Category Archives: Investopedia

இந்த வார நிகழ்ச்சி நிரல் – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலை

இந்த வார நிகழ்ச்சி நிரல் – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலை 

The Post Covid Crash 2021 – Weekend Webinar

உலக பங்குச்சந்தைகள் மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, கடந்த நான்கு மாதங்களாக பெருத்த ஏற்றத்தில் உள்ளது. மீண்டும் பங்குச்சந்தை நடப்பாண்டில் வீழ்ச்சி பெறும் என ஒரு சாராரும், தற்போது சந்தை காளை பக்கம் திரும்பியுள்ளது என மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். உண்மையில் உலக பங்குச்சந்தை குறியீடுகளில் அடுத்த சில காலாண்டுகள் என்ன மாதிரியான நிலை ஏற்படும்.

இந்திய பங்குச்சந்தையும், பொருளாதாரமும் கடந்த இரண்டு வருடங்களாக தொய்வு நிலையில் இருந்து வந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையும், பார்மா துறையும் திடீர் ஏற்றம் பெற்றுள்ளன. இரண்டு வருடமாக காணப்பட்டு வந்த பொருளாதார மந்தநிலை கொரோனா காலத்தில் சரி செய்யப்பட்டு விட்டதா ?

அமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டு கொண்டு கடனை அதிகரித்து வருகின்றன. சீனாவின் கடன் மட்டும், நம் நாட்டின் பொருளாதாரத்தை விட அதிகமாக உள்ளது. கடன் சிக்கலிலும், வர்த்தக போரிலும் மும்மரமாக ஈடுபட்டு வரும் நாடுகள் தங்கள் கடனை உடனடியாக குறைத்து விடுமா ?

பொதுவாக திருவாளர் பங்குச்சந்தை(Mr. Market), பொருளாதார ரீதியாக நடக்கப்போகும் ஒரு விஷயத்திற்கு முன்னரே அதன் தன்மையை சந்தையில் பிரதிபலிக்கும். அது தான் மார்ச் மாதத்தில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது முறையாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தால், உங்கள் முதலீட்டு உத்தி என்ன ?

பொருளாதார மந்தநிலையும், அதனை சார்ந்து பங்குச்சந்தை வீழ்ச்சியும் எப்படி ஏற்படுகிறது ? உலக பொருளாதாரத்திற்கும், பங்குச்சந்தைக்கும் தொடர்பு உண்டா ?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? பரபரப்பாக பேசப்படும் ரிலையன்ஸ் ஜியோ, உண்மையில் பங்குச்சந்தை பட்டியலுக்கு தயாராக உள்ளதா ?

வாருங்கள் இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரலில் பேசுவோம்.

நாள்: 25-07-2020 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 5:30 மணி முதல் (60 நிமிடங்கள்)

Click here to Register – The Post Covid Crash 2021 – Webinar 

Post Covid Crash Webinar

பதிவுக்கு பின்பு, உங்களுக்கான நிகழ்ச்சி இணைப்பு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

Can I invest in Initial Public Offering ?

பொதுவெளியில் ஒரு நிறுவனம் தனக்கு தேவையான முதலீட்டை பெறுவதற்கு இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றி கொள்வது, மற்றொன்று பங்குச்சந்தையில் பட்டியலிட தேவையான விவரங்களை வெளியிடுவது.

முதலீட்டை பெற விரும்பும் நிறுவனம் பங்குச்சந்தை அமைப்பிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் தனது நிறுவன பங்குகளை பட்டியலிடும். துவக்கத்தில் முதன்மை சந்தையில்(Primary Market) மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த பங்குகள் விண்ணப்பம் செய்யும் பங்குதாரர்களுக்கு, கணினி வரிசையில் மட்டுமே கிடைக்கப்பெறும். பின்னர் அவை இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) வாங்க மற்றும் விற்பதற்கு வெளியிடப்படும்.

முதன்மை சந்தையை தான் நாம் ஐ.பி.ஓ(IPO) என்கிறோம். இங்கே ஒரு நிறுவன பங்குகளுக்கான தேவையை உறுதி செய்யும். முதலீட்டாளர்களிடையே இந்த பங்கு வரவேற்பை பெறுகிறதா, எத்தனை மடங்கில் இந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்ற விவரங்களை காணலாம். இதற்கான காலம் ஓரிரு நாட்கள் இருக்கலாம். பின்னர் எப்படியும் இந்த பங்குகள் வர்த்தகமாக இரண்டாம் நிலை சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

முதன்மை சந்தையில் நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலை சந்தையில் தான் வாங்கும் மற்றும் விற்கும் என முழு வர்த்தகம் நடைபெறும். பொதுவாக ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்வது நல்லதா என சிலர் கேட்கிறார்கள். குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கலாமே  என கேட்பதுண்டு. உண்மையில் ஐ.பி.ஓ என்பது ஒரு நிறுவனம் தன்னை சந்தையில் அறிமுகப்படுத்தி கொள்ளும் காலம் தானே தவிர, வேறொன்றும் இல்லை.

  • ஐ.பி.ஓ வெளியீட்டில் கிடைக்கப்பெறும் பங்கு விலை தான் உண்மையான விலை என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் தன்னை நிலைநிறுத்த மற்றும் தனது முதலீட்டை பெற குறிப்பிட்ட பங்குதாரர்களிடம் பங்குகளை விற்றுவிட்டு செல்கிறது. இதற்கு பங்குச்சந்தை அமைப்புகள் ஒரு தளத்தை(Platform) ஏற்படுத்தி கொடுக்கிறது. இங்கே ஏற்ற-இறக்கம் காணப்படாததால், நிறுவனத்திற்கு தேவையான நிதியை சுலபமாக பெற்று விடும். அதே வேளையில் இது முதலீட்டாளர் பார்வையில் லாபமா ?
  • உலகின் மிகப்பெரிய ஐ.பி.ஓ. முதலீடு, கடந்த 2019ம் ஆண்டில் சவூதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்தில் நடந்தது. இதன் மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவதாக அலிபாபா குழுமத்தின் 25 பில்லியன் டாலர்களும்,மூன்றாவது இடத்தில் சாப்ட்பேங்க் குழுமத்தின் 24 பில்லியன் டாலர்களும் உள்ளன.
  • ஐ.பி.ஓ. வில் வெளியிடப்படும் நிறுவனங்கள் சில சமயங்களில் மக்களிடம் பெயர்போன நிறுவனமாக இருக்கக்கூடும். உண்மையில் சந்தைக்கு வரும் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை முழுமையாக கிடைக்க பெறாது. ஐந்து வருடங்களுக்கான நிதி நிலை அறிக்கை மட்டுமே, முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும்.
  • முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை நம்மால் அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. ஐந்து வருட நிதி அறிக்கையை கொண்டு, ஒரு நிறுவனம் நன்றாக செயல்படும் என எதிர்பார்ப்பது நம்மை ஏமாற்ற செய்யும். தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் ஒரு நிறுவனத்தின் ஜாதகத்தை நம்மால் முழுமையாக காண முடியாது. அப்படியிருக்க நிதிநிலை அறிக்கைகளில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
  • ஆட்டுமந்தை கூட்டம் போல எல்லோரும் பங்கு வாங்குகிறார்கள் என நாமும் வாங்கி லாபம் பார்த்து விடலாம் என நீங்கள் ஐ.பி.ஓ முறையில் சென்றால், உண்மையில் அதன் பெயர் சூதாட்டமே, அவை முதலீடு அல்ல. நிறுவனத்தை பொறுத்தவரை தனது முதலீட்டை முதன்மை சந்தையில் தான் திரட்ட முடியும். அவ்வளவே. அவர்களுக்காக தான் அந்த தளம் உருவாக்கப்பட்டதே தவிர நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்களுக்காக அல்ல.

புகையிலையை சிறிது நேரம் நுகர்ந்து கொள்கிறேன், நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், வாழ்நாள் முழுவதும் அது உங்களை தொற்றி கொள்ளும். அது போல தான் ஐ.பி.ஓ. குறுகிய கால லாப ஆசையும்.

  • ஒரு நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறுமா, அவை வெளிப்படையாக தகவலை சந்தைக்கு அளிக்குமா, முதலீட்டாளர்களான நமக்கு நீண்டகாலத்தில் என்ன பயனை அளிக்கப்போகிறது என்பதனை நாம் நீண்டகாலத்தில் தான் காண முடியும். வெறும், முதன்மை சந்தையில் பங்குகளை வாங்குவதால் அல்ல.
  • துவக்கத்தில் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மட்டுமே முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கலாம் என்ற நிலை இன்று மாறி, சிறு முதலீட்டாளர்களும் களம் இறங்குகின்றனர். நினைவில் கொள்ளவும், முதலீட்டு நிறுவனங்கள் வாங்கும் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை எப்போது விற்க கூடும் என உங்களுக்கு உடனடியாக தெரிவதில்லை. அவர்கள் வாங்கும் மற்றும் விற்பதற்கான காரணமும், காலமும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வாங்குவது, விற்பது  என அனைத்தும் மற்றவர்களின் பண முதலீடு தான். ஆனால், சிறு முதலீட்டாளரான நமக்கு ?

ஆசியாவின் மிகப்பெரிய நகை தொழிலை கொண்ட நிறுவனம் என கீதாஞ்சலி ஜெம்ஸ்(Gitanjali Gems) முதன்மை சந்தையில் பட்டியலிடப்பட்டது. தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, இந்தியாவில் உள்ள நகை தொழிலில் 50 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது என சொல்லப்பட்டது. பங்குகளுக்கான முதலீடும் அமோகமாக வந்தது.

இந்த பங்கின் விலை 600 ரூபாய்க்கு மேல் சென்ற காலமும் உண்டு. ஒரு ரூபாய்க்கு வந்து, பின்னர் பங்குச்சந்தையிலிருந்து தூக்கி வீசப்பட்டதும் மற்றொரு கதை. சொல்லப்பட்ட நிதி அறிக்கைகள் அத்தனையும் பொய் எனவும், அந்த நிறுவனம் எந்த தொழிலையும் மேற்கொள்ளாமல், பல போலி நிறுவனங்களை உருவாக்கியதும் மிகவும் தாமதமாக தான் வெளிவந்தது. ஐ.பி.ஒ. வில் முதலீடு செய்து விட்டு இந்த நிறுவனத்தில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. கடந்த 2008ம் ஆண்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இந்த நிறுவன பங்கின் விலை மிகவும் மலிவாக கிடைத்தது என முதலீடு செய்தவர்களும் இன்று முழு முதலீட்டை இழந்துள்ளனர்.

உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களில் ஒருவர் என போற்றப்பட்டவர், 1996-2006 காலங்களில் நாட்டின் மிக சிறந்த தொழில்முனைவோர், தொழிலதிபர் என பல விருதுகளை வாங்கியுள்ளார் இவர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், பங்கு ஒன்றுக்கு 800 ரூபாய்  விலையிலிருந்து 80 பைசா வரை சென்றுள்ளதை பார்த்திருக்கலாம். குழும நிறுவனங்கள் அனைத்தும் கடனில் தத்தளித்து திவால் நிலைக்கு சென்று விட்டது. ஆம், அனில் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் குழும நிறுவனங்கள் தான். இது போல எண்ணற்ற நிறுவனங்களை சொல்லலாம்.

வெறும் பிராண்டுகளை மட்டுமே கொண்டு முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் சாதித்து விட முடியாது. பின்னர் போலி நிறுவனங்களை பற்றியும், மோசடி பேர்வழிகளை பற்றியும் நாம் கவலைப்பட கூடாது. சந்தையில் நாம் முதலீடு செய்ய வந்திருக்கிறோம். லாபம் மட்டுமே நமது குறிக்கோளாக இருந்தாலும், நஷ்டத்தை தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும். நீங்கள் சந்தையில் நீண்டகாலத்தில் சம்பாதிக்க, முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடு மிகவும் முக்கியமாகும்.

குறைந்தது பத்து ஆண்டு கால நிதிநிலை அறிக்கைகள் தேவை. அதனை விட தேவையான ஒன்று, நிறுவனத்திற்கு கடன் எதுவும் உள்ளதா, நிறுவனர்களின் மதிப்பு மற்றும் செயல்பாடு எவ்வாறு உள்ளது, நிர்வாக திறன் எப்படி மற்றும் இந்த நிறுவனம் அதன் துறையில் உள்ள எதிர்கால சவாலை எப்படி கையாள போகிறது என்பதனை அறிவது அவசியமாகும்.

ஐ.பி.ஓ முறையில் வெளிவந்துள்ள நிறுவனங்களில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள், இரண்டாம் நிலை சந்தைக்கு வந்த அடுத்த ஐந்து வருடங்களில் தங்கள் மதிப்பை இழக்கின்றன என்று தரவுகள் சொல்கிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பங்கு விலைக்கு தகுந்தாற் போல நிறுவனத்தின் வளர்ச்சி இல்லாமை, கடனில் சிக்கி தவிப்பது மற்றும் நிர்வாக திறன் குறைபாடு என மூன்று காரணிகளை முன்னிலைப்படுத்துகிறது.

கடந்த 20 வருடங்களில் பொதுவெளியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள், தங்கள் முதன்மை சந்தை விலையை காட்டிலும் குறைவாக தான் தற்போது உள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஐ.பி.ஓ முறையில் வெளிவரும் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப்(Startup) நிறுவனங்களும் பெரும்பாலும் தங்கள் இரண்டாவது முதலீட்டை பெறுவதில் தோல்வியடைகின்றன. இதன் காரணமாக அதன் மதிப்பும் பின்னாளில் விலை போவதில்லை.

நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது, கடனில்லா நிறுவனங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நிர்வாகம் மற்றும் சீரான வருவாய் வளர்ச்சி இருக்கும்பட்சத்தில் அது சிறு முதலீட்டாளர்களின் நலனையும் பாதுகாக்கும்.

இன்று நிர்வாக குறைபாடு காரணமாக இரண்டாம் கட்ட முதலீட்டையும் பெறுவதில் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது யெஸ் வங்கி(Yes Bank). பங்கு விலையும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய லாபம் என சொல்லப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் இன்று தின வர்த்தகர்களால் பந்தாடப்பட்டு, பங்குச்சந்தையிலிருந்து வெளியேறி வருகின்றன. அவற்றின் ஐ.பி.ஓ. வரலாற்றை பார்த்தால் நமக்கு தெரியும், அது ஏன் சோபிக்க தவறி விட்டனவென்று !

ஐ.பி.ஓ, இரண்டாம் கட்ட முதலீடு, மூலதனத்தை உயர்த்துவது, கடன்களை மறுசீராய்வு செய்ய முதலீட்டை பெறுவது, உரிமை பங்குகள், நிறுவனங்களை பிரித்தல் மற்றும் புதிய நிறுவனங்களை உருவாக்குதல் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். இதெல்லாம் உங்களுக்கு புரியவில்லையா ? காலங்காலமாக தொழில் செய்து வரும் நல்ல மற்றும் சுமாரான நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு நிம்மதியாக அமருங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

Mutual Funds Investment declined in the month of June 2020

மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை விறு விறுவென ஏற்றம் பெற்று வருகிறது. பெரும்பாலான பங்குகள் மார்ச் கடைசி வாரம் அதலபாதாளத்திற்கு சென்ற நிலையில், தற்போது விலையேற்றத்தில் சுமார் 30-80 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளன.

பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் எதிர்பாராத விதமாக ஏற்றமடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற நிகழ்வு பங்குச்சந்தையில் இயல்பான ஒன்று தான். பின்னொரு நாளில் வேறொரு காரணத்திற்காக இறங்குவதும் நடக்கும். அதே வேளையில் நீண்டகாலத்தில் முதலீடு செய்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பெரும் செல்வத்தை அளிக்கும் வாய்ப்பாக அமையும்.

இந்திய பரஸ்பர நிதி துறையில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்(Asset Management Companies) முதலீட்டு சேவையை செய்து வருகின்றன. செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பரஸ்பர நிதி துறையை ஆம்பய்(AMFI) அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகள் சார்ந்த தகவல்களை ஆம்பய் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாத முடிவின் படி, இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு(AUM) 25.5 லட்சம் கோடி ரூபாயாகும். ஜூன் மாதத்தில் பரஸ்பர முதலீடுகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதலீடு ரூ.195 கோடி. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு ரூ. 240 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 95 சதவீத குறைவாகும்.

ரிஸ்க் குறைந்த லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) இருந்து பெரும்பாலான முதலீடுகள் கடந்த மாதத்தில் வெளியேறியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 44,220 கோடி ரூபாய். கடன் பத்திரம் மற்றும் வருவாய் சார்ந்த பண்டுகளில் ஈர்க்கப்பட்ட ஜூன் மாத முதலீடு ரூ. 2,862 கோடி. கலவை திட்டம் என அழைக்கப்படும் ஹைபிரிட்(Hybrid) திட்டத்தில் 356 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.

ஓய்வு கால நிதி மற்றும் குழுந்தைகளுக்கான திட்டங்களில் பெறப்பட்ட தொகை ரூ. 108 கோடி ஆகும். வரி சலுகை சார்ந்த திட்டங்கள் வாயிலாக கடந்த மாதத்தில் முதலீடுகள்  ஈர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து 15 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.(Gold ETF) திட்டத்தின் மூலம் 494 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் இரண்டிலும் முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வேலையிழப்பு, குறைவான நாட்களுக்கு மட்டுமே பெறப்பட்ட ஊதியம், மந்தநிலையை காரணம் காட்டி முதலீடு செய்யாமல் இருந்ததாகும். மேலும் பங்குச்சந்தை மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் உச்சத்தில் இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்.

சந்தை இறக்கத்தில் அதிகமாக பெறப்பட்ட முதலீடு, தற்போது எச்சரிக்கை உணர்வாக பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை எனலாம். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், நீண்டகால வருவாய் வளர்ச்சியை பெறலாம். சந்தை ஏற்ற-இறக்கத்தை கணிப்பதை விட, நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை திரட்டுவது அவசியமாகும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்

இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்  

Acquisition & Demerger, Merger and Amalgamation – Webinar Meet

சமீப காலங்களாக பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்கள், மற்றொரு நிறுவனத்துடன் இணைக்கப்படுவதும், சிறிய நிறுவனங்களை பெரு நிறுவனமொன்று கையகப்படுத்துதலும் நடந்த வண்ணம் உள்ளன. இது புதிதான ஒரு செயலா என கேட்டால், பல வருடங்களாக நடைபெற்று வரும் ஒரு செயல்பாடாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

ஜப்பானை சேர்ந்த சுசூகி(Suzuki) நிறுவனமும், நம் நாட்டை சேர்ந்த மாருதியும்(Maruti) இணைந்து புதிய நிறுவனமாக – மாருதி சுசூகி என்றொரு நிறுவனத்தை ஏற்படுத்தியிருந்தது. இது போல ஹீரோ ஹோண்டா நிறுவனத்தை சொல்லலாம். பின்னர் இவை இரண்டும் பிரிக்கப்பட்டு சந்தையில் தனித்தனியாக தொழிலை நடத்தி வருகின்றன.

நிறுவனங்கள் சேர்க்கப்படுவதாலும் மற்றும் இணைந்த இரு நிறுவனங்கள் விலக்கப்படுவதாலும் சிறு முதலீட்டாளராக ஒருவருக்கு என்ன லாபம் ? நுகர்வோர் சந்தையில் கொடிகட்டி பறக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர்(HUL), ஐ.டி.சி.(ITC), டாட்டா குழுமம்(Tata) போன்ற நிறுவனங்கள் ஏன் சிறு தொழில் நிறுவனங்களை கையகப்படுத்துகின்றன ?

பெரு நிறுவனங்கள் தாங்களாகவே புதிய தொழிலை துவங்கும் வலிமை உள்ள போது, அந்த துறையில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களை நல்ல விலை கொடுத்து கையகப்படுத்தி வருகின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்கும், நீங்கள் வாங்கிய பங்குகளில் இது போன்ற நிகழ்வு நடந்திருந்தால் அல்லது நடக்க போவதாக இருப்பின், உங்களுக்கு என்ன ஆதாயம் மற்றும் இழப்பு ?

வாருங்கள், இந்த வார சனிக்கிழமை (11-07-2020) நிகழ்ச்சி நிரலில் மாலை 05:30 மணிக்கு மேல் பேச உள்ளோம். பதிவுக்கு பின், இணைய வழி தொடர்பு சார்ந்த தகவல்கள் உங்கள் கைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Register your spot – Merger & Amalgamation

Merger and Amalgamation

பங்குகள் வெறும் எண்கள் அல்ல !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள் 

6 Things to Learn on Personal Finance – Escape from the Economic Crisis

தனிநபர் நிதி சார்ந்த கற்றல் என்பது நம் நாட்டை பொறுத்தவரை தற்போதைய நிலையில் குறைவு தான். அதே வேளையில் சேமிப்பு என்ற ஒற்றை வார்த்தை நமக்கு பல காலமாக நம்முடைய குடும்பத்தில் இருந்துள்ளது. நுகர்வோர் சந்தையில் வெறுமென சம்பாதித்த பணத்தை செலவழிப்பது, எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவது, தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி குவிப்பது, எதிர்காலத்தில் இது தேவைப்படும் என உபயோகமில்லாத விஷயங்களை செய்வது என நாம் பொதுவாக நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி வருகிறோம்.

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் – உணவு, உடை மற்றும் உறைவிடம். நவீன யுகத்தில் அடிப்படை கல்வியும், பொருளாதாரம் சார்ந்த சில நிதி பாதுகாப்புகளும் மட்டுமே கூடுதல் தேவையாக இருக்கும். ஆனால் நாம் நிதி பாதுகாப்புகளை செய்வதை விட்டு விட்டு எண்ணிலடங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி குவித்து வருகிறோம். என் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்த சாமான்கள் இன்றும் என் வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ளது என சொல்வதை கேட்டிருப்போம்.

நம்மை சுற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றும் கண்காட்சி பொருட்கள் அல்ல. அது பெருமையாக பேசக்கூடிய விஷயமும் அல்ல. தனிநபர் ஒருவர் தனக்கு தேவையில்லாத ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது , தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் செய்கிறது அல்லது அதன் விலை அதிகமாக கூடும்.

எனவே தேவையறிந்து, வாங்க கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயன்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும். அப்படி சொல்லும் போது, தனிநபர் நிதி விஷயத்தில் ஆறு விஷயங்களை அடிப்படை நிகழ்வாக கற்று கொள்ளலாம்.

  • சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் இடையேயான புரிதல் 
  • பணவீக்கம்
  • நிதி இலக்குகளை திட்டமிடுதல்
  • காத்திருக்கும் ரகசியம்
  • கூட்டு வட்டியின் மகிமை – பள்ளிக்கால பணக்கார பாடம்
  • எந்தவொரு முதலீட்டையும் தொழில் போல அணுக கற்று கொள்ளுங்கள் 

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுவர். எல்.ஐ.சி. நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தை வாங்கி கொண்டு நான் சேமிக்கிறேன் அல்லது முதலீடு செய்கிறேன் என நினைத்து கொள்வர். சேமிப்பு என்பது பெரிதாக வளரும் வாய்ப்பு இல்லாதது. அது பணவீக்கத்தை விட குறைவான வட்டி வருவாயை தான் கொண்டிருக்கும். உதாரணமாக, அஞ்சலகம், வங்கி, சீட்டு, தங்கம், ரொக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அஞ்சலகத்தில் கிடைப்பதை சிறு சேமிப்பு திட்டம் என்று தான் சொல்வர். அதனை முதலீடு என சொல்லப்படவில்லை.

முதலீடு(Investing) என்பது இரண்டு விஷயங்களை நிறைவு செய்பவை. ஒன்று தொடர் வருமானத்தை(Regular income or Cash Flow) ஏற்படுத்துவது, மற்றொன்று நீண்டகாலத்தில் அதனை வைத்து கொண்டு பின்னர் ஒரு நல்ல விலைக்கு விற்பதன் மூலம் லாபம்(Capital Appreciation) ஏற்படுத்துவது. ரியல் எஸ்டேட், பங்குகள், தொழில்கள் ஆகியவை முதலீடு என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அவை இரு வகையான வருமானங்களை தர கூடியவை. வெறுமென வீட்டு மனைகளை மட்டும் விற்காமல், வீட்டு வாடகை, வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க பெறும் தொடர் வருமானம், பங்குகளில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை, தொழில்களில் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றை சொல்லலாம். எதிர்காலத்தில் இந்த மூன்றையும் விற்றால் அதற்கும் லாபம் கிடைக்கும். எனவே சேமிப்பும், முதலீடும் ஒன்று அல்ல.

நினைவில் கொள்ளுங்கள், தங்கம் என்பது பணவீக்கத்தை ஒட்டியும், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சி காலங்களில் மட்டுமே அதன் செயல்பாடுகள். அது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு என சொல்லமுடியாது. நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்கள் வாழ்நாளில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படும். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு அது அடிக்கடி பயன்படக்கூடியது என நீங்கள் நினைத்தால், உண்மையில் உங்கள் நிதி நலனில் சில பிரச்சனைகள் உள்ளது என அர்த்தம்.

தங்கத்தின் மூலம் தொடர் வருமானத்தை ஏற்படுத்த முடியாது என்பதனால் தான் அது சேமிப்பு பிரிவில் உள்ளது. தங்கம் கடந்த 20 வருடங்களில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி வருவாயை ஒட்டி தான் உள்ளது. டாலர் மதிப்பில் அது வர்த்தகமாவதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பது போல தோன்றுகிறது. நாணயம் என்ற தொட்டுணரக்கூடிய விஷயம் இல்லையென்றால், தங்கத்திற்கும் மதிப்பு கிடையாது. இது தான் கடந்த வரலாற்றில் அலுமினியத்தில் நடந்தது.

மாத முதலீட்டிற்கும், மாத தவணைக்கும்(SIP vs EMI) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். மாதாமாதம் சேமித்து அல்லது முதலீடு செய்து, முதிர்வில் ஒரு பொருளை வாங்க வேண்டுமா அல்லது இ.எம்.ஐ.(EMI) என கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா ? நீங்கள் கடன் மூலம் ஒரு பொருளை உடனே வாங்கி விட்டாலும், அந்த கடனை அடைக்கும் வரை அதற்கு நீங்கள் உரிமையாளர் கிடையாது. இது கடன் மூலம் பெற்ற வீடு, வாகனம், கைபேசி, குளிர்சாதனம் என அனைத்துக்கும் பொருந்தும். சேமித்த பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு முழு உரிமையாளர் நீங்களே.

கிரெடிட் கார்டுகளில் கவனம் தேவை. உண்மையில் தொழில் செய்பவர்களுக்காக  அறிமுகப்படுத்தபட்ட கடன் அட்டைகள் தான் அவை. ஆனால் இன்று தொழில் புரிபவர்கள் அதனை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள் கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது, கடனில்லா வாழ்வும் ஒரு சுகமே. வல்லரசான அமெரிக்காவில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் அட்டையிலும், கடனிலும் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதத்திற்கு மேல். அமெரிக்காவில் தனிநபர் ஒருவரின் கடன் மட்டும் சராசரியாக 90,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாய்) !

பணவீக்கத்தை பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை. தேவையில்லாத பதுக்கல், எதிர்பாராத கூடுதல் தேவைகள் தான் ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை நிர்ணயிக்கின்றன. அதிகமான உற்பத்தி இருக்கும் நிலையில், தேவை குறைவாக இருப்பின் அதன் விலை அதிகமாக இருக்காது. நீண்டகாலத்தில் பணவீக்கம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடிய ஒன்று.

நிதி இலக்குகளை திட்டமிடுதலின்(Financial Goals) அவசியம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அவை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளாக இருக்கலாம். குடும்பத்திற்கான தேவையான அளவு காப்பீடு, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு, அவசரகால நிதி போன்றவற்றை ஏற்படுத்தி விட்டு தான் நிதி இலக்குகளை திட்டமிட வேண்டும்.

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலை காத்திருத்தல்(Delayed Gratification) மூலமே கிடைக்கும். உலகின் பெரும்பாலான பணக்காரர்கள் எளிமையான வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் தான். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, நீண்டகாலத்தில் முதலீடு செய்து அதனை அறுவடை செய்வது தான் அவர்களின் வேலை. நீண்டகால முதலீட்டிற்கு மட்டுமே அரசு சார்பில் வரி சலுகையும் கிடைக்கப்பெறுகிறது, குறுகிய கால லாபத்திற்கு அல்ல.

கூட்டு வட்டியின் மகிமை நமது பள்ளிக்கால பாடத்தில் இருந்த ஒரு பக்கம் தான். ஆனால், உண்மையில் நாம் கல்வியை முடித்து விட்டு வேலைக்கு சென்றவுடன் அதனை மறந்து விட்டோம். அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஒருவரை உயர்த்தி விடாது. கடனில்லாமல், அளவாக சம்பாதித்தாலும் நல்ல ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டு எளிமையாக வாழ பழகினால் அதுவே உயர்வாகும். இதனை தான் பெரும் பணக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இளமை காலம் முதல் செய்யப்படும் தொடர் முதலீடு தான் ஒருவரின் செல்வத்தை உயர்த்துகிறது.

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

முதலீட்டை மேற்கொள்ளும் முன்னர், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் அதற்கான முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். வெறுமென போன்சி  (மோசடி திட்டம் – வட்டிக்கு பெரும் வட்டி) பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு எனக்கு மாதாமாதம் பணம் வருகிறது என சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். உண்மையில் நம் முதலீட்டை கொண்டு ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிவது அவசியமாகும். உங்கள் பணத்தை கொண்டு ஒருவர் நேர்மையாக தொழில் செய்தால் மட்டும் தான், உங்களுக்கான வருவாய் நிச்சயம். இல்லையென்றால், அது திவால் தான்.

சொல்லப்பட்ட கற்றலின் மூலம் நமது நிதி சிந்தனை மேம்படும். அளவான வாழ்க்கையை வாழ இயலும், அளவில்லா மகிழ்ச்சியை பெற முடியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை

ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும்  பங்குச்சந்தையின் கதை 

A Short Story. Key Points. Wealth Destroyer – Stocks

பொதுவாக பங்குச்சந்தையில் சில நிறுவன பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால் கோடீஸ்வரராக மாறலாம் என சொல்வதை கேட்டிருப்போம். 20 வருடங்களுக்கு முன்பு நீங்கள் இந்த பங்கில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால் இன்று அது 5 கோடி ரூபாய் பெறுமானம் பெறும் என்பதனையும் சிலர் சொல்வதுண்டு.

நடைமுறையில் உள்ள முதலீட்டு சாதனங்களில் தொழில்களை கொண்டு நல்ல  வருவாயை ஈட்ட முடியும் எனில், அது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதனால் மட்டுமே. அதே வேளையில் உங்கள் பணம் மற்றும் செல்வத்தை பதம் பார்க்கும் ஒரு முதலீட்டு சாதனமும் உண்டு. அதுவும் பங்குச்சந்தை தான்.

அப்படிப்பட்ட முதலீட்டு இழப்புகளை ஏற்படுத்திய நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் பல உண்டு. அவற்றின் சிறுகதைகளை இங்கே பார்ப்போம். சிறுகதைகளுக்கு இருக்கும் அழகே தனி தான். பங்குகளை அலசி ஆராய்வதில் சிறிய கதைகளாக சொல்லும் போது அதன் தன்மை ஆழமான வாசிப்பை ஏற்படுத்தும்.

சொல்லப்பட உள்ள பங்கின் நிறுவன பெயரை கதையின் முடிவில் நீங்களே அறிந்து கொள்ளலாம். பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டு முதலீட்டாளர்களின் பணத்தை பதம் பார்க்கும் பங்கு ஒன்று இதோ…

தற்போது இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்த பங்கு 60 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. நல்ல பங்கு தானே, வாருங்கள் கதைக்கு.

  • சொல்லப்பட்ட உள்ள நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் இந்திய பணக்காரர்களில் ஒருவராவார். முதலீடுகளை பெறுவதில் அவர் வல்லவரும் கூட.
  • தொலைத்தொடர்பு சேவையில் மேம்பட்ட CDMA தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. சிறிது வருடங்கள் கழிந்ததும், நிறுவனம் மற்றொருவரிடம் கைமாறியது. அவரும் இந்த நிறுவனத்தை தொடங்கியவருக்கு உறவுக்காரர் தான்.
  • நான்கு முறை சிறந்த விருதுகளை பெற்றவர் நமது புதிய ஓனர். ஆம், நாட்டின் மிக சிறந்த தொழிலதிபருக்கான விருதுகளை அவர் பெற்றார்.
  • 2008ம் ஆண்டில் மற்றொரு தொழில்நுட்ப சேவையில் அவர் நுழைந்தார். 3ஜி தொழில்நுட்பத்தை 2011ம் ஆண்டு கொண்டு வந்தார். 58,640 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலத்தில் எடுத்தார்.
  • எம்.டி.எஸ். கேபிள்(MTS Cable) என்ற நிறுவனத்தையும், டிஜி கேபிள்(Digicable) என்ற மற்றொரு நிறுவனத்தையும் கையகப்படுத்தினார். சில காரணங்களால் அவரால் 4ஜி தொழில்நுட்பத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
  • தொழில் போட்டி மற்றும் அதிக கடனால் தள்ளாடினார். ஏர்செல்(Aircel) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் தனது நிறுவனத்தை இணைக்க முயற்சி செய்தார். ஆனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
  • எரிக்சன்(Ericsson) என்ற நிறுவனத்துடன் இவருக்கு முதலீடு சார்ந்த மோதல் ஏற்பட்டது. எரிக்சன் இவருடைய நிறுவனத்தின் மீது வழக்கும் தொடுத்தது.
  • 12 வருடங்களுக்கு முன்பு உலகின் 6வது பணக்காரராக இருந்தவர் இப்போது அதிக கடனை மட்டும் கொண்டு நிறுவனத்தை திவால் நிலைக்கு அறிவித்து விட்டார். 42 பில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பில் 3.15 லட்சம் கோடி ரூபாய்) சாம்ராஜ்யத்தை கொண்டிருந்தவர் இன்று தன்னிடம் எதுவுமில்லை என கூறியுள்ளார்.
  • 2008ம் ஆண்டில் 800 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருந்த அவருடைய நிறுவனத்தின் பங்கு விலை 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 80 பைசாவுக்கு வந்தடைந்தது. போனஸ் பங்குகள் எதுவும் தரப்படவில்லை என்பதனை கவனிக்கவும்.

எந்த நிறுவனம் என்று உங்களால் அறிய முடிகிறதா ?

பங்குச்சந்தையில் வெறும் விலைகளை மட்டுமே பார்க்காமல், நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு உள்ளது, நிர்வாகம் நன்றாக செயல்பட்டு வருகிறதா மற்றும் வருவாய் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதனையும் ஆராய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை குமிழியும், அதன் தன்மைகளும் – இந்த வார இணைய வழி நிகழ்வு

பங்குச்சந்தை குமிழியும், அதன் தன்மைகளும் – இந்த வார இணைய வழி நிகழ்வு 

The Big Bubble and Delisting opportunity – Online Meet

நடப்பு 2020ம் வருடத்தின் மார்ச் மாதத்தில் உலக பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. கொரோனா தாக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை குறியீடு சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இழப்பை ஏற்படுத்தின. பின்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நல்ல ஒரு ஏற்றத்தில் மீண்டு வந்தன.

பங்குச்சந்தை குறியீடுகள் உயர்ந்து காணப்பட்டாலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மீட்கப்படவில்லை எனலாம். இந்த மந்தநிலை கொரோனா தாக்கத்தால் மேலும் அதிகமாகியுள்ளது. மீண்டும் உலக பங்குச்சந்தைகள் 2020ம் ஆண்டில் வீழ்ச்சியை சந்திக்குமா ?

பொருளாதார மற்றும் பங்குச்சந்தை குமிழிகள் எவ்வாறு நடைபெறும் ? 

பங்குச்சந்தை வீழ்ச்சியின் போது ஒரு முதலீட்டாளராக நாம் கடைபிடிக்க வேண்டியவை  

நல்ல நிறுவன பங்குகளை கண்டறிவதற்கான எளிய உத்திகள் 

உண்மையில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவன தொழில்கள் லாபத்தில் உள்ளதா ?

நீங்கள் வாங்கிய பங்கு, பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்பட உள்ளதா ?

Stock Market Bubble Webinar

வாருங்கள், இந்த வார ஞாயிற்றுக்கிழமை இணைய வழியிலான நிகழ்வில் பேசலாம்.

Registration for Webinar Meet – The Big Bubble & Delisting Opportunity

பதிவுக்கு பின் நிகழ்வுக்கான இணைப்பு உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு 

The Peon to Pidilite Industries – Fevicol Branding

1925ம் ஆண்டு குஜராத் மாநிலம் மகுவாவில் பிறந்த பல்வந்த் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்து விட்டு, பம்பாயில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார். படித்தது என்னவோ சட்டக்கல்வி, ஆனால் வேலைக்கு சென்றது சாயமிடுதல் மற்றும் அச்சக தொழிற்சாலைக்கு தான். சட்டம் சார்ந்த தனது படிப்பு வேலையை அவர் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட செயல்படுத்தவில்லை.

அச்சக துறையில் சலித்து போன அவர், மும்பையிலுள்ள மரச்சாமான்கள் செய்யும் ஒரு அலுவலகத்தில் பியூனாக வேலைக்கு சேர்ந்தார். அந்த அலுவலகத்தின் பட்டறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பல்வந்துக்கு(Balvant Parekh) தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது ஏற்பட்டது. தொழில் செய்ய வேண்டுமென்றால் என்ன தொழில் செய்யலாம் மற்றும் தொழிலுக்கான முதலீட்டை தயார் செய்ய வேண்டுமே என்ற சிந்தனையும் அவரது மனதில் ஓடியது.

ஒரு முறை தனது நண்பர் ஒருவரின் மூலம் தொழில் செய்வதற்கான முதலீட்டை பெற முனைந்தார். பின்பு அவருடைய உதவியில் மோகன் என்பவர் அறிமுகமானார். மோகன் முதலீடு செய்ய தயாராக, பல்வந்த் தனது வேலையை விட்டு விட்டு சொந்த தொழிலில் களம் இறங்கினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து காகித சாயங்கள்(Paper Dye), பாக்கு கொட்டைகள், சைக்கிள் போன்றவற்றை இறக்குமதி செய்து, விற்பனை செய்வது – இது தான் பல்வந்தின் தொழில். தொழிலில் சக்கை போடு போட்டார். தொழில் சார்ந்த புதிய மனிதர்களுடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

இறக்குமதி தொழிலில் இருந்ததால், ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெட்கோ(Fedco) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு பல்வந்த்துக்கு கிடைத்தது. 50 சதவீத பங்களிப்புடன் கூட்டாளியாக பெட்கோ நிறுவனத்தில் இணைந்தார். பெட்கோ நிறுவனத்தின் வாயிலாக மற்றொரு ஜெர்மன் நிறுவனத்தை கண்டறிந்தார் பல்வந்த், உடனடியாக அங்கும் சென்றார். ஹோஸ்ட்(Hoechst) என்ற ஜெர்மன் நிறுவனம் ரசாயன தொழிலில் இருந்து வந்தது. இது தற்போதைய சனோபி பார்மா(Sanofi Pharma) நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது.

ஹோஸ்ட் நிறுவனத்தில் இவரது தொழில் பங்களிப்பு இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் மறைவுக்கு பின், நிறுவனம் நேரடி விற்பனைக்கு தயாரானது. பின்னர் 1954ம் ஆண்டு உள்நாட்டுக்கு வந்த பல்வந்த் தொழில் அனுபவத்தை கொண்டு தனது சகோதரர்களுடன் மும்பையில், ‘பரேக் டை கெமிக்கல்’ நிறுவனத்தை துவங்கினார். ஜெர்மனியிலிருந்து தொழில்துறைக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் நிறமிகளை இறக்குமதி செய்து அதற்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

பசை போன்ற ஒரு பொருளை தயாரித்து அதற்கு, ‘பெவிகால் -Fevicol’ என பெயர் சூட்டினார். ‘Col – கால்’ என்றால் ஜெர்மனி மொழியில் இரு விஷயங்களை இணைப்பதன் பொருளாம். பரேக் டை கெமிக்கல் நிறுவனமே(Parekh Dyechem) பின்னர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பல்வந்த் மறைவுக்கு பின் தற்போது அவரது மகன் மதுக்கர் பரேக் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். வினைல் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவராகவும், இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். நாட்டின் 16வது பணக்காரராக மதுக்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.71,000 கோடி. நிறுவனத்திற்கான கடன் பெரிதாக எதுவுமில்லை. இந்த துறையில் சந்தை முன்னணியாகவும் நிறுவனம் திகழ்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம் 47 மடங்கில் உள்ளது. பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 16 மடங்காக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதம் மற்றும் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 158 கோடி ரூபாயாக சொல்லப்பட்ட நிலையில், இது 33 சதவீத குறைவாகும். எனினும் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் நீண்டகாலத்தில் நன்றாக உள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாபம் 24 சதவீதமாகவும் உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் 5 வருடங்களில் 26 சதவீதமும், பத்து வருட கால அளவில் 27 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,400 கோடியாக உள்ளது. 2010ம் ஆண்டு பிடிலைட் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் இன்று 1400 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதுவரை மூன்று முறை போனஸ் பங்குகள் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் இந்த நிறுவனம் பங்கு விலையில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் இந்த பங்கு இறங்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குறைவான அளவில் முதலீட்டிற்கு வாங்கி வைத்து கொள்ளலாம். பங்குகளை வாங்குவதற்கு அடிப்படை அலசல் அவசியம். எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முடிவு எடுப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? – உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள்

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? –  உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள் 

Best 3 Global Funds to Invest – Mutual Funds in 2020

நான் எப்போதும் சொல்லும் வாசகம் இது தான், ‘ நேரிடையாக பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு தங்கள் உபரி பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஊக வணிகம் மற்றும் சூதாடுவதை தவிர்க்க வேண்டும். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்கப்பெறும் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீட்டின் மூலம் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் நிதி இலக்கை நிறைவு செய்யலாம். உங்கள் நிதி இலக்குகளுக்காக நேரிடையாக பங்குச்சந்தைக்கு வராதீர்கள்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது உங்களது உபரி பணத்தில் தான். செல்வ வளத்தை சேர்க்கவும், சமூகத்தில் தொண்டு செய்வதற்கான நிதியை பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் பெறுங்கள். ஆனால் உங்கள் நிதி இலக்குகளில் அதனை பரிசோதனை செய்ய வேண்டாம். பங்குகள் மூலம் சில வருடங்களில் நீங்கள் குட்டி அம்பானியாகி விட முடியாது. அதற்கு இரண்டு தலைமுறைகள் கஷ்டப்பட வேண்டும். நீண்டகால தன்மையும், பொறுமையும் அவசியம்.‘

வங்கிகளில் வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. இதற்கு இரண்டு விஷயங்களை காரணமாக எடுத்து கொள்ளலாம். ஒன்று பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இல்லையெனில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இது போல வேகமாக வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொதுவாக வட்டி விகிதம் குறைவாக தான் காணப்படும். அப்படியிருக்கும் போது வருங்காலங்களில் வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் அதிகமாக இருக்காது (அதிக பணவீக்க காலத்தை தவிர்த்து). எனவே அவற்றுக்கு மாற்றாக பார்க்கும் போது, இன்று பரஸ்பர நிதிகள்(Mutual Funds) பிரபலமடைந்து வருகிறது.

அதே வேளையில் பரஸ்பர நிதிகள் என்றாலே பங்குச்சந்தை தான் எனவும் எடுத்து கொள்ளக்கூடாது மற்றும் வருவாய் நன்றாக உள்ளது என அலட்சியத்துடனும் இருந்து விட கூடாது. பரஸ்பர நிதிகள் பல கலவை திட்டங்களை கொண்டவை. நீங்கள் பார்க்கும் சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், பத்திரங்களில் முதலீடு, வீட்டுமனை, தங்கம், பங்குகள் என பல பரிணாமங்களை பரஸ்பர நிதிகளில் ஒரு சேர காணலாம்.

இருப்பினும் ஒருவருடைய தேவை மற்றும் காலத்திற்கு ஏற்ப தான் பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ரிஸ்க் என்பது எந்த முதலீட்டிலும் உண்டு. குறைந்த ரிஸ்க்(No Risk or Low Risk) கொண்ட லிக்விட் பண்டுகள் முதல் அதிக ரிஸ்க் கொண்ட பங்கு சார்ந்த பண்டுகள்(High Risk) வரை இங்கு கிடைக்கப்பெறுகிறது. திட்ட ஆவணங்களை சரியாக படிப்பதும், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

உலக பங்குச்சந்தை முதலீட்டில் நமது நாட்டின் சந்தை மதிப்பு மூன்று சதவீதமே. நம் நாட்டில் பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் மூன்று சதவீதத்திற்கு குறைவே. சமீபத்தில் பங்குச்சந்தையில் புதிய கணக்குகள் அதிகமாக துவங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவை கொரோனா காலத்தில் பங்குச்சந்தை மூலம் ஊக வணிகம் மற்றும் தினசரி வர்த்தகத்தில் பகுதி நேரமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தினால் தான். உண்மை புள்ளிவிவரம் என்னவெனில் நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சுமார் 4 கோடி டீமேட் கணக்குகள் உள்ளதாகவும், இவற்றில் ஒரு கோடிக்கும் குறைவாகவே செயல்பாட்டில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது தொடங்கப்பட்ட பங்குச்சந்தை கணக்குகளில் 75 சதவீதம் செயல்படாமல் இருந்துள்ளன. மீதம் சொல்லப்பட்ட ஒரு கோடிக்கும் குறைவான கணக்குகளில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை பாதியை கூட பெறாது. இவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம், யார் உண்மையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று… ஆம், பங்கு தரகர்களும், நீண்டகால முதலீட்டாளர்களும்.

வெளிநாட்டு நிறுவன பங்குகளில் நாம் நேரிடையாக முதலீடு செய்வதற்கான சாதனம் நமது பங்குச்சந்தை அமைப்புகளில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். அப்படி காணும் போது, நாம் சிறந்த மூன்று திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

  • பிராங்க்ளின் பீடர் அமெரிக்க முதலீட்டு வாய்ப்பு (Franklin India Feeder US Opportunities)
  • டி.எஸ்.பி. ப்ளாக்ராக் அமெரிக்க முதலீடு (DSP Blackrock US Flexible Equity)

மேலே சொல்லப்பட்ட மூன்று பரஸ்பர நிதிகளில் பராக் பரிக் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மதிப்புமிக்க முதலீட்டாளர்களில் ஒருவராவார். இன்றும் மூன்று திட்டங்களை மட்டுமே கொண்டு செயல்படும் இந்த பரஸ்பர நிதி நிறுவனம் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.

வெறுமென உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், முதலீட்டாளர்களுக்கு உலக நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை பராக் பரிக் தருகிறது. இந்த பண்டுகளில் குறைந்தபட்ச முதலீடாக மாதாமாதம் ரூ. 1000 ஐ முதலீடு செய்யலாம். பராக் பரிக் நீண்டகால பங்கு திட்டம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகும். இதுவரை 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ. 3,200 கோடி.

கூகுள் (Alphabet), அமேசான், முகநூல்(Facebook), சுசூகி, மைக்ரோசாப்ட், எச்.டி.எப்.சி., ஐ.டி.சி., ஆரக்கிள், கேடிலா ஹெல்த்கேர் என பல முக்கிய நிறுவனங்களில் இந்த திட்டம் முதலீடு செய்யும். முதலீடு பரவலாக்கத்தில் 55 சதவீதம் பெரு நிறுவனங்களிலும்(Giant), லார்ஜ் கேப் 13 சதவீதம், மிட் கேப் 12 சதவீதம் மற்றும் மீதம் உள்ளவை சிறு நிறுவனங்களில்(Small cap) முதலீடு செய்யப்படும். அதிக ரிஸ்க் கொண்ட இந்த திட்டம் மல்டி கேப் முதலீட்டு பிரிவில் வருகிறது. நீண்டகால முதலீட்டிற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

மற்ற பண்டுகளை பற்றி வரவிருக்கும் பதிவுகளில் காணலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு 

Stock Market – Fundamental Analysis – 30 Hrs Sweet Spot Course

இந்திய பங்குச்சந்தையின் வரலாறு நீண்ட காலமானது. மும்பை பங்குச்சந்தையின்  வயது சுமார் 140 வருடங்களுக்கு மேல். வணிகத்தை பிரதானமாக கொண்டது தமிழகமும், நமது நாடும். நாம் இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தாலும், முன்னர் பார்த்திருந்தாலும் அடிப்படையில் நாம் ஒரு தொழில்முனைவோர்களே.

வேகமாக வளரும் நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியதுமானது. அதனை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நம்மை போன்ற நாடுகளில் வேலை தேடுவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதே அவசியம். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும். அது போல தான் பங்குச்சந்தையிலும். ஊக வணிகத்தில் பணம் பண்ணுகிறேன் என கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது ஆரோக்கியமானதல்ல.

பங்குச்சந்தைக்கும், நாட்டில் உள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பெருமளவிலான தொடர்பு உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை காணலாம். தொட்டுணர கூடியதல்ல, பங்குச்சந்தை முதலீடு. ஆனால் நீங்கள் தொட்டுணர்ந்து பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மற்றும் சேவைகளிலும் பங்குச்சந்தை நிறுவனங்கள் தான் உள்ளது.

பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களை நமது தொழில் போல பாவித்து, அதன் அடிப்படை திறன்களை அலசி ஆராய்ந்து நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதே சிறந்தது. நல்ல நிறுவனங்களை கண்டறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்கு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கற்றலுடன், நிறுவனங்களின் நிதி அறிக்கைகள்(Financial Reports) மற்றும் நிர்வாகத்தை(Management) மதிப்பிடுவது அவசியமாகும்.

இதற்கு ஒரு முதலீட்டாளராக நமக்கு தேவைப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என சொல்லப்படும் அடிப்படை பகுப்பாய்வு தான். பங்குச்சந்தையின் வர்த்தக ஏற்ற – இறக்கத்திற்கு அனைத்துமான மூதாதை தான் அடிப்படை பகுப்பாய்வு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் நம்மிடம் சிறிதளவு பண உதவி கேட்டாலே யோசிக்கும் நாம், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டும்.

வெறுமென பங்குகளை வாங்கி வைத்தால், லாபமோ அல்லது செல்வத்தையோ ஏற்படுத்த முடியாது. அதற்கான விதை சரியாக இருப்பது அவசியமாகும். வர்த்தக மதுரை சார்பாக பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு வகுப்பை துவங்க உள்ளோம். பங்குச்சந்தையில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ? அப்படி  செய்யாவிட்டால் நாம் சம்பாதிக்கும் பணம் யாரோ ஒருவரால் முதலீடு செய்யப்பட்டு, அவர் பணக்காரராக மாறுவதற்கான வாய்ப்பு ஏன் ஏற்பட்டது ?

சரியான விலையில் பங்குகளை வாங்குவது எப்படி ?

சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வேறுபாடு என்ன ?

பங்கு முதலீட்டில் நஷ்டத்தை எவ்வாறு தவிர்க்கலாம் ?

மதிப்புமிக்க முதலீட்டாளர்களின்(Value Investors) செல்வத்தை நாமும் பெறுவது எப்படி ?

பங்குகள் மூலம் எவ்வாறு சொத்துக்களை(Financial Assets) ஏற்படுத்தலாம் ?

மோசமான நிர்வாகத்தையும், நஷ்டத்தை ஏற்படுத்தும் பங்குகளையும் கண்டறிவது எப்படி ?

பங்குச்சந்தையில் கூட்டு வட்டியின் மகிமை(Power of Compounding) என்ன ?

பணத்தின் மூலம் பணம் பண்ணும்(Money works for you) உண்மை சூத்திரம் என்ன ?

வாருங்கள், இது போன்ற கேள்விகளுக்கான விடையாக பங்குச்சந்தை அடிப்படை கற்றலை ஏற்படுத்துவோம்.

பதிவு செய்ய…

Stock Market – Fundamental Analysis Course – Registration 

கட்டணம்: ரூ. 4,500/- 

இணைய வகுப்பு சலுகை(Online Course):  ரூ. 2250/- மட்டுமே 

பதிவுக்கு பின் வகுப்புக்கான நாள் மற்றும் நேரம், இணைப்பு ஆகியவை உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Fundamental Analysis Course

புத்தகத்தின் வாயிலாக மட்டுமே கற்க விரும்புபவர்களுக்கு…

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – How to pick the right stock in the Share market ?

புத்தக  விலை: ரூ. 228/- மட்டுமே

உரிமை துறப்பு(Disclaimer):

மேலே சொல்லப்பட்ட நிகழ்வு (வகுப்புக்கள்) பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கற்றலுக்கு மட்டுமே. வகுப்புக்களில் சொல்லப்படும் பங்குகள் யாவும் மாதிரியாகவே(Examples) சொல்லப்படும். அவை வாங்க கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய பங்குகள் அல்ல. வர்த்தக மதுரை ஒரு நிதி சேவை(Financial Advisory Services) சார்ந்த நிறுவனம் ஆகும். நடத்தப்படும் வகுப்புகளுக்கு சான்றிதழ்கள், தரவரிசைகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது.

இது ஒரு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை வகுப்பு, தகவல் மற்றும் கற்றலுக்கு மட்டுமே.

பங்குகளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய லாப, நஷ்டங்களுக்கு இந்த தளம் பொறுப்பல்ல. பங்குகளில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகரை அணுகுவது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com