Category Archives: Stock Analysis

பிரின்ஸ் பைப்ஸ் நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ.97 கோடி நிகர லாபம்

பிரின்ஸ் பைப்ஸ் நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ.97 கோடி நிகர லாபம் 

Prince pipes reported a Net Profit of Rs.97 Crore – Q4FY21

1987ம் ஆண்டு துவங்கப்பட்ட பிரின்ஸ் பைப்ஸ் நிறுவனம் பாலிமர் குழாய்கள் உற்பத்தியில் தொழில் செய்து வருகிறது. பி.வி.சி. பைப்புகளில் முன்னணி நிறுவனமாகவும், பாலிமர் பிரிவில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவத்தையும் கொண்டிருக்கிறது பிரின்ஸ் பைப்ஸ். யூ.பி.வி.சி.(UPVC), சி.பி.வி.சி., பி.பி.ஆர். மற்றும் பி.பி.(PP) ரக பிரிவில் குழாய்கள் உற்பத்தி மற்றும் பொருத்துதலை முக்கிய பணியாக கொண்டுள்ளது.

பிரின்ஸ் பைப்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.6,300 கோடி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாய் விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த இந்த பங்கு, தற்போது பங்கு ஒன்றுக்கு 600 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.08 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio – ICR) 16 மடங்குகளிலும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2020-21ம் நிதியாண்டின் மார்ச் மாத நான்காம் காலாண்டில்(Quarterly results) வருவாய் 761 கோடி ரூபாயாகவும், செலவினம் 615 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.97 கோடி.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 933 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக வருவாய் 2,072 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,710 கோடியாக உள்ளது. மார்ச் 2021ம் ஆண்டின் முடிவில் நிறுவனம் 222 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய லாபம் இரு மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 16 சதவீதமும், லாபம் 49 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பிளம்பிங், நிலத்தடி, கழிவுநீர், விவசாய போர்வெல், நீரேற்றம், கேபிள் குழாய் மற்றும் பிற தொழிற்துறைக்கான தேவையையும் பிரின்ஸ் பைப்ஸ் செய்து வருகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 38 கோடி

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 38 கோடி 

Thyrocare Technologies Q4FY21 – Net profit of Rs.38 Crore

கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த திரு. வேலுமணி அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் தைரோகேர் டெக்னாலஜிஸ். சுகாதார துறையில் தொழில் செய்து வரும் இந்நிறுவனம், நாட்டில் உள்ள நோயாளிகள், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மலிவான விலையில் தரமான நோயறிதல் சேவைகளை வழங்குவதில்(Diagnostic Services) முதன்மை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

நிறுவனத்தின் நிறுவனரான திரு. வேலுமணி அவர்கள் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு 5,600 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடன்-பங்கு விகிதம் 0.02 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 176 மடங்குகளிலும் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.

நிறுவனர்கள் சார்பில் 66 சதவீத பங்குகளும், பங்கு அடமானம் எதுவும் நிறுவனர்கள் தரப்பாக வைக்கப்படவில்லை. 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.147 கோடியாகவும், செலவினம் 95 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ.4 கோடியும், சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபம் 38 கோடி ரூபாயாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக 2021ம் நிதியாண்டில் வருவாய் ரூ. 495 கோடியாகவும், நிகர லாபம் 113 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 14 சதவீதமும், நிகர லாபம் 28 சதவீதமாகவும் வளர்ந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 374 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை 15 சதவீதமும், லாபம் 17 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருட காலத்தில் 21 சதவீதமாக இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம மதுரையை சேர்ந்த பங்கு – விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ்

நம்ம மதுரையை சேர்ந்த பங்கு – விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் 

VTM(Virudhunagar Textile Mills) Limited – Fundamental Analysis

கடந்த 1946ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ். நெசவு சார்ந்த உற்பத்தியை தனது தொழிலாக கொண்டிருக்கும் இந்நிறுவனம், தியாகராஜர் குழுவின்(Thiagarajar Mills Group) ஒரு அங்கமாகும். மதுரை மாவட்டம் கப்பலூரை சேர்ந்த தியாகராஜர் மில்ஸ் நிறுவனம், ஜவுளித்தொழிலில் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு. கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிறுவன குழுமம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் மேலாண்மை கல்வி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உட்பட சுமார் 19 கல்வி நிலையங்களை தமிழகத்தில் தோற்றுவித்துள்ளது.

துவக்க காலத்தில் உள்நாட்டுக்கு தேவையான உற்பத்தியை செய்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்துள்ளது. நெசவு சார்ந்த உற்பத்தியில் நவீனமயமாக்கும் முயற்சியில் முதலீடுகளை ஒவ்வொரு காலத்திலும் செய்து வந்துள்ளது இந்நிறுவனம்.

உற்பத்தி பிரிவில் 258 அதிநவீன தறிகளை இந்நிறுவனம் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிறந்த துணி உற்பத்தியை எண்ணிக்கையிலும், சிக்கலான தன்மைகளை சரி செய்வதற்கான போதுமான உபகரணங்களையும் வி.டி.எம். நிறுவனம் கொண்டுள்ளது. பருத்தி நூல் வரம்பில் நூறு சதவீத நிபுணத்துவம் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. வாயு நூல்(Gassed yarn) செயலாக்கம் நிறுவனத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

வி.டி.எம். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக திரு.கண்ணன் உள்ளார். நிறுவனர்கள் பங்களிப்பில் கண்ணன் மற்றும் அவரை சார்ந்த நிறுவனங்களிடம் 59 சதவீத பங்குகளும், தியாகராஜர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் 7 சதவீத பங்குகளும், பிற நிதி நிறுவனம் சார்ந்து 9 சதவீத பங்குகளும் உள்ளது. ஒட்டுமொத்தமாக நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.100 கோடி. புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.03 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 16 மடங்குகளில் இருக்கிறது. 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.143 கோடியாகவும், செலவினம் 126 கோடி ரூபாயாகவும் உள்ளது. சொல்லப்பட்ட வருடத்தில் நிகர லாபம் 10 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

கடந்த பத்து வருடங்களில் லாப வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்தாலும், விற்பனை வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 215 கோடி ரூபாயாக உள்ளது. சிறு நிறுவன பங்குகளில் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாத நிறுவனமாகவும், தொடர்ச்சியாக ஈவுத்தொகையை(Dividend) அளிக்கும் நிறுவனமாகவும் விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் நிறுவனம் உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நுகர்வோர் சாதனங்கள் – தேநீர் – ரப்பர் – துறை சார்ந்த அலசலும், முதலீட்டு வாய்ப்புகளும்

நுகர்வோர் சாதனங்கள் – தேநீர் – ரப்பர் – துறை சார்ந்த அலசலும், முதலீட்டு வாய்ப்புகளும் 

Sectoral Analysis & Investment Opportunities – Webinar 

பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த துறைகளின் நிறுவன பங்குகள் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்து தகவல். ஆனால் நாம் நித்தமும் வீட்டில் பார்க்கும், பயன்படுத்தும் பொருட்களை பற்றிய நிறுவனங்களை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.

அது போன்ற நிறுவனங்களில் நீடித்த தன்மை இல்லாத நுகர்வோர் பொருட்களை(FMCG) கூறலாம். நீடித்த தன்மை இல்லாத பொருட்கள் என சொல்லும் போது உணவு பொருட்கள் மற்றும் தனிநபர் சார்ந்த அழகு சாதன பொருட்களை சொல்லலாம். அதே வேளையில் நீடித்த தன்மை கொண்ட சில பொருட்களை சொல்ல வேண்டுமெனில் நம் வீட்டில் அதிக இடத்தை அடைத்து கொள்வது அவை தான்.

மரச்சாமான்கள், குளிர்சாதன பெட்டி, மைக்ரோவேவ், ஏர் கண்டிஷனர், துணி சலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்திகள், சமையலறை அடுப்புகள், ஹீட்டர்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களை சொல்லலாம். இவை பொதுவாக ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தக்கூடிய மற்றும் நீடித்த தன்மை கொண்ட பொருட்கள்(Consumer Durables) எனலாம்.

மேலே சொல்லப்பட்ட Consumer Durables துறை, சந்தையில் பெரும்பாலோனர்களால் அறியப்படுவதில்லை. இவற்றின் தொழில்கள் வணிக சுழற்சியாக இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளிக்கக்கூடியவை. இதனை பற்றிய அடிப்படை அலசலை தான் நாம் வரவிருக்கும் இணைய நிகழ்வில் பேச போகிறோம்…

வாங்க பேசுவோம்,

  • துறை சார்ந்த அலசல்: நுகர்வோர் சாதனங்கள், தேநீர், ரப்பர் துறைகள்
  • சாத்தியமான முதலீட்டு உத்திகள்(Potential Investing Strategies)
  • பங்குகளை எளிதாக அளவிட்டு, சரியான பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி ?
  • அடிப்படை முதலீட்டு பகுப்பாய்வு: சாக்லேட் அனாலிசிஸ்
  • பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் நீண்டகாலத்தில் செல்வத்தை பெருக்குதல்

Stock Insights Version 4

நிகழ்ச்சி நிரல்:

நாள் & நேரம்:  08-05-2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு (இரண்டு மணிநேர பேச்சு)

கட்டணம்: ரூ. 499 மட்டுமே (ஐந்து வாரங்களுக்கு)

இது ஒரு இணைய வழியிலான நிகழ்வு. நிகழ்வுக்கு பதிவு செய்ய…

https://www.instamojo.com/varthagamadurai/stock-insights-version-40/

பதிவுக்கு பின், நிகழ்ச்சிக்கான இணைப்பு உங்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பொறுப்பு-துறப்பு:

இந்த நிகழ்ச்சி நிரல் பங்குச்சந்தை அடிப்படை கற்றலுக்கான இணைப்பு மட்டுமே. இங்கே எந்தவொரு பங்குகளும் பரிந்துரைக்கப்படாது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) கொண்டு அலசப்படும் பங்குகள் விளக்கத்திற்கு மட்டுமே. முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்

இந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்  

HUL(Hindustan Unilever Ltd) reported a Net Profit of Rs.2,186 Crore in Q4FY21

1931ம் ஆண்டு இந்துஸ்தான் வனஸ்பதி உற்பத்தி நிறுவனமாக துவங்கப்பட்டது தான் பின்னாளில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனமாக மாறியது. இதன் தாய் நிறுவனம் லண்டனை தலைமையிடமாக கொண்ட யூனிலீவர்(Unilever). பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் யூனிலீவர் குழுமம் தனது தொழிலை 190 நாடுகளிலும், 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளையும் கொண்டு இயங்குகிறது.

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் உணவு, தனிநபர் மற்றும் வீட்டு பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு போன்றவற்றில் தனது தொழிலை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.65 லட்சம் கோடி ரூபாய். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்துஸ்தான் யூனிலீவர் 62 சதவீத நிறுவனர்கள் பங்களிப்பை கொண்டிருக்கிறது.

சரும(Skincare) பராமரிப்பில் 54 சதவீத சந்தை பங்களிப்பையும், சலவை(Dish washing Detergent) பிரிவில் 55 சதவீதமும், சாம்பூ(Shampoo) பிரிவில் 47 சதவீதம், தனிநபர் பிரிவில் 37 சதவீதமும் மற்றும் பற்பசை பிரிவில் 17 சதவீத சந்தை பங்களிப்பையும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கொண்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,433 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.9,391 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 24 சதவீதமாகவும், நிகர லாபம் 2,186 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 44 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த பத்து வருட கால அளவில் காணும் போது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 9 சதவீதமும், லாபம் 15 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் 2020ம் வருட முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 8,013 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில், எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் சுமார் 4 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம்

கேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம் 

Castrol India reported a Net profit of Rs.244 Crore – Q1CY2021

நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்ட கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனம், வாகன மற்றும் தொழிற்துறைக்கான மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியை செய்து வருகிறது. இந்த துறையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், மசகு எண்ணெய் பிரிவில் 20 சதவீத சந்தை பங்களிப்பையும்(Market Share) கொண்டுள்ளது கேஸ்ட்ரால்.

பிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. உலகெங்கிலும் உள்ள வாகன, தொழிற்துறை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து, எண்ணெய் ஆய்வு மற்றும் மசகு எண்ணெய்,  கிரீஸ்கள், அதனை தொடர்புடைய சேவைகளை அளிக்கும் இந்நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தியாளராகவும், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகஸ்தராகவும் விளங்குகிறது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,400 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 51 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடனில்லா நிறுவனமாக வளம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 257 மடங்குகளில் உள்ளது.

2021-22ம் ஆங்கில ஆண்டின் முதல் காலாண்டில்(மார்ச் 2021 – Quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ.1,139 கோடியாக உள்ளது. இதன் செலவினம் 799 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.332 கோடியாகவும், நிகர லாபம் 244 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

கடந்த மார்ச் 2020ம் காலாண்டில் வருவாய் 688 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.125 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இதனை ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 95 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் 2020 காலத்தின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 920 கோடி ரூபாய்.

கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் முதலீட்டாளர் பங்களிப்பில், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் சுமார் 11 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. கேஸ்ட்ரால் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,394 கோடியாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி 

HCL Technologies reported a net profit of Rs.1,102 Crore – Q4FY21

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம், தூத்துக்குடியை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால் கடந்த 1976ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் எச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 46 நாடுகளில் தனது அலுவலகங்களையும், சுமார் 1.6 லட்சம் பணியாளர்களையும் கொண்டு நிறுவனம் தனது தொழிலை புரிந்து வருகிறது.

பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.59 லட்சம் கோடி. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 86,194 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. நிறுவனத்தின் முதல் நூறு மில்லியன் டாலர் வருவாய், வெறும் 15 வாடிக்கையாளர்களின் மூலம் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வருவாய் ஈட்டலில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் வணிக சேவை மூலம் 72 சதவீதமும், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் 17 சதவீதமும், தயாரிப்புகள் மற்றும் தளங்களின்(Production & Platforms) வாயிலாக  11 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் அமெரிக்க சந்தையிலிருந்து தான் பெறப்படுகிறது.

அமெரிக்காவில் 58 சதவீதம், ஐரோப்பிய பகுதியில் 27 சதவீதம், உள்நாட்டில் 3 சதவீதமும் மற்றும் பிற நாடுகளின் மூலம் 12 சதவீத பங்களிப்பும் வருவாயாக உள்ளது. 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் வருவாய் 19,641 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,092 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 244 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,102 கோடி. இதனை கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 65 சதவீத குறைவாகும். வரி செலுத்துதலில் சுமார் 67 சதவீதம் செலவிட்டதன் காரணமாக மார்ச் 2021 காலாண்டின் நிகர லாபம் குறைந்துள்ளது.

2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் 10 பில்லியன் டாலர் வருவாயை கடந்த நிலையில், பங்குதாரர்களுக்கு 16 ரூபாயை (பங்கு ஒன்றுக்கு) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது எச்.சி.எல். நிறுவனம்.

கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 20 சதவீதமும், லாபம் 24 சதவீதமுமாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet reserves) மார்ச் 2021 முடிவின் படி 59,370 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 32 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீட்கப்பட்ட நிறுவனங்கள், துணிச்சலான பங்குகள் – இந்த வார நிகழ்ச்சி நிரல்

மீட்கப்பட்ட நிறுவனங்கள், துணிச்சலான பங்குகள் – இந்த வார நிகழ்ச்சி நிரல் 

Rising up from the Ashes – Bankruptcy to Brave – Webinar Meet

பங்குச்சந்தையில் பணம் பண்ணுவது எளிமையாக தெரிந்தாலும், தொழிலுக்கான அடிப்படை தன்மைகளை அறியாமல் ஒரு நிறுவனத்தை அவ்வளவு எளிதாக எடை போட்டு விட முடியாது. நூறு வருட அனுபவம் கொண்ட நிறுவனங்கள், தங்களை புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றத்திற்கு உட்படுத்தாத நிலையில் இன்று காணாமல் போயுள்ளன.

2008ம் ஆண்டு வாக்கில் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்த திரு. அனில் அம்பானி, இன்று தனது பெரும்பாலான நிறுவனங்களை அடகு வைத்து திவால் நிலைக்கு சென்று விட்டார்(உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை)

. சொல்லப்பட்ட வருடத்தில் பங்கு ஒன்று 800 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகியிருந்த நிலையில், நடப்பு 2021ம் வருடத்தில் இந்த பங்கு 2 ரூபாய்க்கு குறைவாக வர்த்தகமாகி வருகிறது.

இதற்கு காரணமாக சொல்லப்படுவது தொழிலில் அடைந்த தோல்வி – நிர்வாக குறைபாடு, அதிக கடன், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, தொழில்நுட்பத்தில் தவறான அணுகுமுறை ஆகியவை தான். இது போன்ற ஏராளமான நிறுவனங்களை நாம் உதாரணமாக சொல்லலாம். அரசு பொதுத்துறை நிறுவனங்கள் திவாலானால், அதனை களைய அரசு செயல்படும். ஆனால் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு அவ்வாறு இருப்பதில்லை. யாரேனும் அந்த நிறுவனத்தின் தொழிலை கையகப்படுத்த வேண்டும்.

அதே 2008ம் வருடத்தில் பெரிதும் பிரபலமாகாத மற்றொரு சகோதரர் திரு. முகேஷ் அம்பானி, இன்று நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடமும், உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் அங்கம் வகிக்கிறார். எப்படி இருப்பினும், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் சரிவர தொழில் புரியவில்லை என்றால், அது முதலீட்டாளர்களுக்கு தான் நட்டம்.

இன்னும் சில நிறுவனங்கள் திவால் நிலைக்கு அருகில் சென்றிருந்தும், பின்பு துணிச்சலாக மீட்கப்பட்டு இன்று முதலீட்டாளர்கள் வரவேற்கும் பங்குகளாக மாறியுள்ளன. அதன் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளும்(Fundamental Parameters) சிறப்பாக உள்ளன. ஆனால் இது போன்ற நிறுவனங்களை நாம் எளிமையாக கண்டுபிடித்து விட முடியாது.

மீட்கப்பட்ட நிறுவனங்களை பற்றியும், துணிச்சலான அந்த காரணத்தையும் அறிவோம், வாங்க…

இணைய வழியிலான நிகழ்ச்சி நிரல்(Webinar):

  • 3 நிறுவன பங்குகள் & மூன்று வெவ்வேறு துறைகள்
  • பங்கு முதலீட்டு போர்ட்போலியோ(Stock Portfolio) எவ்வாறு இருக்க வேண்டும் ?
  • முதலீட்டாளர்களுக்கான ஆறு முதலீட்டு ரகசியங்கள்
  • மீட்கப்பட்ட நிறுவனங்களை கண்டறிவது எப்படி ?
  • புதிய திட்டங்களும், முதலீட்டு கற்றலும்
பதிவுக்கு:  https://imjo.in/N3sGmA

பதிவுக்கு பின், நிகழ்ச்சிக்கான இணைப்பு உங்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பொறுப்பு-துறப்பு:

இந்த நிகழ்ச்சி நிரல் பங்குச்சந்தை அடிப்படை கற்றலுக்கான இணைப்பு மட்டுமே. இங்கே எந்தவொரு பங்குகளும் பரிந்துரைக்கப்படாது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) கொண்டு அலசப்படும் பங்குகள் விளக்கத்திற்கு மட்டுமே. முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9,246 கோடி

டி.சி.எஸ். நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9,246 கோடி 

TCS reported a Net profit of Rs. 9,246 Crore in Q4FY21

தகவல் தொழில்நுட்ப துறையில் நாட்டின் முதன்மை நிறுவனமாக விளங்கும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்டது. இதன் முக்கிய வாடிக்கையாளர்களாக உலகின் தலைசிறந்த நிறுவனங்களான கூகுள், அமேசான், அடோப், ஆரக்கிள், இன்டெல், ஆப்பிள், போஸ்ச், ஐ.பி.எம். போன்றவை உள்ளன.

நிறுவனத்தின் முதல் 50 வாடிக்கையாளர்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டுகிறது டி.சி.எஸ். டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 4.7 லட்சம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வங்கிகள், நிதி சேவை மற்றும் காப்பீட்டு துறையின்(BFSI) மூலம் பெறப்படுகிறது. டி.சி.எஸ். நேற்று(12-04-2021) தனது 2020-21ம் நிதியாண்டுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. மார்ச் 2021 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 43,705 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 30,904 கோடியாகவும் இருந்துள்ளது.

இயக்க லாபம்(Operating Profit) ரூ.12,801 கோடியாகவும், இதர வருமானம் 931 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 12,527 கோடி ரூபாயாக உள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில்(Quarterly results) நிகர லாபம் ரூ.9,246 கோடி. அதாவது பங்கு ஒன்றின் மீதான வருவாய்(EPS) 25 ரூபாயாக இருந்துள்ளது.

முந்தைய மார்ச் 2020 காலாண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய வருவாய் 9.5 சதவீதமும், நிகர லாபம் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக காணும் போது நிறுவனத்தின் வருவாய் ரூ.1,64,177 கோடியாகவும், நிகர லாபம் ரூ.32,430 கோடியாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த வருவாய் 4.6 சதவீத ஏற்றமடைந்துள்ளது. அதே வேளையில் நிகர லாபத்தில் பெரிதான மாற்றமில்லை.

மார்ச் 2021ம் நிதியாண்டு முடிவில் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet Reserves) 86,063 கோடி ரூபாய். பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஒரு வருடத்தில் 39 சதவீதமாக உள்ளது. வருவாய் வளர்ச்சியை காணும் போது, கடந்த பத்து வருட காலத்தில் 16 சதவீதமாக இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல்

அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Avanti Feeds – Fundamental Analysis – Stocks

1994ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அவந்தி பீட்ஸ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரு. அல்லூரி வெங்கடேசுவர ராவ் அவர்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று இறால், மீன் ஊட்டங்கள், இறால் செயலி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக வலம் வருகிறது. ஆரம்ப காலத்தில் எஃகு, கரைப்பான்கள், உரம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் புகையிலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த நிறுவனர் பின்னர் இறால் மீன் சார்ந்த தயாரிப்புகளில் களம் கண்டார்.

முக்கியமாக தாய் யூனியன்(Thai Union Group) நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இறால் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவது அவந்தி பீட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு சாதகமாக இருந்துள்ளது. 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட தாய் யூனியன் குழுமம் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இறால், மீன் ஊட்டங்கள் மற்றும் பதப்படுத்துதலில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இறால் மற்றும் மீன் தீவனங்களில் தொழில் செய்து வரும் தாய் யூனியன் குழுமம், கடல் சார்ந்த உணவு துறையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இறால் தீவனம் மற்றும் உறைந்த இறால் தயாரிப்புகளில்(Frozen Shrimp Producer) நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், முன்னணி ஏற்றுமதியாளராகவும் அவந்தி நிறுவனம் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தயாரிப்பு நிலையங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. உள்நாட்டு தீவன வணிகத்தில் சுமார் 45 சதவீத பங்களிப்பை அவந்தி பீட்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. மீன் குஞ்சு பொரித்தல் மற்றும் இறால் பதப்படுத்துதலுக்காக முக்கிய நிலையங்களையும் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

இதன் தயாரிப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீவனங்களுக்காக தனித்துவமான பிராண்டுகளையும் அவந்தி நிறுவனம் கொண்டுள்ளது.

கடல் சார்ந்த உணவுகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. இது சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இறக்குமதி அளவை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. மீன் பிடித்தல் துறையில் நம் நாடு 2019-20ம் ஆண்டு முடிவில் சுமார் 141 லட்சம் டன் என்ற அளவில் தனது உற்பத்தியை கொண்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) மதிப்பில் 1.2 சதவீத பங்களிப்பை மீன் பிடிப்பு துறை பெற்றுள்ளது. நீண்ட பரப்பளவு, புதிய உணவு வகைகள், பெருகி வரும் உணவு தேவைகள் ஆகியவை மீன் உணவுக்கான சந்தையை நிர்ணயிக்கிறது. மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் – ஆந்திரா, மேற்கு வங்காளம், குஜராத், கேரளா மற்றும் தமிழகம். கடந்த 2019ம் ஆண்டு முதல் மீன் பிடிப்பு துறை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 1961ம் ஆண்டு வாக்கில் தனிநபர் ஒருவருக்கு, ஆண்டுக்கு 9 கிலோ என்ற அளவில் இருந்த நுகர்வு, 2018ம் ஆண்டில் 20.5 கிலோ என வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக இறால் பண்ணைகள் சார்ந்த உணவுக்கான தேவை இன்று அதிகரித்து வருகிறது.

உலகளாவிய காலநிலை மாற்றம், கடல் சார்ந்த எல்லை பிரச்சனைகள், புதிய உணவு தேவைகள் ஆகியவை பண்ணைகள் மற்றும்  கடற் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அவந்தி பீட்ஸ்(Avanti Feeds) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,600 கோடி. இதன் புத்தக மதிப்பு ரூ.119 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 334 மடங்குகளாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன்(Debt Free) எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 44 சதவீதமாகவும், அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு 17 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. அன்னிய முதலீட்டாளர்களில் தாய் யூனியன் குழும நிறுவனம் 9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

பொது பங்களிப்பில்(Public Holding) சுமார் 15 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. அரசு சார்பில், ஆந்திர அரசு சுமார் 3 சதவீத பங்குகளை(Andhra Pradesh Industrial Development Corporation) கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டில் அவந்தி பீட்ஸ் நிறுவனம் ரூ.4,115 கோடியை வருவாயாகவும், 377 கோடி ரூபாயை நிகர லாபமாகவும் ஈட்டியுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 19 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

லாப வளர்ச்சியும் கடந்த ஐந்து வருட கால அளவில் 24 சதவீதமாக உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 34 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 35 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ.1,603 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash flow Positive) நன்றாக உள்ளது.

இறால் இறக்குமதியில் அமெரிக்கா 26 சதவீதமும், ஐரோப்பிய யூனியன் 23 சதவீதமும், வியட்நாம் 12 சதவீதமும், ஜப்பான் 10 சதவீதம் மற்றும் சீனா 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இறால் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்திலும், அதன் ஏற்றுமதியில் முதலிடத்திலும் உள்ளது. கொரோனா காலம் தவிர்த்து காணும் போது, இந்த துறைக்கான தேவையும், வாய்ப்புகளும் அதிகம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com