நம்ம மதுரையை சேர்ந்த பங்கு – விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ்
VTM(Virudhunagar Textile Mills) Limited – Fundamental Analysis
கடந்த 1946ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ். நெசவு சார்ந்த உற்பத்தியை தனது தொழிலாக கொண்டிருக்கும் இந்நிறுவனம், தியாகராஜர் குழுவின்(Thiagarajar Mills Group) ஒரு அங்கமாகும். மதுரை மாவட்டம் கப்பலூரை சேர்ந்த தியாகராஜர் மில்ஸ் நிறுவனம், ஜவுளித்தொழிலில் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
திரு. கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிறுவன குழுமம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் மேலாண்மை கல்வி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உட்பட சுமார் 19 கல்வி நிலையங்களை தமிழகத்தில் தோற்றுவித்துள்ளது.
துவக்க காலத்தில் உள்நாட்டுக்கு தேவையான உற்பத்தியை செய்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்துள்ளது. நெசவு சார்ந்த உற்பத்தியில் நவீனமயமாக்கும் முயற்சியில் முதலீடுகளை ஒவ்வொரு காலத்திலும் செய்து வந்துள்ளது இந்நிறுவனம்.
உற்பத்தி பிரிவில் 258 அதிநவீன தறிகளை இந்நிறுவனம் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிறந்த துணி உற்பத்தியை எண்ணிக்கையிலும், சிக்கலான தன்மைகளை சரி செய்வதற்கான போதுமான உபகரணங்களையும் வி.டி.எம். நிறுவனம் கொண்டுள்ளது. பருத்தி நூல் வரம்பில் நூறு சதவீத நிபுணத்துவம் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. வாயு நூல்(Gassed yarn) செயலாக்கம் நிறுவனத்தின் சிறப்பம்சமாக உள்ளது.
வி.டி.எம். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக திரு.கண்ணன் உள்ளார். நிறுவனர்கள் பங்களிப்பில் கண்ணன் மற்றும் அவரை சார்ந்த நிறுவனங்களிடம் 59 சதவீத பங்குகளும், தியாகராஜர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் 7 சதவீத பங்குகளும், பிற நிதி நிறுவனம் சார்ந்து 9 சதவீத பங்குகளும் உள்ளது. ஒட்டுமொத்தமாக நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.100 கோடி. புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.03 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 16 மடங்குகளில் இருக்கிறது. 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.143 கோடியாகவும், செலவினம் 126 கோடி ரூபாயாகவும் உள்ளது. சொல்லப்பட்ட வருடத்தில் நிகர லாபம் 10 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
கடந்த பத்து வருடங்களில் லாப வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்தாலும், விற்பனை வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 215 கோடி ரூபாயாக உள்ளது. சிறு நிறுவன பங்குகளில் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாத நிறுவனமாகவும், தொடர்ச்சியாக ஈவுத்தொகையை(Dividend) அளிக்கும் நிறுவனமாகவும் விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் நிறுவனம் உள்ளது.
கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை