வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு மீண்டும் தள்ளிவைப்பு – 31, டிசம்பர் 2020
Income Tax Return Filing last date extended to 31st December, 2020 – AY 2020-21
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கின் போது, வருமான வரி தாக்கல் செய்வதில் உள்ள சிக்கலை தவிர்க்கும் பொருட்டு, வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை கடந்த சில மாதங்களாக மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் தள்ளி வைக்கப்பட்டது. 2013-14ம் நிதியாண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்திருந்தும், மின்னணு முறையில் சரிபார்ப்பை(E verification) உறுதி செய்யாதவர்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் வரை மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில் 2018-19ம் நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு AY 2019-20) வருமானத்திற்கு வரி தாக்கல் செய்யாதவர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நவம்பர் 30, 2020 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
தற்போது மேலும் ஒரு அறிவிப்பில், 2019-20ம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கான வரி தாக்கல் காலக்கெடு நடப்பு நவம்பர் மாதம் 30ம் தேதியாக இருந்த நிலையில் வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் (FY 2019-20) டிசம்பர் 31, 2020 வரை உள்ள காலக்கெடுவை பயன்படுத்தி கொள்ளலாம்.
தனிநபர் ஒருவர் முந்தைய ஆண்டுக்கான வருவாய்க்கு, வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும் மின்னணு முறையில் சரிபார்ப்பு செய்தால் மட்டுமே, அது முழுமையாக முடிவடைந்த வரி தாக்கலாக ஏற்றுக்கொள்ளப்படும். சொல்லப்பட்ட ஒரு நிதியாண்டில் உங்களுடைய மொத்த வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.
உங்கள் வருமானத்தில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்தை தாண்டிய நிலையில் வரி தாக்கல் செய்ய வேண்டும். இரு வகையான வருமானத்தை கொண்டிருப்பவர்களும்(Pensioner cum Employee) தங்களது வருவாய் சரிபார்த்து விட்டு, தேவைப்பட்டால் வரி தாக்கல் செய்வது அவசியமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை