Pidilite Brands

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு 

The Peon to Pidilite Industries – Fevicol Branding

1925ம் ஆண்டு குஜராத் மாநிலம் மகுவாவில் பிறந்த பல்வந்த் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்து விட்டு, பம்பாயில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார். படித்தது என்னவோ சட்டக்கல்வி, ஆனால் வேலைக்கு சென்றது சாயமிடுதல் மற்றும் அச்சக தொழிற்சாலைக்கு தான். சட்டம் சார்ந்த தனது படிப்பு வேலையை அவர் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட செயல்படுத்தவில்லை.

அச்சக துறையில் சலித்து போன அவர், மும்பையிலுள்ள மரச்சாமான்கள் செய்யும் ஒரு அலுவலகத்தில் பியூனாக வேலைக்கு சேர்ந்தார். அந்த அலுவலகத்தின் பட்டறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பல்வந்துக்கு(Balvant Parekh) தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது ஏற்பட்டது. தொழில் செய்ய வேண்டுமென்றால் என்ன தொழில் செய்யலாம் மற்றும் தொழிலுக்கான முதலீட்டை தயார் செய்ய வேண்டுமே என்ற சிந்தனையும் அவரது மனதில் ஓடியது.

ஒரு முறை தனது நண்பர் ஒருவரின் மூலம் தொழில் செய்வதற்கான முதலீட்டை பெற முனைந்தார். பின்பு அவருடைய உதவியில் மோகன் என்பவர் அறிமுகமானார். மோகன் முதலீடு செய்ய தயாராக, பல்வந்த் தனது வேலையை விட்டு விட்டு சொந்த தொழிலில் களம் இறங்கினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து காகித சாயங்கள்(Paper Dye), பாக்கு கொட்டைகள், சைக்கிள் போன்றவற்றை இறக்குமதி செய்து, விற்பனை செய்வது – இது தான் பல்வந்தின் தொழில். தொழிலில் சக்கை போடு போட்டார். தொழில் சார்ந்த புதிய மனிதர்களுடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

இறக்குமதி தொழிலில் இருந்ததால், ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெட்கோ(Fedco) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு பல்வந்த்துக்கு கிடைத்தது. 50 சதவீத பங்களிப்புடன் கூட்டாளியாக பெட்கோ நிறுவனத்தில் இணைந்தார். பெட்கோ நிறுவனத்தின் வாயிலாக மற்றொரு ஜெர்மன் நிறுவனத்தை கண்டறிந்தார் பல்வந்த், உடனடியாக அங்கும் சென்றார். ஹோஸ்ட்(Hoechst) என்ற ஜெர்மன் நிறுவனம் ரசாயன தொழிலில் இருந்து வந்தது. இது தற்போதைய சனோபி பார்மா(Sanofi Pharma) நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது.

ஹோஸ்ட் நிறுவனத்தில் இவரது தொழில் பங்களிப்பு இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் மறைவுக்கு பின், நிறுவனம் நேரடி விற்பனைக்கு தயாரானது. பின்னர் 1954ம் ஆண்டு உள்நாட்டுக்கு வந்த பல்வந்த் தொழில் அனுபவத்தை கொண்டு தனது சகோதரர்களுடன் மும்பையில், ‘பரேக் டை கெமிக்கல்’ நிறுவனத்தை துவங்கினார். ஜெர்மனியிலிருந்து தொழில்துறைக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் நிறமிகளை இறக்குமதி செய்து அதற்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

பசை போன்ற ஒரு பொருளை தயாரித்து அதற்கு, ‘பெவிகால் -Fevicol’ என பெயர் சூட்டினார். ‘Col – கால்’ என்றால் ஜெர்மனி மொழியில் இரு விஷயங்களை இணைப்பதன் பொருளாம். பரேக் டை கெமிக்கல் நிறுவனமே(Parekh Dyechem) பின்னர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பல்வந்த் மறைவுக்கு பின் தற்போது அவரது மகன் மதுக்கர் பரேக் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். வினைல் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவராகவும், இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். நாட்டின் 16வது பணக்காரராக மதுக்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.71,000 கோடி. நிறுவனத்திற்கான கடன் பெரிதாக எதுவுமில்லை. இந்த துறையில் சந்தை முன்னணியாகவும் நிறுவனம் திகழ்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம் 47 மடங்கில் உள்ளது. பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 16 மடங்காக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதம் மற்றும் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 158 கோடி ரூபாயாக சொல்லப்பட்ட நிலையில், இது 33 சதவீத குறைவாகும். எனினும் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் நீண்டகாலத்தில் நன்றாக உள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாபம் 24 சதவீதமாகவும் உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் 5 வருடங்களில் 26 சதவீதமும், பத்து வருட கால அளவில் 27 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,400 கோடியாக உள்ளது. 2010ம் ஆண்டு பிடிலைட் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் இன்று 1400 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதுவரை மூன்று முறை போனஸ் பங்குகள் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் இந்த நிறுவனம் பங்கு விலையில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் இந்த பங்கு இறங்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குறைவான அளவில் முதலீட்டிற்கு வாங்கி வைத்து கொள்ளலாம். பங்குகளை வாங்குவதற்கு அடிப்படை அலசல் அவசியம். எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முடிவு எடுப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s