அமெரிக்க தேர்தல் 2020 – முதலீட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
US Presidential Election 2020 – Precautions on Investing
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த மார்ச் மாத வீழ்ச்சிக்கு பிறகு உலக பங்குச்சந்தை குறியீடுகள் பெருத்த ஏற்றத்தை பெற்றுள்ளன. அமெரிக்க சந்தை குறியீடுகள் வாழ்நாள் உச்சத்தில் வர்த்தகமானதும், மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு தான். அதே வேளையில் பங்குச்சந்தை ஏற்றம், உலக பொருளாதார வளர்ச்சியில் தென்படவில்லை.
பெரும்பாலான நாடுகள் இரண்டாம் அலை(Covid-19) காரணமாக ஊரடங்குக்கு தயாராகி கொண்டிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போதைய நிலையில் உயிரிழப்புகள் குறைந்திருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவ மழை சற்று தாமதமாக வருவதால், வரும் நாட்களில் மழை மற்றும் குளிர் சார்ந்த தொற்றுக்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நாடுகளிடையே காணப்படும் வர்த்தக போர், எல்லை பதற்றம், கச்சா எண்ணெய் விலை மாற்றம், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை கடந்து பங்குச்சந்தைகள் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்க தேர்தல் நடைபெற இருப்பதால், வரும் வாரங்களில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் அதிக ஏற்ற-இறக்கத்துடன் காணப்படலாம்.
முதலீட்டாளராக ஒருவர் இது போன்ற ஏற்ற-இறக்க சமயங்களில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம். இதன் மூலம் சந்தை இறக்கத்தில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியும்.
- பொதுவாக பங்குச்சந்தை என்பது குறுகிய காலத்தில் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. ஆனால் நீண்டகாலத்தில் செல்வத்தை அளிக்கும் நல்ல ஒரு முதலீட்டு சாதனமாக அமையும். வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் தேர்தல் என்றால், ஏற்ற-இறக்கத்திற்கு பஞ்சமிருக்காது. இதனை சார்ந்து தான் மற்ற நாடுகளின் பங்குச்சந்தை குறியீடுகள் நகர்வு பெறும்.
- சமீபத்திய சந்தை ஏற்றத்தில், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யாத நிறுவன பங்குகளும் 100 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டுள்ளன. எனவே வரும் நாட்களில் சந்தை ஏற்ற-இறக்கம் அதிகம் தென்பட வாய்ப்புள்ளதால், நல்ல நிறுவன பங்குகளை தேர்ந்தெடுப்பது அவசியமானது. கடனில்லா நிறுவன பங்குகள், நல்ல நிர்வாக திறமை மற்றும் பொருளாதார மந்தநிலையை சமாளித்து தொழில் செய்யும் நிறுவனங்களில் கவனம் செலுத்துங்கள்.
- ஒரு முறை முதலீடாக(Lumpsum investing) மேற்கொள்ளாமல், சந்தை இறக்கத்தில் நல்ல நிறுவன பங்குகள் இறங்கினால் மட்டும் சிறுகச்சிறுக முதலீடு செய்வது சிறந்தது. சந்தை பெருத்த வீழ்ச்சியை கண்டாலும், நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்த நல்ல நிறுவன பங்குகளில் மீண்டும் முதலீடு செய்வதற்கான பணத்தை கையிருப்பாக வைத்து கொள்ளுங்கள்.
- பங்குச்சந்தை முதலீட்டில் அதிகம் சஞ்சலப்படும் காலமாக தற்போதைய நிலையை கூறலாம். தற்காலிக ஏற்றத்தை கண்டு, குறுகிய காலத்தில் லாபம் பார்க்கிறேன் என சூதாட வேண்டாம். பொருளாதார மந்தநிலை காலங்களில் போதுமான சேமிப்பும், நிம்மிதியான தூக்கமும் தான் தேவை. தூக்கத்தை இழக்கும் நிலையை தற்போதைய சந்தையில் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.
- முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்தல்(Asset Allocation & Diversification) எப்போதும் அவசியமான ஒன்று. பங்கு முதலீட்டில் கொஞ்சம், கடன் பத்திரங்களில் சிறிய முதலீடு, தங்கம் மற்றும் சேமிப்பு கணக்கில் என உங்கள் முதலீட்டை பரவலாக்குவது நன்று.
- வல்லரசு நாட்டின் தேர்தல் என கூறினாலும், அமெரிக்கா… அமெரிக்கா தான் ! அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அந்நாட்டின் கொள்கைகள் பொதுவாக மாறுபடுவதில்லை. வல்லரசு நாட்டிற்கே உரித்தான விஷயங்களை அமெரிக்கா கொண்டிருக்கும்.
- என்ன தான் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் சம்மந்தமில்லை என சிலர் கூறினாலும், உண்மையில் திருவாளர் பங்குச்சந்தையின்(Mr. Market) நெருங்கிய நண்பன் தான் பொருளாதாரம். சந்தை சில காலம் பொருளாதாரத்தை விட்டு பிரிந்து காணப்பட்டாலும், பின்னொரு நாட்களில் பொருளாதாரமும், சந்தையும் சந்தித்து கொண்டு பேசி கொள்ளும். அப்போது சந்தையின் சரியான நிலவரம் தெரிய கூடும்.
வேலைவாய்ப்பும், தொழில்களும் நன்றாக நடைபெற்று நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்தால் தானே நம் சந்தைக்கு மகிழ்ச்சி !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை