ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI
Mutual Funds Investment declined in the month of June 2020
மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை விறு விறுவென ஏற்றம் பெற்று வருகிறது. பெரும்பாலான பங்குகள் மார்ச் கடைசி வாரம் அதலபாதாளத்திற்கு சென்ற நிலையில், தற்போது விலையேற்றத்தில் சுமார் 30-80 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளன.
பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் எதிர்பாராத விதமாக ஏற்றமடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற நிகழ்வு பங்குச்சந்தையில் இயல்பான ஒன்று தான். பின்னொரு நாளில் வேறொரு காரணத்திற்காக இறங்குவதும் நடக்கும். அதே வேளையில் நீண்டகாலத்தில் முதலீடு செய்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பெரும் செல்வத்தை அளிக்கும் வாய்ப்பாக அமையும்.
இந்திய பரஸ்பர நிதி துறையில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்(Asset Management Companies) முதலீட்டு சேவையை செய்து வருகின்றன. செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பரஸ்பர நிதி துறையை ஆம்பய்(AMFI) அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகள் சார்ந்த தகவல்களை ஆம்பய் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாத முடிவின் படி, இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு(AUM) 25.5 லட்சம் கோடி ரூபாயாகும். ஜூன் மாதத்தில் பரஸ்பர முதலீடுகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதலீடு ரூ.195 கோடி. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு ரூ. 240 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 95 சதவீத குறைவாகும்.
ரிஸ்க் குறைந்த லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) இருந்து பெரும்பாலான முதலீடுகள் கடந்த மாதத்தில் வெளியேறியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 44,220 கோடி ரூபாய். கடன் பத்திரம் மற்றும் வருவாய் சார்ந்த பண்டுகளில் ஈர்க்கப்பட்ட ஜூன் மாத முதலீடு ரூ. 2,862 கோடி. கலவை திட்டம் என அழைக்கப்படும் ஹைபிரிட்(Hybrid) திட்டத்தில் 356 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.
ஓய்வு கால நிதி மற்றும் குழுந்தைகளுக்கான திட்டங்களில் பெறப்பட்ட தொகை ரூ. 108 கோடி ஆகும். வரி சலுகை சார்ந்த திட்டங்கள் வாயிலாக கடந்த மாதத்தில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து 15 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.(Gold ETF) திட்டத்தின் மூலம் 494 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் இரண்டிலும் முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வேலையிழப்பு, குறைவான நாட்களுக்கு மட்டுமே பெறப்பட்ட ஊதியம், மந்தநிலையை காரணம் காட்டி முதலீடு செய்யாமல் இருந்ததாகும். மேலும் பங்குச்சந்தை மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் உச்சத்தில் இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்.
சந்தை இறக்கத்தில் அதிகமாக பெறப்பட்ட முதலீடு, தற்போது எச்சரிக்கை உணர்வாக பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை எனலாம். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், நீண்டகால வருவாய் வளர்ச்சியை பெறலாம். சந்தை ஏற்ற-இறக்கத்தை கணிப்பதை விட, நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை திரட்டுவது அவசியமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை