All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

டி.வி.எஸ். மோட்டார்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ.180 கோடி

டி.வி.எஸ். மோட்டார்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ.180 கோடி 

TVS Motors reported a net profit of Rs.180 Crore – Q2FY21

தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட இந்திய பன்னாட்டு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார்ஸ் கடந்த 1978ம் ஆண்டு துவங்கப்பட்டது. நாட்டின் 2வது மிகப்பெரிய வாகன ஏற்றுமதி நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் உள்ளது. பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 2019-20ம் நிதியாண்டு முடிவில் 18,849 கோடி ரூபாயை விற்பனையாகவும், 625 கோடி ரூபாயை நிகர லாபமாகவும் கொண்டிருந்தது.

சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம் பல பிராண்டுகளை சந்தையில் உருவாக்கியுள்ளது. வியாழக்கிழமை(29-10-2020) அன்று நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டிருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,254 கோடியாகவும், செலவினம் 5,010 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 15 கோடி ரூபாயும், நிகர லாபம் 180 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20,100 கோடி ரூபாய். புத்தக மதிப்பு 69 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 3.50 ஆகவும் உள்ளது. நிறுவனத்தின் கடன் ரூ.11,350 கோடி, அதன் கடன்-பங்கு(Debt to Equity) தன்மை மோசமாக உள்ளது கவனிக்கத்தக்கது. வட்டி பாதுகாப்பு விகிதமும் 1.5 மடங்குகளில் இருப்பது போதுமானதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 57 சதவீதமாகவும், அவர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 13 சதவீதமாகவும், 10 வருடங்களில் 15 சதவீதமாகவும் இருந்துள்ளது. லாபம், கடந்த ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமாகவும், 10 வருடங்களில் 34 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE), ஐந்து வருட காலத்தில் 25 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.3,235 கோடி என சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கான பணவரத்து(Free Cash Flow) எதிர்மறையாக உள்ளது. இருப்பினும் நிலையான சொத்துக்களை வாங்குவதில் கணிசமான அளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

துறை சார்ந்த பங்குச்சந்தை அடிப்படை கற்றல்

துறை சார்ந்த பங்குச்சந்தை அடிப்படை கற்றல்

வர்த்தக மதுரை சார்பாக பங்குச்சந்தை சார்ந்த தொழில் அடிப்படை கற்றலுக்கு(இணைய வழி) வரவேற்கிறோம்…

பங்குச்சந்தையில் ஈடுபட்டு வரும் முதலீட்டாளர்களுக்கும், பங்குச்சந்தையில் புதிதாக முதலீடு செய்ய உள்ளவர்களுக்கும் இந்த அடிப்படை கற்றல் உதவும்.

வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை) துறை சார்ந்த அடிப்படை வகுப்புக்கள் நடத்தப்படும். தொடர்ச்சியாக ஐந்து வாரங்களின் இறுதி நாட்கள், நான்கு துறைகள் மற்றும் அதனை சார்ந்த 10 முக்கிய பங்குகள் என அடிப்படை அலசல்கள் அமையும்.

உங்களை சுற்றியுள்ள நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகளின் வாயிலாக பங்குச்சந்தையில் உள்ள ஒரு நிறுவன பங்கினை எவ்வாறு புரிந்து கொள்வது, அவை அளிக்கும் எண்ணிலடங்கா வாய்ப்புகள் மற்றும் அதன் மூலம் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவது என்பதை சொல்லி கொடுக்க உள்ளோம்.

நிகழ்வில் எந்த தனிப்பட்ட பங்குகளையும் வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ பரிந்துரைப்பதில்லை. மாறாக, கற்றலின் மூலம் நீங்களே நல்ல நிறுவன பங்குகளை கணடறிவதற்கான வழிகாட்டியாக இந்த நிகழ்வு அமையும்.

Stock Insights - Meet II

பங்குகளை எந்த விலையில் வாங்க வேண்டுமென தெரியவில்லையா ?

அதிக வருவாய் தரும் துறைகள் மற்றும் பங்குகளை கண்டறிவது எப்படி ?

உங்களை சுற்றி காணப்படும் பங்குச்சந்தை நிறுவனங்களின் வாய்ப்புகள் மற்றும் லாபம் பார்ப்பது எப்படி ?

பங்குச்சந்தையில் கிடைக்கப்பெறும் தகவல்களை சரியான நிலையில் பயன்படுத்தி நஷ்டத்தை தவிர்ப்பது எவ்வாறு ?

வருகை தாருங்கள்…

பதிவு செய்ய: Stock Insights – Registration

நிகழ்வு நடைபெறுவதற்கான தேதி மற்றும் நேரம் உங்களது மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

Disclaimer: Not a SEBI Registered Investment Adviser (RIA), However we are engaging with the Share Broking services, Mutual Fund Distribution, Insurance and more on as a Financial Consultant in the Personal Finance.

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி 

Castrol India reported a net profit of Rs.205 Crore – Q3CY21

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக(Lubricant Industry) சொல்லப்படுகிறது. நாட்டில் 70,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களை கொண்டிருக்கும் கேஸ்ட்ரால் இந்தியா கடந்த 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10,800 கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 13 ரூபாய் மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம் 237 மடங்குகளில் உள்ளது. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

இதன் கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 5 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. நேற்று வெளியிடப்பட்ட காலாண்டு முடிவில் இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 என சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 883 கோடி ரூபாயாகவும், செலவினம் 595 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதர வருமானமாக 12 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 205 கோடியாக உள்ளது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிகர லாபம் 68 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2019ம் முழு ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 3,877 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 827 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 3 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 5 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த 5 வருடங்களில் 12 சதவீதமும், 10 வருட காலத்தில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 770 கோடியாக உள்ளது. பணவரத்தும்(Cash Flow) நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு மீண்டும் தள்ளிவைப்பு – 31, டிசம்பர் 2020

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு மீண்டும் தள்ளிவைப்பு – 31, டிசம்பர் 2020

Income Tax Return Filing last date extended to 31st December, 2020 – AY 2020-21

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கின் போது, வருமான வரி தாக்கல் செய்வதில் உள்ள சிக்கலை தவிர்க்கும் பொருட்டு, வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை கடந்த சில மாதங்களாக மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் தள்ளி வைக்கப்பட்டது. 2013-14ம் நிதியாண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்திருந்தும், மின்னணு முறையில் சரிபார்ப்பை(E verification) உறுதி செய்யாதவர்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் வரை மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில் 2018-19ம் நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு AY 2019-20) வருமானத்திற்கு வரி தாக்கல் செய்யாதவர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நவம்பர் 30, 2020 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

தற்போது மேலும் ஒரு அறிவிப்பில், 2019-20ம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கான வரி தாக்கல் காலக்கெடு நடப்பு நவம்பர் மாதம் 30ம் தேதியாக இருந்த நிலையில் வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் (FY 2019-20) டிசம்பர் 31, 2020 வரை உள்ள காலக்கெடுவை பயன்படுத்தி கொள்ளலாம்.

தனிநபர் ஒருவர் முந்தைய ஆண்டுக்கான வருவாய்க்கு, வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும் மின்னணு முறையில் சரிபார்ப்பு செய்தால் மட்டுமே, அது முழுமையாக முடிவடைந்த வரி தாக்கலாக ஏற்றுக்கொள்ளப்படும். சொல்லப்பட்ட ஒரு நிதியாண்டில் உங்களுடைய மொத்த வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.

உங்கள் வருமானத்தில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்தை தாண்டிய நிலையில் வரி தாக்கல் செய்ய வேண்டும். இரு வகையான வருமானத்தை கொண்டிருப்பவர்களும்(Pensioner cum Employee) தங்களது வருவாய் சரிபார்த்து விட்டு, தேவைப்பட்டால் வரி தாக்கல் செய்வது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி

ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி 

Asian Paints reported a Net Profit of Rs. 830 Crore in Q2FY21

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் கடந்த 1942ம் வருடம் துவங்கப்பட்டது. பெயிண்ட் துறையில் உள்ள இந்நிறுவனம் பெயிண்ட் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகம், பூச்சு, வீட்டு அலங்காரம் போன்ற சேவைகளை அளித்து வருகிறது. நாட்டின் பெயிண்ட் சந்தையில் 50 சதவீதத்திற்கு மேல் தனது பங்காக வைத்திருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம், பிரபல பெர்கர் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.

நிறுவனர்கள் சார்பில் அதிக பங்குதாரர்களை வைத்திருக்கும் நிறுவனமாகவும் ஏசியன் பெயிண்ட்ஸ் காணப்படுகிறது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பில்லியன் டாலர் வருவாயை ஏற்படுத்தும் நிறுவனமாக ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.03 லட்சம் கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 53 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 12 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.10 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 30 மடங்குகளிலும் இருக்கிறது. 2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,211 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 2,705 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நடப்பு வாரத்தில் 2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,350 கோடியாகவும், செலவினம் ரூ.4,085 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 94 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட காலாண்டு முடிவில் நிகர லாபம் 830 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

இரண்டாம் காலாண்டு முடிவுக்கு பிறகு, இடைக்கால ஈவுத்தொகையாக(Interim Dividend), பங்கு ஒன்றுக்கு ரூ. 3.35 ஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 10,934 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) சொல்லக்கூடிய நேர்மறை மதிப்பில் உள்ளது.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருட காலத்தில் 12 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், 10 வருட கால அளவில் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 18 சதவீதம் ஏற்றமடைந்துள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 28 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள்

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள் 

10 Factors to read in a Stock Market Investing

பங்குச்சந்தை முதலீட்டில் பணம் சம்பாதிக்க நீண்ட காலத்தில் பொறுமையுடன் அணுகுவது அவசியமானது. அதே வேளையில், ‘ ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்து விட்டு, 10 வருடங்கள் காத்திருந்தேன். பங்கு விலை இப்போது சரிந்து விட்டதே. எனது முதலீட்டில் 70-80 சதவீத தொகையை இழந்து விட்டேன் ‘ என நம்மில் பலர் புலம்புவதை பார்த்திருப்போம். இது பொதுவாக முதலீட்டில் உள்ள அனைவருக்குமான விஷயம் தான்.

நீங்கள் 10 வெவ்வேறு நிறுவன பங்குகளை முதலீட்டில் வைத்திருந்தாலும், அனைத்து பங்குகளும் உங்களுக்கு உடனடியாக முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. 5-10 வருட சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்குகளும், வேறுபட்ட காலத்தில் தனது ஏற்ற-இறக்கத்தை காணும். நீண்டகாலத்தில் முதலீடு செய்து பண பெருக்கத்தை ஏற்படுத்த பெரிதாக மெனக்கெட தேவையில்லை எனலாம். இருப்பினும் சில அடிப்படை காரணிகளை நாம் வாங்கிய அல்லது வாங்க போகும் பங்கு நிறுவனத்தில் அலசி ஆராய்ந்து விட்டால், நமக்கான வேலை அவ்வளவு தான்.

நல்ல நிறுவன பங்குகளின் விலை குறுகிய காலத்தில் ஏறவில்லை என்றாலும், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கு பயன் தராமல் போகாது. நல்ல நிறுவன பங்குகள் எனும் போது கடனில்லா நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறமை, நிறுவனர்களின் தொழில் நாணயம், வருவாயில் சராசரி வளர்ச்சியாக இருப்பினும் நெடுங்காலமாக தொழில் செய்து வருவது ஆகியவற்றை சொல்லலாம்.

மேலே சொல்லப்பட்ட நல்ல நிறுவன பங்கின் தன்மையை மேலும் சில காரணிகளை கொண்டு நாம் அறியலாம். அது போன்ற பத்து காரணிகள் இங்கே,

  • இ.ஐ.சி. கட்டமைப்பு (EIC Framework) முறையில் ஒரு நிறுவன பங்கினை புரிந்து கொள்வது
  • நிர்வாகத்திறன் எப்படி என்பதனை அறிந்து கொள்வது அவசியம்
  • நிறுவனத்தின் நிதி அறிக்கையை அடிப்படையாக கற்று கொள்வது
  • விற்பனை மற்றும் லாப வளர்ச்சி எவ்வாறு உள்ளது ?
  • பங்கு முதலீட்டின் மீதான வருவாய் (Return on Equity)
  • மூலதனத்தின் மீதான வருமானம் (Return on Capital Employed)
  • ஒரு பங்கின் வருவாயை அதன் விலையுடன் ஒப்பிட்டு காண்பது (PE)
  • நிறுவனத்தின் கடன் எப்படி ? (கடன்-பங்கு விகிதம் – Debt to Equity)
  • நிறுவனர்களின் பங்கு பங்களிப்பு மற்றும் பங்கு அடமானம்(Holding & Pledging)
  • மதிப்பீடுகள் அவசியமானது, நீங்கள் வாங்க வேண்டிய பங்கு விலை என்ன ? (Price is what you pay, value is what you get)

இந்த பத்து காரணிகளை நாம் ஒரு நிறுவன பங்கில் தேட ஆரம்பித்தாலே நமக்கான நீண்டகால செல்வவளம் பெருக்கும் முதலீட்டை அறியலாம். தரகர் சொன்னார், நண்பர் பரிந்துரைத்தார், ஊடக செய்தியில் கண்டேன், வாட்சாப் அல்லது டெலிகிராமில் பகிரப்பட்டது என ஏதாவது ஒரு பங்கினை வாங்கி மாட்டிக்கொள்வதை விட, உங்களது முதலீட்டு சிந்தனையையும் சிறிது மெருகேற்றி கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

அமெரிக்க தேர்தல் 2020 – முதலீட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அமெரிக்க தேர்தல் 2020 – முதலீட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

US Presidential Election 2020 – Precautions on Investing

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த மார்ச் மாத வீழ்ச்சிக்கு பிறகு உலக பங்குச்சந்தை குறியீடுகள் பெருத்த ஏற்றத்தை பெற்றுள்ளன. அமெரிக்க சந்தை குறியீடுகள் வாழ்நாள் உச்சத்தில் வர்த்தகமானதும், மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு தான். அதே வேளையில் பங்குச்சந்தை ஏற்றம், உலக பொருளாதார வளர்ச்சியில் தென்படவில்லை.

பெரும்பாலான நாடுகள் இரண்டாம் அலை(Covid-19) காரணமாக  ஊரடங்குக்கு தயாராகி கொண்டிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போதைய நிலையில் உயிரிழப்புகள் குறைந்திருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவ மழை சற்று தாமதமாக வருவதால், வரும் நாட்களில் மழை மற்றும் குளிர் சார்ந்த தொற்றுக்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நாடுகளிடையே காணப்படும் வர்த்தக போர், எல்லை பதற்றம், கச்சா எண்ணெய் விலை மாற்றம், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை கடந்து பங்குச்சந்தைகள் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்க தேர்தல் நடைபெற இருப்பதால், வரும் வாரங்களில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் அதிக ஏற்ற-இறக்கத்துடன் காணப்படலாம்.

முதலீட்டாளராக ஒருவர் இது போன்ற ஏற்ற-இறக்க சமயங்களில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம். இதன் மூலம் சந்தை இறக்கத்தில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியும்.

  • பொதுவாக பங்குச்சந்தை என்பது குறுகிய காலத்தில் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. ஆனால் நீண்டகாலத்தில் செல்வத்தை அளிக்கும் நல்ல ஒரு முதலீட்டு சாதனமாக அமையும். வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் தேர்தல் என்றால், ஏற்ற-இறக்கத்திற்கு பஞ்சமிருக்காது. இதனை சார்ந்து தான் மற்ற நாடுகளின் பங்குச்சந்தை குறியீடுகள் நகர்வு பெறும்.
  •  சமீபத்திய சந்தை ஏற்றத்தில், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யாத நிறுவன பங்குகளும் 100 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டுள்ளன. எனவே வரும் நாட்களில் சந்தை ஏற்ற-இறக்கம் அதிகம் தென்பட வாய்ப்புள்ளதால், நல்ல நிறுவன பங்குகளை தேர்ந்தெடுப்பது அவசியமானது. கடனில்லா நிறுவன பங்குகள், நல்ல நிர்வாக திறமை மற்றும் பொருளாதார மந்தநிலையை சமாளித்து தொழில் செய்யும் நிறுவனங்களில் கவனம் செலுத்துங்கள்.
  • ஒரு முறை முதலீடாக(Lumpsum investing) மேற்கொள்ளாமல், சந்தை இறக்கத்தில் நல்ல நிறுவன பங்குகள் இறங்கினால் மட்டும் சிறுகச்சிறுக முதலீடு செய்வது சிறந்தது. சந்தை பெருத்த வீழ்ச்சியை கண்டாலும், நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்த நல்ல நிறுவன பங்குகளில் மீண்டும் முதலீடு செய்வதற்கான பணத்தை கையிருப்பாக வைத்து கொள்ளுங்கள்.
  • பங்குச்சந்தை முதலீட்டில் அதிகம் சஞ்சலப்படும் காலமாக தற்போதைய நிலையை கூறலாம். தற்காலிக ஏற்றத்தை கண்டு, குறுகிய காலத்தில் லாபம் பார்க்கிறேன் என சூதாட வேண்டாம். பொருளாதார மந்தநிலை காலங்களில் போதுமான சேமிப்பும், நிம்மிதியான தூக்கமும் தான் தேவை. தூக்கத்தை இழக்கும் நிலையை தற்போதைய சந்தையில் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.
  • முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்தல்(Asset Allocation & Diversification) எப்போதும் அவசியமான ஒன்று. பங்கு முதலீட்டில் கொஞ்சம், கடன் பத்திரங்களில் சிறிய முதலீடு, தங்கம் மற்றும் சேமிப்பு கணக்கில் என உங்கள் முதலீட்டை பரவலாக்குவது நன்று.
  • வல்லரசு நாட்டின் தேர்தல் என கூறினாலும், அமெரிக்கா… அமெரிக்கா தான் ! அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அந்நாட்டின் கொள்கைகள் பொதுவாக மாறுபடுவதில்லை. வல்லரசு நாட்டிற்கே உரித்தான விஷயங்களை அமெரிக்கா கொண்டிருக்கும்.
  • என்ன தான் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் சம்மந்தமில்லை என சிலர் கூறினாலும், உண்மையில் திருவாளர் பங்குச்சந்தையின்(Mr. Market) நெருங்கிய நண்பன் தான் பொருளாதாரம். சந்தை சில காலம் பொருளாதாரத்தை விட்டு பிரிந்து காணப்பட்டாலும், பின்னொரு நாட்களில் பொருளாதாரமும், சந்தையும் சந்தித்து கொண்டு பேசி கொள்ளும். அப்போது சந்தையின் சரியான நிலவரம் தெரிய கூடும்.

வேலைவாய்ப்பும், தொழில்களும் நன்றாக நடைபெற்று நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்தால் தானே நம் சந்தைக்கு மகிழ்ச்சி !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Rites(Rail India Technical and Economic Service) Limited – Fundamental Analysis 

நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக இருப்பது, ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை’ நிறுவனம். இதனை சுருக்கமாக ரைட்ஸ் லிமிடெட்(Rites) என கூறுவதுண்டு. பொறியியல் ஆலோசனை நிறுவனமாக வலம் வரும் ரைட்ஸ் நிறுவனம் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் முக்கியத்துவம் பெறுகிறது.

1974ம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்புகளுக்கான ஆலோசனை மற்றும் திட்டமிடலை செய்து வருகிறது. இந்திய ரயில்வே துறைக்கு மட்டுமில்லாமல், 60 நாடுகளுக்கும் மேலாக தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6000 கோடி, மத்திய அரசு தன்வசம் வைத்திருக்கும் பங்குகளின் அளவு 72 சதவீதமாகும். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ..சி. இந்தியாவிடம்(LIC) சுமார் 8 சதவீத பங்குகளும், எச்.டி.எப்.சி. டிரஸ்டி(HDFC Trustee) நிறுவனத்திடம் 3 சதவீத பங்குகளும் உள்ளது. இதன் தொழில் விரிவாக்கம் பெரும்பாலும் ரயில்வே சார்ந்த திட்டங்களாக இருந்து வருகிறது.

நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலான நாடுகளின் அரசு நிறுவனங்கள் தான் உள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனகல், போட்ஸ்வானா, மொரிசியஸ், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் ரயில்வே சார்ந்து ஏற்றுமதிகளை அதிகம் கொண்டிருக்கும் நிறுவனமாகவும் ரைட்ஸ் லிமிடெட் உள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,474 கோடியாகவும், செலவினம் ரூ.1,811 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபமாக ரூ.616 கோடி சொல்லப்பட்டுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாபம் கடந்த 5 வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் ஏற்றம் பெறவில்லை. எனினும் பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஒரு வருடத்தில் 25 சதவீதமும், ஐந்து வருடங்களில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.2,383 கோடி மற்றும் பணவரத்து(Cashflow) சீராக வந்து கொண்டிருக்கிறது. ஜூன் 2020 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதம் குறைந்திருந்தாலும், நீண்டகாலத்தில் இந்நிறுவனத்தின் தேவை அதிகரித்து தான் காணப்படுகிறது. நாட்டின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் வாய்ப்பு அதிகமாகியிருக்கும் நிலையில், ரைட்ஸ் பங்குக்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதன் பாதகமாக அதன் துறை வளர்ச்சியும், அரசு சார்பில் ஏற்படும் கொள்கைகளும் தான்.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. அதன் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.02 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 117 மடங்கில் உள்ளது. அரசு நிறுவனமாக இருப்பதால், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. முகமதிப்பு 10 ரூபாயாகவும், கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 7 சதவீதமாகவும் இருக்கிறது. அடிப்படை பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) ரைட்ஸ் லிமிடெட் பங்கு ஒன்றின் விலை 300 ரூபாய் பெறும்.

முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதங்கள் எப்படி ?

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதங்கள்  எப்படி ?

No Change in REPO Rate, Deposit Interest Rates in State Bank of India

கடந்த வாரம் நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(MPC)  வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், முந்தைய 4 சதவீத ரெப்போ வட்டி விகிதமே தொடரும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், விளிம்பு நிலை விகிதம் (Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

எதிர்பாராத நிலையில் செல்லும் சில்லரை விலை பணவீக்கம், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக (-9.5) இருக்கும் எனவும் மத்திய வங்கி சுட்டி காட்டியுள்ளது. அதே நேரத்தில் 2021-22ம் நிதியாண்டில் நல்லதொரு வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக சொல்லியுள்ளது.

ரெப்போ விகிதத்தில்(REPO rate) மாற்றம் எதுவுமில்லை என சொல்லப்பட்ட நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிலவும் வட்டி விகிதங்களை பார்ப்போம். ஏற்கனவே சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக (ஆண்டுக்கு) உள்ளது.

சிறு சேமிப்பு கணக்கின் கீழ் 4 வழங்கப்படும் வட்டி 4 சதவீதமாகவும், பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் லிக்விட் பண்டுகளின் வட்டி விகிதம் 4 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில், வங்கி சேமிப்பு கணக்கில் சொல்லப்பட்ட விகிதம் மிக குறைவே. இருப்பினும், பண பரிமாற்றத்திற்கு பெரும்பாலும் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்து தான் இருக்க வேண்டியுள்ளது.

டெபாசிட் முறையில் 45 நாட்களுக்கு (7 Days to 45 Days) குறைவான காலத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 2.90 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்களாக இருப்பின், 3.40 சதவீதமாக இருக்கிறது. 46 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு குறைவான காலத்திற்கு 3.90 சதவீதமும், மூத்த குடிமக்கள் எனில் 4.40 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான டெபாசிட் காலத்திற்கு 4.40 சதவீதமாக உள்ளது. இது மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான, அதே வேளையில் இரண்டு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு 4.90 சதவீதமும், 2-3 வருடங்களுக்கு 5.10 சதவீதமும் மற்றும் 3 முதல் 5 வருடங்களுக்கான வட்டி விகிதம் 5.30 சதவீதமாகவும் உள்ளது.

ஸ்டேட் வங்கியில்(SBI) ஐந்து வருடம் முதல் 10 வருடங்கள்  வரையிலான காலத்திற்கு 5.40 சதவீதம் டெபாசிட் வட்டி விகிதமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு இது 6.20 சதவீதமாக உள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், டெபாசிட் தாரர்களுக்கு கிடைக்கப்பெறும் வட்டி போதுமானதாக இருப்பதில்லை. நடப்பில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் சாதகமான அம்சமாக இல்லை. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்களுக்கு, ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு மியூச்சுவல் பண்டுகளில் காணப்படும் கடன் சார்ந்து பண்டுகளில் முதலீடு செய்யும் போது, கணிசமான வட்டி வருவாயை பெறலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இந்துஸ்தான் ஜிங்க் – பங்குச்சந்தை அலசல்

இந்துஸ்தான் ஜிங்க் – பங்குச்சந்தை அலசல் 

Hindustan Zinc Limited – Fundamental Analysis

இந்திய மெட்டல் துறையில் இரும்பு அல்லாத உலோகங்களின்(Non-ferrous Metals) பங்களிப்பு மிகவும்  முக்கியத்துவமானது. காப்பர், அலுமினியம், துத்தநாகம், தங்கம், வெள்ளி, மெக்னீசியம், ஈயம், தகரம் ஆகியவை இரும்பு அல்லாத உலோகங்கள் எனப்படுகின்றன. இவை வாகனத்துறை, மின்சக்தி, தொலைத்தொடர்பு, விவசாயம், பாதுகாப்பு துறை, ரசாயனம் மற்றும் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படுகின்றன.

நம் நாட்டில் அலுமினியம், காப்பர், ஈயம் மற்றும் ஜிங்க்(துத்தநாகம்) ஆகிய நான்கும் வர்த்தகத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இரும்பு அல்லாத உலோகங்களின் பிரிவில் உள்ள,  ‘ஜிங்க்’ வாகனத்துறை, ரயில்வே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகம், பாதுகாப்பு மற்றும் கட்டுமான துறைகளின் பயன்பாட்டில் உள்ளது.

ஜிங்க் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், நாட்டின் முதன்மை நிறுவனமாகவும் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்(Hindustan Zinc Limited) நிறுவனம் உள்ளது. ஒருங்கிணைந்த சுரங்க மற்றும் வளங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் துத்தநாகம், ஈயம், வெள்ளி மற்றும் காட்மியம் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது.

துவக்கத்தில் அரசு பொதுத்துறை நிறுவனமாக இருந்த இந்துஸ்தான் ஜிங்க்(HZL), பின்னர் அரசின் பங்குவிலக்கல் அறிவிப்பின் கீழ் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2001ம் ஆண்டு வாக்கில் இந்நிறுவனத்தை வேதாந்தா நிறுவனம்(Vedanta – Sterlite Industries) ஏலத்தில் வாங்கியது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. அக்னிவேசு அகர்வால் உள்ளார். பொது பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தில் வேதாந்தா நிறுவனம் 65 சதவீத பங்குகளையும், மத்திய அரசு 30 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

சுரங்கம் மற்றும் உருக்குதல் பிரிவில் தனது செயல்பாடுகளை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் செய்து வருகிறது. உலகளவில் துத்தநாகத்தை மிகக்குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் வலம் வருகிறது. உலோகங்கள் மற்றும் சுரங்க துறை பிரிவின் கீழ் ஆசிய-பசிபிக் பகுதியில் முதலிடத்தை கொண்டுள்ளது இந்துஸ்தான் ஜிங்க். இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 86,600 கோடி. புத்தக மதிப்பு 95 ரூபாய் மற்றும் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.02 ஆக உள்ளது.

வட்டி பாதுகாப்பு விகிதம் 58 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 65 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 23 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 18,560 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 6,805 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 39,465 கோடி என சொல்லப்பட்டுள்ளது. லாபத்தில் பண வரத்து (Cash Flow from Operating Activities) நன்றாக வந்து கொண்டிருக்கிறது.

முகமதிப்பு(Facevalue) பங்கு ஒன்றுக்கு ரூ.2 ஆக இருக்கும் நிலையில், சமீபத்திய ஈவுத்தொகை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூன் 2020 காலாண்டில் வருவாய் ரூ.3,989 கோடியாகவும், நிகர லாபம் 1,359 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 684 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக மெட்டல் துறையில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சி, உலக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். தள்ளுபடி பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation), இந்துஸ்தான் ஜிங்க் பங்கு ஒன்றின் விலை ரூ.230 பெறுமானத்தை பெறும். முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com