பங்குச்சந்தை பரிந்துரைகளா, அழைப்புகளா ? – எச்சரிக்கை தேவை

பங்குச்சந்தை பரிந்துரைகளா, அழைப்புகளா ? – எச்சரிக்கை தேவை

The Ugly truth about Stock Market recommendations

 

இந்த கட்டுரை பங்குச்சந்தையில் புதிதாக நுழைபவர்களுக்கானது மட்டுமல்ல, சந்தையில் கடந்த சில காலங்களாக இருக்கும் தின வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தான். பங்குச்சந்தை என்பது ஒரு தொழில்(Share Market is a Business) சார்ந்த விஷயம் என்று நாம் ஏற்கனவே சொல்லி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சந்தையில் நடப்பது என்னவென்று ஆராய்ந்தால், சந்தையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.
பங்குச்சந்தை அதலபாதாளத்திற்கு சென்று விடுமா என சந்தையில் புதிதாக உள்ளவர்கள் பயம் கொள்ள வேண்டாம். இது பங்குகளின் பரிந்துரைகள்(Stock Recommendations) மற்றும் பங்குச்சந்தை சார்ந்து வரும் அழைப்புகளின்(Trade recommending calls) எச்சரிக்கை மணி. பங்குச்சந்தையில் தின வர்த்தகர்கள், குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கென தனித்தனி அடையாளங்கள் உண்டு. அவர்களுக்கென்று ஆய்வும் வேறுபடுகிறது (அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis)). அல்காரித வர்த்தகம்(Algorithm Trading) மற்றும் அதிக அதிர்வெண் வர்த்தகம்(High Frequency Trading -HFT) மேற்கொண்டிருக்கும் காலம் இது.

 

நீங்கள் ஒரு பங்கினை வாங்க அதற்கான கட்டளையை இயக்கும் முன்(Ordering), இந்த அதிர்வெண் மென்பொருள் பயன்பாடுகள் தங்களுக்கான கட்டளையை முடித்து விட்டு, உங்களை சந்தையின் எதிர்திசையில் பயணிக்க வைக்கும், முடிவில் உங்களுக்கு ஏற்படுவது நஷ்டம் தான். இந்த தாக்கம் தின வர்த்தகர்களுக்கு மட்டுமில்லாமல், சில சமயங்களில் குறுகிய கால வர்த்தகர்களையும் பாதிக்கும். சந்தையில் உள்ள பங்குகள் ஒரே நாளில் 20 சதவீதத்திற்கு மேல் ஏறுவதும், இறங்குவதும் இதன் காரணமாகவே.

 

சில்லறை முதலீட்டாளர்களை(Retail Investors) தவிர்த்து, மனித தொடர்பு இல்லாத கணினி சார்ந்த தானியங்கி செயல்பாடுகள் பங்குச்சந்தையில் இருப்பதை யாரும் மறக்க வேண்டாம். இது போன்ற காலங்களில் மற்றுமொரு வருந்தத்தக்க விஷயம் சந்தையில் ஈடுபடுபவர்கள் ஊடக பரிந்துரைகள் மற்றும் அழைப்புகளை ஏற்பது தான். நீங்கள் ஒரு தின வர்த்தகராக இருக்கலாம் அல்லது முதலீட்டாளராக சந்தையில் வளம் வரலாம். சந்தையில் உங்களுக்கான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் இருக்கலாம். அதனை நன்றாக அறிந்து கொண்டு, உங்களுக்கான முதலீட்டு தாரக மந்திரங்களை(Trading and Investment Rules) உருவாக்கினால் போதும். நீண்ட காலத்தில் சந்தை வர்தகருக்கும், முதலீட்டாளருக்கும் நன்மை அளிக்கும்.

 

இன்று ஊடகங்களில் பங்குச்சந்தை சார்ந்த பங்கு பரிந்துரைகள்(Buy or Sell) ஒரு பக்கம் இருந்து வந்தாலும், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அவ்வப்போது அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும். ‘நாங்கள் உங்களுக்கு தினமும் ரூ. 2000 முதல் 5000 ரூபாய் வரை பங்குச்சந்தையில் சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறோம். இதற்கான கட்டணம் மாதம் ரூ. 5000/- மட்டுமே. நீங்கள் மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை (20 வர்த்தக நாட்கள் X ரூ.5000) சம்பாதிக்கலாம் ‘ என்று சில அழைப்புகள் வரும்.

 

மற்றொரு அழைப்பு, ‘ பங்குச்சந்தையில் நாங்கள் கடந்த பல வருடங்களாக பங்குகளை பரிந்துரைத்து வருகிறோம். எங்கள் மூலம் பல முதலீட்டாளர்கள் 100 சதவீதத்திற்கு மேல் வருமானம் பெற்றுள்ளனர். நீங்கள் எங்களுக்காக எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். உங்களுக்கான லாபத்தில் சில சதவீதம் மாதத்திற்கு ஒரு முறை அளித்தால் போதும் (Scam)‘ என வருவதுண்டு.

 

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் வருவாய்(Business Earnings) தன்மையை குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ கணிக்கலாம். ஆனால் ஒரு பங்கின் விலையை உங்களால் எதிர்காலத்தில் கணிப்பது சாத்தியமல்ல. பங்குச்சந்தையில் உள்ள சில வல்லுநர்கள் நிறுவனத்தின் கடந்த கால வருவாயை கொண்டு, எதிர்காலத்தில் இதன் வருமானம் இவ்வாறு இருக்கலாம் மற்றும் அடுத்த ஒரு வருடத்திற்கான பங்கு விலை இலக்கு இவ்வளவு என்று சொன்னாலும், அது அவருடைய சொந்த மதிப்பீடு தான். சொல்லப்பட்ட பங்கின் இலக்கு எதிர்காலத்தில் வெற்றி பெறலாம், தோல்வியும் உண்டு. அதனால் தான் ஆராயப்பட்ட பங்குகளுக்கான இலக்கு விலையை(Target Price) நிர்ணயிக்கும் போது, அந்த பங்கிற்கான இழப்பு நிறுத்ததையும்(Stop loss) அவர்கள் சொல்வதுண்டு. ஏனெனில் பங்குச்சந்தையில் யாராலும் விலையை எதிர்காலத்தில் கணிக்க முடியாது. பத்து வருடங்களுக்கு முன்பு 50 ரூபாய் இருந்த ஒரு பங்கின் விலை இன்று 5000 ரூபாயாக இருக்கலாம். அதே வேளையில் ரூ. 3000 விலையை கொண்ட ஒரு பங்கு இன்று வெறும் 2 ரூபாயில் வர்த்தகமாகி கொண்டிருப்பதும் பங்குச்சந்தையில் இயல்பது தான்.

 

பங்குச்சந்தையில் இலக்கு விலைகளை கணிப்பதை விட்டு விட்டு, ஒரு நிறுவனத்தின் அல்லது துறையின் ஆய்வுகளை நாம் மேற்கொள்ளலாம்.  பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்திற்கான காரணங்களை நாம் கண்டறியலாம். அதனை நாம் மேற்கொள்ளாமல் பங்குச்சந்தை பரிந்துரைகள்(Stock Recommendations) மற்றும் அழைப்புகளின் பின்னால் ஓடினால் கோடிகளை கொட்டி கொடுப்பதற்கான தீனி நாம் தான். பங்குச்சந்தையில் யாவரும் சம்பாதிக்கலாம். அதற்கு தேவை சிறு முதலீடும், பங்குச்சந்தை பற்றிய அடிப்படை கல்வியும் தான்.

 

ஒருவர் தனது பட்டப்படிப்பில் இன்ஜினியரிங்(Engineering Graduate) படிக்க முனைகிறார் என வைத்து கொள்வோம். இன்ஜினியரிங் படிப்பிற்கான மொத்த செலவு என பார்க்கும் போது, 5-10 லட்சம் ரூபாய் வரை ஆகும். இதற்கான காலம் 4 வருடங்கள். தனது இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த ஒரு இளைஞர் அதனை தகுதியாக கொண்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிவார். ஆரம்பத்தில் அவருக்கு தொழில் அனுபவம் இல்லாததால் குறைந்த அல்லது மிதமான சம்பளத்தில் வேலை செய்வார். பின்பு சில காலங்களுக்கு பிறகு அவரது அனுபவமும், வருமானமும் அதிகரிக்கும். இது போன்று தான் மற்ற படிப்புகளுக்கும். உங்களுக்கான வருமானம் அதிகம் தேவையென்றால், அதற்கான படிப்பு செலவும், படிக்கும் காலமும் அதிகமாக இருக்கலாம். மருத்துவர்களின் மாத வருமானம் கணக்காளர்களின் வருமானத்திலிருந்து வேறுபடுகிறது. அதே போன்று விண்வெளி ஆராய்ச்சியில் பணிபுரிபவர்களின் சம்பளம் விற்பனையாளர்களிடம் இருந்து வேறுபடும். தொழிலாளர்களின் வருமானம், தொழில் புரிபவர்களின் லாபத்திற்கு ஈடாகாது.

 

இப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் நாம் எந்த அடிப்படை அறிவையும் பெறாமல் குறுகிய காலத்தில் நமது சம்பளத்தை விட பல மடங்கு லாபத்தை எதிர்பார்ப்பது எவ்வாறு சாத்தியம் ? பங்குச்சந்தையில் வருமானம் பார்க்க அதற்கான விலை மதிப்பும் மற்றும் காலமும் மிகவும் அவசியம். அனுபவமே வெற்றியாளர்களை உருவாக்கும். வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களில் இருந்து நாம் கற்க முயன்றாலும், நமக்கான வெற்றி பாதை தெளிவாகும்.

 

பங்கு பரிந்துரைகள் மற்றும் அழைப்புகள் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருந்தால், ஏன் இன்று பல தொழிலதிபர்கள் கோடிகளை முதலீடு செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு நிறுவனங்களை இயக்க வேண்டும், பங்குச்சந்தையிலே அவர்கள் சம்பாதிக்கலாமே ?  பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், அது மற்ற தொழில்களை போன்று தான். சந்தை இறக்கத்தில் போர்ட்போலியோ(Portfolio Management Services -PMS) என்று சொல்லப்படும் முதலீட்டு சேவையை கொண்டிருப்போருக்கும் அவர்களது முதலீட்டு மதிப்பில் சில நேரங்களில் சறுக்கல் ஏற்படலாம், அப்படியிருக்கும் போது நாம் எம்மாத்திரம். நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரும் முதலீடு பங்குச்சந்தை. இது போன்று ஏமாற்று விஷயங்களில் பங்குச்சந்தை அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் நாம் ஒரு தின வர்த்தகராக, முதலீட்டாளராக எப்படி செயல்படுகிறோம் என்பது தான் அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான சரியான விலையை நாம் பெறலாம். ஆனால் அதனை விற்பதற்கான இலக்கு விலை ஒரு முதலீட்டாளரை சார்ந்தது, பங்கு பரிந்துரைகள் மற்றும் அழைப்புகளின் பின்னால் அல்ல !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.