அம்புஜா சிமெண்ட்ஸ் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 554 கோடி
Net Profit of Rs. 554 Crore in Q4FY20 – Ambuja Cements
மும்பையை தலைமையிடமாக கொண்டு கடந்த 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அம்புஜா சிமெண்ட்ஸ். ஆரம்ப நிலையில், குஜராத் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனமானது.
சிமெண்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான ஹோல்சிம்(Holcim), அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 62 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 34,200 கோடி. புத்தக மதிப்பு 116 ரூபாயாகவும், தற்போதைய பங்கு முகமதிப்பு 2 ரூபாயாகவும் உள்ளது.
கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.001 ஆக உள்ளது. நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 25 மடங்கிலும், தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 1.50 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக இருக்கும் நிலையில், நிறுவனர்கள் சார்பில் அடமான பங்குகள் எதுவும் இல்லை.
2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை(Quarterly Results) வெளியிட்டுள்ள இந்நிறுவனம் விற்பனையாக ரூ. 6,250 கோடியும், செலவினமாக ரூ. 5,058 கோடியையும் சொல்லியுள்ளது. இதர வருமானம் 145 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,007 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 554 கோடி.
சொல்லப்பட்ட நிகர லாபத்தை, கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது 12 சதவீத வளர்ச்சியாகும். அதே வேளையில் விற்பனை வளர்ச்சி சரிந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதமும், 10 வருட காலத்தில் 15 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது.
இது போல, லாபம் ஐந்து வருடங்களில் 8 சதவீதமும், பத்து வருட கால அளவில் 6 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது. பங்கு மீதான வருமானம் கடந்த 10 வருடங்களில் 11 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
டிசம்பர் 2019ம் காலாண்டின் படி, நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 23,681 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. சிமெண்ட் துறையில், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் நடுத்தர நிறுவனமாக அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை