ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி
Asian Paints reported a Net Profit of Rs. 830 Crore in Q2FY21
இந்திய பன்னாட்டு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் கடந்த 1942ம் வருடம் துவங்கப்பட்டது. பெயிண்ட் துறையில் உள்ள இந்நிறுவனம் பெயிண்ட் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகம், பூச்சு, வீட்டு அலங்காரம் போன்ற சேவைகளை அளித்து வருகிறது. நாட்டின் பெயிண்ட் சந்தையில் 50 சதவீதத்திற்கு மேல் தனது பங்காக வைத்திருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம், பிரபல பெர்கர் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.
நிறுவனர்கள் சார்பில் அதிக பங்குதாரர்களை வைத்திருக்கும் நிறுவனமாகவும் ஏசியன் பெயிண்ட்ஸ் காணப்படுகிறது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பில்லியன் டாலர் வருவாயை ஏற்படுத்தும் நிறுவனமாக ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.03 லட்சம் கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 53 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 12 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.10 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 30 மடங்குகளிலும் இருக்கிறது. 2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,211 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 2,705 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
நடப்பு வாரத்தில் 2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,350 கோடியாகவும், செலவினம் ரூ.4,085 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 94 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட காலாண்டு முடிவில் நிகர லாபம் 830 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இரண்டாம் காலாண்டு முடிவுக்கு பிறகு, இடைக்கால ஈவுத்தொகையாக(Interim Dividend), பங்கு ஒன்றுக்கு ரூ. 3.35 ஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 10,934 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) சொல்லக்கூடிய நேர்மறை மதிப்பில் உள்ளது.
நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருட காலத்தில் 12 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், 10 வருட கால அளவில் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 18 சதவீதம் ஏற்றமடைந்துள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 28 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை