பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள்
10 Factors to read in a Stock Market Investing
பங்குச்சந்தை முதலீட்டில் பணம் சம்பாதிக்க நீண்ட காலத்தில் பொறுமையுடன் அணுகுவது அவசியமானது. அதே வேளையில், ‘ ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்து விட்டு, 10 வருடங்கள் காத்திருந்தேன். பங்கு விலை இப்போது சரிந்து விட்டதே. எனது முதலீட்டில் 70-80 சதவீத தொகையை இழந்து விட்டேன் ‘ என நம்மில் பலர் புலம்புவதை பார்த்திருப்போம். இது பொதுவாக முதலீட்டில் உள்ள அனைவருக்குமான விஷயம் தான்.
நீங்கள் 10 வெவ்வேறு நிறுவன பங்குகளை முதலீட்டில் வைத்திருந்தாலும், அனைத்து பங்குகளும் உங்களுக்கு உடனடியாக முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. 5-10 வருட சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்குகளும், வேறுபட்ட காலத்தில் தனது ஏற்ற-இறக்கத்தை காணும். நீண்டகாலத்தில் முதலீடு செய்து பண பெருக்கத்தை ஏற்படுத்த பெரிதாக மெனக்கெட தேவையில்லை எனலாம். இருப்பினும் சில அடிப்படை காரணிகளை நாம் வாங்கிய அல்லது வாங்க போகும் பங்கு நிறுவனத்தில் அலசி ஆராய்ந்து விட்டால், நமக்கான வேலை அவ்வளவு தான்.
நல்ல நிறுவன பங்குகளின் விலை குறுகிய காலத்தில் ஏறவில்லை என்றாலும், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கு பயன் தராமல் போகாது. நல்ல நிறுவன பங்குகள் எனும் போது கடனில்லா நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறமை, நிறுவனர்களின் தொழில் நாணயம், வருவாயில் சராசரி வளர்ச்சியாக இருப்பினும் நெடுங்காலமாக தொழில் செய்து வருவது ஆகியவற்றை சொல்லலாம்.
மேலே சொல்லப்பட்ட நல்ல நிறுவன பங்கின் தன்மையை மேலும் சில காரணிகளை கொண்டு நாம் அறியலாம். அது போன்ற பத்து காரணிகள் இங்கே,
- இ.ஐ.சி. கட்டமைப்பு (EIC Framework) முறையில் ஒரு நிறுவன பங்கினை புரிந்து கொள்வது
- நிர்வாகத்திறன் எப்படி என்பதனை அறிந்து கொள்வது அவசியம்
- நிறுவனத்தின் நிதி அறிக்கையை அடிப்படையாக கற்று கொள்வது
- விற்பனை மற்றும் லாப வளர்ச்சி எவ்வாறு உள்ளது ?
- பங்கு முதலீட்டின் மீதான வருவாய் (Return on Equity)
- மூலதனத்தின் மீதான வருமானம் (Return on Capital Employed)
- ஒரு பங்கின் வருவாயை அதன் விலையுடன் ஒப்பிட்டு காண்பது (PE)
- நிறுவனத்தின் கடன் எப்படி ? (கடன்-பங்கு விகிதம் – Debt to Equity)
- நிறுவனர்களின் பங்கு பங்களிப்பு மற்றும் பங்கு அடமானம்(Holding & Pledging)
- மதிப்பீடுகள் அவசியமானது, நீங்கள் வாங்க வேண்டிய பங்கு விலை என்ன ? (Price is what you pay, value is what you get)
இந்த பத்து காரணிகளை நாம் ஒரு நிறுவன பங்கில் தேட ஆரம்பித்தாலே நமக்கான நீண்டகால செல்வவளம் பெருக்கும் முதலீட்டை அறியலாம். தரகர் சொன்னார், நண்பர் பரிந்துரைத்தார், ஊடக செய்தியில் கண்டேன், வாட்சாப் அல்லது டெலிகிராமில் பகிரப்பட்டது என ஏதாவது ஒரு பங்கினை வாங்கி மாட்டிக்கொள்வதை விட, உங்களது முதலீட்டு சிந்தனையையும் சிறிது மெருகேற்றி கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை