அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை விகிதம் – பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் உண்மை
Rising Unemployment rate – More Job loss in India – CMIE
கொரோனா வைரஸ் தாக்கத்தின் செய்தி கடந்த இரண்டு மாதங்களாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் முழு ஊரடங்கு சொல்லப்பட்டிருந்தது. கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 2,58,900 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,50,000 ஆகவும் உள்ளது.
ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஐந்து வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது நம் நாட்டிலும் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(CMIE) வெளியிட்ட அறிக்கையின் படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.52 சதவீதமாக உள்ளது. இது மார்ச் முடிவில் 8.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாராந்திர முடிவின் படி, மே 3ம் தேதியில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) 27.11 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் வேலைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஊரடங்கு நிகழ்வுக்கு பின்பு, இதுவரை 12 கோடி பேர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு நபர்களில் ஒருவர் வேலையை இழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
ஏப்ரல் மாத அறிக்கையின் படி, அதிகபட்ச வேலையிழப்பாக தமிழகத்தில் 49.8 சதவீதமும், பீகாரில் 46.6 சதவீதமும் மற்றும் ஜார்கண்டில் 47 சதவீதமும் உள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஏப்ரல் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 43 சதவீதமாக உள்ளது. எதிர்பார்க்காத வகையில் புதுச்சேரியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சுற்றுலா, விடுதிகள் மற்றும் உணவகங்களின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சொல்லப்பட்ட தகவல்கள் அமைப்பு சார்ந்த தொழில்களை கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் போது இதனை விட அதிகமாக இருக்கலாம்.
ஊரடங்கு அடுத்த சில நாட்களுக்கு பின்பு தளர்த்தப்பட்டாலும், பெரும்பாலான தொழில்கள் தற்போதைய நிலையில் இயங்குவதற்கான சூழல் இல்லை. மேலும் பிற மாநிலத்தவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வேளையில், உற்பத்தி துறை மீண்டும் வேகமெடுக்குமா என்பது சந்தேகமே.
கொரோனா வைரஸ் தாக்கம் பொருளாதார பின்னணிக்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், உண்மையில் பொருளாதார மந்தநிலை என்பது கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை விகிதமும் பல மாதங்களாக அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில், சுமார் 40 கோடி மக்கள் இந்தியாவில் மட்டும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
நோய் தாக்கத்திற்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என சில நாடுகள் முன்னுக்கு வந்தாலும், இதன் உண்மை நிலை வரும் வாரங்களில் தெரிய வரும். ஆனால், வேலை இல்லாத சூழல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்காது. எனவே, இப்போதைய அனைவருக்குமான தேவை அத்தியாவசியங்களை பூர்த்தி செய்வதே. இதனை தான் அரசாங்கத்திடம் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை