இந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்
HUL(Hindustan Unilever Ltd) reported a Net Profit of Rs.2,186 Crore in Q4FY21
1931ம் ஆண்டு இந்துஸ்தான் வனஸ்பதி உற்பத்தி நிறுவனமாக துவங்கப்பட்டது தான் பின்னாளில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனமாக மாறியது. இதன் தாய் நிறுவனம் லண்டனை தலைமையிடமாக கொண்ட யூனிலீவர்(Unilever). பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் யூனிலீவர் குழுமம் தனது தொழிலை 190 நாடுகளிலும், 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளையும் கொண்டு இயங்குகிறது.
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் உணவு, தனிநபர் மற்றும் வீட்டு பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு போன்றவற்றில் தனது தொழிலை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.65 லட்சம் கோடி ரூபாய். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்துஸ்தான் யூனிலீவர் 62 சதவீத நிறுவனர்கள் பங்களிப்பை கொண்டிருக்கிறது.
சரும(Skincare) பராமரிப்பில் 54 சதவீத சந்தை பங்களிப்பையும், சலவை(Dish washing Detergent) பிரிவில் 55 சதவீதமும், சாம்பூ(Shampoo) பிரிவில் 47 சதவீதம், தனிநபர் பிரிவில் 37 சதவீதமும் மற்றும் பற்பசை பிரிவில் 17 சதவீத சந்தை பங்களிப்பையும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கொண்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,433 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.9,391 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 24 சதவீதமாகவும், நிகர லாபம் 2,186 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 44 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த பத்து வருட கால அளவில் காணும் போது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 9 சதவீதமும், லாபம் 15 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் 2020ம் வருட முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 8,013 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில், எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் சுமார் 4 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை