Reliance Jio Digital

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

What’s going on Reliance JIO ? – RIL – The Next Generation Change

நாட்டின் மிகப்பெரிய குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய். எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலை முதன்மையாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் பல தொழில் முகங்களை கடந்து, இன்று ரிலையன்ஸ் ஜியோ என்ற மாபெரும் ஆயுதத்தை கொண்டு சந்தையை ஆக்கிரமித்து விட்டது. திருபாய் அம்பானியை போலவே சிந்திப்பதாக கூறப்படும் நிறுவனர் முகேஷ் அம்பானி, புதிய தொழில்முனைவுகளை சிந்திப்பதும், துணிந்து சில தொழில் முயற்சிகளை செயல்படுத்துவதும் அவருடைய இயல்பாக உள்ளது.

நிறுவனத்தின் கடன் மட்டும் சுமார் 2.90 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் விற்பனை ரூ. 1.36 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் ரூ. 6,348 கோடியாகவும் சொல்லப்பட்டிருந்தது. கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 14 சதவீதமும், லாபம் 10 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves in Balance sheet) ரூ. 4.47 லட்சம் கோடியாக இருந்தாலும், சமீப காலங்களில் அதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் பெரியளவில் வருவாயை ஈட்டவில்லை. அதிகமாக கடன் தொகையை கொண்டிருக்கும் நிலையில், வங்கியில் கடனை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. இதன் காரணமாக நிறுவனர், தனது நிறுவனத்தின் கடனை குறைக்கும் விதமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் உள்ள துணை நிறுவனங்களின் பங்குகளை விற்க முன்வந்தார். இது பொது சந்தையில் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.

ஆரம்ப நிலையில், சவுதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திற்கு தனது எண்ணெய் தொழிலின் சில பங்குகளை விற்கும் பொருட்டு ஒப்பந்தம் செய்திருந்தார். ஆரம்கோ நிறுவனமும் இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலம் முதலீட்டை துவங்க முடிவெடுத்தது. ஆனால் சமீப காலங்களில் அந்த நிறுவனத்திற்கு எண்ணெய் ரீதியான சில சிக்கல்கள் வந்தவுடன், முதலீட்டை துவங்குவதற்கான காலத்தை தள்ளி போட்டது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார தேக்கம் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான நிறுவனங்களை பாதித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய ஆயுதமாக பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஒரு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பாக கண்டார் முகேஷ் அம்பானி. உள்நாட்டு தொலைத்தொடர்பு துறையில் இருந்த நிறுவனங்கள் யாரும் பெரியளவில் முயற்சிக்காத, தகவல் மூலம் வாய்ஸ் கால்களை ஏற்படுத்துவதற்கான வேலையை மும்முரமாக செய்தார்.

ஏன், சந்தை தலைமையாக சொல்லப்பட்ட ஏர்டெல் நிறுவனம் கூட, பெரிதாக அதனை கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் இது போன்ற தொழில்நுட்பங்கள் வர சில நாட்கள் ஆகலாம் என பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நினைத்து கொண்டன. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனைக்கு பிறகான புரட்சியாக ரிலையன்ஸ் ஜியோ பார்க்கப்பட்டது. புதிய தொழில் கொள்கையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்து கொள்ள சிரமப்பட்டது. முடிவில், சில நிறுவனங்கள் காணாமல் போயின, பெரு நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன மற்றும் சில திவால் நிலைக்கு சென்றன.

இன்று ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என்ற மூன்று நிறுவனங்கள் மட்டும் தான் தொலைத்தொடர்பு துறையில்(Telecom) உள்ளது. பொதுத்துறை மினிரத்னா நிறுவனமான பி.எஸ்.என்.எல். அரசின் தவறான கொள்கையால் தனது பலத்தை இழந்து விட்டது. முன்னர், நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், 60 சதவீதத்திற்கு மேலான சந்தை பங்களிப்பை கொண்டிருந்த பி.எஸ்.என்.எல்.(BSNL) இன்று நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் நிறுவனமாக மாறியது.

வோடபோன் ஐடியா(Vodafone Idea) சந்தையில் தனக்கான கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டிருந்தாலும் கடந்த நான்கு வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கடன் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய். இன்று நாட்டின் மிகப்பெரிய சந்தாதாரர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ வந்து விட்டது. ஜியோவின் வருகைக்கு பின்னர், உள்நாட்டில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து விட்டது எனலாம்.

2015ம் ஆண்டுக்கு முன்னர், பெரியளவில் ஏற்றம் காணாத ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பின்னர் மளமளவென ஏறியது. 2017ம் ஆண்டில் பங்குதாரர்களுக்கு 1:1 போனஸ் பங்குகளும்(Bonus Issue) வழங்கப்பட்டது. நிறுவனத்தின் அதிகமான கடன் தொகையால், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இதன் பங்கு விலையை குறைத்து பரிந்துரைத்தது. கடன் தொகையை விரைவாக குறைக்கும் முடிவை எடுத்தார் முகேஷ். ஆரம்கோ ஒப்பந்தம் முடிவதற்கு முன்னர், தனது துணை நிறுவனமான ஜியோவின் ஆயுதத்தை பயன்படுத்தினார்.

நடப்பாண்டில் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்(Facebook) நிறுவனத்தை, ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய அழைத்தார் முகேஷ் அம்பானி. தொழில்நுட்பத்தை சாதகமாக கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்ய ஒரு அருமையான வாய்ப்பு என ஜியோவின் 10 சதவீத பங்குகளை வாங்கியது. இதற்கடுத்தாற் போல், அமெரிக்காவை சேர்ந்த சில்வர் லேக்(Silver Lake) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் சுமார் 5,600 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு நிறுவனமான விஸ்டா ஈக்விட்டி(Vista Equity Partners), ஜியோவின் 2.3 சதவீத பங்குகளை வாங்க சம்மதம் தெரிவித்தது. தற்போது ஜெனரல் அட்லாண்டிக்(General Atlantic) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 2 சதவீத பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. இது போக மற்றொரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலும் கசிகிறது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் முதலீடு செய்ய உள்ள மதிப்பு ரூ. 10,000 கோடி. இதுவும் ஒரு அமெரிக்க நிறுவனமாக முன்னெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்னர், ஆரம்கோ மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவங்களிடம் தனது 20 சதவீத பங்குகளை விற்று, கடனை குறைக்க முயற்சி எடுத்தது. ஆனால், தற்போது ரிலையன்ஸ் ஜியோ மூலம் 15 சதவீதத்திற்கு மேலான பங்குகளை கொடுத்துள்ளது. சமீபத்தில் சவுதி நிறுவனம் ஒன்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பை உயர்த்தி கூறியுள்ளனர். சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சரிவை தடுக்க சரியாக காய்களை நகர்த்தினார் நிறுவனர். பங்குதாரர்களுக்கு உரிமை பங்கு அறிவிப்பும் வெளிவந்தது.

தொழில் புரட்சியை ஏற்படுத்தும் திருபாய் அம்பானி போல, முகேஷ் அம்பானி செயல்படுகிறார் என சொல்லப்பட்டாலும், உண்மையில் கடனை குறைத்து கடனில்லா நிறுவனமாக இருப்பது தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நோக்கம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நுகர்வு சந்தையில் கிடைக்கப்போகும் லாபங்களை எதிர்பார்த்து, தற்போது ஜியோ முதலீட்டை ஒரு வாய்ப்பாக கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய நுகர்வு சந்தையில், இன்று பெரும்பாலான பெரு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக தான் உள்ளன. மேக் இன் இந்தியா, இந்திய நிறுவனங்களே முன்னெடுப்பு என விளம்பரங்கள் காணப்பட்டாலும் பங்குச்சந்தையிலும் அன்னிய முதலீடுகள் தான் அதிகரித்துள்ளது. இது நம்மை போன்ற வேகமாக வளரும் நாட்டிற்கு பின்னாளில், எப்படிப்பட்ட சவாலாக இருக்கும் என்பதனை அறிவதற்கில்லை.

இன்றையளவில், நாட்டில் உள்ள பிரபலமான பிராண்டுகளில்(Flipkart, Zomato, Swiggy, Paytm, Ola) சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தான் முதலீடு செய்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியாக சொல்லப்படும் சில தனியார் வங்கிகளிலும் அன்னிய முதலீட்டாளர்கள் தான் பெரும்பான்மையான பங்குகளை கொண்டிருக்கின்றனர். உண்மையில் இன்று அமெரிக்க – சீன வர்த்தக போர் என ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருந்தாலும், சீனாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் முதலீடு பெருமளவில் உள்ளது. சீனா இன்று மிகப்பெரிய பொருளாதார நாடாக வலம் வருவதற்கு அமெரிக்கா தான் காரணமாக இருந்துள்ளது. பின்னர், அதுவே இன்றைய சிக்கலாக மாறி விட்டது. இது நம் நாட்டிற்கும் பொருந்தும்.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்று செய்தியாக வந்தாலும் சரி, முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது என கூறினாலும் சரி, வரவிருக்கும் காலங்களில் அதற்கான மாற்றம் தெரிய வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s