ஹேவல்ஸ் இந்தியா – நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 178 கோடி
Net Profit of Rs. 178 Crore in the Q4FY20 for Havells India – Quarterly results
மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் தான் ஹேவல்ஸ் இந்தியா. உத்தரப்பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் கடந்த 1958ம் ஆண்டு துவங்கப்பட்டது. வீட்டு மற்றும் சமையல் சார்ந்த மின் உபகரணங்கள், மின் விளக்குகள், சுவிட்சுகள், சிறிய வகையிலான மோட்டார்கள் மற்றும் கேபிள் வயர்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தொழிற்துறை சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்வதில் இந்த நிறுவனம் முன்னோடியாக உள்ளது. ஹேவல்ஸ் இந்தியா நிறுவனத்தின் கிளைகள் மற்றும் அதன் வியாபாரம் சுமார் 50 நாடுகளில் பரவி கிடைக்கின்றன. ஹேவல்ஸ், கிராப்ட்ரீ(Crabtree), லாயிட்(Lloyd), ப்ராம்ப் டெக் மற்றும் ஸ்டாண்டர்ட் எலக்ட்ரிக் ஆகியவை இதன் பிரபலமான பிராண்டுகள்.
குளியலறை ஹீட்டர்கள், குடிநீர் சுத்திகரிப்பு, காற்றை சுத்தப்படுத்துதல், மின் விசிறிகள், தண்ணீர் பம்புகள் ஆகியவற்றிலும் இதன் விற்பனை உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 32,000 கோடி. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் ஹேவல்ஸ் வட்டி பாதுகாப்பு விகிதத்தையும்(Interest coverage ratio) 47 மடங்காக கொண்டுள்ளது கூடுதல் பலம்.
நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,217 கோடியாகவும், செலவினம் ரூ. 1,973 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 21 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.
வரிக்கு முந்தைய லாபம் ரூ. 198 கோடி மற்றும் நான்காம் காலாண்டின் நிகர லாபம் 178 கோடி ரூபாய். கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. மார்ச் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,755 கோடியாகவும், நிகர லாபம் 199 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
2020ம் ஆண்டின் மார்ச் இறுதியில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,249 கோடியாகும். விற்பனை கடந்த பத்து வருட காலத்தில் 7 சதவீதமும், லாப வளர்ச்சி 69 சதவீதமும் (10 வருடங்களில்) ஏற்றம் பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 30 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை