்பான நிதி செயலியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் செய்யப்படும் அனைத்து பரிமாற்றங்களும் செபியின் (SEBI – AMFI) அனுமதியுடன் இயங்கப்பட்டு வருகிறது.
  • மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கும், பயனாளர்களின் தேவைக்குமான பாலமாக இந்த செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகளில் கிடைக்க கூடிய செயலிகள் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மாறுபடும். உதாரணமாக நீங்கள் ஐந்து வெவ்வேறு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், ஐந்து செயலிகள் தேவைப்படும். ஆனால், இங்கே வர்த்தக மதுரை செயலி மூலம் நீங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு திட்டங்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களின் முதலீட்டு நிலவரங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி உண்டு.
  • உள்ளீடு செய்யப்படும் ஒவ்வொரு தரவுகளிலும்(Filled Information) கவனமாக பதிவு செய்வது அவசியம். உங்கள் பான்(PAN) எண்ணை கொண்டு தான் ஒவ்வொரு தகவலும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. நாமினியை பதிவு செய்வது, வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். இருப்பினும் தவறு ஏதேனும் ஏற்பட்டால், இதனை பின்னாளில் திருத்துவதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய கணக்கை துவங்குவதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வருபவர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

Varthaga Madurai Mutual Funds App – How to use Guide

நினைவில் கொள்ளுங்கள்: 

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் முன்னர், உங்களுக்கான நிதி இலக்குகளை திட்டமிட்டு பின்பு முதலீடு செய்வது சிறந்தது. மியூச்சுவல் பண்டுகளில் குறைந்த ரிஸ்க் முதல் அதிக ரிஸ்க் வரை உள்ள திட்டங்கள் ஏராளம். எனவே சரியான புரிதலை ஏற்படுத்தி கொண்டு முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.

செயலி மற்றும் மியூச்சுவல் பண்ட் சார்ந்த உங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால், பதிவு செய்ய…

https://varthagamadurai.com/contact/

அல்லது

+91 9500 438 549 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் ? – சிறு பார்வை 2020-21

நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் ? – சிறு பார்வை 2020-21

India’s GDP Growth Rate – A Small Glimpse – FY20-21

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 7 காலாண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. 2018ம் ஆண்டின் துவக்கத்தில் 7.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி பின்னர் இறக்கத்தில் மட்டுமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2019 காலாண்டு முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் (மார்ச் 2020) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடப்பு மாதத்தின் இறுதியில் இது சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். மார்ச் 2020 காலாண்டில் பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் பூஜ்யத்திற்கு குறைவான வளர்ச்சியை தான் பெற்றுள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்கா (- 4.8 ) சதவீதமும், தென் கொரியா (-1.4 சதவீதமும்), சீனா (-9.8) சதவீதமும், ஹாங்காங் (-5.3 ) சதவீதமாகவும் மார்ச் 2020 காலாண்டு பொருளாதார வளர்ச்சியை கூறியுள்ளது. வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றான வியட்நாம் (+3.8) சதவீத வளர்ச்சியை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால், பெரும் பொருளாதார சரிவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிறுவனங்கள் ஒரு நாள் இயங்காமல் இருந்தாலே, அதன் பாதிப்பு ஓரிரு காலாண்டுகள் இருக்கும். இந்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் முதலாம் காலாண்டில் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த மூடிஸ்(Moody’s) தர மதிப்பீடு நிறுவனம், இந்தியாவிற்கான 2020-21ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியை பூஜ்யமாக மதிப்பீடு செய்துள்ளது. அரசு ஊக்குவிப்பு இல்லாவிட்டால், இது மேலும் சரியலாம் என எச்சரித்துள்ளது. அதே வேளையில், 2021-22ம் நிதியாண்டுக்கான வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு வழங்கியுள்ளது.

நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit), மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் அதிகரித்து வருவது கவலையளிக்க கூடியதாக உள்ளது. அரசு சார்பில் இதுவரை சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை களையவும், தொழில்களுக்கான வளர்ச்சியை மீட்டெடுக்கவும் அரசாங்கம் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான கடன் பெறுதலில் 7.8 லட்சம் கோடி ரூபாய் இருந்த நிலையில், இதனை மேலும் அதிகரித்து ரூ. 12 லட்சம் கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. சொல்லப்பட்ட தொகை நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கு மட்டும். இதன் மூலம் வரும் நாட்களில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இருக்கலாம். இருப்பினும், பெறக்கூடிய தொகைக்கு சந்தையில் கடன் பத்திரங்களை விற்க வேண்டிய பொறுப்பு பாரத ரிசர்வ் வங்கிக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காலங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருத்தல், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்தல் ஆகியவையும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

வரக்கூடிய நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தினசரி வாழ்க்கையை நகர்த்தி கொண்டு பொருளாதாரத்தை பாதுகாப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எதிர்வரும் மின்சார வாகன மாற்றம், செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொழில்நுட்பத்தால் ஏற்பட உள்ள புரட்சி, புதிய வர்த்தக கொள்கைகள் மற்றும் அதனை சார்ந்த நாணய மதிப்பு ஆகியவை அரசுக்கு முன் இருக்கும் சவாலாக உள்ளன.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் கடன் ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அமெரிக்க – சீன வர்த்தக போர் இன்னும் தீர்வை காணவில்லை. இது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் போது, அது நம் நாட்டிற்கான வாய்ப்பாக அமையுமா என்பதும் சந்தேகமே.

ஏனெனில் தொழிலை எளிமையாக துவங்குதல், புதிய தொழில் கொள்கைகளுக்கான வரைமுறைகள் மற்றும் வரி விதிப்புகளில் நாம் இன்னும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் வர்த்தகம் நமக்கு கிடைத்து விடும் என பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. சீனாவின் இன்றைய  வளர்ச்சிக்கு அமெரிக்கா தான் காரணமாக இருந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளில் நமக்கு போட்டியாக வியட்நாம், தென் கொரியா, ஹாங்காங் போன்ற நாடுகள் உள்ளன. எனவே வரக்கூடிய காலங்களில் அரசின் முடிவை பொறுத்து தான் அவை வாய்ப்புகளாக மாற்றப்படுமா என்பது தெரிய வரும்.

நடப்பில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அடுத்த ஓரிரு வருடங்கள் செல்லும் நிலையில், இது மக்கள் வாழ்வாதாரத்தில் பெருத்த சிரமத்தை ஏற்படுத்தும். பணம் கையிருப்பு கொண்டவர்கள் வரவிருக்கும் நாட்களில் அதிகமாக செலவழிக்காமல், சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசின் துரித நடவடிக்கை இப்போது தேவைப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை விகிதம் – பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் உண்மை

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை விகிதம் – பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் உண்மை 

Rising Unemployment rate – More Job loss in India – CMIE

கொரோனா வைரஸ் தாக்கத்தின் செய்தி கடந்த இரண்டு மாதங்களாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் முழு ஊரடங்கு சொல்லப்பட்டிருந்தது. கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 2,58,900 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,50,000 ஆகவும் உள்ளது.

ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஐந்து வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது நம் நாட்டிலும் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(CMIE) வெளியிட்ட அறிக்கையின் படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.52 சதவீதமாக உள்ளது. இது மார்ச் முடிவில் 8.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாராந்திர முடிவின் படி, மே 3ம் தேதியில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) 27.11 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் வேலைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஊரடங்கு நிகழ்வுக்கு பின்பு, இதுவரை 12 கோடி பேர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு நபர்களில் ஒருவர் வேலையை இழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

ஏப்ரல் மாத அறிக்கையின் படி, அதிகபட்ச வேலையிழப்பாக தமிழகத்தில் 49.8 சதவீதமும், பீகாரில் 46.6 சதவீதமும் மற்றும் ஜார்கண்டில் 47 சதவீதமும் உள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஏப்ரல் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 43 சதவீதமாக உள்ளது. எதிர்பார்க்காத வகையில் புதுச்சேரியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா, விடுதிகள் மற்றும் உணவகங்களின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சொல்லப்பட்ட தகவல்கள் அமைப்பு சார்ந்த தொழில்களை கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் போது இதனை விட அதிகமாக இருக்கலாம்.

ஊரடங்கு அடுத்த சில நாட்களுக்கு பின்பு தளர்த்தப்பட்டாலும், பெரும்பாலான தொழில்கள் தற்போதைய நிலையில் இயங்குவதற்கான சூழல் இல்லை. மேலும் பிற மாநிலத்தவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வேளையில், உற்பத்தி துறை மீண்டும் வேகமெடுக்குமா என்பது சந்தேகமே.

கொரோனா வைரஸ் தாக்கம் பொருளாதார பின்னணிக்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், உண்மையில் பொருளாதார மந்தநிலை என்பது கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை விகிதமும் பல மாதங்களாக அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில், சுமார் 40 கோடி மக்கள் இந்தியாவில் மட்டும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

நோய் தாக்கத்திற்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என சில நாடுகள் முன்னுக்கு வந்தாலும், இதன் உண்மை நிலை வரும் வாரங்களில் தெரிய வரும். ஆனால், வேலை இல்லாத சூழல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்காது. எனவே, இப்போதைய அனைவருக்குமான தேவை அத்தியாவசியங்களை பூர்த்தி செய்வதே. இதனை தான் அரசாங்கத்திடம் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் நிதி பற்றாக்குறை சிக்கல் – அபாய சங்கிலியை உடைக்கும் பொருளாதாரம்

நாட்டின் நிதி பற்றாக்குறை சிக்கல் – அபாய சங்கிலியை உடைக்கும் பொருளாதாரம் 

India’s Fiscal Deficit Problem – The economy that breaks the Situation

பொதுவாக நமது குடும்பத்தின் நிதி நிலை சரியான அளவில் இருந்தால் தான், குடும்ப உறவுகளிடம் பிரச்சனை இல்லாமல் சுமூகமான வாழ்வு முறை அமையும். வரவுக்குள் செலவு இருக்கும் போது, சிறு குடும்பமாக இருந்தால் என்ன, பெரிய குடும்பமாக இருந்தால் என்ன… சம்பாதிக்கும் பணம் ஒரு ரூபாயாக இருந்து, செலவு 50 பைசாவாக இருந்தால் சந்தோசம் தானே. இதுவே தலைகீழாக சென்றால், எப்படி இருக்கும் ?

அப்படி தான் நாட்டின் நிதி பற்றாக்குறையும். மத்திய அரசின் நிதி அறிக்கையில் இரு கண்களாக நிதி பற்றாக்குறையும்(Fiscal Deficit), வர்த்தக பற்றாக்குறையும்(Trade Deficit) இருக்கும். இது ஓரளவு கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், பொருளாதாரத்தில் பெரும்பாலும் பாதிப்பு இருக்காது. அதே வேளையில், இரண்டில் ஏதாவது ஒன்று பாதிப்படையும் போது, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்.

நாட்டின் நிதி பற்றாக்குறை கடந்த பிப்ரவரி மாத முடிவின் போது மொத்த  உள்நாட்டு உற்பத்தி அளவில்(GDP)  5.07 சதவீதமாக சொல்லப்பட்டது. 2019-20ம் நிதியாண்டில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் சொன்ன கணக்கு படி, நிதி பற்றாக்குறை அமையவில்லை. மாறாக, வரவுக்கு மேலாக செலவு அதிகரித்திருந்தது.

இந்நிலையில், கடந்த நிதியாண்டின் முடிவில் (மார்ச் 31, 2020) நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. முன்னர், இந்த விகிதம் 3.8 சதவீதத்திற்குள் இருக்கும் என நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இப்போது சொல்லப்பட்ட இலக்கை தாண்டி, நாட்டின் நிதி பற்றாக்குறை சென்றுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காணப்பட்டு வந்த பொருளாதார மந்தநிலை, தேவை நுகர்வு குறைவு, இதன் காரணமாக வரி வசூலும் வெகுவாக குறைந்துள்ளது. எதிர்பார்த்த வருவாய் அரசுக்கு கிடைக்காத நிலையில், எதிர்மறையாக செலவும் அதிகரித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் பட்ஜெட்டில் துண்டு விழும் செயலாக இது நிகழ்ந்துள்ளது.

நடப்பில் கொரோனா தாக்கத்தால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால், வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார எண்கள் மேலும் சரியலாம். தற்போதைய நிலையில் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையாக ஏற்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறையை சமாளிக்க  மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாரத ரிசர்வ் வங்கி, அமெரிக்காவை போல பணத்தை அச்சடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்வு ஏற்படுமாயின் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்படலாம். அதாவது நாட்டின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய பாரத ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் கடன் பத்திரங்களை வாங்க நேரிடும். இதற்காக பணம் அச்சடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்தை மத்திய வங்கி மறுத்துள்ளது. பொதுவாக மத்திய அரசு, தனது நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு கடன் பத்திரங்களை நிதி சந்தையில் விற்கும். இருப்பினும், இதற்கான மதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் பாரத ரிசர்வ் வங்கி தலையிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வாகன விற்பனை இல்லாத ஏப்ரல் மாத நிலவரம் – ஊரடங்கு உத்தரவு

வாகன விற்பனை இல்லாத ஏப்ரல் மாத நிலவரம் – ஊரடங்கு உத்தரவு 

No Vehicle Sales in April 2020 – Automobile Industry

கோவிட்-19 வைரஸ் தாக்கம், உலக பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரமும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மந்தநிலையில் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 3ம் தேதி வரை சொல்லப்பட்டிருந்த ஊரடங்கு, மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை இருக்கும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கும் பகுதிகளில் சில தொழில்கள் மற்றும் சேவைகளை மீண்டும் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்டுள்ள ஊரடங்கு, உலகின் மிகப்பெரிய ஊரடங்கு உத்தரவாக கருதப்படுகிறது.

மூன்றாம் ஊரடங்குக்குள் செல்ல போகும் நாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கில் இருந்ததால் பெரும்பாலான துறைகளின் விற்பனை மற்றும் அதனை சார்ந்த வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மந்தநிலையில் இருந்து வந்த நாட்டின் வாகன விற்பனை, கடந்த ஏப்ரல் மாத ஊரடங்கிலும் சுணக்கத்தை சந்தித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி(Maruti Suzuki) ஏப்ரல் மாதம் உள்நாட்டில் எந்த வாகனத்தையும் விற்கவில்லை என கூறியுள்ளது. அதே வேளையில், 630 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. துறைமுகங்கள் வழியாக இந்த ஏற்றுமதி நடைபெற்றுள்ளதாக மாருதி நிறுவனம் கூறியுள்ளது.

மஹிந்திரா(Mahindra & Mahindra) நிறுவனம் கடந்த மாதம் 733 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும், உள்ளூர் விற்பனையில் எதுவும் சொல்லப்படவில்லை. விவசாயம் சார்ந்த துறையில் மட்டும் சுமார் 4,700 வாகனங்களை ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்துள்ளது மஹிந்திரா.

இது போல எஸ்கார்ட்ஸ்(Escorts) நிறுவனம் உள்ளூர் விற்பனையில் 705 வாகனங்களையும், ஏற்றுமதியில் 92 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது. ஐஷர் மோட்டார்ஸ் தனது ஏப்ரல் மாத அறிக்கையில், 91 இரு சக்கர வாகனங்களை(Royal Enfield) விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வாகன விற்பனை மட்டுமில்லாமல், அதன் உற்பத்தியும் பெரிதும் பாதித்துள்ளது. நாட்டில் உள்ள வாகன உற்பத்தி ஆலைகள் மூடப்படும் ஒவ்வொரு நாளும் சுமார் 2300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு(SIAM) கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2,330 கோடி ரூபாயை லாபமாக ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ – காலாண்டு முடிவுகள்

2,330 கோடி ரூபாயை லாபமாக ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ – காலாண்டு முடிவுகள் 

Net Profit of Rs. 2,330 Crore for Reliance JIO – Q4FY20 Results

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 9.30 லட்சம் கோடி ரூபாய். ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை தொழிலாக கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன.

துணை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio), தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான தனது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1.39 லட்சம் கோடியாகவும், இதர வருமானம் ரூ. 4,133 கோடியாகவும் இருந்துள்ளது.

செலவினமாக ரூ. 57,683 கோடியும், வரிக்கு முந்தைய லாபமாக 9,233 கோடி ரூபாயும் சொல்லப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 6,348 கோடி. கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது சொல்லப்பட்ட லாபம் 39 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய வருடத்தின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,362 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போல நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியும் இரண்டு சதவீதம்  குறைந்துள்ளது. இருப்பினும், துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விற்பனை(Revenue) நான்காம் காலாண்டில் ரூ. 14,385 கோடியாக இருந்துள்ளது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 6 சதவீத வளர்ச்சியாகும். ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த காலத்தை விட 73 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 2,331 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் கடனை குறைக்கும் பொருட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய உத்திகளை தனது தொழிலில் பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.70 ஆக உள்ளது.

கடந்த 10 வருடங்களில் இந்நிறுவனத்தின் லாபம் 10 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. விற்பனை வளர்ச்சி 10 வருட காலத்தில் 15 சதவீதமாக உள்ளது. இருப்பு நிலை அறிக்கையின் படி, நிறுவனத்தின் கையிருப்பு சுமார் 3.99 லட்சம் கோடி ரூபாய். பங்குதாரர்களிடம் இருந்து புதிய முதலீட்டை பெறுவதற்காக ரூ. 53,125 கோடி மதிப்பில் உரிமை பங்குகளை(Rights Issue) வெளியிட உள்ளது. ஆனால், அதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை.

15 பங்குகளுக்கு ஒரு உரிமை பங்கு என்ற விகிதத்தில் இந்த செயல்பாடு இருக்கும் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. உரிமை பங்கு ஒன்றின் விலை ரூ. 1,257 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பங்கு ரூ. 1,465 என்ற விலையில் வர்த்தகமாகி உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அம்புஜா சிமெண்ட்ஸ் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 554 கோடி

அம்புஜா சிமெண்ட்ஸ் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 554 கோடி 

Net Profit of Rs. 554 Crore in Q4FY20 – Ambuja Cements

மும்பையை தலைமையிடமாக கொண்டு கடந்த 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அம்புஜா சிமெண்ட்ஸ். ஆரம்ப நிலையில், குஜராத் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனமானது.

சிமெண்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான ஹோல்சிம்(Holcim), அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 62 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 34,200 கோடி. புத்தக மதிப்பு 116 ரூபாயாகவும், தற்போதைய பங்கு முகமதிப்பு 2 ரூபாயாகவும் உள்ளது.

கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.001 ஆக உள்ளது. நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 25 மடங்கிலும், தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 1.50 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக இருக்கும் நிலையில், நிறுவனர்கள் சார்பில் அடமான பங்குகள் எதுவும் இல்லை.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை(Quarterly Results) வெளியிட்டுள்ள இந்நிறுவனம் விற்பனையாக ரூ. 6,250 கோடியும், செலவினமாக ரூ. 5,058 கோடியையும் சொல்லியுள்ளது. இதர வருமானம் 145 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,007 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 554 கோடி.

சொல்லப்பட்ட நிகர லாபத்தை, கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது 12 சதவீத வளர்ச்சியாகும். அதே வேளையில் விற்பனை வளர்ச்சி சரிந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதமும், 10 வருட காலத்தில் 15 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது.

இது போல, லாபம் ஐந்து வருடங்களில் 8 சதவீதமும், பத்து வருட கால அளவில் 6 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது. பங்கு மீதான வருமானம் கடந்த 10 வருடங்களில் 11 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

டிசம்பர் 2019ம் காலாண்டின் படி, நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 23,681 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. சிமெண்ட் துறையில், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் நடுத்தர நிறுவனமாக அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com