நாட்டின் நிதி பற்றாக்குறை சிக்கல் – அபாய சங்கிலியை உடைக்கும் பொருளாதாரம்
India’s Fiscal Deficit Problem – The economy that breaks the Situation
பொதுவாக நமது குடும்பத்தின் நிதி நிலை சரியான அளவில் இருந்தால் தான், குடும்ப உறவுகளிடம் பிரச்சனை இல்லாமல் சுமூகமான வாழ்வு முறை அமையும். வரவுக்குள் செலவு இருக்கும் போது, சிறு குடும்பமாக இருந்தால் என்ன, பெரிய குடும்பமாக இருந்தால் என்ன… சம்பாதிக்கும் பணம் ஒரு ரூபாயாக இருந்து, செலவு 50 பைசாவாக இருந்தால் சந்தோசம் தானே. இதுவே தலைகீழாக சென்றால், எப்படி இருக்கும் ?
அப்படி தான் நாட்டின் நிதி பற்றாக்குறையும். மத்திய அரசின் நிதி அறிக்கையில் இரு கண்களாக நிதி பற்றாக்குறையும்(Fiscal Deficit), வர்த்தக பற்றாக்குறையும்(Trade Deficit) இருக்கும். இது ஓரளவு கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், பொருளாதாரத்தில் பெரும்பாலும் பாதிப்பு இருக்காது. அதே வேளையில், இரண்டில் ஏதாவது ஒன்று பாதிப்படையும் போது, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்.
நாட்டின் நிதி பற்றாக்குறை கடந்த பிப்ரவரி மாத முடிவின் போது மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில்(GDP) 5.07 சதவீதமாக சொல்லப்பட்டது. 2019-20ம் நிதியாண்டில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் சொன்ன கணக்கு படி, நிதி பற்றாக்குறை அமையவில்லை. மாறாக, வரவுக்கு மேலாக செலவு அதிகரித்திருந்தது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டின் முடிவில் (மார்ச் 31, 2020) நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. முன்னர், இந்த விகிதம் 3.8 சதவீதத்திற்குள் இருக்கும் என நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இப்போது சொல்லப்பட்ட இலக்கை தாண்டி, நாட்டின் நிதி பற்றாக்குறை சென்றுள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காணப்பட்டு வந்த பொருளாதார மந்தநிலை, தேவை நுகர்வு குறைவு, இதன் காரணமாக வரி வசூலும் வெகுவாக குறைந்துள்ளது. எதிர்பார்த்த வருவாய் அரசுக்கு கிடைக்காத நிலையில், எதிர்மறையாக செலவும் அதிகரித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் பட்ஜெட்டில் துண்டு விழும் செயலாக இது நிகழ்ந்துள்ளது.
நடப்பில் கொரோனா தாக்கத்தால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால், வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார எண்கள் மேலும் சரியலாம். தற்போதைய நிலையில் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையாக ஏற்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையை சமாளிக்க மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாரத ரிசர்வ் வங்கி, அமெரிக்காவை போல பணத்தை அச்சடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்வு ஏற்படுமாயின் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்படலாம். அதாவது நாட்டின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய பாரத ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் கடன் பத்திரங்களை வாங்க நேரிடும். இதற்காக பணம் அச்சடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த விவகாரத்தை மத்திய வங்கி மறுத்துள்ளது. பொதுவாக மத்திய அரசு, தனது நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு கடன் பத்திரங்களை நிதி சந்தையில் விற்கும். இருப்பினும், இதற்கான மதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் பாரத ரிசர்வ் வங்கி தலையிடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை