டி.சி.எஸ். நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9,246 கோடி
TCS reported a Net profit of Rs. 9,246 Crore in Q4FY21
தகவல் தொழில்நுட்ப துறையில் நாட்டின் முதன்மை நிறுவனமாக விளங்கும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்டது. இதன் முக்கிய வாடிக்கையாளர்களாக உலகின் தலைசிறந்த நிறுவனங்களான கூகுள், அமேசான், அடோப், ஆரக்கிள், இன்டெல், ஆப்பிள், போஸ்ச், ஐ.பி.எம். போன்றவை உள்ளன.
நிறுவனத்தின் முதல் 50 வாடிக்கையாளர்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டுகிறது டி.சி.எஸ். டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 4.7 லட்சம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வங்கிகள், நிதி சேவை மற்றும் காப்பீட்டு துறையின்(BFSI) மூலம் பெறப்படுகிறது. டி.சி.எஸ். நேற்று(12-04-2021) தனது 2020-21ம் நிதியாண்டுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. மார்ச் 2021 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 43,705 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 30,904 கோடியாகவும் இருந்துள்ளது.
இயக்க லாபம்(Operating Profit) ரூ.12,801 கோடியாகவும், இதர வருமானம் 931 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 12,527 கோடி ரூபாயாக உள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில்(Quarterly results) நிகர லாபம் ரூ.9,246 கோடி. அதாவது பங்கு ஒன்றின் மீதான வருவாய்(EPS) 25 ரூபாயாக இருந்துள்ளது.
முந்தைய மார்ச் 2020 காலாண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய வருவாய் 9.5 சதவீதமும், நிகர லாபம் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக காணும் போது நிறுவனத்தின் வருவாய் ரூ.1,64,177 கோடியாகவும், நிகர லாபம் ரூ.32,430 கோடியாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த வருவாய் 4.6 சதவீத ஏற்றமடைந்துள்ளது. அதே வேளையில் நிகர லாபத்தில் பெரிதான மாற்றமில்லை.
மார்ச் 2021ம் நிதியாண்டு முடிவில் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet Reserves) 86,063 கோடி ரூபாய். பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஒரு வருடத்தில் 39 சதவீதமாக உள்ளது. வருவாய் வளர்ச்சியை காணும் போது, கடந்த பத்து வருட காலத்தில் 16 சதவீதமாக இருக்கிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை