எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி
HCL Technologies reported a net profit of Rs.1,102 Crore – Q4FY21
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம், தூத்துக்குடியை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால் கடந்த 1976ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் எச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 46 நாடுகளில் தனது அலுவலகங்களையும், சுமார் 1.6 லட்சம் பணியாளர்களையும் கொண்டு நிறுவனம் தனது தொழிலை புரிந்து வருகிறது.
பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.59 லட்சம் கோடி. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 86,194 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. நிறுவனத்தின் முதல் நூறு மில்லியன் டாலர் வருவாய், வெறும் 15 வாடிக்கையாளர்களின் மூலம் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.
வருவாய் ஈட்டலில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் வணிக சேவை மூலம் 72 சதவீதமும், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் 17 சதவீதமும், தயாரிப்புகள் மற்றும் தளங்களின்(Production & Platforms) வாயிலாக 11 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் அமெரிக்க சந்தையிலிருந்து தான் பெறப்படுகிறது.
அமெரிக்காவில் 58 சதவீதம், ஐரோப்பிய பகுதியில் 27 சதவீதம், உள்நாட்டில் 3 சதவீதமும் மற்றும் பிற நாடுகளின் மூலம் 12 சதவீத பங்களிப்பும் வருவாயாக உள்ளது. 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் வருவாய் 19,641 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,092 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 244 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.
சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,102 கோடி. இதனை கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 65 சதவீத குறைவாகும். வரி செலுத்துதலில் சுமார் 67 சதவீதம் செலவிட்டதன் காரணமாக மார்ச் 2021 காலாண்டின் நிகர லாபம் குறைந்துள்ளது.
2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் 10 பில்லியன் டாலர் வருவாயை கடந்த நிலையில், பங்குதாரர்களுக்கு 16 ரூபாயை (பங்கு ஒன்றுக்கு) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது எச்.சி.எல். நிறுவனம்.
கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 20 சதவீதமும், லாபம் 24 சதவீதமுமாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet reserves) மார்ச் 2021 முடிவின் படி 59,370 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 32 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை