நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் ? – சிறு பார்வை 2020-21
India’s GDP Growth Rate – A Small Glimpse – FY20-21
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 7 காலாண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. 2018ம் ஆண்டின் துவக்கத்தில் 7.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி பின்னர் இறக்கத்தில் மட்டுமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2019 காலாண்டு முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது.
2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் (மார்ச் 2020) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடப்பு மாதத்தின் இறுதியில் இது சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். மார்ச் 2020 காலாண்டில் பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் பூஜ்யத்திற்கு குறைவான வளர்ச்சியை தான் பெற்றுள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்கா (- 4.8 ) சதவீதமும், தென் கொரியா (-1.4 சதவீதமும்), சீனா (-9.8) சதவீதமும், ஹாங்காங் (-5.3 ) சதவீதமாகவும் மார்ச் 2020 காலாண்டு பொருளாதார வளர்ச்சியை கூறியுள்ளது. வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றான வியட்நாம் (+3.8) சதவீத வளர்ச்சியை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால், பெரும் பொருளாதார சரிவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிறுவனங்கள் ஒரு நாள் இயங்காமல் இருந்தாலே, அதன் பாதிப்பு ஓரிரு காலாண்டுகள் இருக்கும். இந்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் முதலாம் காலாண்டில் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த மூடிஸ்(Moody’s) தர மதிப்பீடு நிறுவனம், இந்தியாவிற்கான 2020-21ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியை பூஜ்யமாக மதிப்பீடு செய்துள்ளது. அரசு ஊக்குவிப்பு இல்லாவிட்டால், இது மேலும் சரியலாம் என எச்சரித்துள்ளது. அதே வேளையில், 2021-22ம் நிதியாண்டுக்கான வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு வழங்கியுள்ளது.
நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit), மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் அதிகரித்து வருவது கவலையளிக்க கூடியதாக உள்ளது. அரசு சார்பில் இதுவரை சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை களையவும், தொழில்களுக்கான வளர்ச்சியை மீட்டெடுக்கவும் அரசாங்கம் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான கடன் பெறுதலில் 7.8 லட்சம் கோடி ரூபாய் இருந்த நிலையில், இதனை மேலும் அதிகரித்து ரூ. 12 லட்சம் கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. சொல்லப்பட்ட தொகை நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கு மட்டும். இதன் மூலம் வரும் நாட்களில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இருக்கலாம். இருப்பினும், பெறக்கூடிய தொகைக்கு சந்தையில் கடன் பத்திரங்களை விற்க வேண்டிய பொறுப்பு பாரத ரிசர்வ் வங்கிக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காலங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருத்தல், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்தல் ஆகியவையும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
வரக்கூடிய நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தினசரி வாழ்க்கையை நகர்த்தி கொண்டு பொருளாதாரத்தை பாதுகாப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எதிர்வரும் மின்சார வாகன மாற்றம், செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொழில்நுட்பத்தால் ஏற்பட உள்ள புரட்சி, புதிய வர்த்தக கொள்கைகள் மற்றும் அதனை சார்ந்த நாணய மதிப்பு ஆகியவை அரசுக்கு முன் இருக்கும் சவாலாக உள்ளன.
வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் கடன் ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அமெரிக்க – சீன வர்த்தக போர் இன்னும் தீர்வை காணவில்லை. இது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் போது, அது நம் நாட்டிற்கான வாய்ப்பாக அமையுமா என்பதும் சந்தேகமே.
ஏனெனில் தொழிலை எளிமையாக துவங்குதல், புதிய தொழில் கொள்கைகளுக்கான வரைமுறைகள் மற்றும் வரி விதிப்புகளில் நாம் இன்னும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் வர்த்தகம் நமக்கு கிடைத்து விடும் என பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு அமெரிக்கா தான் காரணமாக இருந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளில் நமக்கு போட்டியாக வியட்நாம், தென் கொரியா, ஹாங்காங் போன்ற நாடுகள் உள்ளன. எனவே வரக்கூடிய காலங்களில் அரசின் முடிவை பொறுத்து தான் அவை வாய்ப்புகளாக மாற்றப்படுமா என்பது தெரிய வரும்.
நடப்பில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அடுத்த ஓரிரு வருடங்கள் செல்லும் நிலையில், இது மக்கள் வாழ்வாதாரத்தில் பெருத்த சிரமத்தை ஏற்படுத்தும். பணம் கையிருப்பு கொண்டவர்கள் வரவிருக்கும் நாட்களில் அதிகமாக செலவழிக்காமல், சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசின் துரித நடவடிக்கை இப்போது தேவைப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை