Tag Archives: Castrol India

கேஸ்ட்ரால் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் – ரூ. 228 கோடி

கேஸ்ட்ரால் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் – ரூ. 228 கோடி 

Castrol India reported a Net profit of Rs.228 Crore – Q1CY22 Quarterly results

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனமான கேஸ்ட்ரால் இந்தியா, கடந்த 1910ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவின் வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான  மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக கேஸ்ட்ரால் இந்தியா உள்ளது.

ஐந்து உற்பத்தி ஆலைகள், 270 விநியோகதாரர்கள் மற்றும் 70,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் தனது சேவையை விரிவடைய செய்துள்ளது இந்நிறுவனம். 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கேஸ்ட்ரால் இந்தியாவின் இன்றைய சந்தை மூலதன மதிப்பு ரூ.10,750 கோடி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டு ஒப்பந்தத்தின் படி, நாட்டில் புதிய எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைத்து கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதன் மூலம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 49 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. 

இவற்றில் 1,400 பெட்ரோல் பம்புகளையும், விமான போக்குவரத்துக்கு தேவையான 31 எரிபொருள் நிலையங்களையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கையகப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ்-பிரிட்டிஷ் பெட்ரோலியம்(Jio-Bp) மற்றும் டி.வி.எஸ். மோட்டார் ஆகிய நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான மின்னணு சார்ஜிங் உட்கட்டமைப்பை(EV Charging Infrastructure) ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2022 காலாண்டில் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.1,236 கோடியாகவும், செலவினம் 918 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாபம்(Operating profit) 317 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம் 26 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.228 கோடி.

2021ம் ஆண்டின்(Calendar Year) முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,192 கோடியாகவும், நிகர லாபம் 758 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டின் வருவாய், கடந்த பத்து வருடங்களில் இல்லாத வளர்ச்சி அளவாகும். 

கடனில்லா நிறுவனமாக வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களிடம் 11 சதவீத பங்குகளும், உள்ளூர் நிறுவனங்களிடம் 16 சதவீத பங்குகளும் உள்ளது. இவற்றில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 11 சதவீத பங்குகளை வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. 

கேஸ்ட்ரால்(Castrol Ltd UK) நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் 150 நாடுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது. போக்ஸ்வேகன், ஆடி(Audi), பி.எம்.டபுள்யூ(BMW) ஆகியவை இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் விலை, பங்கு ஒன்றுக்கு 108 ரூபாயாக உள்ளது. இதன் உள்ளார்ந்த மதிப்பு(Intrinsic value with MoS) பங்கு ஒன்றுக்கு ரூ.140 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.      

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல்(Fundamental Analysis) மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

கேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம்

கேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம் 

Castrol India reported a Net profit of Rs.244 Crore – Q1CY2021

நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்ட கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனம், வாகன மற்றும் தொழிற்துறைக்கான மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியை செய்து வருகிறது. இந்த துறையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், மசகு எண்ணெய் பிரிவில் 20 சதவீத சந்தை பங்களிப்பையும்(Market Share) கொண்டுள்ளது கேஸ்ட்ரால்.

பிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. உலகெங்கிலும் உள்ள வாகன, தொழிற்துறை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து, எண்ணெய் ஆய்வு மற்றும் மசகு எண்ணெய்,  கிரீஸ்கள், அதனை தொடர்புடைய சேவைகளை அளிக்கும் இந்நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தியாளராகவும், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகஸ்தராகவும் விளங்குகிறது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,400 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 51 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடனில்லா நிறுவனமாக வளம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 257 மடங்குகளில் உள்ளது.

2021-22ம் ஆங்கில ஆண்டின் முதல் காலாண்டில்(மார்ச் 2021 – Quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ.1,139 கோடியாக உள்ளது. இதன் செலவினம் 799 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.332 கோடியாகவும், நிகர லாபம் 244 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

கடந்த மார்ச் 2020ம் காலாண்டில் வருவாய் 688 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.125 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இதனை ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 95 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் 2020 காலத்தின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 920 கோடி ரூபாய்.

கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் முதலீட்டாளர் பங்களிப்பில், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் சுமார் 11 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. கேஸ்ட்ரால் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,394 கோடியாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி 

Castrol India reported a net profit of Rs.205 Crore – Q3CY21

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக(Lubricant Industry) சொல்லப்படுகிறது. நாட்டில் 70,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களை கொண்டிருக்கும் கேஸ்ட்ரால் இந்தியா கடந்த 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10,800 கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 13 ரூபாய் மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம் 237 மடங்குகளில் உள்ளது. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

இதன் கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 5 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. நேற்று வெளியிடப்பட்ட காலாண்டு முடிவில் இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 என சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 883 கோடி ரூபாயாகவும், செலவினம் 595 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதர வருமானமாக 12 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 205 கோடியாக உள்ளது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிகர லாபம் 68 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2019ம் முழு ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 3,877 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 827 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 3 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 5 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த 5 வருடங்களில் 12 சதவீதமும், 10 வருட காலத்தில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 770 கோடியாக உள்ளது. பணவரத்தும்(Cash Flow) நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com