தனியார் மற்றும் அன்னிய முதலீட்டை வேகப்படுத்தும் மேக் இன் இந்தியா
Speeds up on Private and Foreign Investments – Stimulus for Make in India
நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை கடந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கியுள்ளது, 33,000 க்கு மேற்பட்டோர் குணமடைந்தவர்கள். நடப்பில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார வீழ்ச்சியில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் அதிகரித்துள்ளது. இது நம்முடைய நாட்டில் மட்டுமில்லாமல், வல்லரசான அமெரிக்காவிலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அதற்கான பொருளாதார ஊக்குவிப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அறிவிப்பாக கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தொழில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த அறிவிப்புகள் இரு தினங்களாக அறிவிக்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்குவதில் சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில்(16-05-2020) நிலக்கரி, தாதுக்கள், விமான சேவை, மின் துறை, விண்வெளி மற்றும் அணுசக்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது. சொல்லப்பட்ட துறையில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டமும் மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
நிலக்கரி துறையில் ரூ. 50,000 கோடி செலவிடப்படும் எனவும், பாதுகாப்பு துறையில் முன்னர் இருந்த 49 சதவீத அன்னிய முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. விமானத்துறையில் அரசு-தனியார் பங்களிப்பை துரிதப்படுத்தவும் அரசு முனைந்துள்ளது. புதிய விமான நிலையங்களை தொடங்குவது சார்பாகவும் பேசப்பட்டது.
விமான சேவையில் நேரத்தை குறைக்க புதிய வழித்தடங்கள், விண்வெளி ஆராய்ச்சியில் அரசுடன் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து செயல்படுதல் மற்றும் அணுசக்தியில் அரசு-தனியார் ஒப்பந்தம் ஆகியவற்றை பற்றியும் நிதி அமைச்சர் கூறினார்.
நடப்பில் பேசப்பட்டு வரும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஒரு நடுத்தர பட்ஜெட் தாக்கல்(Interim Budget) போன்று நடைபெற்று வருகிறது. பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் 2024-25ம் ஆண்டுக்கான இலக்கிற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உடனடி தீர்வு சொல்லப்படவில்லை. மேலும் விமானத்துறை ஏற்கனவே நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இதற்கான நேரடி உதவி விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதும் ஒரு குறையாக உள்ளது.
தற்போது சொல்லப்பட்டுள்ள அறிவிப்புகள் பெரும்பாலும் அரசின் கடன்களாகவும், தனியார் மற்றும் அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்துள்ளது. தனியார் பங்களிப்பு ஒவ்வொரு தொழிலுக்கும் முக்கியம் தான் எனினும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கியமான துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது சாதகமாக அமையாது.
மேக் இன் இந்தியா(Make in India) என நாம் சொல்லிக்கொண்டாலும் நமது நுகர்வு தேவை பெரும்பாலும் இறக்குமதியின் மூலம் தான் கிடைக்கப்பெறுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள், மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும், அதே வேளையில் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதும் தான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். மாறாக அன்னிய நிறுவனங்கள் உள்நாட்டில் முதலீடு செய்து விட்டு, தங்களது உற்பத்தியை மக்களிடம் விற்பதால் அது மேக் இன் இந்தியா வாசகத்திற்கு பொருந்தாது. மேலும் இதனால் வர்த்தக பற்றாக்குறையில் நமக்கு சாதகமாக எதுவும் நிகழப்போவதில்லை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை