கேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம்
Castrol India reported a Net profit of Rs.244 Crore – Q1CY2021
நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்ட கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனம், வாகன மற்றும் தொழிற்துறைக்கான மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியை செய்து வருகிறது. இந்த துறையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், மசகு எண்ணெய் பிரிவில் 20 சதவீத சந்தை பங்களிப்பையும்(Market Share) கொண்டுள்ளது கேஸ்ட்ரால்.
பிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. உலகெங்கிலும் உள்ள வாகன, தொழிற்துறை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து, எண்ணெய் ஆய்வு மற்றும் மசகு எண்ணெய், கிரீஸ்கள், அதனை தொடர்புடைய சேவைகளை அளிக்கும் இந்நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தியாளராகவும், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகஸ்தராகவும் விளங்குகிறது.
நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,400 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 51 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடனில்லா நிறுவனமாக வளம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 257 மடங்குகளில் உள்ளது.
2021-22ம் ஆங்கில ஆண்டின் முதல் காலாண்டில்(மார்ச் 2021 – Quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ.1,139 கோடியாக உள்ளது. இதன் செலவினம் 799 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.332 கோடியாகவும், நிகர லாபம் 244 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
கடந்த மார்ச் 2020ம் காலாண்டில் வருவாய் 688 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.125 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இதனை ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 95 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் 2020 காலத்தின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 920 கோடி ரூபாய்.
கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் முதலீட்டாளர் பங்களிப்பில், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் சுமார் 11 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. கேஸ்ட்ரால் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,394 கோடியாக உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை