ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்
Rites(Rail India Technical and Economic Service) Limited – Fundamental Analysis
நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக இருப்பது, ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை’ நிறுவனம். இதனை சுருக்கமாக ரைட்ஸ் லிமிடெட்(Rites) என கூறுவதுண்டு. பொறியியல் ஆலோசனை நிறுவனமாக வலம் வரும் ரைட்ஸ் நிறுவனம் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் முக்கியத்துவம் பெறுகிறது.
1974ம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்புகளுக்கான ஆலோசனை மற்றும் திட்டமிடலை செய்து வருகிறது. இந்திய ரயில்வே துறைக்கு மட்டுமில்லாமல், 60 நாடுகளுக்கும் மேலாக தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6000 கோடி, மத்திய அரசு தன்வசம் வைத்திருக்கும் பங்குகளின் அளவு 72 சதவீதமாகும். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ..சி. இந்தியாவிடம்(LIC) சுமார் 8 சதவீத பங்குகளும், எச்.டி.எப்.சி. டிரஸ்டி(HDFC Trustee) நிறுவனத்திடம் 3 சதவீத பங்குகளும் உள்ளது. இதன் தொழில் விரிவாக்கம் பெரும்பாலும் ரயில்வே சார்ந்த திட்டங்களாக இருந்து வருகிறது.
நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலான நாடுகளின் அரசு நிறுவனங்கள் தான் உள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனகல், போட்ஸ்வானா, மொரிசியஸ், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் ரயில்வே சார்ந்து ஏற்றுமதிகளை அதிகம் கொண்டிருக்கும் நிறுவனமாகவும் ரைட்ஸ் லிமிடெட் உள்ளது.
2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,474 கோடியாகவும், செலவினம் ரூ.1,811 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபமாக ரூ.616 கோடி சொல்லப்பட்டுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாபம் கடந்த 5 வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் ஏற்றம் பெறவில்லை. எனினும் பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஒரு வருடத்தில் 25 சதவீதமும், ஐந்து வருடங்களில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது.
நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.2,383 கோடி மற்றும் பணவரத்து(Cashflow) சீராக வந்து கொண்டிருக்கிறது. ஜூன் 2020 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதம் குறைந்திருந்தாலும், நீண்டகாலத்தில் இந்நிறுவனத்தின் தேவை அதிகரித்து தான் காணப்படுகிறது. நாட்டின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் வாய்ப்பு அதிகமாகியிருக்கும் நிலையில், ரைட்ஸ் பங்குக்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதன் பாதகமாக அதன் துறை வளர்ச்சியும், அரசு சார்பில் ஏற்படும் கொள்கைகளும் தான்.
நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. அதன் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.02 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 117 மடங்கில் உள்ளது. அரசு நிறுவனமாக இருப்பதால், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. முகமதிப்பு 10 ரூபாயாகவும், கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 7 சதவீதமாகவும் இருக்கிறது. அடிப்படை பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) ரைட்ஸ் லிமிடெட் பங்கு ஒன்றின் விலை 300 ரூபாய் பெறும்.
முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை